என் மலர்tooltip icon

    மதுரை

    • 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர்.
    • கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர்.

    மதுரை:

    சென்னை மீனவர்கள் நலச்சங்கத்தை சேர்ந்த பீட்டர் ராயன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு கச்சத்தீவு ராமேசுவரத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது. 1974-ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி, பாரம்பரியமாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்களை இந்த பகுதியில் தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    ஆனால் அந்த உடன்படிக்கையை மீறும் வகையில், கடந்த 1983-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை இந்திய மீனவர்கள் 378 பேர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டு உள்ளனர் என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் தெரியவந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல் கச்சத்தீவு பகுதிகளில் மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள படகுகள் சேதப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்தநிலையில் கடந்த 19-ந்தேதி கச்சத்தீவு பகுதியில் 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து விடுவித்தனர். 2 நாட்களுக்கு முன்பு 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து உள்ளனர். இதன்மூலம் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையை இலங்கை கடற்படையினர் மீறி உள்ளனர்.

    எனவே 22 மீனவர்களை இலங்கையில் இருந்து மீட்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் 1974-ம் ஆண்டு இந்தியா-இலங்கை இரு நாடுகளுக்கு இடையேயான உடன்படிக்கையை ரத்து செய்து கச்சத்தீவை மீட்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கும்படி மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று விசாரித்தனர்.

    அப்போது மத்திய அரசு வக்கீல் ஆஜராகி, 2 நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைக்கும்படி அங்குள்ள கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இலங்கையில் இருந்து மீனவர்களையும், படகுகளையும் மீட்பதற்கு தேவையான சட்டரீதியான உதவி வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதிகள், 1974-ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யும் அதிகாரம் இந்த கோர்ட்டுக்கு இல்லை என தெரிவித்தனர்.

    பின்னர் இந்த வழக்கு விசாரணையை வருகிற 7-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

    • 3-ந்தேதி சுவாமிக்கு முப்பழ அபிஷேகம் நடக்கிறது
    • 25-ந்தேதி இரவு முதல் 26-ந்தேதி அதிகாலையில் 3 மணியளவில் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும்.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதில் ஆனி ஊஞ்சல் திருவிழா நாளை(சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை நடக்கிறது. ஆனி மாதம் மக நட்சத்திரம் முதலாக மூல நட்சத்திரம் ஈறாக" 9 நாட்கள் என வருகிற 24-ந் தேதி முதல் ஜூலை 2-ந் தேதி முடிய ஊஞ்சல் உற்சவம் நடைபெறவுள்ளது.

    திருவிழா நாட்களில் சாயரட்சை பூஜைக்கு பின் மீனாட்சி, சுந்தரேசுவரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எழுந்தருளுவார்கள். அங்கு ஊஞ்சள் கொண்ட பின் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகத்தின் திருப்பொன்னூஞ்சல் பதிகம் (9 பாடல்கள்) தல ஓதுவாரால் ஓதப்படும். அதனை நாதசுர கலைஞர்கள் 9 வகையான ராகத்தில் இசைத்தவுடன் தீபாராதனை முடிந்து 2-ம் பிரகாரம் சுற்றி சேர்த்தியை சென்றடைவார்கள்.

    25-ந் தேதி இரவு முதல் 26-ந் தேதி ஆனி உத்திரம் அன்றைய தினம் அதிகாலையில் 3 மணியளவில் வெள்ளியம்பல நடராஜர் சிவகாமிக்கும், அம்மனுக்கும் சுவாமி கோவில் 6 கால் பீடத்திலும், இதர நான்கு சபை நடராஜர் சிவகாமியம்மனுக்கு சுவாமி கோவில் 2-ம் பிரகாரம் 100 கால் மண்டபத்திலும் ஆனி உத்திர திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் காலபூஜைகள் முடிந்ததும் காலை 7 மணிக்கு மேல் பஞ்ச சபை நடராஜர் சிவகாமியம்மன் 4 மாசி வீதிகளில் புறப்பாடாகும். அபிஷேக திரவிய பொருட்களை 25-ந் தேதி இரவு 7 மணிக்குள் கோவிலில் வழங்கலாம்.

