என் மலர்tooltip icon

    மதுரை

    • மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்த 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சொக்கிகுளம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வல்லபாய் மெயின் ரோட்டில் 4 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வீலிங் சாகசம் செய்து அதனை வீடியோ வாக பதிவு செய்து கொண்டி ருந்தனர்.

    அவர்கள் பொது இடத்தில் சாகசம் செய்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனை கண்ட போலீசார் அவர்கள் 4 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.

    இதில் அவர்கள் செல்லூர் சுயராஜபுரம் பாலமுருகன், எஸ்.கொடிக்குளம் கதிரவன், செல்லூர் சிவராமன், மீனாம்பாள்புரம் சத்திய மூர்த்தி மெயின் ரோடு மகாபிரபு என்பது தெரியவந்தது.

    இவர்கள் மதுரையில் செயல்பட்டு வரம் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆவார்கள். இவர்கள் சமூக வலை தளத்தில் தங்கள் சாகசத்தை பதிவிடுவதற்காக மோட்டார் சைக்கிள் வீலிங் செய்து அதனை வீடியோ எடுத்துள்ளனர் என்பது தெரிய வந்தது.

    அவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால் 4 பேரையும் ேபாலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு காமிராவை பறிமுதல் செய்யப்பட்டது.

    • திருமங்கலம் அருேக மின்னல் தாக்கி 2 தென்னை மரங்கள் கருகின.
    • தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து எரிந்த தீயை அணைத்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அருேக கங்குராம்பட்டியை சேர்ந்தவர் அழகர். இவரது வீட்டின் அருகே அவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. அதில் தென்னை மரங்கள், மல்லிகை செடிகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு திருமங்கலம் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது அழகர் தோட்டத்தில் உள்ள 2 தென்னை மரங்கள் மீது மின்னல் பாய்ந்தது. இதில் 2 தென்னமரங்களும் தீப்பற்றி எரிந்தன. மேலும் அங்கு வளர்க்கப்படும் மல்லிகை செடிகளும் கருகின. இதுபற்றி திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து தென்னை மரத்தில் எரிந்த தீயை அணைத்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடகரை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

    • கார் மோதி வாலிபர் பலியானார்.
    • வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மதுரை

    மதுரை நாராயணபுரம் கேசவசாமி தெருவை சேர்ந்த காமராஜ் மகன் ஆனந்தபாண்டி(19). இவர் நேற்று நள்ளிரவு புது நத்தம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். நாகனாகுளம் பகுதியில் வேகமாக வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் ஆனந்த பாண்டி படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அதிவேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய திருப்பாலை என்.ஓ.சி நகர், மார்கஸ் காபிரியேலிடம்(27) விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்டக்டரை தாக்கிய அகதிகள் கைது செய்யப்பட்டனர்.
    • சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார்.

    மதுரை

    தேனி பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் சந்திரன் (53). அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக உள்ளார். நேற்று இரவு இவர் பணியில் இருந்த பஸ் பழங்காநத்தத்திற்கு வந்தது. அங்கு 2 பேர் ஏறினர். அவர்களிடம் சந்திரன் டிக்கெட் எடுக்கும்படி கேட்டார். அவர்கள் மறுத்தனர். இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த இருவரும் கண்டக்டரை தாக்கினர். இது குறித்த புகாரின்பேரில் சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கூத்தியார்குண்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த துரைராஜ் மகன் அரவிந்தன் (22), திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த சைந்தன் (31) ஆகியோரை கைது செய்தனர்.

    • சோழவந்தானில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சோழவந்தான

    சோழவந்தான்-வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் நடந்தது. எம்.வி.எம் குழும சேர்மன் மணி முத்தையா முன்னிலை வகித்தார்.

    பள்ளி நிர்வாகி எம்.வி. எம்.வள்ளிமயில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் செல்வம் வரவேற்றார். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள், கராத்தே, சிலம்பம், யோகா நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு எம்.சத்திரப்பட்டியில் 30-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும்.
    • அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

    மதுரை

    அமைச்சர் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நிகழ்ச்சியாக பல்வேறு இடங்களில் மாட்டுவண்டி பந்தயம், விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் மதுரை கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட எம்.சத்திரப்பட்டியில் வருகிற 30-ந்தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் நாளை (25-ந்தேதி) சத்திரப்பட்டி வாடிவாசல் முன்பு நடைபெறும் முன்பதிவில் பங்கேற்கலாம்.

    மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. இதில் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கள்ளத்தொடர்பை கைவிட மறுத்த தம்பியை வெட்டிய அண்ணன் கைது
    • தனது தம்பியின் செயலால் குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக கருதினார்.

    மதுரை

    மதுரை விளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதுபற்றி தெரியவந்ததும் வெங்கடேசை, அவரது அண்ணன் வினோத்குமார் கண்டித்தார். அந்த பெண்ணுடனான கள்ளக்காதலை கைவிடுமாறு கூறியிருக்கிறார். அப்போது அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    தகராறில் ஈடுபட்ட இருவரையும், அவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர்கள் சமாதானப்படுத்தினர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷ் கோபத்துடன் வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார். அவர்மீது வினோத்குமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    தம்பி வெங்கடேசனின் செயலால் தனது குடும்பத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுவதாக அவர் கருதினார். இதனால் வினோத்குமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு தம்பியை தேடிச்சென்றார். அப்போது காளவாசல் பகுதியில் வெங்கடேஷ் இருந்தார். அவருடன் வினோத்குமார், தன்னிடம் இருந்த அரிவாளால் வெங்கடேசை வெட்டினார்.

    இதில் அவரது தலையில் பலத்தகாயம் ஏற்பட்டது. இதையடுத்து வினோத்குமார் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். படுகாயமடைந்த வெங்கடேசை, அவரது உறவினர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    வெங்கடேசை அவரது அண்ணன் வெட்டியது குறித்து கரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்புகாரின் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வினோத்குமாரை கைது செய்தனர்.

    • தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கியதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

    திருமங்கலம்

    திருமங்கலம் தேவர் தெருவை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மதனபிரகாஷ் (36), கூலி தொழிலாளி. இவரை முன்விரோதம் காரணமாக சிலர் தாக்கியதாகவும், அவரது இருசக்கர வாகனத்தை எரித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மதனபிரகாஷ் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று திருமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள உயர் செல்போன் கோபுரத்தின்மீது ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவரை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின்பேரில் அவர் கீழே இறங்கினார். தற்கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக திருமங்கலம் போலீசார் மதனபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து திருமங்கலம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம்

    திருமங்கலத்தை அடுத்த மேலஉரப்பனூரை சேர்ந்தவர் சிவன். இவரது மகன் விக்னேஷ் (வயது 22). இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

    இந்தநிலையில் நேற்று தாய் தமிழ்செல்வியிடம் ேசாடா வாங்கிவரும்படி கூறினார். அவர் கடைக்கு சென்றதும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து விட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சிவன் திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை அருகே வாலிபர் மாயமானார்.
    • குடும்ப தகராறு காரணமாக மனைவி, குழந்தைகளையும் விரட்டி விட்டார்.

    மதுரை

    மதுரை எம்.கே.புரம் தெற்கு சண்முகபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்(வயது 37). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அருணாதேவி(36). வேல்முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. சரியாக வேலைக்கு செல்லாமல் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். இதில் மனைவியை குழந்தைகளுடன் அவரது பெற்றோர் வீட்டுக்கு விரட்டி விட்டார். இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி அதிகாலை வேல்முருகன் வீட்டில் இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு வீட்டை காலி செய்தார். அதன்பிறகு அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மனைவி அருணாதேவி கொடுத்த புகாரின்பேரில் ஜெய்ஹிந்துபுரம் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வேலை நேரம் 12 மணி நேரமா? அல்லது 8 மணி நேரமா? என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் அடிப்படை.
    • நான் ஆளுநராக உள்ளேன். எனவே அரசியல்வாதிகளின் பேச்சு தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது.

    மதுரை:

    புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் மதுரை வந்தார். அவர் காரில் மதுரைக்கு வந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தொழிலாளர்களின் நலன் கருதியே 12 மணி நேர வேலை நீட்டிப்பு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த சட்டத்தை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது. இதனை அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு நலம் பயக்கும் என்றால் இது நல்லது. அது தொழிலாளர் விருப்பத்திற்கு ஏற்ப அமையும்.

    தொழிலாளர்கள் நன்கு வேலை செய்தால் முதலாளிகள் பயன் அடைவர். முதலாளிகள் பயன் அடைந்தால் தொழிலாளர்களுக்கு நல்லது. இந்த சட்டம் கர்நாடகம் மற்றும் டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    12 மணி நேர வேலை மசோதா என்பது தொழிலாளர்களின் விருப்பப்படி கொண்டு வரப்பட்டது. எனவே வேலை நேரம் 12 மணி நேரமா? அல்லது 8 மணி நேரமா? என்பதை தொழிலாளர்கள் முடிவு செய்ய வேண்டும் என்பது தான் இந்த சட்டத்தின் அடிப்படை.

