என் மலர்
மதுரை
- தற்கொலை செய்து கொண்ட நபரின் சட்டை பையில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
- சுபாஷ்கிருஷ்ணனுக்கு திருமணமாகி சண்முக பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மதுரை:
மதுரை விளாங்குடி அருகே உள்ள கோவில் பாப்பாக்குடி ரெயில்வே தண்டவாள பகுதியில் நேற்று 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்னையில் இருந்து தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது.
தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த அந்த வாலிபர், ரெயில் நெருங்கி வந்ததும் திடீரென பாய்ந்தார். இதில் ரெயில் மோதி அவர் உடல் 2 துண்டுகளாக சிதறி பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்து கொண்ட நபரின் சட்டை பையில் இருந்து கைப்பற்றிய ஆவணங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்தவர் கோவை மாவட்டம் கூடம்பாளையம் வடமதுரை நால்வர் நகரை சேர்ந்த பாலன் மகன் சுபாஷ்கிருஷ்ணன் (வயது 35) என தெரியவந்தது.
இவர் கோவையில் உள்ள பி.எட். கல்லூரியில் தாளாளராக இருந்தார். சுபாஷ்கிருஷ்ணனுக்கு திருமணமாகி சண்முக பிரியா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
கடந்த ஆண்டு கணவருடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சண்முகபிரியா மதுரை அண்ணாநகரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்து விட்டார். மேலும் அவர் தொடர்ந்த விவாகரத்து வழக்கும் மதுரை கோர்ட்டில் நடந்து வருகிறது.
மனைவி மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்று விட்டதால் விரக்தியில் இருந்த சுபாஷ்கிருஷ்ணன் அவ்வப்போது வழக்கு விசாரணைக்காக மதுரைக்கு வந்து சென்றார். அதன்படி நேற்றும் விவாகரத்து வழக்கு மதுரை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் சுபாஷ்கிருஷ்ணன் ஆஜரானார். கோர்ட்டில் இருந்து வெளியே வந்த அவர் மனஅழுத்தத்தில் இருந்ததாக தெரிகிறது.
எனவே அவர் திடீரென தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
- 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.
- 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் விசாக திருவிழா விசேஷமானதாகும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது அதில் 8 நாட்கள் வசந்த உற்சவமாகவும், ஒருநாள் விசாக விழாவாகவும், மற்றொருநாள் மொட்டையரசு உற்சவ விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான விசாக திருவிழா கடந்த 24-ந்தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா தொடர்ந்து வருகின்ற ஜூன் மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. .திருவிழாவையொட்டி தினமும் இரவு 7 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன், சுப்பிரமணியசுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. திருவிழாவின் 9-வது நாளான வருகின்ற 2-ந்தேதி விசாக திருவிழா நடக்கிறது.
விசாக திருவிழா நாளில், தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமான் தன் இருப்பிடமான சண்முகர் சன்னதியை விட்டு கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். திருவிழா காலங்களில் உற்சவர் தன் சன்னதி இருப்பிடம் விட்டு இடம் பெயர்ந்து நகர் வீதி உலா வருவது இயல்பு. ஆனால் ஆண்டுக்கு ஒரே ஒரு முறை சண்முகப்பெருமான் தன் இருப்பிடத்தை விட்டு இடம்பெயருவது விசாக திருவிழாவில் மட்டுமே. இதை தனி சிறப்பாக போற்றுகிறார்கள். வருகின்ற 2-ந் தேதி விசாகத்தினத்தன்று தெய்வானை, வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கு காலை 5 மணியில் இருந்து மதியம் 2 மணிவரை இடைவிடாது குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. இந்த நாளில் ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திகடனை செலுத்தி சாமி தரிசனம் செய்கிறார்கள்.
திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக வருகின்ற 3-ந் தேதி மொட்டையரசு உற்சவம் நடக்கிறது. அன்று காலையில் மொட்டையரசு திடலுக்கு தங்கக் குதிரையில் செல்லும் தெய்வானை, பெருமான் பூப்பல்லக்கில் இருப்பிடம் திரும்புகிறார்கள். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
- மருத்துவக்கல்லூரிக்கு சகோதரரின் உடலை தானமாக பெண் வழங்கினார்.
- பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
மதுரை
மதுரை அண்ணாநகர் பெரியார் வீதியில் வசித்து வரும் லட்சுமணன் என்பவரின் மனைவி சுசீலா தேவி. இவரின் தம்பி பிருதிவிராஜ் (வயது67). இவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே இறந்து விட்டார். அவரது உடலை மருத்துவக்கல்லூரிக்கு தானமாக வழங்க சுசீலா தேவி முடிவு செய்தார்.
