என் மலர்
ராமநாதபுரம்
- ராமநாதபுர நீர்நிலைகளில் இறைச்சி கழிவு-குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
- கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரசபை கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடை பெற்றது. துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வரு மாறு:-
கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் பேசுகையில், எனது வார்டில் தொன்னை குருசாமி கோவில் தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணி முடிவடைந்து ஒரு பகுதி மட்டும் விடுபட்டுள்ளது. அங்கும் பேவர் பிளாக் பதிக்க வேண்டும். பள்ளிவாசல் அருகே ரோடு குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அதை அகற்றி அகலப்படுத்த வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.
சேர்மன்:- கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அகற்றி சாலை அகலப்படுத்தப்படும்.
கவுன்சிலர் மணி கண்டன்:- கிடா வெட்டு ஊரணி, பாணங்குண்டு ஊருணி, வண்ணர்ஊரணி, முகவை ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் கழிவுநீரால், பலரும் தினமும், வித, விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். நிலத்தடி நீரும் மாசுப்படும் நிலை தொடர்கிறது. நகரின் நிலத்தடி நீர் கடுமையான உவர்ப்புத் தன்மை ஏற்பட்டு அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாழ்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தி யாகி,பல வித நோய்களை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகளில் குப்பை, கோழி, மாமிச கழிவு களையும் கொட்டுகின்ற னர். இதனால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு உள்ளது. இதை தடுக்க வேண்டும்.
இதற்கு நகராடசி தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், நாள்தோறும் அதிகாலை 4:30 மணி முதல் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். ஊருணிகளில் கோழி, இறைச்சி கழிவுகள், குப்பைகள் போடுபவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.
இதேபோல் ரமேஷ், குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். அப்போது கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறை வேற்ற உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். பின்னர் பல்வேறு தீர்மானங் கள் நிைறவேற்றப்பட்டன.
கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.
- கீழக்கரை அருகே 3-வது திருமணம் செய்த விவசாயி கொலை செய்யப்பட்டார்.
- இதில் 2-வது மனைவி-மகன் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள குளபதம் கிராமத்தை சேர்ந்தவர் வையக்கிளவன் (வயது 58), விவசாயி. இவர் முதலாவதாக காளிமுத்து என்ற பெண்ணை திரு மணம் செய்துவிட்டு அவர் மதம் மாறி பிரிந்து சென்று விட்டார்.
பின்பு வையக்கிளவன் 2-வதாக சுமைதாங்கியை சேர்ந்த சுப்புலட்சுமியை (54) திருமணம் செய்து அவர்களுக்கு பாண்டிஸ்வரி என்ற மகளும், வசீந்திரன், கனி என்ற மகன்களும் உள்ள னர். பின்பு இவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகன்கள் தனியாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் 3-வ தாக வெள்ளாவைச் சேர்ந்த ராமலட்சுமி என்ற பெண்ணை வையக்கிளவன் 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அந்த பெண் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
நேற்று வையக்கிளவன் காலி இடத்தை கழிவறையாக பயன்படுத்தினாராம். இதை 2-வது மனைவி சுப்புலட்சுமி கண்டித்தார். இதனால் இவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டு அருகில் கிடந்த பனைமட்டையை எடுத்து வையகிளவன் தாக்கினார். இதில் சுப்புலட்சுமிக்கு காயம் ஏற்பட்டது.
இதை அறிந்த மகன் வசீந்திரன், வையகிளவன் வீட்டிற்குள் வந்து தகாத வார்த்தையால் பேசி, கம்பால் வலது பக்க மார்பில் குத்தினார். இதை தடுக்க வந்த 3-வது மனைவி ராமலட்சுமியையும் அடித்து காயப்படுத்திவிட்டு தப்பி விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவித்தனர்.
காயமடைந்த வையக்கிள வனை மைத்துனர் பாலகிருஷ்ணன், அதே ஊரைச் சேர்ந்த ரவி, ஆனந்தராஜ் ஆகியோர் ஆட்டோவில் ஏற்றி கீழக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு வந்தனர். டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷ் விசாரணை நடத்தினார். தாய், மகன் இருவரையும் போலீசார் கைது செய்து மதுரை மற்றும் ராமநாதபுரம் சிறையில் அடைத்தனர்.
- உத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி அபிஷேக நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- திருவிழா முன்னேற்பாடு பணிகளை ராமநாதபுரம் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனத் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த கோவிலில் நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 9 மணி வரை மரகத நடராஜப் பெருமானுக்கு சந்தனம் படி களைதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட உள்ளன.