    ஒவ்வொரு பருவ காலத்திற்கு ஒவ்வொரு வகையான திரவியங்களை கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் படியாக ஆகமத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த மாதம் 3-ந் தேதி ஆனி மாத பவுர்ணமியன்று உச்சிக்கால வேளையில் மூலஸ்தான சொக்கநாத சிவப்பெருமானுக்கு மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளால் முப்பழ பூஜை அபிஷேகம் நடைபெற உள்ளது.

    இப்பூஜைகளை ஏற்று கொண்ட இறைவன் இவ்வுலகில் அனைத்து ஜீவராசிகளும் புணர்வுறு போகம் எய்த அருள்பாலிப்பதாக ஐதீகமாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆனி ஊஞ்சல் உற்சவம் முடிவில் நான்கு சித்திரை வீதிகளில் வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழா நடைபெறும் நாட்களான வருகிற 23-ந் தேதி முதல் அடுத்த மாதம் 3-ந் தேதி கோவில் சார்பாகவோ, உபயதாரர் சார்பாகவோ உபய திருக்கல்யாணம் மற்றும் தங்கரத உலா ஆகியவை பதிவு செய்து நடத்திட இயலாது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆனி திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • பெண்ணிடம் 5 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு தென்றல் நகரை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி கவிதா(வயது45). இவர் சம்பவத்தன்று கோரிப்பாளையம் ஏ.வி.மேம்பாலம் அருகில் உள்ள பெண்கள் கல்லூரி ரோட்டில் மொபட்டில் சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமி கவிதாவை வழிமறித்து கழுத்தில் கிடந்த 5 பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பினான்.

    இதுகுறித்த புகாரின் பேரில் செல்லூ ர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடார் மகாஜன சங்கம் சார்பில் கல்வி திருவிழா நாளை நடக்கிறது.
    • மண்டல செயலாளர் பி.சேகர்பாண்டியன் தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை நாடார் மகாஜன சங்கம் (என்.எம்.எஸ்.) சார்பில் கல்வித்திருவிழா- 2023 நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தெற்குவாசல் நாடார் வித்தியா சாலை மேல்நிலைப்பள்ளியில் மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழாவில் மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    நாடார் மகாஜன சங்க மதுரை மண்டல செயலாளர் பி.சேகர்பாண்டியன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார். நாடார் மகாஜன சங்க மதுரை மாவட்டத்தலைவர் சரவணன் என்ற சரவ ணபவ, ராஜேஷ்கண்ணன், தெற்கு வாசல் நாடார் வித்தியாபிவிருத்தி சங்க தலைவர் கணபதி, செயலா ளர் மயில்ராஜன், நாடார் வித்தியாசாலை பள்ளிகள் செயலாளர் குணசேகரன், நாடார் மகாஜன சங்க பொருளாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மேயர் இந்திராணி, பூமிநாதன் எம்.எல்.ஏ., துணை மேயர் நாகராஜன், முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, கூடுதல் அரசு வக்கீல் முரளி, மாநகராட்சி தெற்கு மண்டலத்தலைவர் முகேஷ் சர்மா, கவுன்சிலர் அருண்குமார் ஆகியோர் பரிசு வழங்குகிறார்கள்.

    நாடார் வித்தியாசாலை பள்ளிகள் தலைவர் ஆர்.பார்த்திபன் ஏழை மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குகிறார். மதுரை மாவட்ட செயலாளர் சக்திவேல்ராஜ் நன்றி கூறுகிறார்.

    • குத்துவிளக்கில் விழுந்து பெண் பலியானார்.
    • செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை செல்லூர் சத்தியமூர்த்தி 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி ஹேமலதா (வயது42). சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவருக்கு வலிப்பு நோய் வந்தது.

