என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • மாவட்ட மற்றும் மாநில அளவில் 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன்.
    • மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன்.

    நாகப்பட்டினம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்த மகிழஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் விவசாய கூலி தொழிலாளி பக்கிரிசாமி- புவனேஸ்வரி தம்பதியின் மகள் மகிஷா. இவர் மகிழஞ்சேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது பள்ளி ஆசிரியர் ஈஸ்வரன் துணையுடன் மாநில அளவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றார்.

    இதுகுறித்து மாணவி கூறியதாவது:-

    வறுமையான குடும்பத்தில் பிறந்து, இடிந்துள்ள வீட்டில் வசிக்கும் நான் பள்ளி ஆசிரியர் உதவியுடனும், எனது 67 வயது பாட்டி பத்மாவதி துணையுடன் மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற 10-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன். என் குடும்ப சூழ்நிலையால் என்னால் முறையாக பயிற்சி எடுக்கவும், அதற்கான சாதனங்களை வாங்குவதற்கும் முடியவில்லை. எனவே, கருணை மனம் கொண்டவர்களும், தமிழக அரசும் எனக்கு உறுதுணையாக ஆதரவளித்தால் மிகப்பெரிய அளவில் சதுரங்க போட்டியில் சாதனை படைப்பேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    • வீட்டில் தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை தெருவை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலாஜி (வயது 23). கைப்பந்து விளையாட்டு வீரர். பல போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகள் வாங்கியவர் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தனி அறையில் மின்விசிறியில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு )பசுபதி மற்றும் சப் - இன்ஸ்பெக்டர் இங்கர்சால் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • மீதமுள்ள ஒரு கட்டிடம் விரைவில் திறந்து வைக்கப்படும்.
    • விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் கட்டப்பட்டுள்ள புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடத்தை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் திறந்து வைத்தனர்.

    பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறியதாவது,

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 10 நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன.

    அதில் நாகை தொகுதியில் மட்டும் 3 கட்டடங்கள் கட்டப்பட்டு அதில் 2 கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    மீதமுள்ள ஒரு கட்டடம் விரைவில் திறந்து வைக்கப்படும் என்று கூறினார்,

    ஷா நவாஸ் எம்.எல்.ஏ கூறும்போது, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்த வெளியில் தேங்கிக் கிடக்காமல் அவற்றை பாதுகாப்பாக வைக்கவும், விரைந்து நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு களுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

    நிகழ்வில், சிக்கல் ஊராட்சி மன்ற தலைவர் விமலா ராஜா, ஒன்றிய குழு உறுப்பினர் கெளரி ராஜேந்திரன், ஊராட்சி மன்ற து.தலைவர் மற்றும் உறுப்பினர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.
    • 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரன் இருப்பு கடைவீதியில் உள்ள செல்போன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது குறித்த புகாரின் பேரில் வேட்டைக்காரன் இருப்பு போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் தலைமையில் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் பல மாவட்ட மீனவர்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடிப்பது வழக்கம்.

    அப்படி மீன் பிடிக்க வந்த போது, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர் கோட்டை மணி (வயது 49) மற்றும் மணிகண்டன் ஆகியோர் திருடி சென்றது தெரியவந்தது.

    இதில் கோட்டை மணி என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 3 செல்போன்கள், 1 லேப்டாப்பை பறிமுதல் செய்தனர்.

    மேலும் தலைமறைவான மணிகண்டனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடைபெற்றது.
    • அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த செம்போடை மேற்கு கருமாரியம்மன் கோவிலில் உலக நலன் வேண்டி சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு யாகபூஜைகள் நடை பெற்றது.

    யாகத்தில் விக்னேஷ்வர பூஜையுடன், சுப்பிரமண்யர், ராமர், நவக்கிரஹக பரிகார பூஜைகளுடன் வேதவல்லி மற்றும் வாராகி அம்மனுக்கு உலக நன்மை வேண்டி பல்வேறு திரவியங்கள், நிகும்பல (மிளகாய்) வேள்வியுடன் பூர்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம், பிரசாதம் வழங்கப்பட்டது.

    • கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு மக்கள் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
    • மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் வெட்டாறு பாலம் பழுதடைந்த காரணத்தால், அதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஆனால் பணியில் ஏற்பட்ட தொய்வு காரணமாக நாகப்பட்டினம் நாகூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்பட்டு மக்கள் பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதனால் வெட்டாறு பாலத்தின் சீரமைப்புப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்நிலையில் வெட்டாறு பாலம் சீரமைப்புப் பணி யினை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது, பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும், மார்ச் மாதத்தில் பாலம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • நாகையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    நாகை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும்படி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவிட்டார்.

    அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் நாகூர் ஜடையினா ஹாஜியார் தெருவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் முகமது இத்ரீஸ் (வயது29), கண்ணன் (27), சமீர் (19), ஹஜ்புதீன் (21), முகமது சைபு (19) ஆகியோர் என்பதும், இவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து நாகூர் போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 21 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.2 லட்சத்தது 10 ஆயிரம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, செங்கனிமற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்‌.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வீட்டின் முன்பு தி.மு.க. தேர்தல் வாக்குறுதி படி பணி நியமன ஆணை வழங்க வேண்டும், காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும், வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    இதில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கட்டாயப்படுத்தி அகற்ற முயன்றதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

    கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொற்கொடி, செங்கனிமற்றும் மகேஸ்வரி ஆகிய மூவரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் துணை போலீஸ் சூப்பிரண்டு சுகுமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    • வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் வேதாரண்யம், வாய்மேடு, ஆயக்காரன்புலம் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் வேதாராண்யம் நகரம், கோடியக்காடு, கோடியக்கரை, அகஸ்தியம்பள்ளி, தோப்புதுறை, பெரியகுத்தகை, தேத்தாக்குடி, புஷ்பவனம், கள்ளிமேடு, அவரிக்காடு, மறைஞாயநல்லூர், அண்டர்காடு, நெய்விளக்கு, ஆலங்காடு, துளசியாப்பட்டினம், கற்பகநாதர்குளம், இடும்பவனம் தொண்டியக்காடு, தாணிக்கோட்டகம்,

    வாய்மேடு, தகட்டூர் பஞ்நதிக்குளம், மருதூர், தென்னடார், பன்னாள், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், கடிநெல்வயல், கத்தரிபுலம், செட்டிபுலம், நாகக்குடையான், குரவப்புலம், தென்னம்புலம், கரியாப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. மேலும் பராமரிப்பு பணி முடிவு பெறும் நேரத்திற்கு ஏற்றவாறு மின் வினியோகம் முன்கூட்டியே வழங்க வாய்ப்பு உள்ளது.

    எனவே தனிநபர்கள் தன்னிச்சையாக மின்வாரிய பணியாளர் துணையின்றி மின் பாதைகளில் மரம்வெட்டுதல் போன்றவற்றில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது என மின்வாரிய உதவி செயற்பொறியளார் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    • பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு.
    • மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    நாகப்பட்டினம்:

    அழிந்து வரும் பாரம்பரிய தற்காப்பு கலைகளான கராத்தே, சிலம்பம் ஆகியவை குறித்து கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி விழுந்தமா வடியிலுள்ள சாய் காய் டூ அட்வர்ஷர் அகாடமி-யில் பிளாக் பெல்ட் பயிற்சி முகாம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு பயிற்சியாளராக சென்சை நாசர் தீன் கலந்து கலந்துகொண்டு மாணவர்களுக்கு பல்வேறு வகையான சிறப்பு பயிற்சிகளை அளித்தார்.

    தொடர்ந்து கராத்தேவில் கட்டா, ஸ்மித்தே, டீம் கட்டா, பயர் பிரிக்ஸ் பிரேக்,குத்துச்சண்டை, நேரடி சண்டை போட்டிகள் நாட்டுப்புறக் கலையான சிலம்பம் சுற்றுதல், உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு கலைகளை கற்று தேர்ந்த மாணவர்கள் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை கவர்ந்தது.

    நாகை அருகே அழிந்து வரும் தற்காப்பு கலையை மீட்டெடுக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாம் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    விழாவினை அகில இந்திய கராத்த சங்கத்தின் உடைய டெக்னிக்கல் டைரக்டர் மற்றும் தமிழ்நாடு கராத்தே சங்கத் தலைவருமான எஸ் சாய் புருஸ் துவக்கி வைத்தார். ஆசிய கராத்தே நடுவர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை நாகை மாவட்ட கரத்தைச் சங்கத் தலைவர் சென்சாய் ராஜா செய்திருந்தார்.

    • ஆதிதிராவிடர்- பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் மின் மோட்டார், குழாய்கள் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:-

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு நீர்ப்பாசனத்திற்காக பி.வி.சி. குழாய்கள் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு நில மேம்பாட்டிற்காக புதிய மின் மோட்டார் அல்லது பழைய மின் மோட்டாருக்கு பதிலாக புதிய மின் மோட்டார் வாங்க ஒரு விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்பட உள்ளது.

    நாகை மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com தாட்கோ இணைய தளம் விண்ணப்பித்து மானியம் பெறலாம்.

    இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை
    04365-250305 என்ற தொலைபேசி எண்ணிலும், தாட்கோ மாவட்ட மேலாளரை 9445029466 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர்.
    • நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் நம்பியார் நகரை சார்ந்த மீனவர்கள் 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு அவர்களின் மீன்கள், வலைகள், செல்போன்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த தாக்குதலுக்கு உள்ளான மீனவர்கள் சின்னத்தம்பி, சந்த்ரு, மாதேஸ், சிவபாலன் ஆகியோர் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அவர்களை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது, இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டு மீனவர்கள் சுடப்படுவதும், கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

    ஒன்றிய அரசு எப்போதும் போல் அலட்சியமாக நடந்து கொள்கிறது.

    இனியாவது ஒன்றிய அரசு இதில் தலையிட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், கடற்கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

    பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×