திருஉத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் டாக்டர்கள் அடங்கிய மருத்துவ முகாம் ராஜகோபுரம் முன்பும், நடராஜர் சன்னதி அருகிலும் அமைக்கப்படுகிறது. 2 108 அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ஆருத்ரா தரிசனம் நடைபெறும் மரகத நடராஜர் சன்னதியின் உள் வளாகத்தில் சமஸ்தான தேவஸ்தான பணியாளர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் பாதுகாப்பு செய்யவும், ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் தரிசனத்திற்கு பக்தர்களின் வரிசையினை ஒழுங்குபடுத்தி அனுப்பவும் ஏற்பாடுகளை போலீசார் மேற்கொள்வார்கள்.
ஆங்காங்கே ஒலி பெருக்கி வசதிகள் அமைத்து பக்தர்களை வரிசைப்படுத்தவும், தேவையான உதவிகளை மேற்கொள்ளவும் துறை யினருக்கு அறிவு றுத்தப்பட்டுள்ளது. தீயணைப்புத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஊராட்சி பொதுக்கழிவறை மற்றும் கோவில் கழிவறைகள், கோவில் நுழைவாயிலுக்கு வெளியே மொபைல் டாய்லெட் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. போக்குவரத்துத் துறை சார்பில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.
பக்தர்கள் வசதிக்காக தடையில்லா மின்சாரம் வழங்க தெரிவிக்கப்ப ட்டுள்ளது. இரவு நேரங்களில் பூஜைகள் நடைபெறும் என்பதால் போதிய மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் ஜெனரேட்டர் வசதியும் அமைக்கப்பட்டுள்ளன.
ஆருத்ரா தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கூட்ட நெரிசலின்றி நிகழ்வுகளைக் கண்டுகளிக்க கோவிலில் முக்கிய இடத்தில் பெரிய அளவில் மின்னணு திரை அமைத்து அபிஷேக நிகழ்வுகளை காண ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வழி மற்றும் வெளியில் வரும் வழி எனத் தனித்தனியாக பிரிக்கப்பட்டு கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போதுமான வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன காப்பகம் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, வருவாய் கோட்டாட்சியர் கோபு, கீழக்கரை துணைக் காவல் கண்காணிப்பாளர் சுபாஷ், வட்டாட்சியர் சரவணன், திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் யூனியன் கவுன்சில் கூட்டம் நடந்தது.
- செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுவதாக கவுன்சிலர் கூறினார்.
பரமக்குடி
ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் யூனியன் கவுன்சில் கூட்டம் தலைவர் சத்யா குணசேகரன் தலைமையில் நடந்தது. துணைத்தலைவர்-வக்கீல் பூமிநாதன் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் சதாசிவம் வரவேற்றார்.
இதில் பா.ஜ.க. கவுன்சிலர் ராமசாமி பேசுகையில், மக்கள் திட்ட பணிகள் எதுவும் இந்த கூட்டத்தில் இடம் பெறவில்லை. செலவினங்களுக்கு மட்டும் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. பணிகள் நடந்தால் கவுன்சிலர்களுக்கு தகவல் தெரிவிப்பதில்லை என்றார்.
பா.ஜ.க. கவுன்சிலர் கதிரவன் பேசுகையில், போகலூர் யூனியனில் நடைபெறும் திட்ட பணிகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் தர வேண்டும். நிதி ஆதாரத்தை அனைவருக்கும் சமமாக பகிர்ந்து அளித்து பணிகள் வழங்க வேண்டும் என்றார். அதற்கு துணைத்தலைவர் பூமிநாதன் பதில் அளிக்கையில், இது குறித்து அனைவரும் பேசி முடிவு எடுப்போம் என்றார்.
பின்பு பா.ஜ.க. கவுன் சிலர்கள் 3 பேரும் இந்த அஜெண்டாவில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் இடம் பெறவில்லை.
ஆகை யால் இந்த கூட்டத்தை நாங்கள் புறக்கணிக்கிறோம் என்று கூறி வெளி நடப்பு செய்தனர். பின்பு மற்ற கவுன்சிலர்களில் ஆதரவுடன் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. யூனியன் தலைவர் சத்யா குணசேகரன் கூறியதாவது:-
பரமக்குடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.70 லட்சத்தில் சாலை வசதிகள், பள்ளிகளில் சுத்திகரிப்பு குடிநீர் வசதி செய்து கொடுத்தல், சுகாதார வளாகங்கள் கட்டுதல் உட்பட பல்வேறு பணிகள் நடைபெற உள்ளது.
சரிவர மழை பெய்யாததால் போகலூர் ஒன்றியத்தில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்றுஎம். எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், பரமக்குடி முருகேசன் ஆகியோரது பரிந்துரையுடன் தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். யூனியன் மேலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.
- ராமநாதபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி வாலிபர் பலியானார்.
- விபத்து குறித்து சிக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சாயல்குடி
ராமநாதபுரம் மாவட்டம், வேதாளை கிராமத்தை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மகன் விஜயகுமார் (வயது 20). நேற்று இரவு இவரும், அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சூர்யாவும் சிக்கல் அருகே உள்ள சிறைக்குளம் கிராமத்தில் உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் ெசன்றனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சிக்கல் டாஸ்மாக் கடை அருகே சென்று கொண்டிருந்தபோது கேரளாவில் இருந்து ராமேசு வரத்தில் மீன்லோடு ஏற்றி வந்த வேன் எதிர்பாராத விதமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது.இதில் விஜய குமார், சூர்யா ஆகிய 2 பேர் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த விஜய குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய சூர்யாவை அங்கிருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகதாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துஉடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது என்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையடைந்தனர்.
அபிராமம் பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப் படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பல முறை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கிருதுமால் நதியை தூர்வாரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பலமுறை மனு அளித்தும் அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து விவசாயி முனியாண்டி கூறுகையில், உடையநாதபுரம், நந்தி சேரி, காடனேரி, நீர் தாண்ட அச்சங்குளம், போத்தநதி, பாப்பனம் மற்றும் அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயம் பாதிப்படைந்துள்ளது.
தற்போது மதுரை விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதியில் திறந்து விடப்படும் நீரால் அபிராமம் கண்மாய் தண்ணீர் நிரம்புவதால் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.
முல்லைபெரியாறு-வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநா தபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், கிருது மால் நதிமூலம் தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது.
எங்கள் கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்திருந்தால் நெற்பயிர்கள் கருகி இருக்காது. தற்போது தண்ணீர் திறப்பதால் குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீரும் உயரும். கிருதுமால் நதிமூலம் தண்ணீர் கொண்டுவர பல கட்ட போராட்டங்கள், விளக்க கூட்டங்கள் நடத்தி ஒத்துழைப்பு தந்த விவசாயிகள், பொதுமக்கள், அருணாசலம் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மற்றும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வள ஆதார அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
- ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதி திறக்கப்படும்.
- நடராஜருக்கு 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது.
- 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கை கிராமத்தில் அமைந்துள்ளது மங்களநாதர் கோவில். இந்த கோவில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகவும் பழமையான கோவிலாகும். ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் மரகத நடராஜர் சன்னதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவிலில் உள்ள மரகத நடராஜர் சன்னதியானது ஆருத்ரா திருவிழா அன்று ஒரு நாள் மட்டுமே திறக்கப்படும்.
இந்த நிலையில் திரு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோவிலில் இந்த ஆண்டின் ஆருத்ரா திருவிழாவானது கடந்த 28-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழா தொடங்கியதில் இருந்து தினமும் சுவாமி-அம்பாள் மற்றும் நடராஜர் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகின்றனர்.
ஆருத்ரா திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி அளவில் மரகத நடராஜர் சன்னதியானது திறக்கப்படுகின்றது. தொடர்ந்து நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனங்கள் முழுவதுமாக களையப்படுகிறது. பின்னர் நடராஜருக்கு பால், பன்னீர், மாபொடி, மஞ்சப்பொடி, திரவியப்பொடி, தேன், இளநீர் உள்ளிட்ட 32 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று இரவு 11 மணி அளவில் மீண்டும் ஆருத்ரா அபிஷேகம் நடராஜருக்கு நடைபெறுகின்றது. அபிஷேகம் முடிந்து 6-ம் தேதி அன்று காலை சூரிய உதய நேரத்தில் நடராஜருக்கு சந்தனம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெறுகின்றன. 6-ம்தேதி மாலை மீண்டும் நடராஜர் சன்னதியானது மூடப்படுகிறது.
நாளை 5-ம் தேதி காலையிலிருந்து 6-ம் தேதி மாலை வரையிலும் மட்டும் மரகத நடராஜர் சன்னதியில் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஆருத்ரா தரிசனம் நாளை நடைபெறுவதை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கை கோவிலில் நாளை பகல் மற்றும் இரவு முழுவதும் சென்னை, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர்களின் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாளை நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை, கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜராஜேஸ்வரி நாச்சியார் ஆகியோர் மேற்பார்வையில் திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அதுபோல் நாளை மறுநாள் திரு உத்தரகோசமங்கை கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்காக மாவட்ட நிர்வாகத்தால் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் 1 நாள் மட்டுமே மரகத நடராஜர் சன்னதியானது பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருஉத்தரகோசமங்கை கோவிலில் ஆருத்ரா விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
- பக்தர்களுக்கு விலையில்லா சந்தனம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
திருஉத்தரகோசமங்கை மங்களநாதசாமி கோவில் வளாகத்தில் மரகதத்திலான நடராஜர் சிலை உள்ளது. ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு காட்சியளிக்கும் இந்த நடராஜர் சிலை ஆருத்ரா தரிசனத்தை யொட்டி சந்தனக்காப்பு களையப்படும்.
