என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    • முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
    • ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் வெள்ளிக்கிழமை அல்லது 3-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் இந்த மாதம் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.

    மேலும் இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இத்தகவலை நாகை மாவட்ட கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளிகளை சேர்ந்த 20-க்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 6 மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் சார்பில் இளைஞர்களுக்கான டேக்வாண்டோ போட்டி-23 புதுச்சேரியில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது.

    இப்போட்டிக்கு நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்,திருப்புகலூர் புறாகிராமம் உள்ளிட்ட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20- மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் மாணவிகள் 6 பேர் தங்கப்பதக்கமும், மாணவர்கள் 5 பேர் தங்கப்பதக்கமும், 6 சில்வர் பதக்கமும் பெற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிரண்ட் மாஸ்டர்கள் இளங்கோவன், பாண்டியன் பயிற்சியாளர் மாஸ்டர் வெங்கடேசன் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
    • வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேசன் கடை இயங்கி வருகிறது. வங்கிக்கும், ரேசன் கடைக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

    ஆனால், தற்போது அந்த சோதனை சாவடி கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் மூடப்பட்டு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.

    இதனால் அருகில் உள்ள வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த சோதனை சாவடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தன.
    • தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளது.

    நாகப்பட்டினம்:

    திருவாரூரில் இருந்து நாகைக்கு அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருவாரூர் அருகே உள்ள பெரும்பண்ணையூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்தார்.

    சிக்கல் அருகே பொரவச்சேரி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் திருத்துறைப்பூண்டியில் இருந்து கீழ்வேளூர் வழியாக நாகை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

    இதில் 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், தனியார் பஸ்சின் முன் பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.

    இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதில் 6 பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்தின் காரணமாக நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.

    • தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். 

    • சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
    • சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சாய் வெங்கடேஷ் (வயது 6). இவர் கீழ்வேளூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில், வெங்கடேஷ் பள்ளி விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் தந்தை பாலசுந்தரத்துடன் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று நாதஸ்வரம் வாசிப்பதை கவனித்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வெங்கடேசுக்கும் இசை மீது அதீத பற்று வந்துள்ளது. இதனால் அவ்வப்போது தவில் அடித்து பழகி வந்துள்ளார்.

    இந்நிலையில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறுவன் வெங்கடேஷ் நாதஸ்வர இசைக்கு ஏற்றார் போல் தவில் அடித்து அசத்தி உள்ளார். இது கோவிலில் இருந்த பக்தர்களையும், பொதுமக்களையும் வெகுவாய் கவர்ந்தது.

    சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை கண்ட பலரும் சிறுவனை பாராட்டு வருகின்றனர்.

    • குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • மீன்பிடி தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும். விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெற வேண்டும்.

    தண்ணீர் திறந்துவிடுதல் தொடர்பாக அவ்வப்போது விளம்பரம் செய்யப்படும். காவேரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் செய்யவோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    பொதுமக்கள் யாரும் ஆபத்து ஏற்பட கூடிய இடங்களில் நின்று செல்பி எடுக்க வேண்டாம். குழந்தைகள் எவரும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் இறங்கி விடாமல் தடுத்திடுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் திறந்து விடும் போது விலங்குகள், நீர்நிலைகளில் கடந்து செல்லும்போது பாதுகாத்திட விவசா யிகளுக்கு அறிவுறுத்தப்படு கிறது. 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

    • கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றினை கட்டுப்படுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் நாகை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் தனிப்படை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வாஞ்சூர் பகுதியில் இருந்து 500 புதுச்சேரி மாநில மது பாட்டில்களை நான்கு சக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனையடுத்து கடத்தலில் ஈடுபட்ட வெளிப்பாளையம் ராமநாயக்கன் குல வடகரை சேர்ந்த பால்பாண்டி மற்றும் அருள்மொழித் தேவன் சத்திரம் மெயின் ரோட்டை சேர்ந்த உதயகுமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

    மேலும், அவர்களிடமிருந்து 500 சாராய பாட்டில்களும், நான்கு சக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட மது பாட்டில்களை பார்வையிட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபடும் குற்றவாளிகள் தொடர்ந்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் தெரிவித்தார்.

    • நெய்விளக்கு பகுதியில் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • 2 டிராக்டர்களை மணலுடன் பறிமுதல் செய்தர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டா் (பொ) பசுபதி, சப்- இன்ஸ்பெக்டா் கலியபெருமாள் மற்றும் போலீசார் வேதாரண்யம் அடுத்த நெய்விளக்கு பகுதியில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது நெய்விளக்கு பகுதியில் மணல் ஏற்றி வந்த இரண்டு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதியில்லாமல் சவுடு மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து இரண்டு டிராக்டரையும் மணலுடன் பறிமுதல் செய்தும், டிராக்டர் டிரைவா் அகஸ்தியன்பள்ளி தாமரைசெல்வன் (வயது 28), கைலவனம்பேட்டை வீரமணி (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். டிராக்டா் உரிமையா ளா்களை தேடி வருகின்றனர். 

    • படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.
    • அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்திலிருந்து நேற்று மதியம் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரைச் சேர்ந்த அஜித், பாரதி, மனோ ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க சென்றனர்.

    மீனவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று எதிர்பாராத விதமாக கடலில் பலத்த சூறைக்காற்று வீசியதால் மீன் பிடித்துக் கொண்டிருந்த பைபர் படகு நிலைத்தடுமாறி கடலில் கவிழ்ந்தது மூழ்கியது.

    படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் விழுந்து தத்தளித்துக்கொண்டு உயிருக்கு போராடினர்.

    அப்போது அவ்வழியாக மீன்பிடித்துக்கொண்டு வந்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்த ஒரு பைபர் படகு வந்தது. அந்தப் படகில் இருந்த மீனவர்கள் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்களையும் மீட்டு புஷ்பவனம் கடற்கரைக்கு பத்திரமாக கொண்டு வந்து சேர்த்தனர்.

    மீனவர்கள் 4 பேரும் 5 மணி நேரம் கடலில் தத்தளித்ததாலும், அதிக அளவு கடல் நீரை குடித்ததால் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.
    • பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் நடைபெற உள்ள நெய்தல் கோடை விழா-2023 முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பேசியதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் நெய்தல் கோடை விழா- 2023 நிகழ்ச்சி நாகை புதிய கடற்கரையில் வருகிற 24, 25-ந் தேதிகளில் மாலை 5 மணி முதல் நடைபெற உள்ளது.

    விழாவில் பள்ளி மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளும், தோட்டக்கலை துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் சமூக நலத்துறை, காவல்துறை (ம) போக்குவரத்து துறை, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மகளிர் திட்டம், மற்றும் ஆவின் நிறுவனம் ஆகியவற்றின் துறை சார்ந்த விழிப்புணர்வு அரங்கங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    எனவே, நாகை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தூர்வாரும் பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.
    • ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகே பன்னத்தெரு ஊராட்சியில் வேலையடி வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்றது. பணியை ஊராட்சி தலைவர் ரத்தினகுமார் தொடங்கி வைத்தார்.

    விவசாய சங்க செயலாளர் பிரபு, இயற்கை விவசாய சங்க தலைவர் வேனு காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆஸ்திரேலியா தமிழர்கள் பொதுநல அமைப்பு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் 7 கி.மீ தொலைவுக்கு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்றது.

    இதில் ஆஸ்திரேலியா பொது நல அமைப்பை சேர்ந்த நிர்மல்குமார், வக்கீல் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×