என் மலர்tooltip icon

    கன்னியாகுமரி

    • விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
    • கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.

    புதுடெல்லியில் மத்திய ரெயில்வே துறை அமைச்சரை சந்தித்த கன்னியாகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், வெகு நாட்களாக நிறைவேறாமல் இருக்கும் குமரி மாவட்ட மக்களின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினார்.

    கண்டன்விளை மற்றும் கக்கோடில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் சுமூகமாக பயணம் செய்ய மேம்பாலம் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும் இரணியலில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடித்திட வேண்டும் என்றும், விரிகோடு மேம்பால பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு புதிய ரெயில்களை அறிமுகம் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். வந்தே பாரத் ரெயில் ஒன்றினை சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், வேளாங்கன்னிக்கு பக்தர்கள் செல்ல வாராந்திர ரெயில், சார்மினார் எக்ஸ்பிரஸ் ரெயிலை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கன்னியாகுமரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தினார்.

    அதுபோல் நீண்ட காலமாக மக்களின் கோரிக்கையாக இருந்து வரும் ரெயில் நிறுத்தங்கள் குறித்தும் கோரிக்கை வைத்தார். கோவிட் காலத்திற்கு முன்பிருந்த போல் ரெயில் நிறுத்தங்களை மீண்டும் கொண்டு வரவேண்டும் என கேட்டுக்கொண்டார், குறிப்பாக விவேக் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு மாவட்டத்தில் இன்னுமொரு நிறுத்தம் தேவை என கேட்டு கொண்டார்.

    நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்திற்கு வருவதற்கு நான்கு வழி சாலையில் இருந்து இணைப்பு சாலை அமைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்

    • ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
    • மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் மார்கழி மாதம் நடைபெறும் திருவிழா பெருந்திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டிற்கான மார்கழி மாத தேரோட்டத்தை முன்னிட்டு டிசம்பர் 26-ந்தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்க உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 20-ந்தேதி பணிநாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

    • தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர்.
    • பேரூராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

    கன்னியாகுமரி:

    குமரி மேற்கு மாவட்டம் மார்த்தாண்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி மேற்கு மாவட்ட அலுவலகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 77- வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற பிறந்தநாள் விழாவிற்கு காங்கிரஸ் கமிட்டி மேற்கு மாவட்ட தலைவர் பினுலால் சிங் தலைமை தாங்கினார்.

    தமிழக காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத்தலைவர், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தனர். கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கேக் வெட்டி அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். மேலும் ஏழைகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கி சிறப்பித்தார்.

    நிகழ்ச்சியில் குழித்துறை திமுக நகர் மன்ற தலைவர் திரு.பொன். ஆசைத்தம்பி, மாநிலபொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், மாநில பொதுச் செயலாளர்கள் ஆஸ்கர் பிரிடி, பால்ராஜ், தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர், யூசுப்கான், குமரி மேற்கு காங்கிரஸ் சேவாதள மாவட்ட தலைவர் ஜோசப் தயாசிங், காங்கிரஸ் கமிட்டி பத்மனாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், மகிளா காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவி ஷர்மிளா ஏஞ்சல், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர் மற்றும் காங்கிரஸ் பேரியக்க மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், பேரூராட்சி தலைவர்கள், நிர்வாகிகள், ஊராட்சிமன்ற நிர்வாகிகள், காங்கிரஸ் பேரியக்க துணை அமைப்புகளின் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டார்கள்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிதியாக சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு பிரதமருக்கு கடிதம்.
    • மத்திய அரசு சுமார் 400 கோடி ரூபாய் ஒதுக்கியது.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. கடந்த 3 மற்றும் 4-ந்தேதி பெய்த கனமழையால் ஏறக்குறைய அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது.

    இன்னும் சில இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலையில்தான் உள்ளது. போர்க்காள அடிப்படையில் தமிழக அரசு மீட்புப்பணியை மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகர் சகஜ நிலைக்கு திரும்பிவிட்டது.

    இந்த புயலால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    முதல்வர் கடிதத்திற்குப் பிறகு மததிய அரசு சுமார் 450 கோடி ரூபாய் நிதி வழங்கியது. முதலமைச்சர் ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்ட நிலையில், மத்திய அரசு அதில் 10 சதவீதம் கூட ஒதுக்கவில்லை என திமுக-வினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில் "ஐந்தாயிரம் கோடி ரூபாய் கேட்டால், 400 கோடி ரூபாய் தந்தால் எப்படி போதுமானதாக இருக்கும். நாங்கள் அட்சய பாத்திரத்தில் பிச்சை கேட்பது போன்று கேட்கவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தை கேட்கிறோம்.