    அப்போது அங்கிருந்த குத்துவிளக்கின் மீது பிரேமலதா தவறி விழுந்தார். இதில் காயமடைந்த அவர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாடார் வித்தியாசாலை பள்ளியில் யோகா தின கொண்டாட்டப்பட்டது.
    • தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

    மதுரை

    மதுரை தெற்கு வாசல் நாடார் வித்தியாசாலை பள்ளியில் உலக யோகா தினம் அனுசரிக்கப்பட்டது. விருதுநகர் நகராட்சி முன்னாள் தலைவர் கார்த்திகா கரிக்கோல்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அவரது குழுவினர் மாணவ-மாணவிகளுக்கு பிராணிக் ஹீலிங் யோகா பயிற்சி அளித்தனர்.

    இதில் 700 மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தலைவர் பார்த்திபன், உறவின்முறை துணை செயலாளர் அருஞ்சுணை ராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தலைமை ஆசிரியர் காந்திபாய் சுவாமியடியான் நன்றி கூறினார்.

    • லண்டனில் பென்னிகுயிக் சிலை மூடல்; தமிழகத்துக்கு தலை குனிவு ஏற்பட்டுள்ளது.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டனம் தெரிவித்தார்.

    மதுரை

    மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் இன்று வயலூரில் அன்ன தானம் நடந்தது. சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-

    மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ஜீவாதார உரிமையாக இருக்கிற முல்லைப் பெரியாறு அணையை கட்டிய, ஜான்பென்னிகுயிக் சிலை தமிழக அரசின் சார்பில் லண்டனில் அமைக்கப் பட்டது.

    லண்டன் கேம்பர்லியில் உள்ள பென்னிகுயிக் சிலையை கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ந் தேதி அமைச்சர் பெரியசாமி திறந்து வைத்தார். அப்போது இங்கிலாந்து ராணி இறந்து விட்டதால், அந்த விழாவை சம்பிரதாயமாக நடத்தினார்.

    இந்த சிலை அமைக்கவும், பராமரிக்கவும் அங்குள்ள தனியார் நிறுவனத்திற்கு தமிழக அரசு ரூ10.65 லட்சம் ஒதுக்கியது. ஆனால். கூடுத லாக ரூ.28 லட்சம் செலவாகி விட்டதாக கூறி பாக்கி தொகை கேட்டு சிலை மூடப்பட்டுள்ளது.

    அந்த தனியார் நிறுவ னத்திற்கு அரசு பாக்கி வைத்துள்ளதா? அரசு நிர்ணயித்ததை விட அந்த கூடுதல் செலவை தமிழக அரசு கொடுக்க முன் வந்ததா? கொடுத்ததா? இதில் தமிழக அரசு அவர்களை ஏமாற்றியதா? அல்லது தனியார் நிறுவனம் தமிழக அரசை ஏமாற்றி இருக்கிறார்களா? என்பதெல்லாம் இன்று விவாதமாக இருக்கிறது. இது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி யுள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக தன் சொத்து களை விற்று இன்றும் உறுதியாக, பாது காப்பாக உள்ள முல்லைப் பெரியாறு அணையை கட்டிக் கொடுத்த ஜான் பென்னிகுயிக் சிலை யை மீண்டும் லண்டனில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவில் திருவிழாவில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது.
    • ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளது.

    மதுரை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலைக்கோட்டை கிராமத் தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு சாந்தி வீரன் சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆனி மாதம் 8 நாட்கள் திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

