என் மலர்tooltip icon

    மதுரை

    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    மதுரை:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் மதுரைக்கு வந்தார். அப்போது அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் என்பவர் மதுரை விமான நிலையத்தில் வீடியோ எடுத்து அவதூறாக பேசினார்.

    இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ராஜேஸ்வரனுக்கு அடி-உதை விழுந்தது. இதுபற்றி அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்டோர் மீது 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    அதே சம்பவத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், அ.ம.மு.க. நிர்வாகி ராஜேஸ்வரன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு போலீசாரிடம் உரிய அனுமதி பெறவில்லை. ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் அ.தி.மு.க.வினர், மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய வந்தனர்.

    அப்போது போலீசார் தடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி இல்லை, அனைவரும் கலைந்து செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். இருந்தபோதிலும் அ.தி.மு.க.வினர் கலைந்து செல்லாமல் போலீசாரின் தடையையும் மீறி அ.தி.மு.க.வினர் ஆர்பாட்டம் செய்தனர்.

    இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அன்புதாசன், சுப்பிரமணியபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார், அ.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார், பகுதி செயலாளர்கள் முத்துவேல், கருப்பசாமி, மாவட்ட கவுன்சிலர் மற்றும் 500 பெண்கள் உள்பட 2 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கைதான பெண்ணிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே 4 நாட்களுக்கு முன் அங்கன்வாடி மையத்தில் பெண் ஒருவர் அதிகாரி போல் சென்று அங்கிருந்த 2 குழந்தைகள் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாயத்துகளை திருடி சென்றார். இது தொடர்பாக வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

    அதன்பேரில் அந்த பெண்ணை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், உதயகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மர்ம பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை தேவாலய பஸ் நிறுத்தம் முன்பாக சந்தேகப்படும்படியாக பெண் ஒருவர் நின்றிருந்தார்.

    போலீசார் அந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அப்போது அந்த பெண் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சந்தேகமடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

    அப்போது அந்த பெண் மதுரை மாவட்டம் சாப்டூர் கரிசல்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த சங்கர பாண்டி மகள் காவியா (வயது 29) என்பதும், 4 நாட்களுக்கு முன்பு வாடிப்பட்டி அங்கன்வாடி மையத்தில் அதிகாரி போல் சென்று குழந்தைகளிடம் நைசாக தங்க தாயத்துகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து குழந்தைகளிடம் திருடப்பட்ட 2 தங்க தாயத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் இதேபோன்று வேறு பகுதியில் கைவரிசை காட்டி உள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

    • 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
    • திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினராக உள்ளேன். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் கடந்தாண்டு நவம்பர் 17-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 34 கடைகளுக்கான ஏலம் நடந்தது.

    இதில் மொத்தமாக 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஏலம் அவ்வாறு நடைபெற வில்லை.

    எனவே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து மீண்டும் ஏல அறிவிப்பை முறையாக வெளியிட்டு முறையாக ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி கடைகளுக்கான ஏல அறிவிப்பில் விதி முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:

    திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்ப ட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏல அறிவிப்பின் கீழ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி கடைகள் ஏலம் குறித்து வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    • அவனியாபுரத்தில் திருமணமாகாத விரக்தியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    அவனியாபுரம்

    அவனியாபுரம் செம்பூரணியை சேர்ந்த வேல்முருகனின் மகன் பாண்டித்துரை (வயது30). கட்டிட தொழிலாளி.

    நேற்று இவர் தனது பிறந்த நாளையொட்டி மது குடித்தார். போதையில் இருந்த பாண்டித்துரை திருமணமாகாத விரக்தியில் தற்கொலை செய்து கொள்வதற்காக உடலில் கத்தியால் கீறினார்.

    மேலும் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவனியாபுரம் போலீசார் பாண்டித்துரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமணமாகாத விரக்தியில் பிறந்தநாள் அன்றே வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • பிளஸ்-2 தேர்வை நிர்வாக குளறுபடியால் 50 ஆயிரம் பேர் எழுதவில்லை.
    • அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டினார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள மதுரை மேற்கு (தெற்கு), அலங்கா நல்லூர், வாடிப்பட்டி ஆகிய ஒன்றிய அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட, புதிய உறுப்பினர்கள் அடையாள அட்டையை, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரும், மாவட்ட செயலாளருமான

    ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், தனராஜன், திருப்பதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, நிர்வாகிகள் அரியூர் ராதா கிருஷ்ணன், ரவிச்சந்திரன், காளிதாஸ், கொரியர் கணேசன், அசோக், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-

    தமிழகத்தின் நிர்வாக குளறுபடியால் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மிகப்பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. இந்த தேர்வில் ஹால் டிக்கெட் வழங்கியும், 50 ஆயிரம் பேர் தமிழ் தேர்வை எழுதவில்லை. தமிழ் மொழி காப்போம், தமிழை காப்போம் என்று கூறியவர்கள் இந்த அவல நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

    தகவல் தொழில்நுட்பத் துறையில் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் செய்யப்பட்ட திட்டங்களை எல்லாம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் எடப்பாடியார் செய்த சாதனைகளை மறைத்து கருணாநிதி காலத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டதாக முதல்-அமைச்சர் கூறியுள்ளார்.

    டிஜிட்டல் ஆளுமையில் சிறந்த மாநிலமாக 2020-ம் ஆண்டு மத்திய அரசிடம் தங்க விருதை எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்கு பெற்று தந்தார்.

    கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில், 1,321ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.664 கோடி முதலீட்டில் தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டலங்களை உருவாக்கினார். இதன் மூலம் ஒரு லட்சம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஒரு கோடி பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பு களும் உருவாக்கி கொடுக்கப்பட்டது.

    கொரோனா காலகட்ட ங்களில் வொர்க் ப்ரம் ஹோம் என்பதை செயல்படுத்தினார். அது போல் வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்றவற்றில் ஆன்லைன் வர்த்தகத்தை செயல்ப டுத்தினார்.

    அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான் தகவல்தொழில்நுட்ப கட்டமைப்பில் 100 சதவீதம் உள் கட்டமைப்பு அடிப்படை வசதிகளை உருவாக்க ப்பட்டது. அந்த சாதனைகள் எல்லாம் முதல்-அமைச்சர் மறைத்து விட்டார்.

    நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் அரிசி மிகவும் தரமற்றதாக இருக்கிறது. கால்நடைகளுக்கு கூட வழங்க முடியாமல் இருக்கிறது. இதுகுறித்து என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் அரசு மெத்தனப்போக்கு காட்டி வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • குடிநீரில் சாக்கடை நீர் கலக்கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
    • சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்யப்பட்ட குடிநீரில் அதிக அளவில் புழுக்கள் மிதந்ததால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர். அவர்கள் குடிநீரை பயன் படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

    இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதா வது:-

    மதுரை மாநகராட்சி 4-–வது மண்டலத்திற்கு உட்பட்ட ஆழ்வார்புரம் வைகை வடகரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்களுக்கு வைகை ஆற்றில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இதற்காக குடிநீர் அரசரடி பகுதியில் நீரேற்று நிலையத்தில் சுத்திக ரிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து எங்கள் பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு அதன் மூலம் குடியிருப்பு பகுதிக ளுக்கு வினியோகம் செய்யப் படுகிறது.

    இவ்வாறு வரும் குடிநீர் வைகை ஆற்று வடகரை பகுதியில் கள்ளழகர் இறங்கும் இடத்தில் குடிநீரு டன் சாக்கடை நீர் கலப்பதாக தெரிவிக்கின்றனர். குடிநீர் வரும் பகுதியை மாநகராட்சி 29-வது வார்டு, 30-வது வார்டு பகுதியில் உள்ளது மேலும் இதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையிடம் அனுமதி பெற்று சாலையை தோண்ட வேண்டும் என்ப தால் தாமதப்படுத்துவதாக வும் தெரிவிக்கின்றனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீரில் புழுக்கள் அதிகமாக வந்தது. இதனால் நாங்கள் தண்ணீரை பயன்படுத்த முடியவில்லை. தட்டுப்பாடு காரணமாக புழுக்கள் உள்ள தண்ணீரை வடிகட்டி பயன்படுத்தி வருகிறோம்.

    எங்கள் பகுதியில் தொடர்ச்சியாக பலருக்கு மஞ்சள் காமாலை, காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    பொதுமக்கள் கொடுத்த புகாரின்பேரில் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குழாயில் வந்த குடிநீர், வீடுகளில் உள்ள குடம், பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்ட குடிநீரை அதிகாரிகள் பார்வையிட்ட னர்.