இதுகுறித்த தகவலை நேதாஜி ஆம்புலன்ஸ் மற்றும் நேதாஜி அறக்கட்டளை நிர்வாகி ஹரி கிருஷ்ணனிடம் தெரிவித்து ள்ளார். அவரின் ஏற்பாட்டில் மரணம் அடைந்த பிருதிவி ராஜ் உடல் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிக்கு சுசீலா தேவி தானமாக வழங்கினார். அவரின் இந்த சேவையை மருத்துவ கல்லூரி இயக்குனர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி சான்றிதழ் வழங்கினர்.
- சிகரெட் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
- இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.
மதுரை
மதுரை கரும்பாலை கீழத்தெருவை சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் விஸ்வா (வயது24). கரும்பாலை முனிசிபல் காலனியை சேர்ந்தவர் உதயா (30). இவர்கள் கரும்பாலை ஆட்டோ நிறுத்தத்தில் நின்ற போது விசுவாவின் நண்பரிடம் உதயா சிகரெட் பற்ற வைக்க தீப்பெட்டி கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த உதயா கத்தியால் விஸ்வாவின் நண்பரை குத்தமுயன்றார். இதை தடுக்க முயன்ற விஷ்வாவுக்கு கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவம் குறித்து விஸ்வா அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். அதன்ேபரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உதயாவை கைது செய்தனர்.
- மதுரை அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணுவ வீரர்களின் நலனுக்கு உண்டியலில் சேமித்த பணத்தை சிறுமி வழங்கினார்.
- ரூ.7,999-ஐ கலெக்டரை சந்தித்து வழங்கி உள்ளார்.
மதுரை
மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கார்த்திகா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர். இதில் 2-வது மகளான தனுஷ்கா அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை சுரேஷ்குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவல கத்திற்கு வந்தார். அவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்தனர்.
அப்போது சிறுமி தனுஷ்கா தான் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணம் ரூ.7 ஆயிரத்து 999-ஐ இந்திய ராணுவ வீரர்க ளின் நலனுக்காக வழங்கு வதாக கூறி கலெக்டரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சங்கீதா, மாணவி தனுஷ்காவிற்கு பாராட்டு தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கூறுகையில், எஙகளது மகள் தனுஷ்கா சிறுவயதில் மாறுவேட போட்டியின்போது ராணுவ உடை அணிந்து கலந்து கொண்டார்.அப்போது ராணுவம் குறித்து ஆர்வம் அதிகரித்தது. நாட்டிற்காக தன்னுயிரை பற்றி கருதாமல் பாடுபடும் ராணுவ வீரர்களின் தியாகங்கள் குறித்து எடுத்து கூறினோம். நாட்டிற்காக உயிரை பணயம் வைத்து பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும் என எண்ணிய தனுஷ்கா, எல்.கே.ஜி. முதல் உண்டியலில் சிறுகசிறுக பணத்தை சேமிக்க தொடங்கினார். தற்போது அந்த பணம் ரூ.7,999-ஐ கலெக்டரை சந்தித்து வழங்கி உள்ளார் என்றனர்.
- ஓட்டல் உரிமையாளரை தாக்கினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
மதுரை
மதுரை காமராஜபுரம் மீனாட்சிபுரம் 5-வது தெருவை சேர்ந்தவர் மணிமாறன் (வயது40). இவர் முனிச்சாலையில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலுக்கு சையது இப்ராகிம் (38) என்பவர் தினமும் வந்து பணம் கொடுக்காமல் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் அவரது தம்பியும் பணம் கொடுக்காமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இதை மணிமாறன் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சையது இப்ராகிம், மணிமாறனை மரக்கட்டையால் தாக்கினார். இந்த சம்பவம் குறித்து மணிமாறன் தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சையது இப்ராகீமை கைது செய்தனர்.
- மக்கள் நல சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும்.
மதுரை
தேவேந்திரர் மக்கள் நல சங்கம் சார்பில் தேவேந்திரன் தலைமையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவேந்திர குல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றம் செய்ய வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் இட பங்கீடு வழங்கிட வேண்டும். வன்னியர்களுக்கான 10.5சதவீத இட ஒதுக்கீடு ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் நடராஜன், பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் கவிஞர் திலகபாமா, முன்னாள் கவுன்சிலர் வீரகுமார், பூமிநாதன் யாதவ், .பா.ஜ.க. சிவாஜி, கிங்சுந்தரம், வழக்கறிஞர் சரவணபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.
- ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையினர் வலியுறுத்தினர்.
மதுரை
திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை கூட்டம் நடைபெற்றது. இதில் சமீபத்தில் உயிரிழந்த பேரவையின் தலைவர் ஜி.ஆர். ஜெயகார்த்தியின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது திருவுருவப் படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடை இல்லை என அறிவித்த உச்சநீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு உரிமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் போது வருவாய் துறையினர்கள் மாடு வளர்ப்பவர்கள், மாடுபிடி வீரர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்ளக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவையின் புதிய தலைவராக ராமமூர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். நிர்வாகிகள் பிரகாஷ், மணி, மார்க்கெட் ராமமூர்த்தி, கோபால், சோனைமுத்து உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
- பா.ஜ.க. மண்டல கூட்டம் நடந்தது.
