என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் விபத்துகளை முற்றிலும் தவிர்க்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதியாக சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவ, மாணவிகள், வாகன ஓட்டுனர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமலும், கார் உள்ளிட்ட வாகனங்களில் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். மஞ்சூர் பஜார், மின்வாரிய பிரிவு, கரியமலை பிரிவு உள்பட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் அடிக்கடி வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் மஞ்சூர் எஸ்.ஐ.ராஜ்குமார் தலைமையிலான போலீசார் மஞ்சூர் பஜார் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து சென்ற வாகன ஓட்டுனர்களை நிறுத்தி அவர்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினர்.
அதே சமயம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் மற்றும் கார்களில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த நெலாக்கோட்டை அருகே உள்ள விலங்கூர் மலைக்கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று இரவு பிதர்காடு வனக்காப்பாளர் ராமச்சந்திரன்(வயது 30), வேட்டை தடுப்பு காவலர்கள் விஷ்ணு(21), வைசாக்(18) ஆகியோர் விலங்கூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் யானைகள் வரும் பாதையில் 6 பேர் கும்பல் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.
இதை பார்த்த வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவர்களிடம் சென்று நீங்கள் யார்? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டனர். மேலும் இந்த பாதையில் யானைகள் வரும் என்பதால் இங்கு அமர்ந்து மது அருந்தக்கூடாது. உடனடியாக இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறினர்.
ஆனால் அந்த கும்பல் யானை தாக்கினால் இறப்பது நாங்கள் தான். உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி செல்ல மறுத்து வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வனத்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வனத்துறையினர் 3 பேரையும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வனக்காப்பாளர் ராமச்சந்திரன் நெலாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்ததை தட்டி கேட்ட வனத்துறையினரை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(21), சதீஷ்(23), பிரதீப்(20), சந்துரு(21), பிரசாந்த்(21), மணிகண்டன்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் 2 குட்டி யானைகள் உள்பட 27 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நேற்று தொடங்கியது.
முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். முகாம் தொடக்க விழாவின் போது அங்குள்ள விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அங்கு சென்ற அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இரு பழங்குடியின சிறுவர்களை டேய் பசங்களா இங்கே வாங்கடா.. என அழைத்து தனது செருப்பை கழற்ற சொன்னார்.
அப்போது 9-ம் வகுப்பு படித்து வரும் சிறுவன் குனிந்து திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழற்றினான். அந்த சமயத்தில் அங்கு வந்த அமைச்சரின் உதவியாளர் செருப்பை கழற்ற உதவினார். கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கிருஷ்ணகுமார் கவுசல், வனத்துறை செயலாளர் சம்பு கல்லோலிகர், சாந்தி ராமு எம்.எல்.ஏ. முன்னிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது.
அமைச்சரின் செருப்பை சிறுவன் கழற்றிய காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இந்த செயலுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வருத்தம் தெரிவித்தார். ஊட்டியில் உள்ள தமிழக மாளிகையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதுமலை யானைகள் புத்துணர்வு முகாமுக்கு கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகளுடன் சென்று கொண்டிருந்தேன். அப்போது அங்கிருந்த இரு சிறுவர்களை அழைத்து எனது செருப்பை கழற்ற சொன்னேன். எனது பேரன் போன்று இருந்ததால் அவர்களை அழைத்தேன்.
இதில் வேறு எந்த உள் நோக்கமும் இல்லை. அந்த சிறுவர்கள் மட்டுமின்றி வேறு யாருக்கேனும் இதில் வருத்தம் இருந்தால் அதற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் செயலுக்கு நீலகிரி மாவட்ட தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம், நீலகிரி பண்டைய பழங்குடியினர் பேரவை, மக்கள் சட்ட மையம், பழங்குடியின சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்த நிலையில் அந்த சிறுவனும், பழங்குடியினரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மசினகுடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதில் தனது செருப்பை கழற்றி விடுமாறு கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை சிறுவனை அழைத்து கழற்றிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு குழந்தைகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
முதுமலையில் நடந்த யானைகள் முகாமை தொடங்கி வைக்க சென்றேன். அப்போது கோவிலில் சாமி கும்பிட வேண்டும் என்று கூறினார்கள்.

இதில் எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. பெரியவர்களை செருப்பை கழற்ற அழைத்தால் அது தவறாகி விடும் என்பதால் தான் சிறுவனை அழைத்தேன். மற்றபடி வேறு எந்த நோக்கமும் எனக்கு கிடையாது.
இந்த சம்பவம் விவாதப் பொருளாக மாறிவிட்டதால் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். அது அவர்களது கண்ணோட்டம். எனக்கு அவ்வாறு எந்த எண்ணமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசு சார்பில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள கோவில் மற்றும் மடங்களை சேர்ந்த யானைகளுக்கு ஆண்டு தோறும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரத்தில் சிறப்பு நலவாழ்வு முகாம் நடந்து வருகிறது.