நாளை மறுநாள் (5-ந் தேதி) காலை 8 மணிக்கு சந்தனம் களைதலும், 9 மணிக்கு மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகமும் நடைபெறும். இரவு 11 மணிக்கு மேல் மூலவர் மரகத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெறும். இதைத்தொடர்ந்து வருகிற 6-ந்தேதி அதிகாலை ஆருத்ரா தரிசனம் நடைபெறும்.
இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டதால் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 1.50 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. போலி சந்தன பாக்கெட் விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
பக்தர்கள் சிரமமில்லாமல் தரிசனம் மேற்கொள்ளும் வகையில் பொது தரிசனம், ரூ.10, ரூ.100, ரூ.250 என 4 பிரிவுகளாக மரத்தடுப்புகள் அமைத்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர வி. ஐ, பி, வி.வி.ஐ.பி.க்களுக்கு தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் சிரமமின்றி வெளியில் செல்ல 2 புதிய பாதைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.100, ரூ.250 கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்பவர்களுக்கு விலை யில்லா சந்தனம் வழங்கப்படும். மேலும் சமூக விரோதிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க 28 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர 20 காமிரா கூடுதலாக பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவில் வளாகத்தில் 12 இடங்களில் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரிசையில் நீண்ட நேரமாக நிற்கும் பக்தர்களின் தாகத்தை போக்கும் வகையில் குறிப்பிட்ட இடத்திற்கே சென்று சுத்திகரிப்பு செய்யப்பட்ட குடிநீர் வழங்கிட கோவில் நிர்வாகத்தால் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இரவில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக பால் வழங்கப்படும்.
மதுரை, காரைக்குடி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்பட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள புதிய கலையரங்கத்தில் வருகிற 5-ந்தேதி காலை 9 மணி முதல் 6-ந் தேதி காலை 9 மணி வரை நாட்டியாஞ்சலி விழா நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 26 குழுவினர் பங்கேற்க உள்ளனர். ராமநாதபுரம் சமஸ்தா னம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் அறிவுரையின்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
- கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. காலை 10மணிக்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.
பின்னர் மதியம் 1மணிக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். இரவு 7.15மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்சவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத தூக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள்பிரகார வீதி உலா நடந்தது. இதையொட்டி ஆழ்வார்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.
தொடர்ந்து இரவு 7.35மணிக்கு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, ..கோவிந்தா... என பக்தி கோஷமிட்டு தரிசித்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்று முறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதிர்சேவை மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (3ந் தேதி) முதல் வருகிற 11ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.
விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோவிலில் வை குண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு சொர்க்கவாசல் வழியாக ராமர், சீதா தேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்.
- பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் பொருளா தார குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவேனில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ராமநாதபுரம், பரமக்குடி பகுதியில் புல்லியன் பின் டெக் நிறுவனத்தின் சார்பில் சிறுசேமிப்பு திட்டம் என்ற பெயரில் கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்துள்ளனர். இந்த நிலையில் பணம் பெற்றவர்களிடம் முதிர்வு தொகையை வழங்காமல் ஏமாற்றி வருவதாக புகார் எழுந்துள்ளது.
கற்பகவல்லி என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நிதி நிறுவனத்தின் மீது பொருளாதார குற்றப்பிரிவில் ஆனந்தன், நீதிமணி, மேனகா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
அதே போல் ராமநாதபுரம் மாவட்டம், முத்துபுரம், அக்ரஹாரம் என்ற முகவரியில் செயல்பட்டு வந்த வி.கே.எல்.டயரீஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வாசுகிநாதன், கார்த்திக் கணேஷ், காஜா முகைதீன் ஆகிய நபர்கள் சேர்ந்து பரமக்குடி மற்றும் அந்தப்பகுதியைச் சுற்றி பொதுமக்களை சிறுசேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் அதற்கான முதிர்வுத்தொகையை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் மோசடி செய்து ஏமாற்றி வருவதாக சண்முகசுந்தரம், என்பவர் புகார் செய்துள்ளார்.
