என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாய  நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்
    X

     தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்ட விவசாய நிலத்தை கலெக்டர் டாக்டர்.உமா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தரிசு நிலம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் விவசாய நிலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த கலெக்டர்

    • அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் பிலிக்கல் பாளையத்தில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதை கலெக்டர் டாக்டர்.உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விவசாயிகளிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள வேளாண் பணிகள், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப் பட்ட மானிய தொகை, நிலம் மேம்பாடு உள்ளிட்ட விபரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

    நிலத்தடி நீர்

    இதையடுத்து கலெக்டர் உமா கூறியதாவது:-

    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளித்து தரிசு நில மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தரிசு நிலமுடைய 8 அல்லது அதற்கு மேற்பட்ட விவசாயிகள் குழுவாக ஒன்று சேர்ந்து 15 ஏக்கர் தரிசு நிலத் தொகுப்பினை ஏற்படுத்தி குழுவாக சாகுபடி செய்வதற்கு உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    உழவன் செயலியில் பதிவு செய்த விவசாயிகளின் விவரங்கள் வேளாண் அலுவலர்கள் மூலம் பெறப்படும். பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தரிசு நிலத் தொகுப்புகளில் நிலத்தடி நீர் மட்டம், நீர் ஆதாரங்களை உருவாக்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து ஆழ்துளைக் கிணறு அல்லது குழாய் கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் தரிசு நிலத்திலும் சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் வருவாய் ஈட்டலாம்.

    அந்த வகையில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் 2021 -– 2022- ன் கீழ் கபிலர்மலை வட்டம் பிலிக்கல்பாளையத்தில் 15 விவசாயிகளை உள்ளடக்கி 15.50 ஏக்கர் பரப்பளவில் தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தரிசு நிலத் தொகுப்பில் ஆழ்துளை கிணறு, மின் இணைப்பு மற்றும் மின் மோட்டர் முழு மானியத்தில் வழங்கப்பட்டு நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வில் வேளாண் இணை இயக்குநர் துரைசாமி, தோட்டக்கலைத்துறை (துணை இயக்குநர்) கணேசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகன், கபிலர் மலை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பிலிக்கல் பாளையம் ஊராட்சி தலைவர் மணிமேகலை லோக நாதன் மற்றும் பயனாளிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×