இதேபோல் வனத்துறை கட்டுப்பாட்டில் டாப்சிலிப், முதுமலை தெப்பக்காடு பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் வளர்ப்பு யானைகளுக்கும் ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் அந்தந்த முகாம்களிலேயே நடந்து வருகிறது.
அதன்படி முதுமலை தெப்பக்காட்டில் இந்த ஆண்டுக்கான வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு புத்துணர்வு முகாம் இன்று தொடங்கியது.
ஆதிவாசி சிறுவனிடம் அமைச்சர் தனது செருப்பை கழற்ற சொன்ன சம்பவம் ஆதிவாசி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரன் நகரில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக எல்லமலை, பெரியசோலை கிராமங்களுக்கு அரசு பஸ்கள், வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர்மழை காரணமாக சேரன்மாநகர் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் எல்லமலை, சேரன்நகர், பெரியசோலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் செல்வதில்லை.
இதனால் கூடலூரில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் ஆரோட்டுப்பாறை வழியாக பெரியசோலைக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்கள் பகுதியில் உடைந்த பாலத்திற்கு பதிலாக புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று சேரன் நகரில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. அப்போது திடீரென பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து கூடலூர் தாசில்தார், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், நியூகோப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள், கடந்த ஆண்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் உடைந்தது. அது உடைந்து 6 மாதம் ஆகியும் பாலம் கட்டப்படவில்லை. இதனால் வனவிலங்குகள் அதிகமாக வாழும் பகுதிகளில் நடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவநிலை உள்ளது. எனவே உடனே புதிதாக பாலத்தை கட்டி தர வேண்டும் என்றனர். இதற்கு விரைந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.
இதைகேட்டு கொண்ட பொதுமக்கள் விரைந்து பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.
சீனாவில் கொரோனா வைரசால் பலர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகி ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவில் இருந்து இந்தியாவை சேர்ந்த பலர் திரும்பி வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஊட்டி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவில் இதுவரை 490 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் சீனாவில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு 5 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் வீடுகளில் தனி அறையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைக் கண்காணிப்பதற்காக 5 பிரத்யேக மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பிரத்யேக வார்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் சந்தேகத்துக்கு இடமான நபர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரி அருகே உள்ள தும்பிமலையை சேர்ந்தவர் முரளி(வயது26). இவரது நண்பர் ஒசக்கேரியை சேர்ந்த கோகுல்ராஜ்(28).
சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் காரில் சோலூர் மட்டம் வழியாக சென்றனர். அப்போது அந்த வழியாக 15 வயது மாணவி ஒருவர் தனியாக பள்ளிக்கு நடந்து சென்றார்.
இதையடுத்து கோகுல்ராஜ் காரை நிறுத்தி அந்த மாணவியிடம் நைசாக பேச்சு கொடுத்தனர்.
பின்னர் அவரை வாயை பொத்தி காரில் கடத்தி கோவைக்கு அழைத்து வந்தனர். வரும் வழியில் காருக்குள் வைத்து 2 பேரும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர்.
கோவை வந்ததும் ஒரு தங்கும் விடுதிக்கு மாணவியை மிரட்டி அழைத்து சென்றனர். பின்னர் அங்கு இரவு முழுவதும் அந்த மாணவியை மிரட்டி 2 பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். பின்னர் மறுநாள் காலை மாணவியை காரில் சோலூர் மட்டத்திற்கு அழைத்து சென்று இறக்கி விட்டு விட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த மாணவி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் சம்பவம் குறித்து சோலூர்மட்டம் போலீசில் புகார் கொடுத்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மாணவியை கடத்திய முரளி மற்றும் கோகுல்ராஜை பிடித்து குன்னூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவம்...
கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த தம்பதிக்கு 20 வயதில் மகள் உள்ளார். சம்பவத்தன்று இந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த மருதாசலம்(35) என்பவர் வீட்டிற்குள் நுழைந்து தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் அதிர்ச்சியான அப்பெண் சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்ட பெண்ணின் பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். பொதுமக்கள் வந்ததை பார்த்ததும் அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி தப்பி செல்ல முயன்றார். ஆனால் பொதுமக்கள் அவரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்து அன்னூர் போலீசில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் மருதாசலம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மருதாசலத்தை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
நீலகிரி மாவட்ட கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் திடக்கழிவு மேலாண்மை பயிலரங்கம் ஊட்டியில் நடைபெற்றது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாய மாநில திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்பு குழு தலைவரும், முன்னாள் நீதிபதியுமான ஜோதிமணி கலந்து கொண்டார். பின்னர் அவர் கூடலூர் மாக்கமூலாவில் பிரிவு-53 வனத்தில் கட்டப்பட்டு வரும் வனத்துறைக்கு சொந்தமான கட்டிட கட்டுமான பணியை பார்வையிட்டார்.
