என் மலர்
மதுரை
- பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா?
- ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.
மதுரை:
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.
இது தொடர்பாக தமிழக போலீசார் விசாரணை நடத்தியதில், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பான வதந்தி வீடியோவை வெளியிட்டது டெல்லியை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் பிரசாந்த்குமார் உம்ராவ் என தெரியவந்தது. இது தொடர்பாக அவர் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க பிரசாந்த்குமார் உம்ராவ் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்தார். அதில், நான் டெல்லியில் பா.ஜனதா கட்சியின் முக்கிய பிரமுகராக உள்ளேன். டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றி வருகிறேன். குறிப்பிட்ட வீடியோவை நான் தயாரிக்கவில்லை. எனக்கு வந்த வீடியோவை பார்வர்ட் மட்டும் செய்தேன். இதில் எந்தவித உட்கருத்தும் இல்லை.
ஆனால் நான் அரசியல் கட்சியில் இருப்பதால் பழிவாங்கும் நோக்கோடு என்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பிரசாந்த்குமார் உம்ராவ் வெளியிட்ட வீடியோவால் தமிழகத்தில் அசாதாரண சூழல் உருவானது.
இருமாநில தொழிலாளர்களுக்கு இடையில் பிரச்சினை உருவாக்கும் விதமாக இவர் டுவிட் செய்துள்ளார். இது இவரின் முதல் டுவிட் கிடையாது. இது போன்ற பல சட்ட விரோதமான பொய்யான தகவல்களை டுவிட் செய்துள்ளார். எனவே இவருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது என அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி கூறுகையில், பிரசாந்த்குமார் உம்ராவ் ஒரு வழக்கறிஞர். ஏன் இதுபோன்ற வீடியோவை பார்வர்ட் செய்தார்? இதன் தீவிரத்தன்மை அவருக்கு தெரியாதா? இதனால் எவ்வளவு பிரச்சினை ஏற்படும்? அவர் எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும். சமூக பொறுப்பு அவருக்கு இல்லையா? என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.
- மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
- உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை மேலமடையில் ஆவின் பால் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகளிடம், பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்த வேண்டும் என்று மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் மற்றும் தொகுப்பு பால் குளிர்விப்பான் மைய சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இதைத்தொடர்ந்து பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, மதுரை மாவட்டம் முழுவதிலும் கடந்த 11-ந்தேதி ஆவினுக்கு பால் வினியோகத்தை நிறுத்தும் போராட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது விரைவில் கோரிக்கை பரிசீலனை செய்யப்பட்டு கொள்முதல் விலை உயர்த்தப்படும் என்று உறுதியளித்தனர். அதனை ஏற்று பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்தநிலையில் கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால் வருகிற 17-ந் தேதி மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்திருந்தனர்.
இதற்கிடையே பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாகிகளுடன் பல்வேறு கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து குறிப்பிட்டபடி மதுரை மாவட்டத்தில் இன்று (17-ந்தேதி) ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகத்தை நிறுத்தம் போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது. இதன் காரணமாக மதுரை மாவட்டம் முழுவதும் ஆவின் நிறுவனத்துக்கு பால் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் பால் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் பால் பணியாளர் சங்கம் கலந்து கொள்ளவில்லை.
மதுரையில் 900 பால் வினியோக சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகவர்கள் அங்கத்தினராக உள்ளனர்.
