என் மலர்tooltip icon

    மதுரை

    • அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
    • மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    அ.திமு.க. இடைக்கால பொது செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகிற 11-ந் தேதி சிவகங்கை வருவதால் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுப்பது குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரை மாநகர் மாவட்ட அ.திமு.க. சார்பில் மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை மாவட்ட அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், கட்சியின் எதிர்கால வளர்ச்சிப்பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

    எனவே இந்த கூட்டத்தில் இன்னாள்-முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள், பகுதி, வட்ட நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், முன்னாள், இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், கழக முன்னோடிகள் அனைவரும் திரளாக பங்கேற்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பாதை வசதி இல்லாமல் அங்கன்வாடி கட்டிடம் பூட்டிக்கிடக்கிறது.
    • ஆக்கிமிப்புகளை அகற்றி கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சி ஊத்துகுழி கிராமத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 8.50 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. அங்கு 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். வயல்வெளியோர பகுதியில் இந்த கட்டிடம் உள்ளதால் மழை காலங்களில் நீர் ஊற்றெடுத்து மையத்தின் முன்பு தேங்கி நின்று சேறு சகதியாக மாறி பாதை வசதியில்லாத சூழ்நிலை இருந்து வருகிறது. மேலும் வழியில் முள் செடிகள் முளைத்து அடர்ந்த வனம் போல் காட்சியளிக்கிறது.

    அங்கன்வாடி மையக்கட்டத்தில் சுவர்கள் மற்றும் தரைதளங்கள் அங்காங்கே புதைகுழி போல் பெயர்ந்து குழந்தைகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையத்தை மந்தையில் உள்ள சமுதாய கூடத்திற்கு மாற்றம் செய்து தற்போது 3 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் பாதையில் உள்ள ஆக்கிமிப்புகளை அகற்றி பேவர்பிளாக் சாலை அமைத்து கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.

    • 5 வயது சிறுமியை கணவர் கடத்தி சென்றதாக மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை வண்டியூரை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது36),ஆட்டோ டிரை வர். இவரது மனைவி பிரபாதேவி(33). இவர்க ளுக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் பிரபா தேவி, கண்ணதாசனை பிரிந்து கடந்த 3 ஆண்டு களாக திருமங்கலத்தில் தனியாக வசித்து வருகிறார். விவாகரத்து வழக்கு திருமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. கண்ண தாசன் மனைவியிடம் இருக்கும் தனது குழந்தையை பார்க்க வந்துள்ளார். இதற்கு பிரபாதேவி மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இவர்களது 5 வயது மகள் திருமங்கலம் பஸ்நிலையம் அருகேயுள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வருகிறாள். நேற்று மாலை கண்ணதாசன் தனது மகளை அழைத்து சென்றுவிட்டார். இதற்கிடையே பள்ளியில் இருந்து மகளை அழைத்துச்செல்ல வந்த பிரபாதேவி அவளை கணவர் அழைத்துச்சென்ற விவரம் தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றி அவர் திருமங்கலம் டவுன் போலீ சில் புகார் செய்தார். அதில் தனது மகளை கணவர் கடத்திச்சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • அண்ணாமலை ‘நான் தலைவன்’ என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது.

    திருமங்கலம்

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர் திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளிக்கு வந்தார். அவர் செயற்கை கோள் உருவாக்கிய பள்ளி மாணவி களை சந்தித்து பொன்னா டை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது குத்துச் சண்டை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு விருது வழங்கி கவுரவித்தார். பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மரக்கன்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி யளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தலைவர் என்பவர் தனது தொகுதியில் வெற்றி பெற்றவராக வேண்டும். அதை விட்டுவிட்டு அண்ணா மலை தன்னைத்தானே எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெயலலிதா வரிசையில் மிகைப்படுத்தி கூறுவது நகைச்சுவையாக உள்ளது.

    அவர் சட்டமன்ற தேர்தலில் தோல்விய டைந்தவர். எங்களை பொறுத்தவரை அவர், 'நான் தலைவன்' என்று சொல்லுவது வடிவேலு "நானும் ரவுடி தான்" என்று கூறுவது போல் இருக்கிறது. அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் வெற்றி பெற்று சொல்லட்டும். அதை ஏற்றுக் கொள்கிறோம்.

    கப்பலூர் சுங்கச்சாவடி குறித்து மத்திய மந்திரி நிதின் கட்கரியை நானும், கனிமொழியும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தோம். அதற்கு அவர் மார்ச் மாதம் வரை எனக்கு அவகாசம் கொடுங்கள். உரிய முடிவு எடுப்பேன் என்று கூறினார்.

    மார்ச் முடிந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தி லேயே அவரை சந்தித்து கோரிக்கையை வலியுறுத்து வோம்.