அப்போது அதே பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நகராட்சி நிர்வாகம் 1 ஏக்கர் பரப்பளவில் குப்பைகளை கொட்டி வைத்திருந்தது. இதைக்கண்ட கண்காணிப்பு குழு தலைவர் ஜோதிமணி குப்பைகளை அகற்ற ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஏன் இதுவரை அகற்றப்படவில்லை என கேட்டார். குப்பைகளை கொட்டுவதற்கு நிரந்தர இடம் இல்லாததால் குப்பைகளை அகற்ற முடியவில்லை என நகராட்சி நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இதைத்தொடர்ந்து உடனடியாக வனப்பகுதியில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என நகராட்சி நிர்வாகத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாய கண்காணிப்பு குழு தலைவர் உத்தரவிட்டார். மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்படி சுகாதாரத்தை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் உள்பட துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி கூடலூர் மாக்கமூலா மூங்கில் காடுகள் உள்ள இடத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்றும் பணியை நகராட்சி நிர்வாகம் நேற்று தொடங்கியது. இதற்காக பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளை லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டன.
இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் கூறியதாவது:- தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின்படி பிரிவு-53 வனத்தில் கொட்டப்பட்ட குப்பைகளை அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பணி இன்னும் சில நாட்கள் நீடிக்கும். அதன்பின்னர் தீர்ப்பாயத்துக்கு அறிக்கை அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு துறையினரின் நேரடி கள ஆய்விற்கு பின்னர் கீழ்க்கண்ட அபராதம் விதிக்கப்பட உள்ளது. ஆண்டுக்கு ரூ.12 லட்சத்துக்கு கீழ் கொள்முதல் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள், உணவு பாதுகாப்பு பதிவு சான்று பெற்றவர்கள், சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்கள் உணவு பாதுகாப்பு சட்ட விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால் முதல் முறை ரூ.3 ஆயிரம், 2-ம் முறை ரூ.6 ஆயிரம், 3-ம் முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
3-ம் முறைக்கு மேல் உணவு வணிகரின் உணவு பாதுகாப்பு பதிவு சான்று ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். சிறு மளிகைக்கடை, நடமாடும் உணவு வணிகர்கள், தற்காலிக கடை நடத்துவோருக்கு முதல் முறை ரூ.ஆயிரம், 2-ம் முறை ரூ.2 ஆயிரம், 3-ம் முறை ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். நாள் ஒன்றிற்கு 500 லிட்டர் வரை பால் விற்போர் மற்றும் இறைச்சி விற்போர் போன்றோர் முதல் முறை ரூ.2 ஆயிரம், 2-ம் முறை ரூ.4 ஆயிரம், 3-ம் முறை ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, பதிவு சான்று ரத்து செய்யப்படும்.
மேலும் உணவு பாதுகாப்பு பதிவுச்சான்று பெறாமல் உணவு வணிகம் செய்யும் வணிகருக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு, உணவு பாதுகாப்பு பதிவு சான்று ரத்து செய்யப்படும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்துவோர், விற்பனை செய்யும் சில்லறை விற்பனையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை, மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மற்றும் திருமண மண்டபம், சமுதாய நிகழ்ச்சிகளில் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் ரூ.20 ஆயிரம் வரை மாவட்ட நிர்வாகத்தால் அபராதம் விதிக்கப்படும்.
எனவே, அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்டு தங்களது உணவு வணிகத்தை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான தங்களது புகார்களை 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தெரிவிக்கலாம். உணவு பாதுகாப்பு அதிகாரிகள் விதித்த அபராத தொகையை செலுத்தாவிட்டால் கடைகளின் பதிவு சான்று அல்லது உரிம சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் உருளைக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக சந்தைப்படுத்துவது குறித்த சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு குஜராத் காந்தி நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை புதுடெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், சிம்லா மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், சர்வதேச உருளைக்கிழங்கு நிலையம் இணைந்து 3 நாட்கள் நடத்துகிறது.
மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசும்போது, நாட்டில் 2 முறை உருளைக்கிழங்கு கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டது. உருளைக்கிழங்கு மகசூல் திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சி திட்டங்களை விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். மாநாட்டில் சர்வதேச வேளாண்மை விஞ்ஞானிகள், பல்வேறு மாநில விவசாயிகள் கலந்துகொண்டனர்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பிரதமர் பேசுவதை நீலகிரி மாவட்ட விவசாயிகள் பார்க்கும் வகையில் ஊட்டியில் உள்ள தோட்டக்கலைத்துறை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவசாயிகள் இருக்கைகளில் அமர்ந்து பிரதமர் மோடி பேசுவதை கேட்டனர்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் திலக், கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து உதவி பேராசிரியர் திலக் கூறும்போது, குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் உருளைக்கிழங்கு ரகங்கள், காலநிலைக்கு ஏற்ப எவ்வாறு விளைவிக்கப்படுகிறது, உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மை தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றார்.
ஊட்டி அருகே முத்தோரையில் மத்திய அரசின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு உருளைக்கிழங்குகள் ஆராய்ச்சி செய்து சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கேரட் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து உள்ளது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி பேசுவதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது என்றும், உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிப்பது குறித்த விவரங்கள் பயன் உள்ளதாக இருந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.