மதுரை மாவட்டத்தின் ஒட்டுமொத்த பால் தேவை 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் ஆவின் நிறுவனத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை 1.60 லட்சம் லிட்டர் என்ற அளவில் பால் கிடைத்து வந்தது. அதுவும் இப்போது படிப்படியாக குறைந்து தற்போது 1.36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்டம் முழுவதிலும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு உற்பத்தியா ளர்கள் நலச்சங்கம் முழு அளவில் பால் விநியோக நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளதால், ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு தொடர்பாக சங்கங்களின் கோரிக்கை தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது. எனவே பால் வியாபாரிகள், ஆவினுக்கான பால் விநியோகத்தை நிறுத்தக்கூடாது. அப்படி நிறுத்தினால் கூட்டுறவு சங்க விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆவின் பால் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர மதுரையில் உற்பத்தியாளர்களிடம் பேசுவதற்காக, ஆவின் சார்பில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் உசிலம்பட்டி, செல்லம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பாக உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்களில் தொடர் பால் நிறுத்த போராட்டத்தில் சங்க பணியாளர்கள், உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்கமாவட்டத்தலைவர் பெரிய கருப்பன், செயலாளர் உக்கிரபாண்டி, பொருளாளர் இன்பம் ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
உசிலம்பட்டி பகுதியில் சுமார் 40 சதவீதம் பால் உற்பத்தியாளர்கள் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
மதுரை
தமிழர் தேசம் கட்சி மாநில செயலாளர் வி.எம்.எஸ்.அழகர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ஆனையூரில் உள்ள மன்னர் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் மதுரையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கினார்.
இந்த விழாவில் தமிழர் தேசம் கட்சி மதுரை மாவட்ட செயலாளர் சிங்ககண்ணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி துனை செயலாளர் ஆதிமுருகன், மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா, ஒன்றிய செயலாளர் பொய்கை தங்கம், திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பிரபு, மாவட்ட இணை செயலாளர் அழகுராஜா, மாவட்ட இளைஞரணி சங்கிலி, நத்தம் ஒன்றியம் பூமி, தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி-நாடார் மேல்நிலைப்பள்ளியில் 104-வது ஆண்டு விழா விளையாட்டு போட்டி நடந்தது.
- முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.
மதுரை
மதுரை தெற்குவாசல் நாடார் வித்தியாவிருத்தி சங்கம் உறவின் முறைக்குபாத்தியப்பட்ட நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி 104-வது ஆண்டு விழா மற்றும் ஆண்டு விழா நடந்தது.
53-வது வார்டு உறுப்பினர் அருண்குமார், உதவி பொறியாளர் ராம்சுப்பு ஆகியோர் தொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தனர். பள்ளி செயலாளர் குணசேகரன், உறவின் முறை தலைவர் கணபதி ஆகியோர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
பேரணி காமராஜர் விளையாட்டு திடலில் தொடங்கி மதுரை கல்லூரி விளையாட்டு மைதானம் வரை நடந்தது. அப்போது மாணவர்கள் அனைவருக்கும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். நாடார் வித்தியாசாலை நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியாள் அனைவரையும் வரவேற்று பேசினார்.
மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஜெகநாதன் தேசிய கொடியை ஏற்றினார்.வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் ஒலிம்பிக் கொடியை ஏற்றினார். பள்ளி கொடியை பள்ளி செயலாளர் குணசேகரன் ஏற்றினார். சந்திரசேகரன் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார்.
வண்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டும், பாரம்பரிய ஒயிலாட்டத்துடன் விளையாட்டு போட்டிகள் தொடங்கின. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பின்னர் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி செயலாளர் குணசேகரன் வரவேற்று பேசினார்.
உறவின் முறை தலைவர் கணபதி, பொருளாளர் ராஜன், செயலாளர் மயில்ராஜன், துணைத்தலைவர் ரமேஷ்பாபு, துணை செயலாளர் அருஞ்சுனை ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளிக்குழு தலைவர் பார்த்திபன் தலைமையுரை ஆற்றினார். வட்டார கல்வி அலுவலர் மோசஸ் பெஞ்சமின் வாழ்த்தி பேசினார்.
நாடார் வித்தியா சாலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் நல்லாசிரியர் காந்திபாய் சுவாடியடியாள், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் நாகநாதன் ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் ஆசிரியை சபிதா நன்றி கூறினார்.