    கப்பலூர் சுங்கச்சாவடி முழுக்க முழுக்க மத்திய அரசுத்துறையை சார்ந்துள்ளது. மக்கள் மீது அராஜகத்தை தூண்டும் வகையில் செயல்படும் கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தின் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்து வோம்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள்.
    • இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி வழிபடுகின்றனர்.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்கு முக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி விழா நாளை(வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றிதான் வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். விழாவுக்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • நில மோசடி வழக்கில் சிக்கிய மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • ஜெயச்சந்திரனை எஸ்.எஸ்.காலனி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்ற பெற்றவர் ஜெயச்சந்திரன். இவர் கவுன்சிலராக தேர்வானதும் சென்னை சென்று அண்ணா அறிவாயலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

    இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இதற்காக அவர் பலரிடமும் சீட்டு மூலம் பணம் வசூலித்து வந்தார். இதற்கிடையே ஜெயச்சந்திரன் நில மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாயின. இதனை அவர் மறுத்து வந்தார்.

    இந்த நிலையில் மதுரை கே.புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர், ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சம் நிலமோசடி செய்ததாக எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணியம் பணம் கட்டியதற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்து உள்ளார்.

    இதன் அடிப்படையில் ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் குற்றச்சாட்டை மறுப்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.

    இதைத்தொடர்ந்து ஜெயச்சந்திரனை எஸ்.எஸ்.காலனி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு 2 நாள் அரசு முறை பயணம் வந்திருந்தபோது ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.

    நில மோசடி வழக்கில் சிக்கிய மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாடி பில்டராக திகழும் வெரோனிகா பள்ளி நாட்களில் எந்த விளையாட்டிலும் பங்கேற்றதில்லை.
    • உடல் பருமனை காரணம் காட்டி கணவர் கைவிட்டு சென்றதால் வெரோனிகா, தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டார்.

    மதுரை ஐயர் பங்களா பகுதியை சேர்ந்தவர் வெரோனிகா அன்னமேரி. உடல் பருமன் நோயால் அவதிப்பட்டு வந்த இவர், தனது விடா முயற்சியால் உடல் எடையை பெருமளவில் குறைத்து பாடி பில்டராக ஜொலித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு 2022 ஆசிய அளவில் நடந்த பாடி பில்டர் போட்டியில் 6ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.

    பாடி பில்டராக திகழும் வெரோனிகா பள்ளி நாட்களில் எந்த விளையாட்டிலும் பங்கேற்றதில்லை. மேலும் 12-ம் வகுப்பிற்கு பிறகு உயர்கல்வியை அவரால் தொடர முடியவில்லை. அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 108 கிலோ இருந்தார். மேலும் நீரிழிவு நோய், முழங்கால் மற்றும் கழுத்து வலியாலும் அவதிபட்டு வந்தார்.

    அதிக உடல் எடை இருந்ததால் அவரை அவரது கணவர் கைவிட்டு சென்றார். இதனால் தனது மகள், மகனுடன், தந்தையுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் அவரது தந்தையும் இறந்துவிட்டார். குழந்தைகளை எப்படி காப்பாற்றுவது? என வெரோனிகா தவித்தார்.

    உடல் பருமனை காரணம் காட்டி கணவர் கைவிட்டு சென்றதால் வெரோனிகா, தனது உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்துக்கொண்டார். தனது உடல் எடையை குறைத்து பாடி பில்டராக வேண்டும் என்று முடிவு எடுத்தார். இதற்காக தனது 38-வது வயதில் ஜிம் ஒன்றில் சேர்ந்தார்.

    தினமும் 5 மணி நேரத்திற்கும் மேலாக பயிற்சி எடுத்துக்கொண்டார். இந்த தீவிர பயிற்சி காரணமாக ஒரே ஆண்டில் தனது உடல் எடையில் 30 கிலோவை குறைத்தார். உடல் எடையை குறைத்தன் மூலம் வெரோனிகாவின் உடல்நல பிரச்சினைகளும் கட்டுக்குள் வந்தது.

    இதனை தொடர்ந்து பல போட்டிகளிலும் பங்கேற்றார். பாடி பில்டர் உடையுடன் போட்டிகளில் பங்கேற்க முதலில் வெரோனிகாவுக்கு தயக்கம் ஏற்பட்டது. பின்பு தனது லட்சியத்தை நினைத்து ஏராளமான போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி வாகை சூடினார்.

    தற்போது வெரோனிகாவுக்கு 42 வயதாகிறது. தான் பயிற்சி பெற்ற உடற்பயிற்சி கூடத்திலே தற்போது பயிற்சியாளராக வேலை பார்த்து தனது குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். வாழ்க்கையில் பல்வேறு சோதனைகளை கடந்து பாடி பில்டராக இருந்து அவர் சாதித்து வருவது பல பெண்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது.

    • இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன.
    • மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன.

