என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலையில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார்.
    • அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காந்தி நகரில் வசிப்பவர் வெங்கடேசன் (62). இவர் சேலம்-கோவை புறவழிச்சாலை கோட்டை மேடு பகுதி சர்வீஸ் சாலை யில் உள்ள தனியார் சேவா சங்க கட்டிடத்தில் இரவு வாட்ச்மேனாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு தான் பணியாற்றும் இடம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.

    இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் வெங்கடேசனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனிடையே வெங்கடே சனின் மகன் பாலாஜி (43) நேற்று காலை தந்தையை காண அவர் பணியாற்றும் இடத்திற்கு வந்தபோது தான் விபத்து நடந்தது குறித்து அருகில் உள்ளவர்கள் மூலம் தெரிந்து கொண்டார்.

    பின்னர் இது குறித்து குமாரபாளையம் போலீசில் பாலாஜி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்துக்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • பொத்தனூர் பேரூராட்சியில் 6-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 6-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமையில் துணைத் தலைவர், செயல் அலுவலர் திலகராஜ், வார்டு உறுப்பினர்கள் இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், பில் கலெக்டர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 60-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 2-வது வார்டு பகுதிகளில் உள்ள செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெருமின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் போன்ற பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் மேற்கொண்டனர்.

    • புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர்.
    • குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வாலரை கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 29). இவரது மனைவி நாகதேவி (26). மில் தொழிலாளி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 7-ந் தேதி சூரியம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நாகதேவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது.

    இந்த நிலையில் 3-வது பெண் குழந்தையை ரூ.2 லட்சத்திற்கு விற்று தருவதாக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றும் டாக்டர் அனுராதா என்பவரும், கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த புரோக்கர் லோகாம்பாள் என்பவரும் பேரம் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து தினேஷ் திருச்செங்கோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகாம்பாளிடம் விசாரணை நடத்தியதில் புரோக்கர்கள் மூலம் தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் விற்பனை செய்துள்ளது தெரியவந்தது.

    இதையடுத்து புரோக்கர் லோகாம்பாள் மற்றும் அரசு டாக்டர் அனுராதா ஆகியோரை கைது செய்து சேலம் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் டாக்டர் அனுராதா பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். அவர் நடத்தி வந்த 2 கிளீனிக்குகளும் மாவட்டம் நிர்வாகம் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்த நிலையில் குழந்தை விற்பனை வழக்கில் குமாரபாளையத்தை சேர்ந்த புரோக்கர் பாலாமணி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
    • நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் அருகே உள்ள சின்னஅய்யம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தி (50). இவரது மகள் கீர்த்தனா அனுஸ்ரீ(10). இருவரும் நேற்று நாமக்கல்-திருச்செங்கோடு ரோடு பெரசபாளையம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்கள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி கீர்த்தனா அனுஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆனந்தி தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில், நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய், மகள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

    • சோழசிராமணியில் 150 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன.
    • இந்த தொழிலை நம்பி கடந்த 3 தலைமுறையாக 700 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சோழசிராமணியில் 150 நெசவாளர் குடும்பங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி கடந்த 3 தலைமுறையாக 700 -க்கும் மேற்பட்டோர் உள்ளனர். இங்கு உற்பத்தி ஆகும் வேஷ்டி, துண்டு, சேலைகள் கோ ஆப்டெஸ்க்கு அனுப்பட்டு வருகின்றன.

    இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் பாவடி முத்துகுமாரசாமி கோவில் இடத்தில் நூலை காய வைத்து பதனிடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த இடத்தில் நிரந்தரமாக நெசவு தொழில் செய்ய அரசு உரிய பட்டா வழங்கக் கோரி நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    • சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது.
    • கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    பள்ளிபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே காவிரி பகுதியில் உள்ள சி.ஐ.டி.யு. தொழிற்சங்க அலுவலகத்தில் நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சிறப்பு பேரவை கூட்டம் சங்கத்தின் ஒன்றிய தலைவர் அசன் தலைமையில் நடந்தது. ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார்.

    கூட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அசோகன், மாவட்ட தலைவர் மோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளிபாளையம் பகுதி விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2022-23-ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்க வேண்டும். போனஸ் பேச்சு வார்த்தையில் அரசு தலையிட வேண்டும் என வலிறுத்தி காவிரி, வசந்தநகர், ஆயக்காட்டூர், ஆக்ரஹாரம் உள்ளிட்ட பல பகுதிகளில் தெருமுனை பிரச்சாரம் நடத்துவது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இந்த கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் ஏராளமான விசைத்தறி தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.
    • முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார்.

    பரமத்திவேலூர்:

    கரூர் மாவட்டம் மன்மங்கலம் அருகே பண்டுதகாரன் புதூர் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வேதியியல் துறை சார்பாக சுகாதார விழிப்புணர்வு முகாம் தளவா பாளையத்தில் நடைபெற்றது.