- வாலிபரை மிரட்டி ‘ஜிபே’ மூலம் ரூ.10 ஆயிரம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- நாகமலை புதுக்கோட்டையைச்சேர்ந்த விமல் (24), பார்த்திபன் (21), யோகேஸ்வரன் (18) ஆகிய 3 பேர் சிக்கினர்.
மதுரை
ஊட்டியை சேர்ந்தவர் முகமது தானிஷ் (வயது 28). இவர் மதுரை பாண்டி கோவில் ரோட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் முகமது தானிஷ் சக நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் மதுரை நாகமலை புதுக்கோட்டை கீழக்குயில் குடியில் உள்ள ஒரு மலை கோவிலுக்கு சென்றார்.
அங்கு அவர் தோழிகளு டன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு 3 மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் முகமது தானிசிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த லேப்டாப் மற்றும் செல்போன்களை பறித்துக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து ரூ.10 ஆயிரம் தர வேண்டும். இல்லையென்றால் இந்த பெண்களை கத்தியால் குத்தி கொன்று விடுவோம் என்று மிரட்டினர். இதனால் பயந்துபோன முகமது தானிஷ் மற்றும் அவரது நண்பர்கள் 'ஜிபே' மூலம் ரூ.10 ஆயிரத்தை அனுப்பி னர். அதனை பெற்றுக் கொண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
இது தொடர்பாக முகமது தானிஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பணம் பறித்த நாகமலை புதுக்கோட்டை யைச்சேர்ந்த விமல் (24), பார்த்திபன் (21), யோகேஸ்வரன் (18) ஆகிய 3 பேர் சிக்கினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
- மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- காட்டுப்பன்றியின் சீரழிவை தடுக்க தடுப்பு வேலி அமைக்க கடனுதவிவழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
வாடிப்பட்டி
வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் வீரபத்திரன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார் வனிதா, மண்டல துணை தாசில்தார் தமிழ் எழிலன், தலைமை நில அளவையர் செந்தில் முன்னிலை வகித்தனர். உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெயரட்சகன் வரவேற்றார். வாடிப்பட்டி யூனியன் அலுவலக சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், சிறுமலை பகுதியில் மானாவாரி நிலங்களில் விவசாயம் செய்ய பெரியாறு பாசன கால்வாயில் இருந்து கிளை கால்வாய் அமைத்து சாத்தியார் அணை வரை பாசன கால்வாய் அமைக்க வேண்டும். வனத்துறை சார்பில் காட்டுப்பன்றியின் சீரழிவை தடுக்க தடுப்பு வேலி அமைக்க கடனுதவிவழங்க வேண்டும், பாலமேடு சாத்தையாறு அணை சாலையை சீரமைக்க வேண்டும், வாடிப்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்களில் அடர்ந்து காடு போல் காட்சியளிக்கும் சீமை கருவேல் மரங்களை அகற்ற வேண்டும், வைகை ஆற்று பகுதியில் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருவாய் ஆய்வாளர் அசோக்குமார் நன்றி கூறினார்.
- மதுரை ஐகோர்ட்டில் வேலை வாங்கித்தருவதாக ரூ.4 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
- இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர் தெப்பக்குளம் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2021-ம் ஆண்டு தெப்பக்குளத்தை சேர்ந்த வெற்றிச்செல்வம், அவரது மனைவி கவுரி ஆகியோர் அறிமுகமானார்கள். அப்போது ஐகோர்ட்டில் அதிகாரிகள் பலரை எங்களுக்கு தெரியும். நீங்கள் குறிப்பிட்ட அளவு பணம் கொடுத்தால் ஐகோர்ட்டில் உறுதியாக வேலை வாங்கி விடலாம் என ஆசை வார்த்தை கூறினர்.
இதை நம்பி நான் மற்றும் எனக்கு தெரிந்த உறவினர் தனலட்சுமி ஆகியோர் ரூ.4 லட்சம் ரூபாய் வரை கொடுத்தோம். பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதியினர் பணி நியமன ஆணையை எங்களிடம் கொடுத்தனர்.