    மதுரை:

    மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் இரட்டை ரெயில் பாதை இணைப்பு பணிகள் கடந்த 27 நாட்களாக நடந்து வந்தன. எனவே அந்த வழியாக செல்லும் ஒருசில ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன. மேலும் சில ரெயில்கள் அருப்புக் கோட்டை, மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து மதுரை ரெயில் நிலையத்தில் புதிய மின்மயமாக்கல், ரெயில் பாதை இணைப்புகள், சைகை மின்னணு கைகாட்டி, காலி ரெயில் பெட்டிகளை ரெயில் நிலையத்தில் இருந்து எடுத்து செல்ல தனிப்பாதை அமைப்பு, ரெயில் என்ஜின்கள் நிறுத்த தனி ரெயில் பாதை, புதிய நடைமேடை, நடைமேடை நீட்டிப்பு போன்ற பல்வேறு பணிகள் நடந்தன. அவை நேற்றுடன் முடிந்தன.

    எனவே ஏற்கனவே மதுரை வழியாக சென்று வந்த அனைத்து ரெயில்களும் இன்று(8-ந்தேதி) முதல் வழக்கம் போல இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை ரெயில் நிலையத்தில் தினமும் சராசரியாக 65 பயணிகள் ரெயில், 10 சரக்கு ரெயில் ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

    மதுரை ரெயில் நிலையத்தில் புதிதாக கணிப்பொறி மென்பொருள் மற்றும் மின்னணு தொழில்நுட்ப நுண்ணறிவு இயக்கிகள் ஆகியவை நிறுவப்பட்டு உள்ளன. அவற்றின் மூலம் ரெயில்கள் பாதுகாப்பாக இயக்கப்பட உள்ளன. இதற்காக அந்தந்த ரெயில் நிலையங்களில் 75 செ.மீ. அகல கணிப்பொறி திரைகள் நிர்மானிக்கப்பட்டு உள்ளன.

    இதில் ரெயில் பாதை அமைப்புகள், கலர் விளக்கு சிக்னல், ரெயில் பாதை பாய்ண்ட் இணைப்புகள் ஆகியவை உள்ளன. எனவே நிலைய அதிகாரி கணிப்பொறி "மவுஸ்" மூலம் ரெயில்களின் பாயிண்டுகளை நேர் செய்வது, சிக்னல் விளக்குகளை ஒளிரச் செய்வது போன்றவற்றை எளிதாக செய்யலாம். அதேபோல் எந்தெந்த பாதைகளில் ரெயில்கள் உள்ளன? என்பதையும் தெளிவாக அறிய இயலும்.

    தென்னக ரெயில்வேயில் மதுரை ரெயில் நிலையத்தில் தான் அதிக அளவில் 385 ரெயில் பாதைகள், 88 ரெயில் பாதை இணைப்புகள், 100 சிக்னல் வயரிங் அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த மின்னணு தொழில்நுட்பம் கடந்த 2012-ம் ஆண்டு மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு 2019-ம் ஆண்டு தேனி அகல ரெயில்பாதை தொடக்கத்தின் போது மேலும் மெருகூட்டப்பட்டது.

    மதுரை ரெயில் நிலையத்தில் சமீபத்தில் இணைப்பு பணிகள் நடந்தபோது, அதில் மேலும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் நிலைய அதிகாரிகள் விரைவாக முடிவு எடுத்து ரெயில்களை தாமதம் இன்றி பாதுகாப்புடன் இயக்க முடியும்.

    திருப்பரங்குன்றம், திருமங்கலம் ரெயில் நிலையத்திலும் ரெயில்களை பாதுகாப்பாக இயக்குவதற்காக, புதிய தொழில் நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மதுரை கோட்டத்தில் திருச்சி-நெல்லை மற்றும் செங்கோட்டை-புனலூர் ஆகிய பிரிவுகளில் உள்ள ரெயில் நிலையங்களில் புதிய மின்னணு சைகை தொழில்நுட்பம் வாயிலாக ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • மதுரை ஜெயிலில் மகளிர் தினம் கொண்டாடிய பெண் கைதிகள் கொண்டாடினர்.
    • இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.

    மதுரை

    தென் தமிழகத்தில் மிகப்பெரிய ஜெயில்களில் ஒன்று மதுரை மத்திய ஜெயில் ஆகும். இங்கு 1,850 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 100 பெண் கைதிகள் தனி சிறையில் உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்காக சிறையில் இருக்கும் போது பல்வேறு சுயதொழில் பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன.

