என் மலர்
மதுரை
- அலங்காநல்லூர் அருகே சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள தனிச்சியம் கிராமத்தில் அமைந்துள்ள சீலைக்காரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. 4 நாட்கள் நடந்த யாகசாலை பூஜையில் 4 கால சிறப்பு ஹோமங்கள் நடந்தன. மூலமந்திர ஹோமம், கோ பூஜை, மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. பட்டாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடானது. புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின்னர் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூசாரி ஜெயசீலன் மற்றும் கோவில் பங்காளிகள், கிராம மக்கள் செய்தனர்.
- ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- அனைவரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் தம்பதியரின் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரி யேந்தல் டி. கண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த திருமண விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. திருமண விழாவை தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்-அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.
வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்கின்ற னர்.ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, சோழவந் தான் ஒன்றிய கவுன்சிலர் பேரூர் செயலாளர் எஸ்.என். சத்யபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். இதில் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.
- சரந்தாங்கி, ஆனையூர் உள்பட 6 இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மதுரை
தமிழர் தேசம் கட்சியின் நிறுவன தலைவர் கே.கே. செல்வகுமார் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் மாநில செயலாளர் வி.எம்.எஸ். அழகர் தலைமையில் பெரும்பிடுகு முத்தரையர் 1348-வது சதயவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மதுரை சரந்தாங்கி, ஆனையூரில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பல்வேறு கிராமங்களில் அவரது உருவபடத்தை வைத்து முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
சரந்தாங்கி, ஆனையூர் உள்பட 6 இடங்களில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை வி.எம்.எஸ். அழகர் தொடங்கி வைத்தார். இதேபோன்று ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வி.எம்.எஸ். அழகர் வழங்கினார்.
இந்த விழாக்களில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்க கண்ணன், மாவட்ட துணைச் செயலாளர் அக்னிராஜ்,மாவட்ட செயலாளர்கள் கேசவன்,ராஜ்குமார், இளைஞரணி ஆதிமுருகன், அவைத்தலைவர் பிடாரன், மகளிரணி மாவட்ட செயலாளர் கவிதா, மாநகர பொறுப்பாளர் பரசுராமன், ஒன்றிய செயலாளர் தங்கம், மதுரை மாவட்ட நிர்வாகிகள், பல்வேறு கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- பாலமேடு அருகே உள்ள ராக்காயி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் பாலமேடு கிழக்கு தெருவில் அமைந்துள்ள மார்நாடு கருப்புசாமி, ராக்காயி அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. 2 நாட்கள் நடந்த பூஜையில் மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பூண்டி கொடுத்த வகையறா பங்காளிகள் செய்தனர்.
- ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் விழா
- பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் உடலில் அடித்துக் கொண்டே ஊர்வலமாக வந்தனர்.
மதுரை
வில்லாபுரம் மீனாட்சிநகரில் தேவாங்கர் சமுதாயத்தினருக்கு பாத்தியப்பட்ட ராமலிங்க சவுடேசுவரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கரக உற்சவ விழா மற்றும் கத்தி போடும் விழா இன்று நடந்தது. 24-ம் ஆண்டு விழாவையொட்டி வைகை ஆற்றில் இருந்து சவுடேசுவரி அம்மனை கும்பத்தில் அலங்கரித்து ஊர்வலமாக எடுத்து வந்தனர். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடன் வேண்டுதலுக்காக கத்தியுடன் உடலில் அடித்துக் கொண்டே ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயலாளர் ராஜேசுவரி, தலைவர் ராமராஜ், பொருளாளர் சரவணன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மதுரை அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர்.
அலங்காநல்லூர்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள வாவிடமருதூர் ஊராட்சியில் ''நம்ம ஊரு சூப்பரு'' மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பொதுமக்கள் முன்னிலையில் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசர், யூனியன் அலுவலர் வடிவு, ஊராட்சி செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கவும் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பான விபரங்கள் எடுத்துரைக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
- மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.
- விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலூர்:
சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர் சுடலைராஜன் (வயது41). இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு இன்று அதிகாலை காரில் புறப்பட்டார். அவருடன் அவரது தாயார், மனைவி மற்றும் 2 குழந்தைகள் பயணம் செய்தனர்.
இன்று மதியம் 12.30 மணியளவில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அய்யாப்பட்டி நான்கு வழிச்சாலையில் கார் வந்து கொண்டிருந்தது. காரின் முன்பு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த பகுதியில் பாலம் சீரமைப்பு பணி நடந்து கொண்டிருந்ததால் முன்னால் சென்ற லாரி திடீரென நின்றது.
இதை கவனிக்காத சுடலைராஜன் வந்த கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. காரில் இருந்த சுடலைராஜன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அவருடன் பயணித்த தாய், மனைவி உள்பட 4 பேர் படுகாயமடைந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் காரில் சிக்கி உயிருக்கு போராடிய 4 பேரையும் மீட்டு மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம் பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி பாலாஜி, கொட்டாம்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவமாணிக்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து 45 நிமிடம் போராடி காரில் சிக்கியிருந்த சுடலை ராஜன் உடலை மீட்டனர்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சோழவந்தான் அருகே பத்திரகாளி அம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
- விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்ப நாயக்கன்பட்டி பத்திர காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 5-ந் தேதி காப்பு கட்டு வைபவமும், 21-ந் தேதி இரவு சக்தி கரகம் மற்றும் மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சியும், 22-ந் தேதி வைகையாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று 250-க்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். அவர்களுக்கு ஊராட்சி கவுன்சிலர் செல்வராணி கந்தசாமி சில்வர் வாளி, சட்டிகளை பரிசாக வழங்கினார். மாலையில் முளைப்பாரியை வைகையாற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை நாடார் உறவின் முறையினர் செய்திருந்தனர்.
- ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 4½ பவுன் நகை திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.
மேலூர்
மதுரை மாவட்டம் உத்தங்குடி சோலைமலை நகரை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மனைவி ஆனந்தி. இவர் சம்பவத்தன்று மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து சிங்கம்புணரிக்கு அரசு பஸ்சில் சென்றார். கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆனந்தி பஸ்சில் நின்றுகொண்டு பயணம் செய்தார்.
அப்போது அருகில் நின்றிருந்த மர்மநபர் ஆனந்தி கைப்பையில் இருந்த 4½ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினார். மேலூர் பஸ் நிலையத்தில் பார்த்தபோது ஆனந்தி வைத்திருந்த நகை திருடுபோய் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மேலூர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ் பெக்டர் ஆனந்தஜோதி வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்மநபரை தேடி வருகிறார்.
மாட்டுத்தாவணி-மேலூர் வழித்தடத்தில் அரசு பஸ்சில் ஏறும் சமூக விரோதிகள் பயணிகளின் நகை, பணத்தை திருடுவது தொடர் கதையாக உள்ளது. எனவே போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை பிடிக்க வேண்டும் என பாதிக்கப் பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஜெனகை மாரியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு வைகாசி மாத அமாவாசைக்கு பிறகு வரும் திங்கட்கிழமை திருவிழா கொடியேற்றம் நடைபெறும். திருவிழா 17 நாட்கள் நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான கொடியேற்றம் நடந்தது. அர்ச்சகர் சண்முகவேல் கொடி மற்றும் பொருட்களுடன் மேளதாளம் முழங்க 4 ரத வீதிகளில் வலம் வந்தார். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் திருவிழா கொடியேற்றும் விழா நடந்தது. இதையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
திருவிழா கொடியேற்ற உபயதாரர் சிங்கம் என்ற மந்தையன் சேர்வை குடும்பத்தினர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர். கொடியேற்ற விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவில் செயல்அலுவலர் இளமதி, தக்கார் சங்கரேசுவரி, பணியாளர்கள் பூபதி, கவிதா, வசந்த், பெருமாள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஈடுபட்டனர்.
சுகாதாரப்பணி, குடிநீர்வசதி, கூடுதல் தெரு விளக்கு ஏற்பாடுகளை சோழவந்தான் பேரூராட்சி நிர்வாகம் செய்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பால்குடம், அக்னிச் சட்டி, பூக்குழி இறங்குதல் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துபவர்கள் காப்பு கட்டினர்.
- நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியது.
- திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம், திருமங்கலம் ஜவகர் நகரை சேர்ந்தவர் ஜோதி ராமலிங்கம். இவர் அதே பகுதியில் பலசரக்கு கடை வைத்துள்ளார். இவரது 2-வது மகள் வினோதினி (வயது 26). பட்டதாரியான இவர் வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்தார்.
சில மாதங்களாக இவருக்கு மூட்டுவலி இருந்ததாக கூறப்படுகிறது. பல மருத்துவர்களிடம் காண்பித்தும் குணமாக வில்லை. இந்த நிலையில் வினோதினிக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.
இதற்காக மாப்பிள்ளை பார்த்து நாளை நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது. ஆனால் வினோதினி தனக்கு திருமணம் வேண்டாம் என கூறியதாக தெரிகிறது. குடும்பத்தினர் அவரை சமரசம் செய்து வந்தனர்.
இதற்கிடையில் நாளை (25-ந் தேதி) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. உடல்நலக்குறைவு காரணமாக வினோதினி விரக்தியுடன் இருந்தார். இந்த நிலையில் கடந்த 7-ந் தேதி பெற்றோர் உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக வெளியே சென்று விட்டனர்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வினோதினி விஷம் குடித்தார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வினோதினி நேற்று பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளை திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் குடும்பத்தினரிடையே துயரத்தை ஏற்படுத்தியது.
- தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- ரூ.1.25 கோடியில் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் மதியம் 12 மணியளவில் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு என்று 125 பேரும், இந்த கோவிலின் துணை கோவிலான சொக்கநாதர் கோவிலுக்கு என்று 50 பேரும் என தினமும் 175 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி ஒரு கூட்டு, ஒரு பொறியல், ரசம், மோர், சாம்பாருடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் வெள்ளிக்கிழமைதோறும் வழக்கமான கூட்டு, பொறியலுடன் கூடுதலாக பாயாசம், வடையுடன் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கோவில் நிர்வாகம் மற்றும் அய்யப்ப சேவா சங்கத்துடன் முதல்முறையாக கடந்த ஆண்டில் மார்கழி மாதம் முழுவதுமாக தினமும் ஒருவகை என்று காலை 8 மணி முதல் பகல் 11 மணி வரையிலும் சுமார் 500 பக்தர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. இதேபோல அடுத்த ஆண்டில் கார்த்திகை, மார்கழி ஆகிய 2 மாதங்கள் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு காலை உணவு வழங்கவும் கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்துசமய அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் உத்தரவின்பேரில் இந்த கோவிலில் நாள் தோறும் பிரசாதம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு தற்போது ரூ.1.25 கோடியில் தனி சமையல் அறை, சமையல் பாத்திரங்கள் மற்றும் பிரசாதம் வழங்க கூடிய திட்டப்பணிகள் தயாராகி வருகிறது.






