என் மலர்tooltip icon

    நாமக்கல்

    • நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் உமா ஆய்வு செய்தார்.
    • குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துக்காளிப்பட்டி ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் உமா ஆய்வு செய்தார். அப்போது குழந்தைகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், பராமரிக்கப்படும் பதிவேடுகளை ஆய்வு மேற்கொண்டார்.

    குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவுகள், கற்பிக்கப்படும் ஆரம்ப கல்வி உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அங்கன்வாடி பணியா ளரிடம் கேட்டறிந்தார். மேலும் குழந்தைகளின் உயரம், எடை ஆகியவற்றை போஷன் அபியான் செயலியில் பதிவேற்றம் செய்திட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மதிய உணவு

    அதேபோல் முத்துக் காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள மதிய உணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, பயன்பெறும் மாண வர்களின் எண்ணிக்கை போன்ற விவரங்களை விரிவாக கேட்டு அறிந்து மாணவர்களுக்கு உணவு களை சுகாதார மாகவும் தரமானதாகவும் வழங்கிட வேண்டுமென பணியா ளர்களிடம் அறிவுறுத்தினார்.

    அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய அரசு காலனியில் அங்கன்வாடி மேற்கு பகுதியில் கழிவுநீர் கால்வாய் மற்றும் செங்குத்து உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து முத்துக்கா ளிப்பட்டியில் இணைய வழி பட்டா வழங்குவதற்காக வரண்முறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் மேகலா மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    • சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது.
    • பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் தங்களது தோட்டத்தில் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பிரபல எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

    தேங்காய்

    இந்த வாரம் நடந்த ஏலத்தில்18.07 குவிண்டால் எடை கொண்ட 5ஆயிரத்து 715தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் தேங்காய் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.29.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.18.19-க்கும், சராசரி விலையாக ரூ.24.96-க்கும் என மொத்தம் ரூ.ஒரு 43ஆயிரத்து 603-க்கு விற்பனையானது.

    தேங்காய் பருப்பு

    அதேபோல் 340.47 1/2 குவிண்டால் எடை கொண்ட698-மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.82.99-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.79.09-க்கும், சராசரி விலையாக ரூ.82.89-க்கும் விற்பனையானது.

    2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.81.79-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.64.35-க்கும், சராசரி விலையாக ரூ.76.99-க்கும் என மொத்தம் ரூ.26 லட்சத்து 62 ஆயிரத்து 811 -க்கு விற்பனையானது.

    சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ. 27லட்சத்து06 ஆயிரத்து 414-க்கு விற்பனையானது.

    • கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது.
    • தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அரியூர் நாடு பஞ்சாயத்து கிழக்குவளவு பகுதியில் மாசிலா அருவி அமைந்துள்ளது. தற்போது இவ்வருவியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் கொல்லிமலை யூனியன் சார்பில் கிழக்கு வளவு பகுதியை சேர்ந்த ஆண்கள் சுய உதவி குழுவின் கட்டுப்பாட்டில் சுற்றுலா பயணிகளிடம் சுங்க வரி கட்டணம் வசூல் செய்து மாசிலா அருவியின் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

    தற்போது மாசிலா அருவியை வனத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள், ஆண்கள் சுய உதவி குழுவினர் மாசிலா அருவி நுழைவாயில் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மாசிலா அருவியை தங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.
    • இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர்.

    பரமத்தி வேலூர்:

    சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் நேற்று நடந்த பூ ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.700-க்கு விற்பனையானது.

    பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பிலிக்கல்பா ளையம், சாணார்பாளையம், வேலூர் பரமத்தி, கரூர் மாவட்டம் சாமங்கி, வேட்ட மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லைப்பூ, சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி பூக்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இவற்றை விவசாயிகள் அறுவடை செய்து ப.வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்திற்கு தினமும் கொண்டு வந்து ஏலத்தில் விற்பனை செய்கின்றனர். கடந்த சில வாரங்களாக விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

    கோவில் திருவிழா மற்றும் சுப முகூர்த்த காரணங்களால் பூ தேவை அதிகரித்துள்ளது. பரமத்தி வேலூரில் உள்ள பூ உற்பத்தியாளர் சங்கத்தில் நேற்று நடந்த ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.700-க்கும், சம்பங்கி ரூ.170-க்கும், அரளி ரூ.280 -க்கும் விற்பனையாகின.

    இதே போல் ஒரு கிலோ சம்பந்தி பூ ரூ.250-க்கும், முல்லைப்பூ கிலோ ரூ.600-க்கும் விற்பனையாகின. சுப முகூர்த்த நாட்களை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது.
    • உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு ஒன்று இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை சோளக்காட்டில் பழங்குடியின மக்களின் உழவர் சந்தை அமைந்துள்ளது. இந்த உழவர் சந்தையின் அருகே மலைபாம்பு ஒன்று இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உத்தரவின்பேரில் கொல்லிமலை வன சரகர் சிவானந்தம் தலைமையில் செங்கரை வனகாப்பாளர் கருணாநிதி, வாளவந்திநாடு வனகாவலர் சுரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று 8 அடி நீளமுள்ள அந்த மலைபாம்பை மீட்டு நாச்சியம்மன் கோவில் அருகே உள்ள வன காப்பு காட்டில் விட்டனர்.

