என் மலர்tooltip icon

    நாகப்பட்டினம்

    வேதாரண்யம் அருகே நிலதகராறில் வாலிபரை தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட தோப்புத்துறை, துள்ளுவெட்டி அய்யனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (35). இவருக்கும் அதே தெருவைச் சேர்ந்த கண்ணன் (40) என்பவருக்கும் நில பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் கண்ணன் பிரச்சினைக்குள்ள இடத்தில் சுவர் வைக்க ஏற்பாடு செய்து வேலைகளைதொடங்கினாராம். இதைபார்த்த கிருஷ்ணமூர்த்தி என் இடத்தை ஏன் சேர்த்து சுவர் என்று தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த கண்ணன் கிருஷ்ணமூர்த்தியை கம்பியால் தாக்கினாராம்.

    இதில் காயமடைந்த கிருஷ்ண மூர்த்தி வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று, மேல் சிகிச்சைக்காக நாகைஅரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கப்பன் வழக்கு பதிவு செய்து கண்ணணை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளது என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
    நாகை:

    நடிகரும், பா.ஜனதா கட்சியை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தனது பிறந்தநாளை முன்னிட்டு நாகை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர் கோவிலில் மனைவி மற்றும் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

    தமிழக பா.ஜனதா தலைவர் நியமன பட்டியலில் எனது பெயரும் உள்ளதால், புதிய தலைவராக நியமிக்கப்பட்டால் சிறப்பாக செயல்படுவேன். தமிழகத்தில் மோடியின் திட்டங்கள் குறித்து பா.ஜனதா கட்சியினர் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த தவறி விட்டனர். 
    பாஜக

    தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தி.மு.க. கூட்டணி கட்சியினர் தவறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குடியுரிமை திருத்த சட்டம் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல.

    சமீபத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதி வழங்கப்படும் என அறிவித்த தமிழக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வருகிற 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்னரே ரஜினி அரசியலுக்கு வருவார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நாகையில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ் மாநில வருவாய் அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் அமுதவிஜயரெங்கன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில், 2004-ம் ஆண்டுக்கான முதல் திருத்தப்பட்ட துணை தாசில்தார் பட்டியலை வெளியிட வேண்டும். வருவாய் நிர்வாக ஆணையரின் சுற்றறிக்கையின்படி, ‘அ’பிரிவு பணியாளர்கள் மற்றும் அலுவலக மேலாளர் (பொது) ஆகியோரை மாறுதல் செய்ய வேண்டும். கொடிநாள் வசூல் போன்றவற்றை கட்டாயப்படுத்தக் கூடாது. அலுவலக உதவியாளர் முதல் தாசில்தார் வரையிலான அலுவலக பணியாளர் பட்டியலை வெளியிட வேண்டும். துணை தாசில்தார், தாசில்தார் நிலையில் முதுநிலைப்படி சுழற்சி முறையில் வழங்க வேண்டும்.

    பொதுமக்கள் நலன் கருதி மாற்றுப்பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். இரவு காவலர், அலுவலக உதவியாளர், பதிவுறு எழுத்தர் நிலையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சி.பி.சி.எல். நில எடுப்பு அலுவலகங்களை உடனே தொடங்க வேண்டும். வருவாய் தாசில்தார், பணியிடம் வழங்குவதில், ஓராண்டுக்கு மேல் பணி புரிந்தவர்களை நீக்கி முதுநிலை அடிப்படையில் பணிகள் வழங்கவேண்டும். நாடாளுமன்ற தேர்தல் மதிப்பூதியம் வழங்கியதில் உள்ள குறைபாடுகளை களையவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மகளிர் அணி பொருளாளர் நீலாயதாட்சி நன்றி கூறினார்.
    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 19-ந் தேதி அன்று நடைபெற உள்ளது.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் பிரவீன் பி. நாயர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்கும் முகாம் வரும் 19-ந் தேதி அன்று நடைபெற உள்ளது.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கிராம புறங்களில் 932 ம் நகர்புறங்களில் 95- ம் ஆக மொத்தம் 1027 மையங்களில் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவச போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து முகாம் 19-ந் தேதி அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. நகர் மற்றும் கிராமபுறங்களில் 1,44,471 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இவை அனைத்து வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள், பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், தற்காலிகமாக தெரு ஓரங்களில் வசிக்கும் நாடோடிகள், பொம்மை செய்பவர்கள், கட்டிட வேலை மற்றும் செங்கல் சூளைகளில் பணிபுரிபவர்கள் உள்பட பொதுமக்கள் அனைவரின் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட உள்ளது.