அதை கோர்ட்டு அலுவலகத்தில் சென்று காண்பித்தபோது, பணி ஆணை போலியானது என தெரியவந்தது. இதையடுத்து ரூ.4 லட்சத்தை திருப்பித்தருமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் பணத்தை தர மறுக்கின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் போலீசார், கணவன்-மனைவியிடம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை கே.கே.நகரை சேர்ந்தவர் ராஜன். கிரானைட் நிறுவனம் நடத்தி வரும் இவர், அண்ணாநகர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த சூரகண்டி மனைவி வனிதா எங்கள் நிறுவனத்திற்கு வந்தார். அவர் கட்டுமானத்திற்காக கடன் அடிப்படையில் கிரானைட் கற்களை வாங்கிச்சென்றார். இதற்காக அவர் ரூ.20 லட்சம் தர வேண்டியுள்ளது. ஆனால் அவர் தற்போது வரை பணம் தராமல் இழுத்தடித்து வருகிறார்.
எனவே வனிதா மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி பணிகள் துரிதமாக செயல்படுத்தப்படுகிறது.
- மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழ்நாடு அரசு விவசாயிகள் நலனுக்காக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் அனைத்து கிராமங்களிலும் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சியை உருவாக்கி தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மேம்படுத்தும் வகையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் மொத்தம் 112 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு குடும்பத்திற்கு 3 தென்னங்கன்றுகள் வீதம் 200 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
வரப்பு பயிர்கள் (துவரை, உளுந்து, பச்சைப்பயறு, தட்டைப்பயறு) ஆகியவை கிராம பஞ்சாயத்துக்கு 15 எக்டர் வீதம் 58 கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கிராம பஞ்சாயத்திற்கு 5 கைத்தெளிப்பான்கள் மற்றும் 5 விசைத் தெளிப்பான்கள் அல்லது 5 பேட்டரியால் இயங்கும் தெளிப்பான்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை பயனுள்ள வேளாண் நிலங்களாக மாற்றும் நோக்கத்தில் இதுவரை 39 தரிசு நில தொகுப்புகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும், தரிசு நில தொகுப்புகள் கண்டறியும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 ஏக்கர் முதல் 15 ஏக்கர் வரை தொடர்ச்சியான தரிசு நிலங்களை கண்டறிந்து தொகுப்புகளாக அமைந்திட வேண்டும். தரிசு நில தொகுப்புகள் தொட ர்ச்சியாக அமையாதபோது இடையில் உள்ள 2 முதல் 3 ஏக்கர் வரை சாகுபடி நிலங்க ளையும் கொண்டு வந்து தொடர்ச்சியான தரிசு நிலத் தெர்குப்பாக அமைத்துக் கொள்ளலாம்.
தரிசு நில தொகுப்பு அமைப்பதில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மை யினர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் செல்லம்பட்டி வட்டாரம், விக்ரமங்கலம் கிராம பஞ்சாயத்தில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் எண் உலர்களம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. அதன்படி மதுரை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து துரிதமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் விவேகானந்தன், தோட்டக்கலை துணை இயக்குநர் ரேவதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரையில் வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சி நடக்கிறது.
- இந்த தகவலை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை ஊமச்சிகுளத்தில் மதுரை வடக்கு, மாநகர், தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அமைச்சர் மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ., சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் பங்கேற்று பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
வருகிற 19-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்க்கை பயணம் குறித்த புகைப்பட கண்காட்சி மதுரை ஊமச்சிகுளம் மேனேந்தலில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்து வந்த நெடிய பயணம் குறித்த புகைப்படங்களும், மிசா போன்ற அடக்குமுறை காலத்தில் அவர் பங்கேற்ற போராட்டங்கள் குறித்த புகைப்படங்களும் இடம்பெறுகின்றன.
