என் மலர்
கன்னியாகுமரி
- கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
- இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
கன்னியாகுமரி:
தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று முதல் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. வாரத்தின் கடைசி விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தீபாவளி பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாலும் இந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நேற்று முதல் கன்னியாகுமரிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இன்றும் கன்னியாகுமரியில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.
குறிப்பாக கேரளா மற்றும் வடமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இன்று அதிகாலை கன்னியாகுமரி கடலில் சூரியன் உதயமாகும் காட்சியை காண முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியிலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு கிழக்கு பக்கம் உள்ள கிழக்கு வாசல் கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் திரண்டு இருந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைமேகம் காரணமாக தெரியாமல் இருந்த சூரியன் உதயமாகும் காட்சி 3 நாட்களுக்கு பிறகு இன்று அதிகாலை சூரியன் உதயமான காட்சி தெளிவாக தெரிந்தது.
அதனை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்தனர். அதேபோல விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்பதற்காக அதிகாலையிலேயே படகுத்துறையில் சுற்றுலா பயணிகள் காத்திருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
இதைத்தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்துநின்று படகில் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு திரும்பினர்.
133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இதனால் திருவள்ளுவர் சிலையை படகில் பயணம் செய்யும் போதும் கடற்கரையில் நின்ற படியும் சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர்.
மேலும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், விவேகானந்த கேந்திர வளாகத்தில் அமைந்துள்ள பாரத மாதா கோவில் ராமாயண தரிசன சித்திர கண்காட்சி கூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மீன்காட்சி சாலை, அரசு பழத்தோட்டம் சுற்றுச்சூழல் பூங்கா, மருந்துவாழ் மலை, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதியது.
வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி இயக்கப்படவில்லை. சுற்றுலாப் பயணிகள் வருகை "திடீர்" என்று அதிகரித்ததால் கடற்கரையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
கடலோர பாதுகாப்பு குழும போலீசார், சுற்றுலா போலீசார் மற்றும் உள்ளூர் போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது.
- டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இரணியல்:
கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மருத்துவ கழிவுகள் லாரிகளில் ஏற்றி கொண்டு வரப்பட்டு குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கொட்டி செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு கேரளா மாநிலம் பாறசாலையில் இருந்து டெம்போ குமரி மாவட்டத்திற்கு வந்தது. அந்த டெம்போ வரும்போது சாலை முழுவதும் நீர் வடிந்தவாறு சென்றது. அந்த டெம்போ செல்லும்போது அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அந்த டெம்போவை வாலிபர்கள் சிலர் பின் தொடர்ந்து துரத்தி சென்றனர். இரணியல் அருகே வில்லுக்குறி பாலம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுடன் சேர்ந்து அந்த டெம்போவை சிறை பிடித்தனர்.
இது குறித்த தகவல் பரவியதும் அங்கு ஏராளமான மக்கள் குவிந்தனர். அதேபோன்று நாம் தமிழர் கட்சியினரும் அங்கு திரண்டனர். தகவல் அறிந்து வந்த இரணியல் போலீசார், வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் ராமு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். களியக்காவிளை சோதனை சாவடியை தாண்டியே இந்த கழிவு ஏற்றி வரும் லாரிகள் வருகிறது. அங்குள்ள சோதனை சாவடியில் உள்ள போலீசார் ஏன் இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை? எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து கழிவு ஏற்றி வந்த டெம்போவிற்கு பேரூராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து, டெம்போவை களியக்காவிளை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.
இதனால் கோழி கழிவுகளுடன் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலையோரம் டெம்போ நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரவு முழுவதும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே டெம்போவிற்கு அபராதம் விதிக்க வேண்டும். கோழி கழிவுகளுடன் டெம்போவை குமரி எல்லை தாண்டி கேரளாவில் கொண்டுவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியினர் விடிய விடிய அப்பகுதியில் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன்.
- கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
கன்னியாகுமரி:
குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உலக பொதுமறை தந்த திருவள்ளுவர் புகழை உலகமெங்கும் கொண்டு சென்றிடும் வகையிலும், அவருக்காக கன்னியாகுமரியில் கட்டப்பட்ட சிலையின் சிறப்பை பறைசாற்றும் வகையிலும், திருவள்ளுவர் சிலையை யுனெஸ்கோ பாரம்பரிய தளமாக அறிவிக்க மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். இதுதொடர்பாக கடிதம் வாயிலாக வலியுறுத்தியுள்ளேன் என கூறியுள்ளார்.
- ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. கடந்த 2 நாட்களாக மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படும் நிலையில் உள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆகவே நீர் நிலைகளின் அருகில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த நிலையில் நேற்று காலை முதலே வானம் மப்பும் மந்தாரமாகவே காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது.
மாவட்டம் முழுவதும் இரவு விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை கொட்டி தீர்த்ததையடுத்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கலெக்டர் அழகுமீனா வெளியிட்டார். தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மலையோர கிராமங்களில் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மோதிரமலை, கல்லாறு, கிழவி ஆறு, குற்றியாறு பகுதிகளில் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தது. இன்று காலையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மலையோர கிராமங்களில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர கிராம மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

நாகர்கோவிலிலும் நேற்று இரவு பொய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை நீடித்தது. காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் அசம்புரோடு, கோட்டார் சாலை, மீனாட்சிபுரம் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பரிதவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். கனமழையின் காரணமாக நாகர்கோவில் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தக்கலை, கோழிப்போர்விளை, குருந்தன்கோடு, இரணியல், குளச்சல், மயிலாடி பகுதிகளில் நேற்று இரவு மிக கனமழை பெய்துள்ளது. கோழிப்போர்விளையில் அதிகபட்சமாக 110.6 மில்லி மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது. கொட்டாரம், பூதப்பாண்டி, இரணியல், களியல், குழித்துறை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் கொட்டித்தீர்த்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணைகளில் நீர்மட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
அணைக்கு கூடுதல் தண்ணீர் வந்ததால் உபரிநீர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அங்கு ரம்மியமான சூழல் ஏற்பட்டுள்ளதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். வேர்கிளம்பி, குலசேகரம், கருங்கல் பகுதியில் கனமழை பெய்ததால் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கோதை ஆறு, குழித்துறை ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை தடுப்பணையை மூழ்கடித்து தண்ணீர் செல்வதால் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரியிலும் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. இன்று காலையில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் கடற்கரை பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. சுற்றுலா பயணிகள் லாட்ஜிலேயே முடங்கி கிடந்தனர்.
பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 42.51 அடியாக உள்ளது. அணைக்கு 623 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 455 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 64.66 அடியாக உள்ளது. அணைக்கு 685 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 310 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 28.8, பெருஞ்சாணி 55.6, சிற்றாறு 1-23.2, சிற்றாறு 2-24.6, கொட்டாரம் 16.2, மைலாடி 65.2, நாகர்கோவில் 52, கன்னிமார் 19.6, ஆரல்வாய்மொழி 15, பூதப்பாண்டி 62.6, முக்கடல் 30.5, பாலமோர் 59.2, தக்கலை 16.4, குளச்சல் 76, இரணியல் 98.6, அடையாமடை 62.2, குருந்தன்கோடு 72.6, கோழிப்போர்விளை 110.6, மாம்பழத்துறையாறு 59.6, ஆணை கிடங்கு 59.2, களியல் 32.6, குழித்துறை 28.2, புத்தன் அணை 54.2, சுருளோடு 51.4, திற்பரப்பு 39.2, முள்ளங்கினாவிளை 48.4.
- தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- கனமழை எதிரொலியாக கன்னியாகுமரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளை கன்னியாகுமரி உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையை எதிர்பார்க்கலாம் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
- காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.
வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அசாதாரண பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
- மின்சார பேருந்துகளின் நடைமுறை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.
