என் மலர்
நாகப்பட்டினம்
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
- நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூர் அருகே வாஞ்சூர் ரவுண்டானாவில் இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தலை தடுக்கும் வகையில் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அங்குள்ள 4 சாலைகளில் 2 சாலைகள் ஒருவழி பாதையாக தடுப்புகள் அமைக்கப்பட்டு மாற்றப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் சாலை வளைவில் திரும்ப முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர்.
இந்நிலையில், கும்பகோணத்தில் இருந்து நாகை வந்த 2 அரசு பஸ்கள் சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்ததால் அவ்வழியாக செல்ல முடியாமல் நீண்ட நேரம் பயணிகளுடன் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை தடுப்புகளை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் போராட்டக்காரர்களை தாக்குவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அதனை தொடர்ந்து, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் தாக்குதலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
- குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
- அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மையத்தில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம்,திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த குவாரியில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாகவும், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தா சில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் மத்தியக்கு டியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-
மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மண் எடுத்து கரையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது.
எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றார்.
- புஷ்ப பல்லக்கில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த தேவூரில் அமைந்துள்ள பழமைவாய்ந்த செல்லமுத்துமாரியம்மன் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தின் சித்திரை திருவிழா கடந்த 16-ம் தேதி காப்புகட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் வீதியுலா நடைபெற்றது.
சுமார் 1 டன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் செல்லமுத்து மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
- குளத்தில் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியது.
- அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேம்பதேவன்காட்டில் சுமார் 5 ஏக்கரில் புதுக்குளம் அமைந்துள்ளது.
இந்த குளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதலை இருப்பதாக தகவல் பரவியது.
இதையொட்டி கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில் வனத்துறையினர் மற்றும் வேதாரண்யம் தீயணைப்பு துறையினர் புதுக்குளம் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இந்த குளத்தில் திருட்டுத்தனமாக ஒரு சிலர் மீன் பிடித்த போது வலையில் முதலை சிக்கியதாகவும், அதனை பிறகு குளத்திலேயே விட்டு விட்டு சென்றதாகவும் தகவல் கிடைத்தது.
இதையொட்டி பொதுமக்களின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர், இந்த குளத்தில் முதலை இருப்பதால் பொதுமக்கள் குளத்தில் இறங்க வேண்டாம் என குளத்தின் அருகே எச்சரிக்கை பலகை வைத்தனர்.
தொடர்ந்து, இந்த குளத்தை கண்கா ணித்து வருவதாகவும் வனத்துறை அலுவலர் அயூப்கான் தெரிவித்தார்.
- குரவப்புலம் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் முதல் 2 இடங்களை பிடித்தனர்.
- தேர்வில் வெற்றிபெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யம்:
தேசிய வருவாய் வாரியான திறனாய்வு தேர்வில் வேதாரண்யம் அடுத்த குரவப்புலம் சீதாலெட்சுமி உயர்நி லைப்பள்ளி மாணவர்கள் விஸ்வபாலா 123/180 மதிப்பெண்கள் எடுத்து மாவட்டத்தில் முதலிடமும், ஆகாஷ் 119/180 மதிப்பெண்கள் எடுத்து 2-ம் இடமும் பிடித்தனர்.
மேலும், சஞ்சய், ஈஸ்வரன், மணியரசன், காவியா, கீர்த்தனா உள்ளிட்ட மாணவ- மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர்.
மேலும், 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊரக திறனாய்வு தேர்வில் சீதாலட்சுமி, பத்மஸ்ரீ, பவித்ரா, அர்ஜித், அற்புதம், ஜெயசுதன் ஆகிய மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தேர்வில் வெற்றிபெற்ற மாணவ மாணவ- மாணவிகளுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பள்ளி செயலாளர் கிரிதரன் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார்.விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பப்பிதாபானு, சீதாலெட்சுமி உதவி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் கருணாநிதி மற்றும் ஆசிரியர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
- மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த விழுந்தமாவடி கிராமத்தில் ஸ்ரீ மழைமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது .
இந்த கோவிலில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 501 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.
காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்களின் பால்குட ஊர்வ லமானது கன்னித்தோப்பு சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு சுமார் 2 கிலோமீட்டர் தூரம் நடந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க பால்குடங்களை சுமந்து வந்து மழைமுத்து மாரியம்ம னுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் பாரம்பரிய கலையான தம்பிரான்குடியிருப்பு இறையருள் கலைக்குழுவினரின் சிறுவர் சிறுமியர்களின் கோலாட்டம் நிகழ்ச்சி நடை பெற்றது.
சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
- கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
- கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டிடத் தொழிலாளர் பஞ்சாயத்து சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தமிழ் மோகன் தலைமை தாங்கினார்.
துணைத் தலைவர் பாலகுரு முன்னிலை வகித்தார்.
தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க மாநில பொது செயலாளர் முத்தையன், மாவட்ட தலைவர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் நல வாரிய அட்டை உள்ள அனைவருக்கும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
பெட்ரோல், டீசல் மற்றும் சிமெண்ட், மணல், கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.