    அதில் உணவு தயாரிப்பது, தையல், தறி நெய்தல் போன்றவை குறிப்பிடத்தக்கதாகும். பெண் கைதிகள் தயாரிப்பில் நெய்யப்படும் சுங்கடி சேலைகள் ஜெயில் பஜார் அங்காடியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    உலக மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று மதுரை ஜெயிலில் மகளிர் தினவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 35-க்கும் மேற்பட்ட ஜெயில் பெண் ஊழியர்கள், கைதிகள் நெய்த சுங்குடி சேலையை அணிந்து விழாவில் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதனை பெண் கைதிகள் ரசித்து பார்த்தனர்.

    இந்த விழாவில் மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்தகண்ணன், ஜெயிலர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரி பழனிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திருமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.

    • விவசாயிக்கு 4 வாரத்தில் கடன் வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
    • மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பினராகவும் உள்ளேன்.

    மதுரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா என்.மங்கலத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    என்.மங்கலம் வருவாய் கிராமம் மற்றும் ஆக்களூர் வருவாய் கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறேன். மங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் உறுப்பி னராகவும் உள்ளேன்.

    கடந்த டிசம்பர் மாதம் விவசாய கடன் கேட்டு எனது சொத்து அடங்கல் அசல் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை வங்கியில் சமர்ப்பித்து இருந்தேன். ஆனால் எனக்கு இதுவரை விவசாய கடன் வழங்கப்பட வில்லை. இதனால் விவசா யம் செய்ய இயலாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன்.

    இதே போல கடந்த 2021-22-ம் ஆண்டும் விவசாய கடன் கேட்டு விண்ணப்பித்த போதும் கடன் கிடைக்கவில்லை. என்னை போல ஏராளமான விவசாயிகள் வங்கியால் புறக்கணிக்கப்படுகின்றனர். எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி இந்த வங்கியில் நடைபெறாத வண்ணம் தகுதியான விவசாயிகளுக்கு கடன் வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

    கடன் வழங்குவதில் பாரபட்சம் காட்டும் நிலமலகியமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தலைவர் மற்றும் செயலாளர் மீது விசாரணை நடத்தி சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் மனுதாரரின் கடன் விண்ணப்பத்தை ஏற்று 4 வாரத்தில் அவருக்கு விவசாய கடனை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு தொடக்க வேளாண்மை வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    • தி.மு.க. அரசை பொதுமக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
    • மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மேற்கு யூனியன் அரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க சோழ வந்தான் சட்டமன்ற தொகுதி சார்பில் ஜெயலலிதா 75-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.

    மதுரை மேற்கு-தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் கல்லணை ரவிச்சந்திரன், கொரியர் கணேசன் வாடிப்பட்டி காளிதாஸ், வாடிப்பட்டி ஒன்றிய சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, டாக்டர் சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பிரதிநிதி சாமிநாதன் வரவேற்றார்.

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மாண வர்களுக்கு மடிக்கணினி போன்ற பொது மக்களுக்கு தேவையான எத்தனையோ திட்டங்களை ஜெயலலிதா கொண்டு வந்தார்.இவற்றையெல்லாம் முடக்கி மக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளதுதான் தி.மு.க. அரசின் சாதனையாகும். இதனால் மக்களுக்கு வேதனை மட்டுமே மிஞ்சியுள்ளது.

    தி.மு.க. அரசை பொது மக்கள் தூக்கி எறியும் காலம் தொலைவில் இல்லை. தி.மு.க. அரசின் அராஜக போக்கை கண்டு பிரதமர் ஆட்சியை கலைத்து விடுவார் என்பதை தடுப்பதற்காகவே உதயநிதி ஸ்டாலின் பிரதமரை சந்தித்தார். ரூ.600 கோடியை செலவழித்து ஈரோடு கிழக்கில் பெற்ற வெற்றியானது ஜனநாயகத்தின் படுகொலை யாகும். எதிர்வரும் தேர்தல்களில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி மகத்தான வெற்றி பெற்று எடப்பாடியார் தலைமையிலான ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகதா ராதாகிருஷ்ணன், அம்மு லோகேசுவரன், மாவட்ட பிரதிநிதி சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ராசு, கூட்டுறவு சங்க தலைவர் மலர் கண்ணன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் குருசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டுறவு வங்கி துணைத் தலைவர்-கிளை செயலாளர் ராகுல் நன்றி கூறினார்.

    • ரெயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் வடகரை சாலையில் உள்ள ெரயில்வே சுரங்கப்பாதையின் மேலே உள்ள தண்டவாளத்தில் ரெயில் மோதி ஒருவர் இறந்து கிடப்பதாக விருதுநகர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து விருதுநகர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார், ரெயில்வே போலீஸ் படையை சேர்ந்த செல்வராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ரெயில் மோதி பலியான வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், பலியான வாலிபர் திருமங்கலத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் கதிரவன் (வயது 23) என்றும், அவர் நேற்று இரவு வீட்டுக்கு தாமதமாக வந்ததால் பெற்றோர் கண்டித்ததாகவும், இதில் மனமுடைந்த அவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×