என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன.
    • மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 892 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 115 மொபைல் ரேசன் கடைகள் நடைபெற்று வருகின்றன. மொபைல் ரேசன் கடைகள் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் 12,893 ரேசன் கார்டுதாரர்கள் பயன் பெறுகின்றனர். சிலுவம்பட்டி, பொம்மைகுட்டைமேடு, ஆரியூர், அணியாபுரம், லத்துவாடி உள்ளிட்ட பகுதிகளில் மொபைல் ரேசன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    ஆய்வு

    மொபைல் ரேசன் கடைமூலம் நாமக்கல் சிலுவம்பட்டி, போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுவதை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மொபைல் ரேஷன் கடை மூலம் பயன்பெறும் ரேசன் கார்டுகள், வழங்கப்படும் பொருட்கள் உள்ளிட்ட விவரங்களை கலெக்டர் உமா கேட்டறிந்தார். பொதுமக்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைக்க வேண்டும், தரமான உணவுப் பொருட்களை சரியான அளவில் வழங்கிட வேண்டும் என விற்பனையாளருக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக திருச்செங்கோடு தாலுகா, புத்தூர் கிராமத்தில் ஆன்லைன் மூலம் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக நிலங்கள் வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    • தென்னை மரங்களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி குருத்துகள் வளராமல் கன்று அழுகிப்போகிறது.
    • இந்த நோய் பரவி தென்னை விவசாயம் பாதிக்கப்படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளது.

    தற்போது கொல்லபட்டி பகுதியில் விவசாயி நடேசன் என்பவரது தோட்டத்தில் தென்னை மரங்களில் புதுவகையான ஒரு நோய் தாக்கப்பட்டு குருத்துகள் அழுகி காய்ப்பு இல்லாமல் போவதோடு புதிதாக நடவு செய்யப்பட்ட தென்னங்கன்றுகளில் இந்த நோய் தாக்கி குருத்துகள் வளராமல் கன்று அழுகிப் போகிறது. இந்த நோய் பரவி தென்னை விவசாயம் பாதிக்கப் படுமோ என அஞ்சிய விவசாயி நடேசன் வேளாண்மைத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    தகவலறிந்து திருச்செங்கோடு வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் லோகநாதன், திருச்செங்கோடு வேளாண்மை அலுவலர் பவித்ரா மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நோயியல் துறை இணை பேராசிரியர் மருதாசலம், சேலம் சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியில் துறை இணைப்பேராசிரியர் ரவி ஆகியோர் கொண்ட குழுவினர் நடேசன் தோட்டத்தில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர்.

    மேலும் இது குறித்து சேலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை பேராசிரியர் ரவி மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழக இணை பேராசிரியர் மருதாசலம் ஆகியோர் கூறியதாவது:-

    கன்றுகள் நடும்போது காண்டாமிருக வண்டுகள் குறித்து சுமார் 3 வருடங்கள் கவனமாக இருக்க வேண்டும். காண்டாமிருக வண்டுகள் தாக்காமல் இருக்க குறுமணல் வேப்பங்கொட்டை ஆகியவற்றை இணைத்து அரைத்து குருத்துகளில் தூவ வேண்டும் அல்லது நாத்தாலியின் உருண்டைகளை குருத்துகளில் போட்டு வைத்தால் காண்டாமிருக வண்டிகள் தாக்காது. இந்த வண்டுகள் குப்பை, குழிகள் எரு குழிகள், கம்போஸ்ட் யார்டுகள், உள்ள பகுதிகளில் அதிகமாக உற்பத்தியாகும். இதனை தடுக்க மெட்ராரைசியம் அனி சோபில் பேட் என்ற பூஞ்சானத்தை ஊற்றினால் காண்டாமிருக வண்டுகள் புழுக்கள் பருவத்திலேயே அழிக்கப்படும். இதனால் வண்டுகளில் உற்பத்திகள் குறைந்து விடும், அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் காண்டாமிருக வண்டுகளின் உற்பத்தியை குறைக்க முடியும்.

    இந்த பூஞ்சான்கள் நெட்டை மர தென்னைகளில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் அதிகமாக தாக்காது. ஆனால் நெட்டை மர வகை கன்றுகளை அதிகமாக தாக்கும் ஆகவே மூன்று ஆண்டுகள் கன்று பருவத்தில் இதனை கண்காணிக்க வேண்டும். கன்றுகளை நடும்போது நீர் பாய்ச்சும் போது மண்கள் குருத்துகளில் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    ஜூன், ஜூலை, அக்டோபர், நவம்பர் ஆகிய மழைக்காலங்களில் தான் இந்த பூஞ்சான்கள் பரவும் காப்பர் ஆக்சிட் மருந்துகளை லிட்டருக்கு 3 கிராம் கலந்து தெளித்தால் இந்த பூஞ்சான்கள் வளராது. போட்டோ கலவை ஒரு சதவீத அளவுக்கு நாமே உற்பத்தி செய்து தெளித்து வந்தாலும் வளராது. காண்டாமிருக வண்டுகளால் ஏற்படும் குழிகள் காயங்களில் தான் இந்த பூஞ்சான் பரவும்.