    ஜி.எஸ்.டி. வரி வசூலில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் கிடைக்கக் கூடிய நிதியில் நாம் கடைசியாக இருக்கிறோம். இதுதான் வருத்தமாக உள்ளது. ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு 400 கோடி ரூபாய் என்பதை நியாயப்படுத்தவே முடியாது. இதனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தர வேண்டும் என்பதுதான் நம்முடைய எதிர்பார்ப்பு" என்றார்.

    • பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர்.
    • குமாரின் குடும்பத்தினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் 2-வது பிளாட் பாரத்தில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த ரெயில்வே ஊழியர்கள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜோசப் ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த வரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்தனர். அப்போது அவர் விருது நகர் மாவட்டம் சாத்தூர் தோட்டி லேயன்பட்டி பகுதியை சேர்ந்த குமார் (வயது 48) என்பது தெரிய வந்தது. இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார்.

    நேற்று குமார் திருவனந்தபுரத்திலிருந்து ஊருக்கு செல்வதற்காக நாகர்கோவில் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து ஊருக்கு செல்வதற்கு தயாராக இருந்த நிலையில் குமார் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார்.

    அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். குமார் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    குமாரின் குடும்பத்தினர் இன்று காலை நாகர்கோவிலுக்கு வந்தனர். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குமாரின் உடல் பிரேத பரிசோதனை இன்று நடந்தது. அவர் தற்கொலை செய்தது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்

    சுசீந்திரம் தாணுமாலய சுவாமிகள் திருக்கோவில் கலையரங்கத்திற்கு மேற்கூரை வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    அவர்களின் கோரிக்கையை ஏற்று பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 60 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.


    இதையடுத்து நடைபெற்று வரும் மேற்கூரை பணிகளை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார் .

    அவருடன் பேரூராட்சி தலைவி அனுசுயா, காங்கிரஸ் வட்டார தலைவர் கால பெருமாள் ஆகியோர் உடன் இருந்தனர்

    • முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.
    • கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை சக்தி மகளிர் டிரஸ்ட் குலசேகரம் மூகாம்பிகை மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மற்றும் பொது மருத்துவ முகாமை தளவாய் சுந்தரம் எம்எல்ஏ துவக்கி வைத்தார்.

    தோவாளை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் டாக்டர் சாந்தினி பகவதியப்பன் தலைமையில் நடந்த முகாமில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டார்கள்.

    கண் மற்றும் அனைத்து நோய்களுக்கும் சிசிச்சை அளிக்கப்பட்டது.

    கண் மருத்துவர் டாக்டர் குமார் பொது மருத்துவர் டாக்டர் விகாஷ் ஆகியோர் தலைமையில் மருத்துவக் குழு பொதுமக்களுக்கு சிசிச்சை அளித்தது.

    முன்னாள் கவுன்சிலர் தர்மராஜ் ஆசிரியர் சேகர் மற்றும் சக்தி மகளிர் டிரஸ்ட் உறுப்பினர்கள் மருத்துவமனை பிஆர்ஓ சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

    • காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.
    • காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை தெற்கு வட்டார காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கிழக்கு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே டி உதயம், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
    • தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டம் தேரூர் குறண்டியில் கோரக்கர் சித்தர்கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் பிரதோஷ விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்று கோரக்கர் சித்தரை வழிபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த கோவிலின் தெற்கு பகுதியில் பழங்கால தமிழ் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது, இதனைகன்னியா குமரி அருகே உள்ள கொட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் சுந்தர்என்பவர் இந்த கோவிலுக்கு சென்று இருந்தபோது இந்தகல்வெட்டை கண்டுபிடித்து உள்ளார்.

    மேலும் இந்த கல் வெட்டை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நேரில் வந்து கள ஆய்வு செய்து, எந்த நூற்றாண்டைச் சேர்ந்த கல் வெட்டு என்று அதிகாரப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.

    கன்னியாகுமரி மாவட்ட தொல்லியல்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என்றும் அழிவின் விளிம்பில் இருக்கும் குறண்டி கோரக்கர் சித்தர் கோவிலை புனரமைக்க இது வழிவகுக்கும் என்றும் பக்தர்கள் கோவிலின் தொன்மையை தெரிய வாய்ப்பாக இருக்கும் என்றும் தமிழ் எழுத்தாளர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கையாக முன் வைத்து உள்ளனர்.

    • பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    அழகப்பபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் பூங்கா அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூபாய் 41 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    சிறுவர் பூங்கா அமைப்பதற்கான பூமி பூஜையில் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.


    இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சித் தலைவர் திருமதி அனிதா ஆண்றோஸ், காங்கிரஸ் கமிட்டி வட்டாரத் தலைவர் திரு கால பெருமாள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    • இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்பட்டு‌ வந்தது.
    • நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள்.

