search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
    X

    பரமபதவாசல் வழியாக ஸ்ரீதேவி-பூதேவி சமேத கல்யாண ஜெகநாத பெருமாள் எழுந்தருளினார். 

    திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

    • திருப்புல்லாணி பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நிகழ்ச்சியாகும்.

    இந்த நிகழ்ச்சி நேற்று அதிகாலை தொடங்கியது. காலை 10மணிக்கு பெருமாள் சயன திருக்கோலத்தில் காட்சியளித்தார்.

    பின்னர் மதியம் 1மணிக்கு விஸ்வரூப தரிசனம் அளித்தார். இரவு 7.15மணியளவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண ஜெகநாதப்பெருமாள் உற்சவர்களாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சீர்பாத தூக்கிகளால் பட்டாபிஷேக ராமர் சன்னதி வழியாக உள்பிரகார வீதி உலா நடந்தது. இதையொட்டி ஆழ்வார்கள் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

    தொடர்ந்து இரவு 7.35மணிக்கு பரமபதவாசல் என்னும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, ..கோவிந்தா... என பக்தி கோஷமிட்டு தரிசித்தனர். நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்கள் பாடப்பட்டு சாற்று முறை, கோஷ்டி பூஜை முறைகள் நடந்தது. பெருமாள் எதிர்சேவை மூலம் மூலவரின் இருப்பிடம் கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (3ந் தேதி) முதல் வருகிற 11ந்தேதி வரை ராப்பத்து உற்சவம் நடைபெற உள்ளது.

    விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் சேதுபதி ராணி ராஜேஸ்வரி நாச்சியார் ஆலோசனையின் பேரில் திவான் மற்றும் நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம் கோதண்ட ராமர் கோவிலில் வை குண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று இரவு சொர்க்கவாசல் வழியாக ராமர், சீதா தேவியுடன் எழுந்தருளினார். தொடர்ந்து கோவிலில் சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×