மேலும் மதுரையில் நடைபெறும் இந்த புகைப்பட கண்காட்சியை காண பள்ளி மாணவர்கள் வருகை தரும் போது கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த புகைப்பட கண்காட்சி பிற மாவட்டங்களுக்கு முன் உதாரணமாக இருக்கின்ற வகையில் மிகச் சிறப்பாக நடைபெறும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த கூட்டத்தில் வெங்கடேசன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தலைமை தணிக்கை குழு உறுப்பினர் வேலுச்சாமி, உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர் குழந்தைவேல், தீர்மான குழு செயலாளர் அக்ரி.கணேசன், அவைத்த லைவர்கள் ஒச்சுபாலு, பாலசுப்பிரமணியன், பொருளாளர் சோமசுந்தர பாண்டியன், மாநில தலைமை குழு உறுப்பி னர்கள் தனசெல்வம், ஆறு முகம், மாமன்ற குழு தலை வர் ஜெயராமன், ஒன்றிய சேர்மன்கள் வீரராகவன், மணிமேகலை, வேட்டையன், வக்கீல் கலாநிதி, இளைஞர் அணி ஜி.பி.ராஜா, பகுதி செயலாளர்கள் மருதுபா ண்டி, சசிகுமார், ஈஸ்வ ரன், கிருஷ்ணா பாண்டி, ஒன்றிய செயலாளர்கள் ரகுபதி, சிறைச்செல்வம், பேரூர் தலைவர்கள் வாடிப்பட்டி பால்பாண்டி, ஜெயராமன், ரேணுகா ஈஸ்வரி, கவுன்சிலர்கள் காளிதாஸ், ரோகிணி பொம்மதேவன், இளைஞர் அணி மூவேந்திரன், மதி வெங்கட், சிங்கை சே.ம.பிரதீப்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- முறைகேடாக ஏலம் விட்ட 50 பவுன் நகைகளை 2 மடங்காக வழங்க வேண்டும்.
- திருமங்கலம் தனியார் நிதி நிறுவனத்திற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை
மதுரை திருநகரை சேர்ந்தவர் சியாமளா ரவி. இவர் மதுரை நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறி யிருப்பதாவது:-
நான் கடந்த 2021-ம் ஆண்டு திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறு வனத்தில் நகைகளை முறையே 54 பவுன், 24 பவுன் அடகு வைத்து பணம் பெற்றேன். அதனை தொடர்ந்து மேலும் 24 பவுனை அதே தனியார் நிறுவனத்தில் அடகு வைத்தேன்.
இந்த நிலையில் 1-வது அடமான கடனான 54 பவுனை உரிய அசல் தொகையுடன் கூடுத லாக ரூ.3 லட்சம் செலுத்தி நகைகளை திருப்பினேன். மேற்கண்ட மற்ற 2 நகை கடன்களை திருப்ப முயன்றபோது, அதற்கு அந்த தனியார் நிதி நிறுவனம் மழுப்பலாக பதில் அளித்தனர்.
இதுதொடர்பாக விசாரித்தபோது, மேற்படி 2, 3-வது அடமான கடனுக்கான மொத்தம் 48 பவுன் நகைகளை எவ்வித அறிவிப்புமின்றி முறை கேடாக ஏலமிட்டது தெரிய வந்தது.
எனவே ஏலமிட்ட நகை களையும், என்னிடம் இருந்து முதல் நகைக்கடனுக்கு கூடுதலாக வசூல் செய்த பணத்தையும் திருப்பி பெற்றுத்தர வேண்டும். மேலும் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு தனியார் நிதி நிறுவனம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் முன்னிலையில் விசார ணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ராஜேஷ்குமார் டிஜாங்கோ ஆஜராகி வாதா டினார். வழக்கு விசார ணையில் நிதி நிறுவனத்தின் சேவை குறைபாடு நிரூ பிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நீதிமன்றம் தனது உத்தரவில், மனுதாரரின் சுமார் 50 பவுன் நகை களை முறை கேடாக ஏல மிடப்பட்டு உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட நிதி நிறு வனம் அந்த நகைகளை 2 மடங்காக வாடிக்கையா ளருக்கு வழங்க வேண்டும்.