    விடுபட்ட குழந்தைகளுக்கு மறுநாள் 20-ந் தேதி திங்கள் மற்றும் 21-ந் தேதிகளில் களப்பணியாளர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுவதும் போக்குவரத்து வசதி இல்லாத உட்கிராமங்களுக்கு 11 நடமாடும் வாகனங்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    மேலும், மயிலாடுதுறை, சீர்காழி, நாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் நகராட்சி பேருந்து நிலையங்களிலும் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சீர்காழி புகைவண்டி நிலையங்களிலும் 24 மணி நேரமும் 19- ந்தேதி முதல் 21-ந் தேதி வரை 3 நாட்களிலும் இலவசமாக போலியோ நோய் ஒழிப்பு சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    போலியோ சொட்டு மருந்து வழங்கும், ஒவ்வொரு மையத்திலும் 4 களப்பணியாளர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொது சுகாதாரத்துறை தவிர உள்ளாட்சித்துறை, சமூக நலத்துறை, ஊட்டச்சத்து பணியாளர்கள், பயிற்சி செவிலியர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் என 4,141 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    வேதாரண்யம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம், மருதூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மினிமணி (வயது 25). இவர் வேதாரண்யம் அடுத்துள்ள நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுகாரரான ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜா மருதூர் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் மின்மணி மூச்சு திணறல் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆகிறது.

    இந்த நிலையில் மின்மணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் கடந்த 7.1.2020 அன்று வீட்டில் இருந்த வி‌ஷ மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் தீவிர சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார்.

    மின்மணியின் தாயார் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் திருமணமாகி 7 மாதங்களை ஆனதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    வேதாரண்யத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகரம் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் வேதமூர்த்தி. இவரது மகன் சபரி என்கிற சபரிநாதன். இவர் மீது வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இதில் அவர் ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம் பரிந்துரையின் பேரில் நாகை மாவட்ட கலெக்டர் பிரவின் பி. நாயர் உத்தரவின் பேரில் சபரிநாதனை தடுப்பு காவல் சட்டத்தில் காவலில் வைக்க (குண்டர் சட்டத்தில்) உத்தரவிட்டார். அந்த உத்தரவை வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுபாஷ் சந்திரபோஸ் போலீசாருடன் சென்று திருச்சி மத்திய சிறையில் சபரிநாதனிடம் வழங்கினார்.

    வேதாரணயம் அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா தாணிக்கோட்டகம் கடை தெருவில் மத்திய, மாநில அரசுகளின் பொருளாதார சீரழிவு கொள்கைகளுக்கு எதிராக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து இந்திய கம்னியூஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்னியூஸ்டு கட்சியின் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு விவசாய மாநில செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். போராட்டத்தில் கட்சியின் ஒன்றிய செயலாளர் அம்பிகாபதி விவசாய சங்க ஒன்றிய செயலாளர் கோவிசுப்பிரமணியன் விவசாய தொழிலாளர் சங்க மாநிலக் குழு வெற்றியழகன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் இளையபெருமாள் விவசாய சங்க ஒன்றிய தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் கஸ்தூரி 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் தலைஞாயிறு ஒன்றியம் ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் வேணு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். தாணிக்கோட்டகம் மற்றும் ஆலங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட 73 பேர் கைது செய்யப்பட்டனர்.
    நாகை மாவட்டத்தில் திடீரென பெய்த மழையால் அறுவடைக்கு தயாரான சம்பா பயிர்கள் கீழே சாய்ந்தது. இதற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாகுபடிக்காக வருடா வருடம் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது வழக்கம்.

