search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி பேசியதை காணொலி காட்சி மூலம் ஊட்டியில் விவசாயிகள் நேரடியாக பார்த்ததை படத்தில் காணலாம்.
    X
    பிரதமர் மோடி பேசியதை காணொலி காட்சி மூலம் ஊட்டியில் விவசாயிகள் நேரடியாக பார்த்ததை படத்தில் காணலாம்.

    பிரதமர் மோடியின் பேச்சை காணொலி காட்சியில் பார்த்த ஊட்டி விவசாயிகள்

    உருளைக்கிழங்கு உற்பத்தி குறித்து நடந்த மாநாட்டில் பிரதமர் மோடியின் பேச்சை காணொலி காட்சியில் ஊட்டி விவசாயிகள் பார்த்தனர்.
    ஊட்டி:

    இந்தியாவிலேயே குஜராத் மாநிலத்தில் தான் உருளைக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக சந்தைப்படுத்துவது குறித்த சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு குஜராத் காந்தி நகரில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை புதுடெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், சிம்லா மத்திய உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம், சர்வதேச உருளைக்கிழங்கு நிலையம் இணைந்து 3 நாட்கள் நடத்துகிறது.

    மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பேசும்போது, நாட்டில் 2 முறை உருளைக்கிழங்கு கிடைக்காமல் பஞ்சம் ஏற்பட்டது. உருளைக்கிழங்கு மகசூல் திறனை அதிகரிக்கும் ஆராய்ச்சி திட்டங்களை விஞ்ஞானிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். மாநாட்டில் சர்வதேச வேளாண்மை விஞ்ஞானிகள், பல்வேறு மாநில விவசாயிகள் கலந்துகொண்டனர்.

    கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் பிரதமர் பேசுவதை நீலகிரி மாவட்ட விவசாயிகள் பார்க்கும் வகையில் ஊட்டியில் உள்ள தோட்டக்கலைத்துறை வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. விவசாயிகள் இருக்கைகளில் அமர்ந்து பிரதமர் மோடி பேசுவதை கேட்டனர்.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் திலக், கார்த்திகேயன் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்டனர். இதுகுறித்து உதவி பேராசிரியர் திலக் கூறும்போது, குஜராத் மாநிலத்தில் உருளைக்கிழங்கு அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. சர்வதேச அளவில் உருளைக்கிழங்கு ரகங்கள், காலநிலைக்கு ஏற்ப எவ்வாறு விளைவிக்கப்படுகிறது, உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிக்க வேளாண்மை தொழில்நுட்பங்கள், பூச்சி நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் போன்றவை குறித்து மாநாட்டில் விளக்கம் அளிக்கப்படுகிறது என்றார்.

    ஊட்டி அருகே முத்தோரையில் மத்திய அரசின் உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு உருளைக்கிழங்குகள் ஆராய்ச்சி செய்து சோதனை அடிப்படையில் பயிரிடப்பட்டு, விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. மலை மாவட்டமான நீலகிரியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. கேரட் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து உள்ளது என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி பேசுவதை பார்க்க வாய்ப்பு கிடைத்தது என்றும், உருளைக்கிழங்கு உற்பத்தியை அதிகரிப்பது குறித்த விவரங்கள் பயன் உள்ளதாக இருந்தது என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×