என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவுன்சிலர் ஜெயச்சந்திரன்
நில மோசடி வழக்கில் சிக்கிய மதுரை மாநகராட்சி கவுன்சிலர் தி.மு.க.வில் இருந்து நீக்கம்
- நில மோசடி வழக்கில் சிக்கிய மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ஜெயச்சந்திரனை எஸ்.எஸ்.காலனி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
மதுரை:
மதுரை மாநகராட்சியின் 62-வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்ற பெற்றவர் ஜெயச்சந்திரன். இவர் கவுன்சிலராக தேர்வானதும் சென்னை சென்று அண்ணா அறிவாயலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.
இவர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். இதற்காக அவர் பலரிடமும் சீட்டு மூலம் பணம் வசூலித்து வந்தார். இதற்கிடையே ஜெயச்சந்திரன் நில மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் வெளியாயின. இதனை அவர் மறுத்து வந்தார்.
இந்த நிலையில் மதுரை கே.புதூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர், ஜெயச்சந்திரன் ரூ.10 லட்சம் நிலமோசடி செய்ததாக எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது சுப்பிரமணியம் பணம் கட்டியதற்கான ஆவணங்களை போலீசாரிடம் சமர்ப்பித்து உள்ளார்.
இதன் அடிப்படையில் ஜெயச்சந்திரனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவரிடம் குற்றச்சாட்டை மறுப்பதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை.
இதைத்தொடர்ந்து ஜெயச்சந்திரனை எஸ்.எஸ்.காலனி போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு 2 நாள் அரசு முறை பயணம் வந்திருந்தபோது ஜெயச்சந்திரன் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்படுகிறார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளார்.
நில மோசடி வழக்கில் சிக்கிய மாநகராட்சி 62-வது வார்டு கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தி.மு.க.வில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