    இது குருத்து அழுகல், பூஞ்சான் நோய் எனப்படும் வழக்கமான குறுத்தழுகள் நோய் போல் அல்லாமல் இது மாறுபட்டு இருக்கும். பாதிக்கப்பட்ட குருத்துகளை பிடுங்கி நெருப்பு வைத்து எரித்து விட வேண்டும். இல்லை என்றால் இது காற்றில் பரவக்கூடியது பல மரங்களையும் பாதிக்கும். இதனால் காய்ப்பு இருக்காது கன்றுகள் குருத்துகள் அழிந்து போகும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சுமார் 5 டன் எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது
    • ருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை

    திருச்செங்கோடு:

    திருப்பதியில் ஆண்டு தோறும் நடக்கும் பிரம்மோற்சவத் திருவிழா வுக்கு திருச்செங்கோட்டில் இருந்து பூமாலைகள் அனுப்பபட்டு வருகிறது.

    இதன்படி இந்த ஆண்டு பிரமோற்சவ விழா நாளை தொடங்குகிறது. இதற்காக இந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சுமார் 5 டன் எடையுள்ள மணம் உள்ள மலர்களை மாலைகளாக தொடுக்கும் விழா நடந்தது. திருச்செங்கோடு சுற்றுபகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மஞ்சள், சிவப்பு, சாமந்தி பூக்கள், மரிக்கொழுந்து உள்ளிட்ட சுமார் 5 டன் எடையுள்ள பல வண்ண பூக்களை திருச்செங்கோடு, சேலம், கொங்கணாபுரம், ராசிபுரம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட பெண்கள் மாலைகளாக தொடுத்தனர்.

    இது குறித்து கொங்கணா புரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் நிர்வாகிகள் சுகந்தி, கனகராஜ் ஆகியோர் கூறியதாவது:-

    கொங்கணாபுரத்தை சேர்ந்த திருமலை திருப்பதி ஸ்ரீமன் நாராயணா நித்ய புஷ்ப கைங்கர்ய சபா டிரஸ்ட் சார்பில் ரதசப்தமி, வைகுண்ட ஏகாதசி, உகாதி, பிரம்மோற்சவத் திருவிழா ஆகியவற்றுக்கு பூமாலைகள் வருடம்தோறும் தொடுத்து அனுப்பி வருகின்றோம். இறைப்பணியில் அதிக ஆர்வமுள்ள பக்தர்கள் மாலை தொடுக்கும் பணியை செய்தனர்.

    மேலும் மாலைகளோடு கரும்பு, தென்னம்பாளை, தென்னங் குருத்து, இளநீர், பாக்கு குழைகள், மாங்கொத்துகள் சுமார் ரூ.2 1/2 லட்சம் மதிப்புள்ள 10 ஆயிரம் ரோஜாசெடிகள் ஆகி யவற்றையும் சிறப்பு பூஜைகள் செய்து அனைத்தை யும் 3 லாரிகள் மூலம் திருமலைக்கு அனுப்பி உள்ளோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • குருசாமிபாளையத்தில்கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
    • சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் நெ.எஸ்.844 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் 1946-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் தற்போது 260-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருந்து வருகின்றனர்.

    இந்த சங்கத்தில் 3 பேர் ஊழியர்களாக இருந்து வருகின்றனர். சங்க உறுப்பினர்களுக்கு பாவு கொடுத்து அதிலிருந்து தயாரிக்கப்படும் இலவச வேட்டி சேலைகள் வாங்கி அரசுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் சேலைகள் கோவாப்ரேடிவ் நிறுவனத்திற்கும் அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் குருசாமிபாளையத்தைச் சேர்ந்த லோகநாதன் (32) சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். அவர் சங்கத்தின் மேனேஜர் (பொறுப்பு) பிரகாஷிடம் பாவு நூல் கேட்டுள்ளார். அப்போது அவரிடம் மேனேஜர் பிரகாஷ் ஒரு வேட்டிக்கு ரூ.5 தர வேண்டும் என்று கூறியதாக கூறப்படுகிறது. லஞ்சம் தர விருப்பமில்லாத லோகநாதன் நாமக்கல் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் லோகநாதன் சங்கத்திற்கு சென்று மானேஜர் பிரகாஷிடம் ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அந்தப் பகுதியில் பதுங்கி இருந்த நாமக்கல் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையில் உடனடியாக சங்கத்திற்குள் நுழைந்து கையும் களவுமாக மேனேஜர் பிரகாஷை பிடித்து விசாரணை நடத்தினர்.