    • சாலையில் உள்ள ஒரு இடத்தில் மணல் குவாரி அமைத்து அங்கு கொட்டி வைத்து மணல்களை விற்பனை செய்து வந்தனர்.
    • ரசீது இன்றி கள்ள மார்க்கெட்டில் ஏராளமான மணலை விற்பனை செய்து வருவதாகவும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒரு சிலர் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே ஒருவந்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் லாரிகள் மூலம் மணல்களை அள்ளி சென்று வலையபட்டி செல்லும் சாலையில் உள்ள ஒரு இடத்தில் மணல் குவாரி அமைத்து அங்கு கொட்டி வைத்து மணல்களை விற்பனை செய்து வந்தனர்.

    இந்நிலையில் காவிரி ஆற்றில் ஒப்பந்ததாரர் அதிக அளவு மணல்களை அள்ளி சென்று உள்ளதாகவும், ஆனால் முறைப்படி மணல் விற்பனை செய்யவில்லை என்றும், ரசீது இன்றி கள்ள மார்க்கெட்டில் ஏராளமான மணலை விற்பனை செய்து வருவதாகவும் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஒரு சிலர் புகார் செய்ததாக கூறப்படுகிறது.

    அதன் அடிப்படையில் கடந்த 10-ந் தேதி ஒருவந்தூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்ற அமலாக்கத்துறையினர் டிரோன் மூலம் அங்கு மணல் அள்ளிய குழிகளின் நீளம், அகலம், ஆழம் ஆகியவற்றை சுமார் 2 மணி நேரம் அளந்து பார்த்துவிட்டு அதனைக் குறித்துக் கொண்டு சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் அமலாக்கத்துறையினர் மோகனூர் காவிரி ஆற்றில் 2-வது முறையாக ஆய்வு செய்தனர். மாலை 4.30 மணிக்கு வந்த அதிகாரிகள் 6 மணி வரை சோதனை செய்து சென்றனர்.

    • வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.
    • மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் பொன்விழா நகரில் உள்ள ஒரு வாடகை வீட்டில் மேல் தளத்தில் வசித்து வருபவர் சுப்ரமணியம் (43). இவர் மாருதி நகரில் சிறுதானிய கடை நடத்தி வருகிறார்.

    இவர் நேற்றிரவு மனைவி பிரேமா மற்றும் 2 குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு சேந்தமங்கலம் காந்திபுரம் பகுதியில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டின் உரிமையாளரும் வெளியூருக்கு சென்றுவிட்டார்.

    நகை திருட்டு

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் சுப்ரமணியன் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த செயின், 2 மோதிரம், 5 செட் தோடு என 6 பவுன் நகைகள், ரூ.10,000 ரொகத்தை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை வீட்டிற்கு திரும்பிய சுப்ரமணியம் கதவு உடைக்கப்பட்டு நகை, பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.
    • விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

    ராசிபுரம்:

    நாமகிரிப்பேட்டை அருகே உள்ள அக்கலாம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் விஜய் (28). இவர் அந்தப் பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் லோடுமேன் ஆகவும், லாரி டிரைவர் ஆகவும் வேலை பார்த்து வருகிறார்.

    ராமநாதபுரம் மாவட்டம் நாவலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமதாஸ் - தமிழரசி தம்பதியின் மகள் தீபலட்சுமி (28). விஜய், தீபலட்சுமி இருவரும் நாமக்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சர்வேஸ்வரன் (5), நிதிலேஷ் (3) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    தற்கொலை

    நேற்று முன்தினம் விஜய் வழக்கம்போல் வேலைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து விஜய் அவரது மனைவி தீபலட்சுமிக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதையடுத்து விஜய் பக்கத்து வீட்டுக்காரருக்கு போன் செய்து பார்க்கச் சொல்லி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்த போது தீபலட்சுமி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், விஜய் மற்றும் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீபலட்சுமியின் உடலை கைப்பற்றி ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி தீபலட்சுமியின் தாயார் தமிழரசி நாமகிரிப்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நாமகிரிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தீபலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆன 6 வருடங்களில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாமக்கல் உதவி கலெக்டர் சரவணன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

    • வட்டார அளவிலான சங்கமிப்போம், சமத்துவம், படைப்போம் என்ற தலைப்பில் கலை திருவிழா நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
    • நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்புகுழு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    திருச்செங்கோடு:

    தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நாமக்கல் மாவட்டம் நடத்தும் வட்டார அளவிலான சங்கமிப்போம், சமத்துவம், படைப்போம் என்ற தலைப்பில் கலை திருவிழா நிகழ்ச்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    இதில் முன்னாள் நகர் மன்ற தலைவர் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன், நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, நாமக்கல் மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசினர் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பொறுப்புகுழு ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

    திருவிழாவில் திருச்செங்கோடு வட்டாரத்தில் உள்ள இறையமங்கலம், மாணிக்கம் பாளையம், தேவனாங்குறிச்சி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலைத்திருவிழா தொடங்கி 6 வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கட்டுரை போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, களி மண்ணால் பொருள்களை செய்யும் போட்டி, தலைப்பை ஒட்டி ஓவியம் வரைதல், நடன போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டி கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த கலைத் திருவிழா வருகிற 21-ந் தேதி வட்டார அளவில் நிறைவு பெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் முத்துகாளிப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை தாங்கினார். ஏ.கே.பி.சின்ராஜ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

    சிறப்பு விருந்தினராக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் சிறந்த கன்றுகள், சிறந்த கால்நடை பராமரிப்புக்கான பரிசுகள், கால்நடை வளர்ப்பவர்களுக்கு தீவன புல் கரணைகள், தாது உப்பு கலவைகள் ஆகியவற்றை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

    முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-

    தமிழ்நாட்டில் கால்நடை மருத்துவ வசதி கிடைக்கப் பெறாத தொலைதூர உட்கிராமங்களில் பொதுமக்களுக்கு கால்நடை வசதி கிடைக்கும் வகையில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாமை முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம் செய்தல், ஆண்மை நீக்கம் செய்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், மலடு நீக்க சிகிச்சை செய்தல், சினை பரிசோதனை செய்தல், சிறு அறுவை சிகிச்சைகள், தாது உப்பு கலவை வழங்குதல், சிறு கண்காட்சி, சிறந்த கால்நடை வளர்ப்பு முறை பின்பற்றும் விவசாயிகளுக்கு விருது மற்றும் கன்றுகளுக்கு பரிசு வழங்குதல், சுகாதார நடவடிக்கைகள், கால்நடை வளர்ப்பு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களுடன் கலந்துரையாடல் உள்ளிட்ட பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் நடைபெற உள்ளது.

    மாவட்டத்தில் 300 முகாம்கள்

    2023-2024-ம் நிதியாண்டில் நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்திற்கு 20 முகாம்கள் வீதம் நாமக்கல் மாவட்டத்தில் 300 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. எனவே கால்நடை முகாம் நடைபெறும்போது கிராம மக்கள் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

    முகாமில் ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.பி.ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் ஏ.கே.பாலச்சந்திரன், முத்துக்காளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருள், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வராஜ், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் நடராஜன், துணை இயக்குனர் அருண் பாலாஜி, உதவி இயக்குனர்கள் மருதுபாண்டி, முருகேசன், மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், கல்லூரி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்தது.
    • கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், கபிலர்மலை, பரமத்தி, ஒத்தக்கடை, கந்தம்பாளையம், நல்லூர், மணியனூர், பெருங்குறிச்சி, குப்பரிக்காபாளையம், சுள்ளிப் பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பிள்ளை, குறும்பல மகாதேவி, சிறுநல்லிகோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், ஆனங்கூர், பெரிய சோளிபாளையம், கபிலக்குறிச்சி, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், குன்னத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவும் சுமார் 8 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து இடி மின்னலுடன் கூடிய மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்து தொடர்ந்து பெய்தது.

    இதன் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டே சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த சிற்றுண்டி கடைகள், பலகாரக் கடைகள், பூக்கடைகள், பழக்கடைகள், துணிக்கடைகள், கம்மங்கூழ் விற்பனை கடைகள், கரும்பு ஜூஸ் விற்பனை கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் வியா பாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

    தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக வெப்பம் மாறி குளிர்ச்சியான சீதோஷண நிலை ஏற்பட்டுள்ளது. கடும் வெயிலின் காரணமாக பயிர்கள் வாடிய நிலையில் இருந்தது. தற்போது மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விட்டு தழைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • குமாரபாளையம் , சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.
    • இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. பின்னர் இரவு தொடங்கிய கனமழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலையோர வியாபாரிகள், இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வோர் பெரிதும் பாதிப்படைந்தனர். சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

    தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் இரவில் மழை கொட்டியது. குமாரபாளையம் பஸ் நிலைய பகுதியில் பெய்த மழையால் கழிவுநீர் குழாய் அடைப்பு ஏற்பட்டு குழாய் வழியாக செல்ல வேண்டிய கழிவுநீர் பஸ் நிலைய கடைகளின் வழியாக ஓடியது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். இந்த நிலையில் குமாரபாளையம் பகுதியில் மழை நீடிப்பதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    ×