முதல் நகைக்கடன் பெயரில் பெற்ற கூடுதல் பணத்தில் 9 சதவீதம் வட்டியை கணக்கிட்டு மீத முள்ள தொகையை திருப்பிதர வேண்டும்.
மேலும் வாடிக்கையாளரின் மனஉளைச்சலுக்கு நஷ்டஈடாக ரூ.50 ஆயிரமும், வழக்கு செலவு தொகையாக ரூ.5 ஆயிரத்தையும் நிதி நிறுவனம் வழங்க வேண்டும் என அதிரடி தீர்ப்பு கூறப்பட்டது.
- அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மு.க.ஸ்டாலின் மறைக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
- எம்.ஜிஆர்.-ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வாடிப்பட்டி
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் மதுரை மேற்கு (தெற்கு), அலங்காநல்லூர், வாடிப்பட்டி வடக்கு, வாடிப்பட்டி தெற்கு ஆகிய ஒன்றியங்களில் அ.தி.மு.க. எம்.ஜிஆர்.-ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படம் பொறிக்கப்பட்ட புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வாடிப்பட்டி ஒன்றியத்திற்கு ஒன்றிய செயலாளர் காளிதாசிடம் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதேபோல் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடமும் உறுப்பினர் அட்டைகள் வழங்கப்பட்டது.
பின்னர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:-
இன்றைக்கு சட்ட ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது.திருச்சியில் அமைச்சர் நேருவின் ஆதரவாளருக்கும், நாடாளு மன்ற உறுப்பினர் சிவாவின் ஆதரவா ளர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் காவல் நிலையத்தில் சண்டையிட்டு பெண் காவலர் காயமடைந்தார்.காவல் துறை வைத்திருக்கும் முதல்-அமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
கொரோனா கால கட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வேலைவாய்ப்பு, கல்வி, வர்த்தகம் போன்ற வற்றில் ஆன்லைன் வர்த்த கத்தை செயல்படுத்தினார். அது மட்டுமல்ல அ.தி.மு.க. 51 ஆண்டுகால வரலாற்றில் 31 ஆண்டுகள் கால ஆட்சியில் தான், தகவல் ெதாழில்நுட்ப கட்டமைப் பில் 100 சதவீதம உள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகள் உருவாக்கப்ப ட்டது. அந்த சாதனைகளை எல்லாம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைத்து விட்டார்.
அது மட்டுமல்ல இன்றைக்கு தகவல் தொழில் நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்திட 2011-ம் ஆண்டு மடிக்கணி திட்டத்தை திட்டத்தை ஜெயலலிதா உருவாக்கினார்.அதன் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 52 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப் பட்டது. ஆனால் தற்போது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சி கால நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு விட்டது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வுக்கு முதல் கையெழுத்து போடுவோம் என்று சொன்னார்கள். ஆனால் சொன்னபடி நடக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகள் வெற்றிவேல், ஏ.கே.பி. சுப்பிரமணியம், தனராஜன், திருப்பதி, முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, பேரூர் செயலாளர் அசோக்குமார், கோட்டைமேடு பாலன், பால்பண்ணை தலைவர் பொன்ராம், உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
- மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
- தர்ப்பூசணி-பழஜூஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது.
மதுரை
தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. கடந்த வாரம் வரை 30 முதல் 32 டிகிரி செல்சியசுக்கு பதிவான வெப்பத்தின் அளவு தற்போது 35 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த அளவு வெயிலையே பொதுமக்களால் தாங்க முடியவில்லை. பங்குனி தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரிப்பதால் சித்திரை மாதத்தில் இதை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும், பகல் நேரத்தில் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் தற்போதிருந்தே வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை காண முடிகிறது.
மதுரையில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. கோடை வெயிலை மக்கள் சமாளிப்பதற்காக தர்ப்பூசணி பழங்கள் அதிகளவில் மதுரைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பொதுமக்கள் அதிகளிவில் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக சித்திரை மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர்.