    மேட்டூர் அணையில் தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக கடந்த ஆண்டு காலதாமதமாக ஆகஸ்ட் மாதம் 13-ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது நாகை மாவட்ட பாசனபகுதிகளுக்கு கால தாமதமாகவே வந்து சேர்ந்தது. இதையடுத்து அந்த பகுதி விவசாயிகள் சம்பா சாகுபடி நேரடி நெல் விதைப்பு செய்து வந்தனர். தற்போது நெற்கதிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல்கள் அதிக அளவில் கொள்முதல் செய்யப்படாததால் அறுவடை பணிகளை தொடங்காமல் இருந்தனர்.

    இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் நேற்ற சூராவளி காற்றுடன் பலத்தமழை பெய்தது.

    இதில் வேளாங்கண்ணி, தெற்குப்பொய்கைநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி பகுதி நிலபரப்பில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு அறுவடைக்கு தயார்நிலையில் இருந்த சுமார் 100 ஏக்கர் சம்பா பயிர்கள் கீழே சாய்ந்தது. இதனை கண்ட விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் நடவு செய்யப்பட்டுள்ள வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பால்விடும் தருவாயில் வளர்ந்துள்ள பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கூட்டுறவு சொசைட்டியில் வாங்கிய விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
    நாகப்பட்டினம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம் ஊராட்சி நாகவிளாகம் கிராமத்தைசேர்ந்தவர் தங்கவேல் (வயது 66). இவர் அதே பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை வீட்டில் யாரும் இல்லாதபோது பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து சிறுமிதாயிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். அதனை அடுத்து நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தாய் புகார் கொடுத்ததின் பேரில் பாலியல் வல்லுறவு செய்த தங்கவேலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

    வேளாங்கண்ணியில் கடலில் குளித்த பெயிண்டர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    வேளாங்கண்ணி:

    கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் பவன்குமார் (வயது 26). பெயிண்டர். இவருடைய நண்பர்கள் அவினா‌‌ஷ், பொம்மையா. இவர்கள் 3 பேரும் சுற்றுலாவாக வேளாங்கண்ணிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் வேளாங்கண்ணி ஆலயத்தில் தரிசனம் செய்து விட்டு அங்குள்ள கடலில் குளிப்பதற்காக சென்றனர். அப்போது திடீரென ராட்சத அலையில் 3 பேரும் சிக்கினர். உடனே அவர்கள் சத்தம் போட்டனர்.

    இதையடுத்து அங்கிருந்த போலீசார் மற்றும் மீனவர்கள் கடலில் மூழ்கிய அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில் அவினா‌‌ஷ், பொம்மையா ஆகிய 2 பேரையும் மயக்க நிலையில் மீட்டனர். இதையடுத்து அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு பவன்குமாரையும் மயக்க நிலையில் மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கீழையூர் கடலோர காவல் படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேதாரண்யம் அருகே வேலைக்கு சென்ற தொழிலாளி மாயமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கோவில்தாவு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் வீரமணி (வயது 35). இவர் வேதாரண்யம் ஒன்றியம் வெள்ளிக்கிடங்கு பகுதியில் சிமெண்ட் ஓர்க்ஸ் பணியில் வேலை பார்த்து வருகிறார்

    இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி வேலைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பி வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.இதுகுறித்து அவரது மனைவி சத்யா வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமாரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    நாகையில் ஆசைவார்த்தை கூறி 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை ஜெகநாதபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது மகள் கடந்த 1-ந் தேதி இரவு சர்ச் சென்றவர் வீடு திரும்பவில்லை என்று சிறுமியின் பெற்றோர் நாகை டவுன் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி கீவளூர் பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் (24) கோவை அழைத்து சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் நாகை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    இதில் நரேந்திரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி அங்குள்ள விடுதியில் தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு நாகை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் தமிழரசி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நரேந்திரனை கைது செய்தார்.
    ×