    முகாமிற்கு தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைக் குழு உறுப்பினரும், அரசு கல்வி நிறுவனங்களின் தலைவருமான நடேசன் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கோதை நடேசன், செயலாளர் என்ஜினீயர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஷாலினி பிரியா மற்றும் டாக்டர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு தளவாபாளையம் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இந்த முகாமில் வேதியியல் துறை தலைவர் சாந்தி வரவேற்றார். பேராசிரியர்கள் செவ்வந்தி, கவிபிரியா, முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இளங்கலை 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
    • மீண்டும் நேற்று முன்தினம் இரவு தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும்‌ மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களுக்கு மேலாக வீடுகள், வெல்ல ஆலைகள் மற்றும் அங்கிருந்த குடியிருப்புகளுக்கு தீ வைப்பது, விவசாய கருவிகள், வாழை மற்றும் 3200-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பது போன்ற வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். மேலும் கோவை மண்டல போலீஸ் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம், நல்லசிவம், புலவர் சுப்பிரமணி ஆகியோரது தோட்டத்தில் இருந்த 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சேதப்படுத்தி உள்ளனர். இச்சம்பவம் குறித்து அறிந்த நாமக்கல் கலெக்டர் டாக்டர் உமா பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. என்ஜினீயர் சேகர், பரமத்திவேலூர் தாசில்தார் கலைச்செல்வி, திருச்செங்கோடு ஆர்.டி.ஓ சுகந்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினர். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் விசாரணை நடத்தி இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

    மரங்கள் வெட்டி சாய்த்த மர்ம நபர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.
    • இந்த வருடமும் 49-ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள புது மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு நவராத்தி விழா கொண்டாடப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடமும் 49-ம் ஆண்டு நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் நேற்று நவராத்திரி விழா தொடங்கியது.

    நவராத்திரி விழாவை முன்னிட்டு வருகிற 24-ந் தேதி வரை தினந்தோறும் அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறுகிறது. 23-ந் தேதி அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவமும், 24-ந் தேதி மாலை 6 மணிக்கு புது மாரியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் புறப்பட்டு பேட்டை பகவதியம்மன் கோவிலை சென்றடைகிறது. பின்னர் அங்கு அம்பு சேர்வை நடைபெறுகிறது.

    இதேபோல் கோப்பணம் பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி முதல் நாளை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர்.
    • பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர்ந்து வீடுகள், வாகனங்களுக்கு தீ வைப்பு, வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல், விவசாய பயிர்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதனிடையே மீண்டும் ஜேடர்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் பகுதியில் தர்மலிங்கம் (வயது 56), நல்லசிவம் (62), புலவர் சுப்பிரமணி, வக்கீல் சுப்பிரமணி (68) ஆகியோரது தோட்டத்தில் இருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு வெட்டி சாய்த்தனர்.

    மேலும் வக்கீல் சுப்பிரமணி என்பவரது தோட்டத்தில் இருந்த 200 பாக்கு மரங்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்களையும் மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அந்த பகுதிகளில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ தலைமையிலான போலீசார் வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டப்பட்ட தோட்டத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாக்கு மரம் மற்றும் வாழை மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    வாழை மரங்கள் மற்றும் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. ஜேடர்பாளையம் பகுதியில் தொடரும் இச்சம்பவத்திற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீண்ட காலமாக இக்கோவில்களில் ஆண்டு தோறும் விமரிசையாக திரு விழாக்கள் நடத்தப்பட்டது.
    • பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினர் கோவில்களை பூட்டி சீல் வைத்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட தும்மங்குறிச்சியில் 3 சமூகத்தினருக்கு பாத்தி யப்பட்ட கூத்தாண்டம்மன், கொங்களாயி அம்மன், விநாயகர், நல்லாயி, காமாட்சி அம்மன், நல்லேந்தி ரன், வீரமாத்தியம்மன், கம்பராயன், பட்டதளச்சி அம்மன், கனாமரத்தான் கோவில்கள் உள்ளன.

    நீண்ட காலமாக இக்கோவில்களில் ஆண்டு தோறும் விமரிசையாக திரு விழாக்கள் நடத்தப்பட்டது. இக்கோவில்களில் பூஜை செய்வது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு இரு சமூகத்தினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இதையடுத்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித உடன்பாடும் ஏற்பட வில்லை. இதையடுத்து வருவாய்த் துறையினர் கோவில்களை பூட்டி சீல் வைத்தனர். கடந்த 7 ஆண்டுகளாக 10 கோவில்களிலும் எவ்வித பூஜைகளும் நடத்தப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி வருவாய் துறையினர் கோவில்களுக்கு பாத்தி யப்பட்ட சமூகத்தினரி டையே சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து 7 ஆண்டுகளாக பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த 10 கோவில்களும் நாமக்கல் தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் சீல் அகற்றி திறக்கப்பட்டது.

    தொடர்ந்து, ஹோமம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமிகளை வழிபட்டனர். அசம்பாவிதம் தவிர்க்க நல்லிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

    7 ஆண்டுகளுக்கு பின் கோவில் திறக்கப்பட்ட தையடுத்த, மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக பட்டாசுகளை வெடித்தனர். அப்போது அப்பகுதியில் பரம சிவம் (42) என்பவரது குடிசை வீட்டில் தீப்பொறி விழுந்து தீப்பிடித்தது. அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை கட்டுப்படுத்தினர்.

    • ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மின் வினியோகம் இருக்காது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

    இதனால் பரமத்திவேலூர், பரமத்தி, நல்லியாம்பாளையம், பொத்தனூர், வி.சூரியாம்பாளையம், வீராணம் பாளையம், கோப்பணம்பாளையம், குப்பிச்சிபாளையம், ஜேடர்பாளையம், வடகரையாத்தூர், காளிபாளையம், கரைப்பாளையம், கண்டிப்பாளையம், வடுகபாளையம், நஞ்சப்ப கவுண்டம்பாளையம், நாயக்கனூர், சிறுநல்லி கோவில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பள்ளம் ஆகிய ஊர்களுக்கும் மேலும் மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் இதர பகுதிகளுக்கும் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.

    ×