search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏலத்தில் ஊழல் நடந்தது உறுதியானால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நேரிடும்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை
    X

    திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏலத்தில் ஊழல் நடந்தது உறுதியானால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற நேரிடும்- மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் எச்சரிக்கை

    • 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
    • திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தனபாலன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:-

    நான் திண்டுக்கல் மாநகராட்சி உறுப்பினராக உள்ளேன். திண்டுக்கல் மாநகராட்சி சார்பில் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 கடைகள் வாடகைக்கு விடுவதற்கான ஏல அறிவிப்பை நடத்துவதற்கான மாநகராட்சி கூட்டம் கடந்தாண்டு நவம்பர் 17-ந் தேதி நடந்தது. இந்த கூட்டத்தில் 34 கடைகளுக்கான ஏலம் நடந்தது.

    இதில் மொத்தமாக 47 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். தமிழ்நாடு வெளிப்படை தன்மை ஏல அறிவிப்புச் சட்டத்தின் படி ஏலம் நடைபெறுவதற்கு 15 நாட்களுக்கு முன்பு உள்ளூர் அல்லது மாவட்ட அளவிலான செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுத்திருக்க வேண்டும். அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ளும்படி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் இந்த ஏலம் அவ்வாறு நடைபெற வில்லை.

    எனவே திண்டுக்கல் காமராஜர் பஸ் நிலையத்தில் அமைந்துள்ள 34 மாநகராட்சி கடைகள் ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்த அறிவிப்பிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். மேலும் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்து மீண்டும் ஏல அறிவிப்பை முறையாக வெளியிட்டு முறையாக ஏலம் நடத்த உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் திண்டுக்கல் மாநகராட்சி கடைகளுக்கான ஏல அறிவிப்பில் விதி முறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவித்ததாவது:

    திண்டுக்கல் மாநகராட்சி 34 கடைகளுக்கான ஏலத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. தமிழ்நாடு ஏல அறிவிப்புச் சட்டம் முறையாக பின்பற்றப்படவில்லை. பொதுமக்களின் பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி கடை ஏல அறிவிப்பில் ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டால் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட நேரிடும்.

    திண்டுக்கல் மாநகராட்சிக்கு சொந்தமான 34 கடைகளில் ஏலம் மூலம் தேர்ந்தெடுக்கப்ப ட்டவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்ய இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. ஏல அறிவிப்பின் கீழ் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும்.

    திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் மாநகராட்சி கடைகள் ஏலம் குறித்து வருகிற 23-ந் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    Next Story
    ×