என் மலர்
நாகப்பட்டினம்
நாகப்பட்டினம்:
நாகூர் அரசு தேசிய துவக்கப் பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார், பள்ளி துணைத் தலைவர் அமுதா ஆறுமுகம், தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்தமிழ் ஆனந்தன், ரமேஷ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பேரணில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் பதாகைகளை ஏந்தி பள்ளியில் குழந்தைகளை சேர்க்கும்படி கோஷங்கள் எழுப்பி சென்றனர்.
முன்னதாக நடைபெற்ற விலையில்லா புத்தகங்கள் நோட்டுகள் சீருடைகள் இவற்றை சிறப்பு விருந்தினர்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கினர்.
தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்றார்.
உதவி தலைமை ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் சித்ரா மேகலா, தேவி, தையல்நாயகி, செந்தில், பாலா சத்துணவு ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
- திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி அருகே கீழையூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5 ஆயிரம் தராவிட்டால் சிறுமியின் புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாகவும், இதனை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டி சிறுமிக்கு குறுஞ்செய்தி வந்தது.
இதைத் தொடர்ந்து குறுஞ்செய்தியை அனுப்பிய வரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் விசாரணை நடத்தியதில் சென்னை திருமுல்லைவாயில் பவானி தெரு பகுதியை சேர்ந்த கோபி (வயது20) என்பவர் சிறுமியின் ஆபாச படத்தை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபோன்ற குற்ற செயல்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க 8428103090 என்ற எண்ணில் என்னை தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் என நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ் சிங் தெரிவித்தார்.
- படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர்.
- மீனவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் அடுத்த அக்கரைப்பேட்டையில் மீன்பிடி துறைமுகத்திலிருந்து தடைக்காலம் முடிவு பெற்றதால் ஏராளமான மீனவர்கள் நேற்று நள்ளிரவுகடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.
இதில் கீச்சாங்குப்பம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அஞ்சப்பனுக்கு என்பவரும் சொந்தமான படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
நாகையில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகில் கடல்நீர் உட்புகுந்து கடலில் படகு மூழ்கியது.
இதனால் படகில் சென்ற ஆறுமுகம், மைக்கேல் சந்தோஷ், கண்ணன் ஆகிய 4 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துள்ளனர். இதனை தொடர்ந்து மற்றொரு படகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள் அவர்களை மீட்டு கரைக்கு அழைத்து வந்துள்ளனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாகை மாவட்டம் நாகராஜன் என்பவரும் சொந்தமான படகும் கடலில் மீன் பிடிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக கடலில் மூழ்கியது. படகில் சென்ற ரெத்தினம், குஞ்சாலு, சிவக்குமார் ஆகிய 3 பேரும் சக மீனவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடலுக்குச்சென்ற முதல் நாளே இரண்டு படகுகள் கவிழ்ந்து கடலில் தத்தளித்த 7 மீனவர்கள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி மீனவர்கள் படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.
- தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.
வேதாரண்யம்:
தமிழ்நாடு மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் படி மீன்களின் இனப்பெருக்க காலத்தை கணக்கில் கொண்டு ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு வரை ஆழ்கடலில் மீன் பிடிக்க விசை படகுகளுக்கு தடை விதிக்கப்படும். இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி தொடங்கிய மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைந்தது.
இதையடுத்து 2 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க விசைப்படகுகளில் புறப்பட்டு சென்றனர்.
அதன்படி நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க சென்றனர்.
நாகை, வேதாரண்யம், தரங்கம்பாடி, பூம்புகார், சீர்காழி, மல்லிப்பட்டினம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 5000-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் நள்ளிரவில் கடலுக்குச் சென்றனர். நாகை துறைமுகத்தில் இருந்து 100-க்கணக்கான விசைப்படகுகளுக்கு பூஜை செய்தும், கடலை வழிபட்டும் பின்னர் சென்றனர். இயந்திரம் பழுது நீக்கம் செய்யப்பட்டு வர்ணம் தீட்டி புது பொலிவுடன் படகுகள் சென்றன.
விசைப்படகுகளில் ஜி.பி.எஸ் கருவி, வாக்கி டாக்கி போன்றவற்றை பொருத்தி சென்றனர். வலைகளை பழுது நீக்கி படகில் ஆர்வமுடன் ஏற்றி சென்றனர்.
தடைக்காலத்திற்கு பின்னர் தொழிலுக்கு சென்றதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் எதிர்பார்ப்புடன் சென்று உள்ளனர்.
- சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
- இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா வது:-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு 20.06.2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்.20.06.2023.
இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 - தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04365-250129 04369-276060 9487160168 மற்றும் மின்னஞ்சல் முகவரி govtitinagai@gmail.comதொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.
- அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு திருமருகல் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயபால் சங்கர் தலைமை வகித்தார்.
செயலாளர் காமராஜ், துணைத் தலைவர் காசி அறிவழகன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அனைவரையும் தகவல் தொழில் நுட்ப அமைப்பாளர் ரஞ்சித் வரவேற்றார்.
