என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.170- க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
    • இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அந்தப் பகுதியில் சேகோ பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்.

    வயதான பெற்றோர்

    கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கனிமொழி அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன் நாமகிரிப்பேட்டை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    கள்ளக்காதலன்

    இதில் கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர்.

    தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது.
    • இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது. இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நகராட்சி சார்பில் மனு கொடுத்தும், நேரில் சொல்லியும் பலனில்லை. இந்த இடத்தில் பல முறை கார், சரக்கு வாகனம் ஆகியன கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து இது போல் அசம்பாவிதம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படும் முன்பு இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில், சேலம் கோவை புறவழிச்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், ராஜ், தர்மலிங்கம், ஜேம்ஸ், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த சாலை மறியல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கோவை பக்கமிருந்து வந்த வாகனங்கள் பல கி.மீ. தூரம் வரை வரிசையில் நின்றன.

    • வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர்.
    • மர்ம கும்பலை பிடிக்க கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை.

    கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றனர்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வந்தனர்.

    பின்னர் சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த சண்முகத்தின் வீடு உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் சம்பவ நடைபெற்ற நேரத்தில் அப்பகுதி உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.

    • மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கைசாமி மற்றும் போலீசார் காவிரி ஆறு பகுதிக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவக்குமார் (43), கார்த்திக் பார்த்தீபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பட்ட 8 பேர் மற்றும் தப்பியோடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    • நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
    • புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர நாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    • சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது
    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர்

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலறைக்கேட் அருகே பண்ணக்காடு பகுதியில் அதிக ஆழமுள்ள சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த சாக்கடை கால்வாயில் அதிகாலையில் நாய் ஒன்று விழுந்துள்ளது. பின்னர் சாக்கடையில் இருந்து வெளியே வரமுடியாததால் தொடர்ந்து சத்தமிட்டு கொண்டே இருந்தது. இதை பார்த்த அந்த வழியாக சென்ற கணேஷ் புவன் என்பவர் திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சதீஷ்குமார், ஹரிஹரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நாயை உயிருடன் மீட்டனர். இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.
    • குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு கிராமத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் கலெக்டர் டாக்டர்.உமா தலைமையில் நடைபெற்றது.

    இந்த குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில துணை செயலாளர் பொன். ரமேஷ் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    குமாரபாளையம், பொய்யேரி மற்றும் மோகனூர் வாய்க்காலில் பேரூராட்சி மற்றும் இந்த பகுதியில் உள்ள ஊராட்சி பகுதியில் இருந்து சாக்கடை கழிவு நீர் கலக்கிறது. அதேபோல் தனியார் மற்றும் பொது கழிப்பறையில் இருந்து வெளியேறும் சாக்கடை கழிவுநீரும் வாய்க்கால்களில் கலக்கிறது. சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் கலப்பதை தடை செய்ய வேண்டும். வாய்க்கால்களில் அதிக அளவு செடி, கொடிகள் முளைத்துள்ளதால் கடைமடை வரை தண்ணீர் செல்ல முடியாமல் பணப்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அதேபோல் நச்சுத்தன்மை உள்ள சாக்கடை கழிவு நீர் கலந்து செல்வதால் மகசூல் பாதிக்கிறது. எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    இதில் நஞ்சை இடையாறு மோகனூர் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் பிரதாப், நஞ்சை இடையாறு சுமதி விசுவநாதன், உழவர் பேரியக்கத்தின் மாவட்ட செயலாளர், பொன்மலர்பாளையம் பா.ம.க., மோகனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், நஞ்சை குமார், வினோத், கபிலன், கிருஷ்ணமூர்த்தி, மோகன்ராஜ், சண்முகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
    • மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், அ.கொந்தளம் கிராமம், கருக்கம்பாளையம் வழியாக வேலூர் சென்ற மினி பஸ் கருக்கம்பாளையத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதில் பயணித்த மொத்தம் 35 பயணிகளில் 2 பள்ளி மாணவிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர். மேலும், வாகன ஓட்டுநருக்கு இடுப்பு பகுதியில் அடிப்பட்டதால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பான முறையில் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களை கலெக்டர் டாக்டர். உமா வேலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து, நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கவும் உரிய மருத்துவ சிகிச்சைகள் வழங்கிடவும் மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் இனிவரும் காலங்களில் இது போன்று விபத்து ஏற்படாத வகையில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விழிப்புணர்வு பதாகைகள் அமைக்க வேண்டுமென வட்டார போக்குவரத்து அலுவலர், நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் மற்றும் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