    பாராளுமன்றத்தில் விஜய் வசந்த் பேசியதாவது:-

    100 நாள் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் பணியாளர்களுக்கு தக்க சமயத்தில் ஊதியம் வழங்க மத்திய அரசு பொதுவான அதிக நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு புதிய ஊதியம் வழங்க வேண்டும் எனவும் இதற்காக அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற ஏழை எளிய மக்களின் அடிப்படை வாழ்வாதாரமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் விளங்குகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சமன் செய்வதற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. இதன்மூலம், கிராமப்புற வேலைவாய்ப்பு அதிகரித்தது. கிராமப்புற பொருளாதாரமும் உயர்ந்தது. இந்த திட்டத்தின் மூலம், பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் கிராமப்புற பெண்களே அதிக அளவில் பயனடைந்து வருகின்றார்கள். கொரோனா காலத்தில் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் தலைகீழாக மாறியது. மூன்று வேளை உணவு என்பதே கேள்விக்குறி ஆனது. அந்த நேரத்தில் இந்தியா முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவையை இந்த நூறு நாள் வேலை திட்டத்தின் மூலம் கிடைத்த வருவாய் தான் பூர்த்தி செய்தது.

    இந்தியாவின் சமத்துவமின்மையை குறைக்க இத்திட்டம் மிகவும் பயன்பட்டு வந்தது.

    நாடு முழுவதும் 16 கோடி தொழிலாளர்கள் இத்திட்டத்தில் பதிவு செய்து உள்ளார்கள். அனைத்து தொழிலாளர்களுக்கும் நூறு நாள் வேலை வழங்க வேண்டும் என்றால் 2.7 இலட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தற்போது வெறும் 60,000 கோடி தான் நிதி ஒதுக்கி உள்ளது. இது கடந்த ஆண்டு நிதியை விட 21 விழுக்காடு குறைவு. இத்திட்டத்தில் பெரும்பாலும் கிராமப்புற, பட்டியலின பெண்கள் தான் அதிக அளவில் பதிவு செய்து உள்ளனர். மத்திய அரசின் நிதி குறைப்பால் அவர்களின் வாழ்வாதாரம் முழுமையாக கேள்விக்குறியாகி உள்ளது. நாட்டின் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து வந்த நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு நிதி அளிப்பதை அதிகரிக்க வேண்டும்.

    நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. இந்த நேரத்தில் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் இந்த திட்டத்தின் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், அவர்களின் பசியை போக்க வேண்டும் என இந்த சபையின் வாயிலாக மத்திய அரசை கேட்டுக்கொண்டேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு அறையில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 78). இவரது மனைவி காந்திமதி. கடந்த 2002-ம் ஆண்டு கருப்பசாமியின் மனைவி காந்திமதி இறந்து விட்டார்.

    இவர்களுக்கு கிருஷ்ண மூர்த்தி என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். மகன் மற்றும் மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் கிருஷ்ணமூர்த்தி தனது மனைவியுடன் நெல்லையில் வசித்து வேலை பார்த்து வருகிறார். மேலும் இரண்டு மகள்களும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

    இதனால் கருப்பசாமி நாகர்கோவில் வடிவீஸ்வரன் பகுதியில் உள்ள லாட்ஜ் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். லாட்ஜிலேயே தங்கி வேலை பார்த்து வந்த நிலையில், இன்று காலை அவரை திடீரென காணவில்லை.

    லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியம் அவரை பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போனை எடுக்கவில்லை. இதையடுத்து லாட்ஜில் உள்ள அறைகளை சோதனை செய்து பார்த்தபோது ஒரு அறையில் கருப்பசாமி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாட்ஜ் உரிமையாளர், கோட்டார் போலீசுக்கும், நெல்லையில் உள்ள அவரது மகன் கிருஷ்ணமூர்த்திக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய சோபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த கருப்பசாமி, லாட்ஜில் உள்ள அறையில் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.

    மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் அதிகாலையில் கருப்பசாமி வெளியே செல்வது போன்ற காட்சிகள் இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் கருப்பசாமியின் மகனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது கருப்பசாமி தனது தந்தை கடந்த 15 ஆண்டுகளாக லாட்ஜில் மேலாளராக வேலை பார்த்து வருவதாகவும், பேரக்குழந்தைகளை பார்ப்பதற்கு அவ்வப்போது ஊருக்கு வருவதாகவும் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பும் ஊருக்கு வந்த கருப்பசாமி, தற்போது லாட்ஜிலேயே இருப்பதாக தெரிவித்தார்.

    வழக்கமாக கருப்பசாமி ஆட்கள் இல்லாதபோது மேற்கத்திய கழிவறையை பயன்படுத்தி வந்தார். அதேபோல் இன்று காலையிலும் ஆளில்லாத அறையில் உள்ள மேற்கத்திய கழிவுறையை பயன்படுத்திவிட்டு வெளியே வந்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×