    அவரிடமிருந்து லஞ்சமாக வாங்கிய ரூ.3 ஆயிரத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கணக்கில் வராத ரூ.49 ஆயிரம் வைத்திருந்ததையும் போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். இது பற்றி அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சங்க உறுப்பினர்களிடமிருந்து வசூலித்ததாக மேனேஜர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இதையடுத்து லஞ்சம் வாங்கிய பிரகாஷை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
    • மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (51) டிரைவர். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்ததால் இவருக்கும், அவரது மனைவி துளசிமணிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தபோது கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பழனிச்சாமி மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் மனைவி துளசிமணி வெளியில் சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தபோது பழனிச்சாமி வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு போட்டு தொங்கிக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். ஆனால் பழனிச்சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
    • அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர்.

    பரமத்திவேலூர்:

    ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். அதன்மூலம் நமது முன்னோர்களின் ஆசி கிடைக்கும். மேலும் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது இந்துக்களின் ஐதீகமாகும்.

    மோகனூர் காவிரி

    அதன்படி புரட்டாசி மகாளய அமாவாசையான இன்று நாமக்கல் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்று படிக்கட்டு துறையில் அதிகாலையிலேயே ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் தங்களது முன்னோர்களை வழிபட்டு தர்ப்பணம் அளித்தனர்.

    இதற்காக சிவாச்சாரி யார்கள் பக்தர்களை வரிசையாக அமர வைத்து அவர்களுக்கு முன் தலைவாழை இலை போட்டு அந்த இலையில் அகத்திக்கீரை, பழம், பூ, புனிதநீர், எள், அரிசிமாவு மற்றும் கடலை கலந்த உருண்டை மற்றும் பல்வேறு பொருட்களை வைத்து வேத மந்திரம் ஓதினர்.

    புனித நீராடினர்

    தொடர்ந்து பூஜை செய்த பொருட்களை காவிரி ஆற்றின நடுப்பகுதிக்கு சென்று இலையுன் விட்டு புனித நீராடினர். பின்னர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று குடும்பத்துடன் தரிசனம் செய்தனர்.

    நாமக்கல், வளையபட்டி, எருமப்பட்டி, சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, ராசிபுரம், மல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் காவிரி ஆற்று படுகையில் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாக இருந்தது.

    அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு துறையினர் மற்றும் மோகனூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    குமாரபாளையம்

    இதேபோல் குமாரபாளையம் காவிரி ஆற்றின் கரையோரங்களிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு நீராடினர்.

    மேட்டூர்

    சேலம், மேச்சேரி நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மேட்டூருக்கு குவிந்தனர். இங்குள்ள மேட்டூர் அணையின் காவிரி பாலம், படித்துறை, எம்.ஜி.ஆர். பாலம் ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களின் பெயரை கூறி பல்வேறு பொருட்களை படையலிட்டு வழிபாடு நடத்தினர்கள். பின்னர் தர்ப்பண பொருட்களை ஆற்றில் கரைத்து புனித நீராடி வழிபட்டனர்.

    இந்த நிலையில் திதி கொடுக்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும், உடைகள் மாற்ற அறை உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டினர்.

    எடப்பாடி

    பூலாம்பட்டி படகு துறை, படித்துறை, கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை உள்ளிட்ட பல்வேறு காவிரி கரை பகுதிகளில் இன்று அதிகாலையில் திரண்ட பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி கரைப்பகுதியில் தங்கள் முன்னோர்களுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

    புரட்டாசி மகாளய அமாவாசை திதியை ஒட்டி பூலாம்பட்டி கைலாசநாதர் கோவில், காவிரி கரை பகுதிகளில் உள்ள பிரம்மாண்ட நந்திகேஸ்வரர் சன்னதி, காவிரித்தாய் கோவில், காவிரி கரை படித்துறை விநாயகர் கோவில் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    காவிரி பகுதியில் திரண்டு இருந்த பக்தர்களுக்கு பூலாம்பட்டி வாசுதேவர், ஸ்ரீவர்ஷன் உள்ளிட்டோர் தலைமையிலான ஆன்மீக குழுவினர் வழிகாட்டு ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகை தந்ததால் இங்கு கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    • பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
    • இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி கிலோ ரூ.170- க்கும், அரளி கிலோ ரூ.150- க்கும், ரோஜா கிலோ ரூ.200- முல்லைப் பூ கிலோ ரூ.700-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும் ஏலம் போனது. பூக்கள் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.
    • இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள தண்ணீர்பந்தல் காட்டை சேர்ந்தவர் கண்ணன் (52). இவர் அந்தப் பகுதியில் சேகோ பேக்டரி வைத்து நடத்தி வருகிறார்.

