search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    சேரன்நகரில் புதிய பாலம் கட்டாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்- பொதுமக்கள் ஆவேசம்

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரன்நகரில் புதிய பாலம் கட்டாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரன் நகரில் பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக எல்லமலை, பெரியசோலை கிராமங்களுக்கு அரசு பஸ்கள், வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன.

    இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த தொடர்மழை காரணமாக சேரன்மாநகர் பாலம் உடைந்து விழுந்தது. இதனால் எல்லமலை, சேரன்நகர், பெரியசோலை உள்ளிட்ட கிராமங்களுக்கு வாகனங்கள் செல்வதில்லை.

    இதனால் கூடலூரில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் ஆரோட்டுப்பாறை வழியாக பெரியசோலைக்கு செல்கிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்கள் பகுதியில் உடைந்த பாலத்திற்கு பதிலாக புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று சேரன் நகரில் இருந்து கூடலூருக்கு அரசு பஸ் புறப்பட்டது. அப்போது திடீரென பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பஸ்சை வழிமறித்தனர். பின்னர் புதிதாக பாலம் கட்ட வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து கூடலூர் தாசில்தார், நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள், நியூகோப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், கடந்த ஆண்டு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் உடைந்தது. அது உடைந்து 6 மாதம் ஆகியும் பாலம் கட்டப்படவில்லை. இதனால் வனவிலங்குகள் அதிகமாக வாழும் பகுதிகளில் நடந்து செல்வது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது. இதனால் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய அவநிலை உள்ளது. எனவே உடனே புதிதாக பாலத்தை கட்டி தர வேண்டும் என்றனர். இதற்கு விரைந்து பாலம் கட்ட நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.

    இதைகேட்டு கொண்ட பொதுமக்கள் விரைந்து பாலம் கட்டி தர நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றனர்.

    Next Story
    ×