கீரீன்செல் மொபிலிட்டியின் கீழ் இந்தியாவின் முதன்மையான எலக்ட்ரிக் இன்டர்சிட்டி பஸ் பிராண்டான நியுகோ (NueGo), தனது வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதை அறிவித்துள்ளது.
இந்த அற்புத பயணம் 4,000 கிலோமீட்டர்களுக்கு மேல் நீடித்தது, 200 க்கும் மேற்பட்ட டவுன்கள் மற்றும் நகரங்களில் பொது ஈடுபாடுகளை மேற்கொண்டது. இந்த பயணம் நீண்ட தூர பயணத்திற்கான மின்சார பேருந்துகளின் நடைமுறை சாத்தியக்கூறுகளை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நீண்ட பயணத்தை எம்.பி. விஜய் வசந்த் கன்னியாகுமரியில் இறுதி E-K2K பேருந்தைக் கொடியசைத்து முடித்துவைத்தார். இது அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொடங்கி பல்வேறு நிலப்பரப்புகளைக் கடந்து பசுமையான நடமாட்டத்தின் செய்தியை ஊக்குவிக்கும் ஒரு அசாதாரண பயணத்தின் முடிவைக் குறிக்கிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த விஜய் வசந்த், "NueGoவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான (E-K2K) மின்சாரப் பேருந்து பயணம் உண்மையிலேயே ஒரு அற்புதமான முயற்சி! 200 டவுன்கள் மற்றும் நகரங்கள் வழியாகச் செல்லும் போது, 4,000-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர்களைக் கடந்து, பல்வேறு சமூக ஈடுபாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், NueGo நாடு முழுவதும் மின்சார வெகுஜன இயக்கம் மற்றும் மக்களுக்கும் பூமிக்கும் அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வைப் பரப்பியுள்ளது. இந்த பயணம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துகிறது மற்றும் பல்வேறு நிலப்பரப்புகளில் மின்சார பேருந்துகளின் தாங்குதிறனை நிரூபிக்கிறது" என்று கூறினார்.
- மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.
- தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லாவை சந்தித்து நலம் விசாரித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மைதானத்தை சீரமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
அதாவது பல ஊர் மற்றும் ஊர் மக்களின் தேவைகளுக்காக சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றினை இயக்கி வந்தனர்.
அவர்களுக்கு விஜய் வசந்த் எம்பி தனது சொந்த செலவில் JCB எந்திரம் ஒன்றை வாங்கி மக்களின் தேவைகளுக்காக வழங்கி அர்பணித்துள்ளார்.

மேலும் கோணம் அரசு கல்லூரியில் மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்க மைதானம் சரி செய்யும் பணியினையும் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து எல்லைப் போராட்ட தியாகி கொடிகால் ஷேக் அப்துல்லா குந்திரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த விஜய் வசந்த் எம்பி அவரையும் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தார்.
- மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
- குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
குளச்சல்:
மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை குமரி மாவட்டத்தில் மேலும் சில கடற்கரை கிராமங்களில் இருந்து புதிதாக மண் எடுக்கும் திட்டத்தை தொடங்க உள்ளது.
இதற்கான கருத்துரு அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டு கடந்த 1-ந்தேதி கருத்து கேட்பு கூட்டம் பத்மநாபபுரம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் நடத்தவிருந்தது. இதற்கு மீனவர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் கருத்து கேட்பு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. மணல் ஆலைக்கு மணல் அள்ளுவதை கண்டித்து கடற்கரை கிராமங்களில் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மணல் ஆலையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பில் குமரி மாவட்ட கடற்கரை கிராமங்களில் இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடந்தது.
குளச்சலில் நடந்த போராட்டத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். முன்னதாக புனித காணிக்கை அன்னை திருத்தலம் முன்பாக மீனவர்கள் புறப்பட்டு பீச் சந்திப்பு வரை பேரணியாக சென்றனர். கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயக்குனர் டங்ஸ்டன், குளச்சல் பங்குத்தந்தை ஜெகன் மற்றும் புனித காணிக்கை அன்னை திருத்தல நிர்வாகிகள், விசைப்படகு சங்க நிர்வாகிகள், துறைமுக வியாபாரிகள், ஏலக்காரர்கள் அமைப்பு, பக்தர்கள் சபை, அனைத்து அமைப்பினர் உள்பட திரளான மீனவர்கள் கலந்துகொண்டனர்.