முடக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இடம்பெயரும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம், இலவச மருத்துவ உதவி, குழந்தை பராமரிப்பு சேவை, கல்வி உதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
- லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது.
நாகப்பட்டினம்:
தமிழக கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சார்பில் நாகப்பட்டினத்தில் கலங்கரை ஐஏஎஸ் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த பயிற்சி மையத்தில் ஐ.ஏ.எஸ்., நீட் தேர்வு, டிஎன்பிசி, காவலர் தேர்வு உள்ளிட்டவைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 40 பின் மேற்பட்ட மாணவர்களுக்கு உண்டு உறைவிட இலவச பயிற்சி மையம் தொடக்க விழா நடைபெற்றது.
தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் குத்துவிளக்கேற்றி பயிற்சி தொடங்கி வைத்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், முன்னாள் அமைச்சர் ஜெயபால், கலங்கரை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பேசியதாவது:-
லஞ்சம் வாங்கும் எண்ணம் கொண்டவர்கள் அரசு பணிக்கு வரக்கூடாது எனவும், சேவை மனப்பா ன்மை உள்ளவர்கள் மட்டுமே அரசு பணிக்கு வர வேண்டும் என்றார்.
- கல்லூரிகளில் பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்கு நடைபெற்றது.
- தொழில்நுட்ப வினாடிவினா, கட்டுரை சார்ந்த போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு வென்றுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகை இ ஜி எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை சார்ந்த 2ம் மற்றும் 3ம் ஆண்டு மாணவ மாணவியர்கள், இந்திய தொழில் நுட்பக் கழகம்- சென்னை, தேசிய தொழில் நுட்பக்கழகம்-திருச்சி, தேசிய தொழில் நுட்பக் கழகம்- காரைக்கால் மற்றும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நடைபெற்ற பல்வேறு கருத்தரங்கு மற்றும் பயிலரங்குகளில் கலந்து கொண்டனர்.
அதில் தொழில் நுட்ப நிகழ்வுகள் பிரிவில் நடைபெற்ற தொழில் நுட்ப வினாடிவினா, திட்ட விளக்கக் காட்சி, கட்டுரை சார்ந்த போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை வென்றுள்ளனர்.
போட்டிகளில் வெற்ற பெற்ற மாணவர்களை கல்லூரியின் செயலர் செந்தில்குமார், இணை செயலர் சங்கர் கணேஷ், கல்வி சார் இயக்குனர் மோகன், நிர்வாகத் தலைவர் மணிகண்ட குமரன், முதல்வர் ராமபாலன், துறைத் தலைவர் தேவராஜன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
- பேரணி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
- பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணி நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் வேம்பு தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் அஸ்கர் நிஷா முன்னிலை வகித்தார்.
பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியே திட்டச்சேரி பஸ் நிலையம் வந்து மீண்டும் பள்ளியிலேயே முடிவடைந்தது.
இதில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தானம்,ஆசிரியர்கள் அகல்யா, பொற்கொடி, கீதா,வளர்மதி ஆகியோர் திட்டச்சேரி பகுதியில் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று தங்கள் பள்ளியில் உள்ள வசதிகள், கட்ட மைப்புகள் உள்ளிட்டவை குறித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.
- சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது.
- ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.
ராயக்கோட்டை அருகே சரக்கு ரெயில் தீப்பொறியுடன் புகை மூட்டமாக வந்தது. இதனால் பதறிப்போன ரெயில்வே கேட் கீப்பர் உடனே ஸ்டேசன் மாஸ்டருக்கு தகவல் கொடுத்ததால் தான் உடனே சிக்னல் ஆப் செய்யப்பட்டது.
என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்தினார். இல்லையென்றால் ரெயில் தொடர்ந்து சென்றால் மேலும் ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். ஊழியர்களின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
- திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் தெருவடைத்தான் சப்பர திருவிழா நடந்தது.
- தெருவை அடைத்துக்கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர்.
நாகப்பட்டினம்:
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டங்குடியில் உத்தராபதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை பரணி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு சித்திரை பரணி பெருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெருவடைத்தான் சப்பரம் நிகழ்ச்சி நடந்தது. தெருவை அடைத்துக்கொண்டு சப்பரம் வருவதால் இந்த நிகழ்ச்சிக்கு தெருவடைத்தான் சப்பரம் என்று பெயர்.
சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தரும், அன்னபட்சி வாகனத்தில் அம்மனும், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியரும், மூஞ்சூரு வாகனத்தில் விநாயகரும், சிறிய ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் எழுந்தருளினர்.
இதில் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சன்னிதானம் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருச்செங்காட்டங்குடி, திருமருகல், புதுக்கடை, திருப்புகலூர், திருக்கண்ணபுரம், கீழப்பூதனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு சப்பரத்தை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியின் பாதுகாப்புக்காக துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.