    குடிநீரில் புழுக்கள் வந்ததற்கான காரணம் கண்டறி யப்பட்டு சுகாதார மான குடிநீர் வழங்க நடவ டிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முதற்கட்டமாக ஆழ்வார்புரம் மற்றும் அதன் சுற்றியுள்ள மாநகராட்சி பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் முகாம் தற்போது நடை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • தாட்கோ மூலம் துரித மின் இணைப்பு பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
    • நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் மின் மோட்டார் குதிரைத் திறனுக்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.60 லட்சம் மானியத்தில் ஆதிதிராவி டர்களுக்கு 900 எண்ணிக்கை யும் பழங்குடியினருக்கு 100 எண்ணிக்கையிலும் மொத்தம் 1000 விவசா யிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சேர்ந்த விவசாயிகளாகவும் விவசாய நிலம் மற்றும் நிலப்பட்டா அவர்களின் பெயரில் இருப்பவர்கள் மட்டும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் நிலத்தில் கிணறு அல்லது ஆழ்குழாய்கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.25 ஆயிரமும், 7.5 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ.27 ஆயரத்து 500-ம், 10 எச்.பி குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.30 ஆயிரமும், 15 எச்.பி. குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.4 லட்சத்திற்கான 10 சதவீத பங்குத் தொகை ரூ.40 ஆயிரத்துக்கான வங்கி வரைவோ லை அளிப்பவ ர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியில்லாத விண்ணப்பதாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும். கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும், தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.

    இந்த திட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் நிலத்தின் சிட்டா, அடங்கல் நகல், "அ" பதிவேடு நகல், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்ட நிலத்தின் வரைப்படம், சர்வே எண், மின் வாரியத்தில் பதிவு செய்த ரசீது நகல் மற்றும் புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.

    கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, அறை எண். 106, முதல் தளம், பழைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், மதுரை-625 020 என்ற முகவரியிலும், 0452-2529848 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேரையூர் அருகே ஆசிரியை வீட்டில் பொருட்கள் திருடு போயிருந்தது.
    • இந்த திருட்டு சம்பவம் குறித்து பேரையூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    பேரையூர் கே.ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஜெயக்கொடி. இவர் உத்தப்புரம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டை விட்டு மகனுடன் ஆவுடையார் கோவிலுக்கு சென்றார். மறுநாள் காலை அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது.

    இதனை அக்கம்பக்கத்தினர் பார்த்து வெளியூர் சென்றிருந்த ஜெயக்கொடிக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதுபற்றி அவர் தனது வீட்டின் அருகே வசித்துவரும் உறவினர் நிரஞ்சனிடம் கூறினார்.

    இதையடுத்து அவர் ஜெயக்கொடி வீட்டிற்கு சென்று பார்த்தார்.

    அப்போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன. வீட்டில் இருந்த சில பொருட்கள் திருட்டு போயிருந்தது. யாரோ மர்ம நபர்கள் ஜெயக்கொடி வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு கைவரிசை காட்டியுள்ளனர்.

    பீரோவில் நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கரை திருட்டில் ஈடுபட்டவர்களால் உடைக்க முடியவில்லை. இதனால் அதிலிருந்த நகைகள் தப்பின. இந்த திருட்டு சம்பவம் குறித்து பேரையூர் போலீசில் நிரஞ்சன் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூட்டியிருந்த வீட்டில் புகுந்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பேரையூர் பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
    • துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை.

    மதுரை:

    தமிழகத்தின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மதுரை நகரில் 100 வார்டுகள் உள்ளன. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப நாள்தோறும் இங்கு டன் கணக்கில் குப்பைகள் குவிகின்றது. இதனை அப்புறப்படுத்த வார்டு வாரியாக நிரந்தர மற்றும் தினக்கூலி, ஒப்பந்த அடிப்படையில் 1000-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள மதுரை மாநகராட்சியில் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் துப்புரவு ஒப்பந்த பணியாளர்களுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர்கள் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

    இரண்டு மாதமாக சம்பளம் கிடைக்காததால் துப்புரவு தொழிலாளர்கள் கடும் சிரமம் அடைந்தனர். இந்தநிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பள தொகையை உடனே வழங்கக்கோரி மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்தில் பணிபுரியும் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள் இன்று பணிகளை புறக்கணித்து சுப்பிரமணியபுரம் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    அவர்கள் அலுவலக நுழைவாயிலில் முன்பு அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலுவை சம்பளத்தை வழங்கவேண்டும், தினக்கூலி அடிப்படையில் 16 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து மரணமடைந்த தொழிலாளிகளின் வாரிசுகளுக்கு வேலை வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

    இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால் தொடர்ந்து துப்புரவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    துப்புரவு பணியாளர்களின் போராட்டம் காரணமாக மதுரை மாநகராட்சியின் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெறவில்லை. இதனால் பல இடங்களில் குப்பைகள் தேங்கி கிடந்தன.

    • மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.
    • தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.

    மதுரை:

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு இன்று பதில் அளித்துள்ள அனுப்பிய கடிதத்தை வெங்கடேன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    டுவிட்டரில் வெங்கடேசன் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன்.

    "உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக" குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று பதிலளித்துள்ளார்.

    அரியலூர் மருத்துவ கல்லூரி அரங்கத்திற்கு அனிதாவின் பெயர் சூட்டி இன்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். மருத்துவ அரங்கும், மருத்துவக்கல்வியும் அனித்தாக்களுக்கானது. அதை பறிப்பதை தடுக்கும் நீட் ஒழிப்பு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

    தமிழகத்தின் கனவு அனித்தாக்களின் கல்வி உரிமையை நிலைநாட்டுவதே.

    இவ்வாறு எம்.பி. வெங்கடேசன் டுவிட்டரில் கூறியுள்ளார்.

    • தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது.
    • தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    மதுரை:

    டெல்லியைச் சேர்ந்தவர் பிரசாந்த் குமார் உம்ராவ். இவர் டெல்லி பா.ஜ.க. பிரமுகராக உள்ளார். மேலும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கறிஞராக உள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் கொடூரமாக தாக்கி கொலை செய்வது போன்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

    மேலும் பீகார் மற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்றும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ தான் தயாரித்தது இல்லை என்றும், வந்த தகவலை பதிவேற்றம் செய்ததாகவும், இதில் எந்த உட்கருத்தும் இல்லை.

    நான் அரசியல் கட்சியில் உள்ளதால் பழிவாங்கும் நோக்கத்தோடு என் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் பிரசாந்த் குமார் உம்ராவ் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மனுதாரர் திட்டமிட்டு தமிழகத்தில் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்று இதுபோன்ற வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். இதனால் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவுக்கே ஒரு பதட்டமான சூழல் நிலவியது. இவரை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஆகையால் முன் ஜாமின் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி இது போன்ற வீடியோக்களை பதிவு செய்வதை பார்க்கும்போது, தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்தில் மிகப்பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதட்டமான சூழலும் நிலவியது என கருத்து தெரிவித்தார். மேலும் நீதிபதி மனுதாரருக்கு முன் ஜாமின் வழங்க மறுத்து விட்டார். இந்த மனு குறித்து போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

    • மதுரையில் இன்று நடந்த பிளஸ்-1 தேர்வை 35,279 மாணவ-மாணவிகள் எழுதினர்.
    • இந்த தேர்வு 116 மையங்களில் நடந்தது.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று பிளஸ்-1 பொதுத்தேர்வு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் 326 அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 56 மாணவர்கள், 18 ஆயிரத்து 223 மாணவிகள் என மொத்தம் 35 ஆயிரத்து 279 பேர் பிளஸ்-1 பொதுதேர்வு எழுதினர்.

    இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்ப ட்டிருந்தன. இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் 9.45 மாணவ, மாணவிகளின் ஹால் டிக்கெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு தேர்வறைக்குள் அனுமதிக்கப் பட்டனர். இன்று தமிழ் மொழிப்பாடத் தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, உயர்அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முறைகேடு நடப்பதை தடுக்க பறக்கும் படையும் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு பணிக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    இந்த ஆண்டு மாற்றுத்திறன் கொண்ட 352 மாணவ-மாணவிகளும் இன்று பிளஸ்-1 தேர்வை எழுதினர். அவர்களுக்காக தேர்வெழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதேபோல் 4 மையங்களில் தனித்தேர்வர்கள் 1,231 பேர் தேர்வெழுதினர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 7 ஆயிரத்து 76 மாணவர்களும், 8 ஆயிரத்து 398 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 474 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதுதவிர 158 பேர் தனித்தேர்வர்களாக பங்கேற்றனர். விருதுநகர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 240 மாணவர்களும், 11 ஆயிரத்து 796 மாணவிகளும் என மொத்தம் 22 ஆயிரத்து 36 பேர் பிளஸ்-1 தேர்வு எழுதினர். இதற்காக 50-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    ×