    உலகம் முழுவதிலும் தொழிலாளர்கள் குறித்த ஆராய்ச்சி நடந்துள்ளது. இதில் அதிக நேரம் வேலை செய்து, அதிக நேரம் ஓய்வு கொடுத்தால், பணியின் சக்தி அதிகரிக்கும். இதனால் குடும்ப வாழ்க்கை பயனுடையதாக இருக்கும் என்ற கருத்து உள்ளது. தொழிலாளர் வேலை நேரம் குறித்த விஷயத்தில் பணியின் நேரம் மட்டுமே மாற்றி அமைக்கப்படுகிறது. பணி நேரம் அதிகரிக்கப்படவில்லை. பணி நேரம் என்பது தொழிலாளர்களின் விருப்பமாக இருக்க வேண்டும்.

    எனவே இதனை தொழிலாளர்களின் விருப்பப்படி விட்டு விடுவது நல்லது. மற்ற கட்சிகள் இதனை அரசியலாக்கி போராட்டம் நடத்த வேண்டாம். இது என் தனிப்பட்ட கருத்து. அரசியல் கருத்து அல்ல.

    மருத்துவ ரீதியாக தொழில் செய்யும்போது தொழிலாளர்கள் 4 நாள் வேலை செய்துவிட்டு, 3 நாட்கள் ஓய்வு எடுத்தால் அவர்களின் பணி சக்தி மட்டுமின்றி ஓய்வு நேரம் அதிகரிக்கிறது. பணி செய்வதற்கான திறமையும் அதிகரிக்கிறது என்று மருத்துவர்கள் அறிவியல் ரீதியாக சொல்கின்றனர்.

    எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் பேச வேண்டும். பொத்தாம் பொதுவாக எதிர்ப்பு கருத்துக்களை தெரிவிக்கக் கூடாது. பா.ஜனதா மாநில தலைவர்கள் அதிகாரம் அற்றவர்கள் என்பதால் டெல்லியில் உள்ள தலைமையே கூட்டணி பற்றி முடிவு எடுக்கும் என்பது போல கூட்டணி கட்சியினர் கூறுகின்றனர்.

    நான் ஆளுநராக உள்ளேன். எனவே அரசியல்வாதிகளின் பேச்சு தொடர்பாக நான் கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. பா.ஜனதா-அ.தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சில் என்னை இழுக்காதீர்கள். நான் தலைவராக இருந்தபோது கூட்டணி கட்சி நிர்வாகிகளிடம் எனக்கு நல்ல மரியாதை இருந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
    • திருக்கல்யாணம் மே 2-ந்தேதி நடக்கிறது.

    உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வருடத்தின் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது தனிச்சிறப்பு. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாக நடப்பது சித்திரை திருவிழா.

    12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம், சுந்தரேசுவரரை எதிர்த்து போரிடும் திக்குவிஜயம், மீனாட்சி அம்மன்-சுந்தரே சுவரர் திருக்கல்யாணம், திருத்தேர் வீதி உலா உள்ளிட்டவைகள் நடைபெறும்.

    அதுமட்டுமின்றி திருவிழா நடக்கும் 12 நாட்களும், காலை மற்றும் இரவில் மாசி வீதிகளில் மீனாட்சி அம்மன், சுந்தரே சுவரர் பிரியாவிடையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வந்து காட்சி அளிப்பார்கள். இதனை காண மாசி வீதிகள் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் திரளுவார்கள்.

    இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து இரவில் சுவாமிகள் வீதி உலா நடந்தது. சுவாமி கற்பக விருட்சத்திலும், அம்மன் சிம்ம வாகனத்திலும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்தனர். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

    சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று காலை தங்க சப்பரத்தில் சுவாமிகள் வீதி உலா நடந்தது. மீனாட்சி அம்மன் மற்றும் பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் தங்க சப்பரத்தில் மாசிவீதிகளில் உலா வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

    சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான பட்டாபிஷேகம் வருகிற 30-ந்தேதியும், மீனாட்சி-சுந்தரேசுவரர் திக்கு விஜயம் மே 1-ந்தேதியும் நடைபெறுகிறது. மேலும் விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் மே 2-ந்தேதியும், தேரோட்டம் மே 3-ந்தேதியும் நடைபெறுகிறது.

    மே 4-ந்தேதியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மே 5-ந்தேதி நடைபெறுகிறது. சித்திரை திருவிழா தொடங்கியதையடுத்து மதுரை விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ×