என் மலர்
கன்னியாகுமரி
- பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
- இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.
நாகர்கோவில்:
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை மற்றும் அதீத கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குமரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகின்றன. இதற்கிடையே பருவமழையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக குமரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் கலெக்டர் அழகுமீனா முன்னிலையில் அரசுத்துறை அதிகாரிகளுடன் மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மழை கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காகவும், மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்கவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் 1077, 04652 231077 மற்றும் 93840 56205 ஆகிய அவரச உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் அழகுமீனா அறிவித்துள்ளார். இந்த எண்கள் 24 மணி நேரமும் செயல்படக்கூடியதாகும்.
- கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி:
சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வாரவிடுமுறை நாட்கள் மற்றும் ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையையொட்டி கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானதால் கன்னியாகுமரி களை கட்டியது. இந்த 3 நாட்கள் தொடர் விடுமுறையிலும் சுற்றுலா தலங்களுக்கு மக்கள் படை எடுத்துச்சென்ற வண்ணமாக இருந்தனர்.
அந்த அடிப்படையில் கன்னியாகுமரியிலும் தொடர் விடுமுறை நாட்களில் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இன்றும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். அதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் காலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட்டனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். அவர்கள் காலை 8 மணியில் இருந்து படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அனைத்து சுற்றுலா தலங்களும் களை கட்டியது. சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.
கடற்கரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 23 ஆயிரத்து 527 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
ஆயுதபூஜை விடுமுறை நாளான கடந்த 11-ந்தேதி அன்று 7 ஆயிரத்து 642 பேரும், விஜயதசமியான நேற்று பரிவேட்டையையொட்டி மதியம் 12 மணியுடன் படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் பகல் 12 மணி வரை 5 ஆயிரத்து 885 பேரும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான இன்று சுமார் 10 ஆயிரம் பேரும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
அதேபோல வட்டக்கோட்டைக்கு இயக்கப்படாமல் முடங்கி கிடந்த சொகுசு படகுகள் 4 மாதங்களுக்கு பிறகு கடந்த 10-ந்தேதி முதல் மீண்டும் இயக்கப்பட்டது. கடந்த 3 நாட்களில் 345 பேர் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரிசெய்து உள்ளனர். நேற்று 75 பேரும், நேற்று முன்தினம் 136 பேரும், 10-ந்தேதி 134 பேரும் வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செய்துள்ளனர்.
ஆயுத பூஜைதொடர் விடுமுறையையொட்டி வட்டக்கோட்டைக்கு கடந்த 3 நாட்களாக திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 சொகுசு படகுகளும் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
- தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினராக உள்ள தளவாய் சுந்தரம் குமரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராகவும், கட்சியின் மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார். கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், திடீரென கட்சியின் அமைப்பு செயலாளர் மற்றும் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதற்கான உத்தரவை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிறப்பித்தார். அ.தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து தளவாய் சுந்தரம் தற்காலிகமாக நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்த 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த தகவல் கட்சியின் தலைமைக்கு சென்றுள்ளது.
அது மட்டுமின்றி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியிலும் தளவாய் சுந்தரம் கலந்துகொண்டு பேசியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய தலைவர் வருகையின் போதும் அவரை சந்தித்து பேசி இருக்கிறார். இவையே அவர் நீக்கப்பட்டற்கான காரணமாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் கடந்த சில மாதங்களாக குமரி கிழக்கு மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் இரு கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கட்சி தலைமைக்கு புகார் சென்றிருக்கிறது. இந்தநிலையில் தான் அவர் வகித்த கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்.
தளவாய்சுந்தரம் நீக்கப்பட்டது அ.தி.மு.க. நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கூறுகையில், "எது நடந்தாலும் ஓகே. ரைட் என சொல்ல வேண்டியத தான். ஆர்.எஸ்.எஸ். பேரணியை தொடங்கி வைத்ததால் அ.தி.மு.க.வின் பலம் குறையும் என்று நினைத்திருக்கலாம் நடப்பதை ஏற்றுக்கொள்வோம்" என்றார்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்திற்கு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்படாத நிலையில் புதிய மாவட்ட செயலாளராக யாரை தேர்ந்தெடுப்பது? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அவர் தற்போது சேலத்தில் உள்ளார்.
இதையடுத்து அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பச்சை மால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் சிலர் சேலத்தில் முகாமிட்டுள்ளனர்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக புதிதாக யாரும் நியமிக்கப்படுவார்களா? அல்லது பொறுப்பாளர் நியமிக்கப்படுவாரா? என்பது ஓரிரு நாளில் தெரியவரும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
- ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்.
ரெயில்வே துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் வசந்த் தனது தொகுதியில் கிடப்பில் உள்ள ரெயில்வே திட்டங்களை செயல்படுத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், "இரயில்வே துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அமைக்கப்பட்டு, அதன் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது."
"இதில் நானும் ஒரு உறுப்பினராக தமிழகத்திற்கு, குறிப்பாக குமரி மாவட்டத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் இரயில்வே திட்டங்களை செயல்படுத்த முடியும் என நம்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
- குதூகலத்துடன் பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள்.
கன்னியாகுமரி:
ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை யொட்டி கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை பார்த்து ரசித்தனர்.
இதற்காக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் அதிகாலையில் இருந்தே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஏராளமான சுற்றுலாp பயணிகள் கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி, சுசீந்திரம் தாணுமாலை சுவாமி கோவில், கொட்டாரம் ராமர் கோவில் போன்ற கோவில்களில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 6 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர்.
வழக்கம்போல் இன்று காலை 8 மணிக்கு படகுப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது. சுற்றுலாப் பயணிகள் 2 மணி நேரம் வரிசையில் காத்திருந்து படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டனர்.
மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்கா, கலங்கரை விளக்கம், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், விவேகானந்தபுரத்தில் உள்ள பாரத மாதாகோவில் மற்றும் ராமாயண தரிசன சித்திர கண்காட்சிகூடம், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாக பெருஞ்சுவர், மீன் காட்சி சாலை, வட்டக்கோட்டை கடற்கரை, கோவளம் பீச், சொத்தவிளை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் இன்று காலையில் இருந்தே சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் குதூகலத்துடன் பார்வையிட்டு விடுமுறையை கொண்டாடினார்கள். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்களை கட்டியது.
இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலாப் போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும்.
- பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:-
மார்த்தாண்டம் மேம்பாலம் மீண்டும் பழுதடைந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினருடன் கலந்து கொண்டேன். மேலும் இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து மாற்று நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தினேன்.

கடந்தமுறை போன்று இம்முறையும் தற்காலிகமாக பணிகள் செய்து போக்குவரத்திற்கு பாலத்தை திறந்து விடுவதை தவிர்த்து, அரசு ஒரு உயர் மட்ட நிபுணர் குழுவை அமைத்து பாலத்தின் உறுதிதன்மையை ஆய்வு செய்ய வேண்டும். அவர்களின் ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் பின்னர் இந்த பாலத்தினை பழுது பார்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதுவரை பொதுமக்களுக்கு அதிகமாக சிரமம் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகம் போக்குவரத்தினை ஒழுங்கு செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் மாவட்ட கமிட்டிகள் சார்பில் நாகர்கோவில், வேற்கிளம்பி மற்றும் குளச்சல் பகுதிகளில் நடைபெற்ற தேசிய விழிப்புணர்வு நடைபயணங்களில் கலந்து கொண்டேன்.
- பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது.
கன்னியாகுமரி:
இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இதுஒரு உலக புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தலமாகும். இங்கு மட்டும் தான் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியையும், மாலையில் சூரியன் மறையும் காட்சியையும் ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.
ஆனால் இந்த அபூர்வ நிகழ்வை காண தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரியில் வந்து குவிந்த வண்ணமாக உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் நேற்று வழக்கத்தைவிட அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்திருந்தனர்.
இந்தநிலையில் மாலை கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதியில் சூரியன் மறையும் காட்சியை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரண்டு இருந்தனர். மாலை சரியாக 6.20 மணிக்கு சூரியன் மறைந்தது. சூரியன் மறையும்போது வானத்தில் அபூர்வ நிகழ்வு தோன்றியது.
வானத்தில் மேகக்கூட்டங்கள் மலைபோல் காட்சி அளித்தது. அதற்கிடையே சூரியன் மறையும்போது அதனுடைய பிரதிபலிப்பு வானத்தில் அபூர்வமாக காட்சியளித்தது.
செம்பழுப்பு நிறத்தில் தீப்பிழம்பு போல் வானத்தில் அந்த அபூர்வ நிகழ்வு தோன்றியது. இந்த அபூர்வ காட்சியை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கண்டு களித்தனர். பலர் தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
- போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
- காரில் கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நிவாப் என்பது தெரியவந்தது.
அருமனை:
சமீபகாலமாக தமிழக கேரள எல்லையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்தது. இதையடுத்து அதனை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா கடத்தப்படுகிறதா என்பது குறித்து போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் குமரியில் இருந்து கேரளா நோக்கி சென்ற ஒரு கார் கேரளா எல்லையில் உள்ள சோதனை சாவடியில் போலீசார் சைகை காட்டியும் நிற்காமல் சென்றது. இதனால் அந்த காரை கேரளா போலீசார் துரத்தி சென்றனர். அப்போது கேரளா வெள்ளறடை தெக்கன்குருசுமலை பகுதியில் காரை நிறுத்தி விட்டு காரில் இருந்த 2 மர்ம நபர்கள் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் மற்றும் அப்பகுதி மக்கள் துரத்தி சென்று 2 பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர் போலீசார் மர்மநபர்கள் 2 பேரையும் அவர்கள் விட்டு சென்ற கார் அருகே அழைத்து வந்தனர். பின்னர் அவர்கள் காரை சோதனை செய்தனர். அதில் சிறு சிறு மூட்டைகளாக சுமார் 150 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. மேலும் காரில் கஞ்சா கடத்தி வந்தது தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமீர்கான் மற்றும் கொல்லத்தை சேர்ந்த நிவாப் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இருவரும் எங்கிருந்து கஞ்சா கடத்தி வந்தார்கள், இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்.
- பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகில் எந்திர கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. இதனால், ஆழ்கடலில் இவர்கள் தத்தளித்தனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சமூகவலைதளத்தில் கூயிருப்பதாவது:-
குமரி மாவட்டத்தின் 4 மீனவர்கள் உட்பட 12 இந்திய மீனவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த போது அவர்கள் படகு பழுதடைந்து, கட்டுபாட்டை இழந்த படகு ஓமன் நாட்டு கடல் எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவர்கள் கடலில் தத்தளிப்பதை அறிந்து, வெளியுறவு துறை அமைச்சர் மற்றும் ஓமன் தூதரகத்தை தொடர்ப்பு கொண்டு அவர்களை பத்திரமாக மீட்க கோரிக்கை வைத்தேன்.
அதன்படி அவர்கள் மீட்கப்பட்டு இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவியுடன் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். அக்டோபர் முதல் நாள் இந்த 12 மீனவர்களும் அவர்களது விசை படகும் இந்தியா வந்தடையும் என்ற மகிழ்ச்சியான தகவலை தெரிவித்து கொள்கிறேன்.
- பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
- ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் வெளிநாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
குமரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன் தொழில் செய்து வருகின்றனர். இரவிபுத்தன் துறை பகுதியை சேர்ந்த அருளப்பன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 11-ந்தேதி கொச்சி துறைமுகத்திலிருந்து அருளப்பன் மற்றும் பாண்டிச்சேரியை சேர்ந்த 2 மீனவர்கள், மேற்கு வங்கத்தை சேர்ந்த 3 மீனவர்கள், பூத்துறையை சேர்ந்த மீனவர் ஒருவர் என 12 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இவர்கள் கடந்த 15-ந்தேதி ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இவர்களது விசைப்படகின் எந்திரம் கோளாறு காரணமாக பழுது ஏற்பட்டது. ஆழ்கடலில் இவர்கள் தற்போது தத்தளித்து வருகிறார்கள். இந்த தகவல் இரவிபுத்தன்துறையில் உள்ள அருளப்பன் குடும்பத்தினருக்கு தெரியவந்தது.
மேலும் மீனவ அமைப்புகளுக்கும் இந்த தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் அமைப்பினர் தமிழக முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றபோது எந்திர கோளாறு ஏற்பட்டதால் விசைப்படகில் 12 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்து வருகிறார்கள்.
தற்பொழுது அவர்கள் இந்திய-ஓமன் கடல் எல்லையில் தத்தளிப்பதாக தெரிகிறது. எனவே அவர்களை மீட்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
- தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி மாவட்டத்தின் மிக அருகாமையில் அமைந்துள்ளது கேரள மாநிலம். அங்கு தற்போது நிபா வைரஸ் பரவல் உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் கேரளா சுற்றுலா பயணிகள் மூலம் நிபா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவின்பேரில் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் மீனாட்சி அறிவுரையின்பேரில் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் நிபா வைரஸ் பரவல் தடுக்கும் பொருட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி நகர பகுதியின் நுழைவு வாசலாக அமைந்துள்ள விவேகானந்தபுரம் சந்திப்பில் உள்ள டோல்கேட் பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வாகனங்களில் இருப்பவர்களிடம் காய்ச்சல் கண்டுபிடிக்கும் "தெர்மாமீட்டர்" கருவி மூலம் சுகாதாரத்துறை பணியாளர்கள் இந்த சோதனையை நடத்தி வருகிறார்கள். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்த பரிசோதனை நடந்து வருகிறது. தினமும் 2 சிப்ட் முறையில் இதற்காக சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த 850-க்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்களில் இந்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேரளா சுற்றுலா பயணிகளிடம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு கேரளாவில் இருந்து வருபவர்களிடம் காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த சுற்றுலா வாகனங்கள் கன்னியாகுமரிக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
- கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்நிலையில் தமிழக மீனவர்கள் 5 பேர் கைது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்களை எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மீனவர்களின் படகு ஒன்றையும் இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது.
கைதான மீனவர்கள் 5 பேரும் கன்னியாகுமரியை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை கடற்படையினரின் பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.