கூட்டத்தில் திருமருகல் கடைவீதியில் சங்கத்தின் பெயர் பலகை வைக்க வேண்டும், அனைத்து கடைகளும் காப்பீடு செய்யப்பட வேண்டும்,
விபத்துக்கள் நடை பெறாமல் இருக்க திருமருகல் கடைவீதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும் புதிய செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். முடிவில் சங்க நிர்வாகி ஹரிஹரன் நன்றி கூறினார்.
- முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் முகாமில் கலந்து கொள்ளலாம்.
- ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம்.
நாகப்பட்டினம்:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலை வாய்ப்பு பிரிவு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், நாகப்பட்டினத்தில் ஒவ்வொரு மாதமும் 2-ம் வெள்ளிக்கிழமை அல்லது 3-ம் வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் மாதம் ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் இந்த மாதம் 16-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ள சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐடிஐ, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு பயன்பெ றலாம்.
மேலும் இம்முகாமில் 25-க்கும் மேற்பட்ட தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் பங்குபெற்று வேலைநாடுநர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
எனவே, இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மனுதாரர்கள் தங்களுடைய அனைத்து கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இத்தகவலை நாகை மாவட்ட கலெக்டர்ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
- அரசு பள்ளிகளை சேர்ந்த 20-க்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- போட்டியில் 6 மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் சார்பில் இளைஞர்களுக்கான டேக்வாண்டோ போட்டி-23 புதுச்சேரியில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது.
இப்போட்டிக்கு நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்,திருப்புகலூர் புறாகிராமம் உள்ளிட்ட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20- மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர்.
இதில் மாணவிகள் 6 பேர் தங்கப்பதக்கமும், மாணவர்கள் 5 பேர் தங்கப்பதக்கமும், 6 சில்வர் பதக்கமும் பெற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.
இதற்கான ஏற்பாடுகளை கிரண்ட் மாஸ்டர்கள் இளங்கோவன், பாண்டியன் பயிற்சியாளர் மாஸ்டர் வெங்கடேசன் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
- வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த தேத்தாக்குடி தெற்கு பகுதியில் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் ரேசன் கடை இயங்கி வருகிறது. வங்கிக்கும், ரேசன் கடைக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு வங்கி எதிர்புறம் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.
ஆனால், தற்போது அந்த சோதனை சாவடி கட்டிடம் மிகவும் பாழடைந்த நிலையில் மூடப்பட்டு யாரும் பயன்படுத்த முடியாத வகையில் சமூக விரோதிகளின் கூடாரமாக காட்சியளிக்கிறது.
இதனால் அருகில் உள்ள வங்கிக்கும், ரேசன் கடைக்கும் வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக இந்த சோதனை சாவடி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், தனியார் பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தன.
- தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றுள்ளது.
நாகப்பட்டினம்:
திருவாரூரில் இருந்து நாகைக்கு அரசு பஸ் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருவாரூர் அருகே உள்ள பெரும்பண்ணையூரை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் ஓட்டி வந்தார்.
சிக்கல் அருகே பொரவச்சேரி ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, பின்னால் திருத்துறைப்பூண்டியில் இருந்து கீழ்வேளூர் வழியாக நாகை நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் அரசு பஸ்சை முந்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.
இதில் 2 பஸ்களும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், தனியார் பஸ்சின் முன் பக்க கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 6 பெண்கள் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். அவர்களை அங்கு இருந்த பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் 6 பெண்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் உள்ளவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர். இந்த விபத்தின் காரணமாக நாகை - திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
- தூய்மை பணியாளர்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
- பரிசோதனை செய்யப்பட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டது.
வேதாரண்யம்:
வேதாரண்யம் நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சார்பில் தூய்மை பணியாளருக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை நகர்மன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார். நகராட்சி ஆணையர் ஹேமலதா, பொறியாளர் முகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு டாக்டர் ராஜசேகர் தலைமையிலான மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
- சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.
- சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூரை சேர்ந்தவர் பாலசுந்தரம். இவர் கோவில் திருவிழா மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு நாதஸ்வரம் வாசிக்கும் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சாய் வெங்கடேஷ் (வயது 6). இவர் கீழ்வேளூரில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், வெங்கடேஷ் பள்ளி விடுமுறை நாட்களிலும், ஓய்வு நேரங்களிலும் தந்தை பாலசுந்தரத்துடன் சுபநிகழ்ச்சிகளுக்கு சென்று நாதஸ்வரம் வாசிப்பதை கவனித்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வெங்கடேசுக்கும் இசை மீது அதீத பற்று வந்துள்ளது. இதனால் அவ்வப்போது தவில் அடித்து பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கீழ்வேளூர் யாதவ நாராயண பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் சிறுவன் வெங்கடேஷ் நாதஸ்வர இசைக்கு ஏற்றார் போல் தவில் அடித்து அசத்தி உள்ளார். இது கோவிலில் இருந்த பக்தர்களையும், பொதுமக்களையும் வெகுவாய் கவர்ந்தது.
சிறுவனின் தாத்தா கணேசன் நாதஸ்வர கலையில் தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுவன் தவில் வாசிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இதனை கண்ட பலரும் சிறுவனை பாராட்டு வருகின்றனர்.