மீனவர்கள் மனித சங்கிலியாக சைமன்காலனி முதல் கொட்டில்பாடு வரை கைகோர்த்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இந்த மனித சங்கிலியை அணுக்கனிம சுரங்க எதிர்ப்பு மக்கள் இயக்க துணை தலைவர் ஜாண்சன் ஒருங்கிணைத்தார்.
இதுபோல் குறும்பனையில் புனித இக்னேசியஸ் ஆலயம் சார்பில் ஊர்மக்கள் வாணியக்குடி முதல் ஆலஞ்சி வரை கை கோர்த்து நின்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனை பங்குத்தந்தை ஸ்டீபன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அனைத்து அமைப்புகள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை குளச்சல் டி.எஸ்.பி. (பொறுப்பு)மதியழகன், இரணியல் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் ஈடுபட்டனர்.
இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களிலும் இன்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. மணவாளக்குறிச்சி, இணையம், கொட்டில்பாடு, தேங்காய்ப்பட்டினம் உள்பட 200-க்கும மேற்பட்ட கிராமங்களில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் 100-க்கணக்கான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
- கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர்.
- காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது.
சீசன் இல்லாத காலங்களிலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களிலும் பண்டிகை கால விடுமுறை நாட்களிலும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
மேலும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கடலில் ஆனந்த குளியல் போட்டு மகிழ்ந்தனர். கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்க முடியாத நிலை இருந்து வந்தது. ஆனால் இன்று வழக்கம் போல் 8 மணிக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.
காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகு போக்குவரத்து தொடங்கியதும் படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, அரசு பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை பீச், கோவளம்பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் திரண்டு பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களை கட்டியது.
இந்தசுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்புபணியில் ஈடுபட்டு வந்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி, சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில் போன்ற கோவில்களிலும் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
- 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குமரி கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. ராட்சத அலைகள் எழும்பி குடியிருப்புகளுக்குள் புகுந்தது.
வானிலை மாற்றம் காரணமாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்த நிலையில், மலையோர கிராமங்களில் கனமழை நீடித்தது. இதன் காரணமாக குமரி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனை தொடர்ந்து அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட் டது.
இந்த நிலையில் மாவட்டத்தில் மழை நீடிக்கும் என்று கூறப்பட்டதால், அணையின் நீர்மட்டத்தை கருத்தில் கொண்டு அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 250 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டோடியது.
திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்தில் எதிர்பார்த்தபடி மழை பெய்யவில்லை. மாம்பழத்துறையாறு பகுதியில் 10 மி.மீட்டர், ஆணைக்கிடங்கு பகுதியில் 9.6, முள்ளங்கினாவிளை 7.2, அடையாமடை 6.8 என மிதமான அளவிலேயே மழை பெய்துள்ளது. இதனால் அணைகளுக்கு வரும் நீரின் வரத்து குறைந்துள்ளது.
இதனை தொடர்ந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் 250 கனஅடியில் இருந்து 150 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. மதகுகள் வழியாக 556 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது நீர்மட்டம் 42.74 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 278 கனஅடி தண்ணீர் வரத்து உள்ளது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 64.12 அடி நீர்மட்டம் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 91 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மதகுகள் வழியாக 160 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 54.12 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 50.11 அடியாக உள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு1 மற்றும் 2 அணைகளில் 14.46 மற்றும் 14.56 அடி நீர்மட்டம் உள்ளது. 25 அடி கொண்ட முக்கடல் அணையில் 16.4 அடியாக நீர்மட்டம் உள் ளது.
பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு குறைக்கப்பட்டாலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிக அளவே கொட்டுகிறது. இதனால் இன்றும் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறை தினமான இன்று திற்பரப்பு வந்த பலரும் ஏமாற்றமடைந்தனர்.






