search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்ததை தட்டிகேட்ட வனத்துறையினர் மீது தாக்குதல்- 6 பேர் கைது

    வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்ததை தட்டிகேட்ட வனத்துறையினரை தாக்கிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் அடுத்த நெலாக்கோட்டை அருகே உள்ள விலங்கூர் மலைக்கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளதால் அடிக்கடி காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன.

    கடந்த சில நாட்களாக இந்த பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து சம்பவத்தன்று இரவு பிதர்காடு வனக்காப்பாளர் ராமச்சந்திரன்(வயது 30), வேட்டை தடுப்பு காவலர்கள் விஷ்ணு(21), வைசாக்(18) ஆகியோர் விலங்கூர் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் யானைகள் வரும் பாதையில் 6 பேர் கும்பல் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தனர்.

    இதை பார்த்த வனக்காப்பாளர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அவர்களிடம் சென்று நீங்கள் யார்? ஏன் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள்? என்று கேட்டனர். மேலும் இந்த பாதையில் யானைகள் வரும் என்பதால் இங்கு அமர்ந்து மது அருந்தக்கூடாது. உடனடியாக இங்கிருந்து கிளம்புங்கள் என்று கூறினர்.

    ஆனால் அந்த கும்பல் யானை தாக்கினால் இறப்பது நாங்கள் தான். உங்கள் வேலையை பாருங்கள் என்று கூறி செல்ல மறுத்து வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் வனத்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.

    இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் வனத்துறையினர் 3 பேரையும் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த 3 பேரும் கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வனக்காப்பாளர் ராமச்சந்திரன் நெலாக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் வனப்பகுதியில் அமர்ந்து மது குடித்ததை தட்டி கேட்ட வனத்துறையினரை தாக்கியது அதே பகுதியை சேர்ந்த கார்த்திக்(21), சதீஷ்(23), பிரதீப்(20), சந்துரு(21), பிரசாந்த்(21), மணிகண்டன்(24) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×