search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி
    X

    மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி

    • மதுரையில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
    • தர்ப்பூசணி-பழஜூஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது.

    மதுரை

    தமிழகத்தில் பனிக்காலம் முடிந்து கோடைகாலம் தொடங்க உள்ளது. ஆனால் அதற்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதை உணர முடிகிறது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாகி உள்ளது. கடந்த வாரம் வரை 30 முதல் 32 டிகிரி செல்சியசுக்கு பதிவான வெப்பத்தின் அளவு தற்போது 35 டிகிரி செல்சியசை தாண்டி பதிவாகியுள்ளது. இந்த அளவு வெயிலையே பொதுமக்களால் தாங்க முடியவில்லை. பங்குனி தொடக்கத்திலேயே கடும் வெயில் சுட்டெரிப்பதால் சித்திரை மாதத்தில் இதை விட அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால் மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என்றும், பகல் நேரத்தில் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள் தற்போதிருந்தே வெயிலில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதை காண முடிகிறது.

    மதுரையில் இளநீர், குளிர்பானங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. கோடை வெயிலை மக்கள் சமாளிப்பதற்காக தர்ப்பூசணி பழங்கள் அதிகளவில் மதுரைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சாலையோர கடைகள் மற்றும் பழக்கடைகளில் விற்பனைக்காக தர்ப்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பொதுமக்கள் அதிகளிவில் விரும்பி வாங்கிச்செல்கிறார்கள்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பொதுவாக சித்திரை மாதத்தில்தான் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் பங்குனி தொடக்கத்திலேயே வெயில் வாட்டி வதைக்கிறது. பகல் நேரம் மட்டுமின்றி இரவில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர் என்றனர்.

    Next Story
    ×