    இந்த கோவில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் அமைந்துள்ளது. கோவிலுக்கு தக்கார் நியமிக்கப் பட்டுள்ளார். கடந்த 2020-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்க கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    அதனை எதிர்த்து கடந்த ஆண்டு சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா மலக்கோட்டை கிராமத்திலுள்ள சசி பாண்டிதுரை, பாலசுந்தரம், ஜெயபாலன் மற்றும் நவநீதன் ஆகியோர் நீதிமன்றத்தில் தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை கோரியும் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இந்த வருடம் திருவிழாவில் இவர்களால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் ஆனி மாத திருவிழா காலங்களில் இக்கிராமத்தில் வசிக்கும் பழங்குடியினர் மற்றும் அட்டவணைப் படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆகியோர் கோவில் உள்ளே அனுமதி வழங்கப்படுவது இல்லை. எனவே சிவகங்கை சாந்தி வீரன் சாமி கோவில் ஆனி மாத திருவிழாவில் யாருக்கு தலைப்பாகை அணியவும், குடை பிடிக்கவும், முதல் மரியாதை வழங்கவும் கூடாது என வும், அட்டவணைப்படுத்தப் பட்ட சமூகத்தினர் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர்களை கோவிலுக்குள் அனுமதிக்க வும், திருவிழாவில் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும.

    இவ்வாறு தனது மனுவில் கூறியிருந்தார்.

    அந்த மனு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா பூர்வாலா, மதுரை ஐகோர்ட்டு நிர்வாக நீதிபதி சுப்பிரமணியன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதிகள், தனிப்பட்ட நபர்களுக்கு கோவில் திருவிழாவில் முதல் மரியாதை வழங்கக் கூடாது, அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் கோவில் திருவிழாவிற்கு சென்று வழிபடுவதையும் இந்து அறநிலையத்துறை உறுதி செய்ய வேண்டும். இதனை சாந்தி வீரன் சாமி கோயில் தக்கார் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

    • ரூ.6¼ கோடி மதிப்பில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டது.
    • அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், மூர்த்தி திறந்து வைத்தனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் 10 தொகுதிகளில் புதிதாக ரூ. 6 கோடியே 34 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 14 ஆரம்ப சுகாதார நிலைய மற்றும் துணை ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், மூர்த்தி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள குழந்தைகள் நல மையத்திற்கான பூமி பூஜை விழாவில் அமைச்சர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் அமைச்சர் பேசுகையில், மக்கள் நலத்திட்டங் களுக்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டா லினை வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளி நாட்டினரும் பாராட்டு கிறார்கள்.

    மதுரையில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர், பாதாள சாக்கடை, மின் விளக்கு வசதி செய்து தரப்படும். தி.மு.க. ஆட்சியில் ஏழை பெண் குழந்தைகள் கல்லூரி படிக்கும்போது மாதம் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்ப டுத்தப்படும் என்றார்.

    தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிய தாவது:-

    மதுரை தோப்பூரில் 5 ஏக்கரில் ஓமியோபதி மருத்துவமனை மற்றும் கல்லூரி விரைவில் வர உள்ளது. இதற்காக ரூ. 70 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தற்போதைய நிலைமையை பார்த்தால் 2028-ம் ஆண்டு தான் வரும் என தெரிகிறது. எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்க மத்திய அரசு கவனம் செலுத்த வில்லை. ஆனால் தமிழக அரசு பணிகளை தொடங்கி வருடத்திற்கு 50 மாணவர்கள் சேர்க்கப்பட்டு ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் படிக்க வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தமிழக முதல்வர் பொறுப்பேற்ற பின் 45 புதிய மருத்துவ மனைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் சங்கீதா, எம்.பி.வெங்கடேசன், மேயர் இந்திராணி, எம்.எல்.ஏ.க்கள் கோ.தளபதி, புதூர் பூமிநாதன், சோழவந்தான் வெங்கடேசன், துணை மேயர் நாகராஜன்,மண்டலத் தலைவர்கள் வாசுகிசசி குமார், சுவிதா விமல், முகேஷ் சர்மா,மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, திமுக நிர்வாகிகள் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணி மாறன், சோமசுந்தர பாண்டியன், மருதுபாண்டி, சசிகுமார், நேருபாண்டி, வைகை மருது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மல்லிகை பூக்கள் விலை ‘திடீரென’ சரிந்தது.
    • திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு.