- அவனிஆனந்த், சேஷன், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரை
மதுரை அவனியாபுரத்தில் பா.ஜ.க. மண்டல கூட்டம் மண்டல் தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத்தலைவர் ஓம் சக்தி ஸ்ரீ முருகன் கலந்து கொண்டு பேசினார். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக புதிதாக திறக்கப்பட்ட பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவிப்பது, மேலும் இந்த செங்கோலை மதுரை ஆதீனம் கையால் பெற்றதற்கு இந்த மதுரை மண் பெருமை படுகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருகிவிட்டது. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. இதனை சரிசெய்யவும் , கள்ளச்சாராயம் ஒழிப்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பிரசார அணி சடாசரம், அவனிஆனந்த், சேஷன், தமிழ்ச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட 113 வாகனங்கள் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
- பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டத்தில் மது கடத்தலில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் போலீஸ் காவலில் வைக்கப்படுகிறது. இந்த வாகனங்கள் அவ்வப்போது ஏலம் விடப்படுவது வழக்கம். போலீசாரால் கைப்பற்றப் பட்ட வாகனங்களுக்கான பொது ஏலம் வருகிற 3-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு மாவட்ட ஆயுதப்படை மைதான வளாகத்தில் நடைபெற உள்ளது.
பொது ஏலத்தில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஏலம் விடுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 113 வாகனங்களை 31 மற்றும் 1-ந்தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இருசக்கர வாகனத்திற்கு முன்பதிவாக ரூ.5ஆயிரமும், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10ஆயிரமும் செலுத்த வேண்டும். வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அந்த வாகனத்தின் ஏலத்தொகை யை அன்றைய தினமே கட்டி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
வாகனத்தை ஏலம் எடுத்து முழுப்பணம் கட்டி வாகனத்தை எடுக்காத வர்களின் முன்பணம் திருப்பி தரப்பட மாட்டாது. அந்த பணம் அரசு கணக்கில் செலுத்தப்படும். ஏலத்தில் எடுக்கப் படும் வாகனத்திற்கு அரசால் விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி தனியாக வசூலிக்கப்படும்.
இந்த தகவல் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பூரண மதுவிலக்கிற்காக ச.ம.க. இறுதிவரை போராடும் என்று சரத்குமார் பேசினார்.
- இந்தியாவின் இளை ஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளி நாட்டு சதி உள்ளது.
மதுரை
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தத்தில் நடந்தது. இதில் கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் கலந்துகொண்டு பேசியதாவது:-
தமிழகத்தில் போதை பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. போதையால் இளைஞர்களின் அறிவு, ஆற்றல் முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். போதை பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அதனை நம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
இந்தியாவின் இளை ஞர்களின் அறிவை முடக்கி வைப்பதில் வெளி நாட்டு சதி உள்ளது, போதை பொருள்கள் பல்வேறு ரூபங்களில் இந்தியாவில் ஊடுருவி வருகின்றது. மதுபான கடைகளுக்கு சென்று மதுபானங்கள் வாங்காமல் இருந்தால் படிப்படியாக மதுக்கடைகள் மூடப்படும். அதன் மூலம் மதுவிலக்கை அமல்படுத்த முடியும்.
மக்கள் நினைத்தால் மட்டுமே மதுவை முற்றிலுமாக ஒழிக்க முடியும். ரூ.40ஆயிரம் கோடி வருவாய்க்காக, மதுவை அரசு விற்க கூடாது, மதுபான வருவாய்க்கு மாற்றாக பிற வருவாய் என்ன கிடைக்கும் என தமிழக அரசு சிந்தித்து பார்க்க வேண்டும்.
அறிவு, ஆற்றல் இருந்தும் தமிழக இளைஞர்கள் மதுவால் அடிமைப்பட்டு கிடக்கிறார்கள். பூரண மதுவிலக்கிற்காக சமத்துவ மக்கள் கட்சி இறுதி வரை போராடும். சமத்துவ மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணி பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் பணம் இல்லா அரசியல் நடைபெறவில்லை. தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்கள் ராணுவ பாதுகாப்பில் நடைபெற வேண்டும். மதுவை ஒழிக்க வேண்டும் என்றால் மக்களின் எண்ணங்கள் ஒன்றிணைய வேண்டும். மக்களுக்காக மாதந்தோறும் பொதுக் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். அதன்படி மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் பொது க்கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசினார். மதுரை மாவட்ட செயலாளர்கள், புறாமோகன்(மத்தி), பாலமேடு கார்த்திக்(வடக்கு), மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி, பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர்.
கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர், முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்க வுரையாற்றினர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறினார்.