    வயதான பெற்றோர்

    கண்ணன் அவரது வயதான பெற்றோரை கவனித்துக் கொள்வதற்காக திருவாரூரை சேர்ந்த கனிமொழி (27) என்ற பெண்ணை வேலைக்கு அமர்த்தியுள்ளார். கனிமொழி அவரது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    இந்த நிலையில் கண்ணனின் தந்தை லோகநாதன் வீட்டிலிருந்த 12 பவுன் தங்க நகையை காணவில்லை. இதனால் கனிமொழி மீது சந்தேகம் அடைந்த கண்ணன் நாமகிரிப்பேட்டை போலீசில் இதுபற்றி புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    கள்ளக்காதலன்

    இதில் கனிமொழி நகையை திருடி அவரது கள்ளக்காதலன் மோகன் என்பவரிடம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொடுத்து வைத்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் தஞ்சாவூரில் இருந்த மோகனை பிடித்து விசாரணை நடத்தி அவரிடம் இருந்து 12 பவுன் நகைகளை மீட்டனர்.

    தொடர்ந்து கனிமொழி மற்றும் அவரது காதலன் மோகன் ஆகிய இருவரையும் கைது செய்து ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.

    • அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது.
    • இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அம்மன் நகர் பகுதியில் அய்யப்பன் கோவில் வீதி முடிவில், சேலம் கோவை புறவழிச்சாலை சர்வீஸ் சாலை உள்ளது. இதன் ஓரமுள்ள பகுதியாவும் மண் அரிப்பு ஏற்பட்டு, எந்நேரமும் சாலை உடைந்து காணப்படுகிறது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை நகராட்சி சார்பில் மனு கொடுத்தும், நேரில் சொல்லியும் பலனில்லை. இந்த இடத்தில் பல முறை கார், சரக்கு வாகனம் ஆகியன கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து இது போல் அசம்பாவிதம் ஏற்பட்டு பலரும் பாதிக்கப்படும் முன்பு இங்கு தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில், சேலம் கோவை புறவழிச்சாலையில் சாலை மறியல் நடைபெற்றது. அப்போது தடுப்பு சுவர் அமைக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர்கள் அழகேசன், ராஜ், தர்மலிங்கம், ஜேம்ஸ், உள்பட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். இந்த சாலை மறியல் சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் கோவை பக்கமிருந்து வந்த வாகனங்கள் பல கி.மீ. தூரம் வரை வரிசையில் நின்றன.

    • வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர்.
    • மர்ம கும்பலை பிடிக்க கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா குப்புச்சிபாளையம் குச்சிக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி நல்லம்மாள் என்கிற சின்னப்பிள்ளை.

    கணவன், மனைவி இருவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சண்முகத்தை இரும்பு கம்பியால் பலமாக தாக்கியும், நல்லம்மாளை கழுத்தை கத்தியால் அறுத்தும் கொலை செய்தனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டுக்குள் மிளகாய் பொடிகளை தூவி விட்டு சென்றனர்.

    மர்ம நபர்கள் தாக்கியதில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சண்முகத்தை நேற்று காலை அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். மேலும் இதுதொடர்பாக பரமத்திவேலூர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் வந்தனர்.

    பின்னர் சண்முகத்தை மீட்டு நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொலை செய்யப்பட்டு கிடந்த நல்லம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டிற்குள் பல்வேறு பகுதிகளில் கைரேகை பதிவு எடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த பயங்கர சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம கும்பலை பிடிக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில் கூடுதல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த தனிப்படையினர் சம்பவம் நடந்த சண்முகத்தின் வீடு உள்ள பகுதிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமிரா பதிவுகள் மற்றும் சம்பவ நடைபெற்ற நேரத்தில் அப்பகுதி உள்ள செல்போன் கோபுரத்தில் பதிவான எண்களை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் தொடர்ந்து பரமத்திவேலூர் பகுதியில் பரபரப்பு நீடித்து வருகிறது.

    • மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கைசாமி மற்றும் போலீசார் காவிரி ஆறு பகுதிக்கு சென்றனர்.

    அப்போது போலீசாரை பார்த்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவக்குமார் (43), கார்த்திக் பார்த்தீபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பிடிப்பட்ட 8 பேர் மற்றும் தப்பியோடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

    • நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம்
    • புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை 3 முறை வலம் வந்தார். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான், பரமேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதேபோல் பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பர நாதருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தினை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை காண்பிக்கப் பட்டது.

    பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர் மற்றும் பரமத்திவேலூர் வல்லப விநாயகர் கோவிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், உள்ளிட்ட கோவில்களில் எழுந்தருளியுள்ள சிவபெருமா னுக்கும், நந்திகேஸ்வரருக்கு புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை களும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

    ×