    மதுரை

    திருவிழா மற்றும் பண்டிகை காலங்களிலும், சுபமுகூர்த்த நாட்களிலும் மல்லிகை பூக்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்வது வழக்கம். அதன்படி முகூர்த்த நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு உள்ளிட்ட விசேஷ தினங்களில் மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை பூக்களின் விலை கிலோ 4 ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படும்.

    அதுபோல் திருவிழா காலங்களிலும் மல்லிகை பூவுக்கு அதிக அளவில் கிராக்கி ஏற்படுவதுண்டு. தற்போது திருவிழா காலங்கள் முடிந்ததாலும், அதிக அளவில் முகூர்த் தங்கள் இல்லாததாலும் மதுரையில் மல்லிகை பூக்களின் விலை கணிசமாக குறைந்துள்ளது.

    மேலும் பூக்களின் வரத்தும் அதிகரித்துள்ள தால் மதுரை மாட்டுத்தா வணியில் உள்ள பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகை பூக்களின் வரத்து அதிகளவில் இருந்தது. இதனால் மல்லிகை கிலோ 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    மற்ற பூக்களான பிச்சி 200 ரூபாய்க்கும், முல்லை 250 ரூபாய்க்கும், சம்மங்கி 50 ரூபாய்க்கும், பட்டன் ரோஸ் 50 ரூபாய்க்கும், விற்பனை செய்யப்பட்டது.பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதாலும், விற்பனை மந்தமாக உள்ளதாலும், விவசாயிகளுக்கும், வியாபாரிகளுக்கும் உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்படுவதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இன்னும் சில நாட்களில் முகூர்த்தங்கள் அதிகமாக இருப்பதால் பூக்களின் விலை வழக்கம்போல சீராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

    • வருகிற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி அரசின் திட்டங்களால் பா.ஜ.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.
    • மதுரையில் தேசிய இணை ஒருங்கிணைப்பாளர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரை கிருஷ்ணாபுரம் காலனி பகுதியில் மத்திய அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மாநகர்மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மாவட்ட பொதுச்செய லாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு மேற்பார்வை யாளருமான சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினார்

    அதன் பின்பு அவர் கூறியதாவது:-

    மத்திய அரசின் சாதனை களை கிராமங்கள் தோறும் கொண்டு சேர்க்கின்ற முயற்சியில் ஈடுபட் டுள்ளோம். பிரதமர் மோடியின் முயற்சியால் உலகம் முழுவதும் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் மிகவும் பின்தங்கி இருந்த அனைத்து துறைகளும் பிரதமர் மோடி ஆட்சியில் பொருளாதார ரீதியாக உலக அளவில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. அமெரிக்கா முதல் பல்வேறு உலக நாடுகள் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை பாராட்டியுள்ளன. 'இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்' என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்கள் மனதில் பா.ஜ.க. அரசு உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.

    மத்திய அரசின் நலத்திட்டங்களால் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அரசு மிக பெரிய அளவில் வெற்றி பெறும். தமிழகத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் கடும் உழைப்பின் காரணமாக பா.ஜ.க. அசுர வளர்ச்சியடைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கர், மண்டல் தலைவர் மாணிக்கம், மாவட்ட பார்வையாளர் கார்த்திக் பிரபு, பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன்,ஊடகப் பிரிவு தலைவர் ரவிச்சந்திர பாண்டியன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

    • கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
    • விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனித்தன்மையுடன் கூடிய வீரமான, தைரியமிக்க, எதையும் எதிர்கொள்ள கூடிய ஆற்றல் மிக்க ஒரு பெண்மணிக்கு, அவரது துறை சார்ந்த பணிக்காக அல்லது அவரது நடவ டிக்கைக்காக 'கல்பனா சாவ்லா விருது" ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது.

    மேற்காணும் விரு திற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 28-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சம்பந்தப்பட்ட இணைப்பு களுடன் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவல கத்திற்கு நேரில் வந்து கருத்துக்களை 27-ந் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    மேற்கண்ட தகவலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தெரிவித்துள்ளார்.

    ×