எனவே ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் இந்த நிறுவனத்தின் சிறுசேமிப்பு திட்டத்தில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டு இருந்தால் அவர்கள் உரிய அசல் ஆவணங்களுடன் ராமநாதபுரம் நேருநகர் பகுதியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் தங்கள் புகார்களை அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தியதற்கு முதல்-அமைச்சருக்கு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்தது.
ராமநாதபுரம்
தமிழ்நாடு ஆசிரி யர் முன்னேற்ற சங்கத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர், ஆசிரியர்களின் எதிர்பார்ப்பை புத்தாண்டு தினத்தில் நிறைவேற்றி உள்ளார்.
கொரோனா காலங்க ளில் நிலவிய பெரும் நிதி நெருக்கடி சூழலிலும், கடந்த ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வை 11 சதவீதம் வழங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்த நிலையில், கடந்த ஆண்டு 14 சதவீதமாக உயர்த்தி வழங்கி, அரசு ஊழியர், ஆசிரியர்கள் பணியில் இருக்கும் போது இறந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப நலநிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டிருந்தார்.
அதே போல் கடந்த ஆட்சியில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் மீது அரசு ஊழியர்-ஆசிரியர்கள் மீது போடப்பட்டிருந்த அனைத்து நடவடிக்கையும் ரத்து செய்து ஆசிரியர், அரசு ஊழியர்களின் மன உளைச்சலை போக்கினார்.
தற்போது ஜனவரி 1-ந்தேதி முதல் மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவித்து அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் அனைவரும் எதிர்பார்க்கும் பழைய ஓய்வூதியத்திட்டம், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறை வேற்றுவார் என்ற நம் பிக்கை உள்ளது. மத்திய அரசுக்கு இணையாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வை வழங்கிய தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நெற்பயிருக்கு கடன் வழங்க 13-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் செயலாளர்களுக்கான சிறப்பு திறனாய்வுக் கூட்டம் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் 20 ஆயிரத்து 878 விவசாயிகளுக்கு ரூ.108.30 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டது. 30.12.2022 வரை 33ஆயிரத்து330 விவசாயிகளுக்கு ரூ.205.19 கோடி பயிர்கடனும், 5ஆயிரத்து661 விவசாயி களுக்கு ரூ.81.27 கோடி கால்நடை பராமரிப்பு நடைமுறை மூலதன கடனும் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒத்துழைப்பின் மூலமா கத்தான் இந்த ஆண்டு பயிர்கடன் வழங்குவதில் சாதனை படைத்துள்ளோம்.பயிர் கடன் ஆரம்ப காலத்தி லேயே கொடுக்கும் பட்சத்தில் மற்றும் ஆண்டுதோறும் இதே நடைமுறையை பின்பற்றுவதன் மூலம் விவசாயிகளிடம் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகள் மீது விவசாயிகளிடையே நம்பிக்கை வளரும்.
இதன் மூலம் இடைத்தர கர்களின்றி விவசாயிகளின் பயிர்களுக்கு உரிய விலை கிடைக்கும். விவசாயிகளுக்கு கூட்டுறவுத்துறை மூலம் ஆரம்ப காலங்களில் பயிர் கடன் வழங்குவதால் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு உரிய உதவிகள் வழங்கப்பட்டு மாவட்டத்தில் விவசாயத்தில் பெரிய மாற்றத்தை பார்க்க முடியும். கடன் வழங்குவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பளவு 4.51 லட்சம் ஏக்கர். மொத்த விவசாயிகள் 1.74 லட்சம். மாவட்டத்தில் உள்ள விவசாயிகளில் 5-ல் ஒரு பங்கு விவசாயிகளுக்கு இதுவரை பயிர்கடன் வழங்கி உள்ளோம். பயிர்கடன் அளவை உயர்த்தும் வகையில் மாவட்ட அளவிலான தொழில்நுட்ப குழுவின் மூலம் பயிர் கடன் அளவை அனைத்து பயிர்களுக்கும் 25 சதவீதம் உயர்த்தியும், பயிர் கடனை திரும்ப செலுத்தும் கால அளவை 1 வருடமாக உயர்த்தியும் மாநில தொழில்நுட்ப குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டிற்கான நெற்பயிருக்கு கடன் வழங்கும் காலத்தை 13.1.2023 வரை நீட்டித்து உத்திரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் மனோகரன், வேளாண்மை துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ் கோடி, கூட்டுறவு சங்கங் களின் துணை பதிவாளர்கள் சுப்பையா (ராமநாதபுரம் சரகம்), கோவிந்தராஜன் (பொது விநியோகத் திட்டம்), முருகன் (தாம்கோ) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