    இந்நிகழ்வில், இணை இயக்குநர் (மருத்துவம்) (பொ) வாசுதேவன், கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை) குணா, வட்டார போக்குவரத்து அலுவலர் (நாமக்கல் தெற்கு) முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு (பரமத்தி) ராஜ முரளி மற்றும் மருத்துவர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பிலிக்கல் பாளையத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் பணிகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப் பட்ட மானிய தொகை, நிலம் மேம்பாடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    நிலத்தடி நீர்

    இதையடுத்து கலெக்டர் உமா கூறியதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடி செய்வதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீர் மட்டம், நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தரிசு நிலத்திலும் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.

    அந்த வகையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் 2021 -– 2022- ன் கீழ் கபிலர்மலை வட்டம் பிலிக்கல்பாளையத்தில் 15 விவசாயிகளை உள்ளடக்கி 15.50 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரிசு நிலத் தொகுப்பில் ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு மற்றும் மின் மோட்டர் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, தோட்டக்கலைத்துறை (துணை இயக்குநர்) கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், கபிலர் மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோக நாதன் மற்றும் பயனாளிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது.
    • பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    பரமத்தி வேலூர்:

    வேலூரில் தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சி முகாம் பள்ளி சாலையில் உள்ள வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் நடந்தது. பயிற்சி முகாமிற்கு வேலூர் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.

    இந்த முகாமில் வேலூர், பரமத்தி, பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை டவுன் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர். முகாமில் தூய்மை பணியாளர்கள் செயல்படுவது குறித்து பயிற்சி அளித்தனர்.

    இதற்கு முன்னதாக வேலூர் டவுன் பஞ்சாயத்தில் 25 ஆண்டுகளாக சிறப்பாக பணி புரிந்து வரும் செந்தில்குமார் (45), மற்றும் 8 ஆண்டுகளாக பணிபுரியும் குப்பாயி (45)ஆகிய இருவருக்கும் மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள்.

    இந்த பயிற்சியில் பரமத்தி செயல் அலுவலர் சுப்பிரமணி, பாண்டமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் திலகராஜ், வெங்கரை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன்,எருமப்பட்டி செயல் அலுவலர் வசந்தா மற்றும் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம் கொட்டக்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (70). இவர் மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை (65).

    இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். 3 மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இவர்களின் பேத்திக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இதையடுத்து கடந்த சில நாட்களாக சண்முகம்-நல்லம்மாள் ஆகியோர் திருமண அழைப்பிதழ்களை உறவினர்களுக்கு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வந்த மர்மநபர்கள் வீட்டின் சுற்றுச்சுவர் அருகே இருந்த மரத்தின் மீது ஏறி வீட்டிற்குள் குதித்தனர். பின்னர் அதிகாலையில் வீட்டிற்குள் நுழைந்து அங்கு தூங்கி கொண்டிந்த நல்லம்மாளின் கழுத்தை கத்தியால் அறுத்தும், சண்முகத்தை இரும்பு கம்பியாலும் பலமாக தாக்கினர்.

    இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். அதை பார்த்த மர்மநபர்கள் இருவரும் இறந்து விட்டதாக எண்ணி வீட்டில் இருந்த பீரோ மற்றும் பல்வேறு பகுதிகளில் பணம், நகை உள்ளதா என தேடி பார்த்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடியை தூவி விட்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை உறவினர்கள் சிலர் சண்முகத்தின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    நல்லம்மாள் இறந்துவிட்ட நிலையில், சண்முகம் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சண்முகத்தை நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மர்மநபர்களால் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிச் சென்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதேபோல் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கொள்ளை முயற்சியின் போது கொலை சம்பவம் நடந்ததா? அல்லது முன்விரோத தகராறில் யாராவது கொலை செய்ய வந்தனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு சண்முகத்தின் வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டு இருந்தது. இதை பார்த்த சண்முகம் இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசில் தங்களது வீட்டில் மிளகாய் பொடி தூவப்பட்டுள்ளது என்றும், எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதுவதாகவும் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன், மனைவியை மர்மநபர்கள் தாக்கியதில் மனைவி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×