என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.
    • வீடியோவில், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் தொட்டில் இல்லாததால் குழந்தைகளை தரையில் படுக்க வைத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக வீடியோ ஒன்று வெளியானது.

    அந்த வீடியோவில் பச்சிளங் குழந்தைகள் தரையில் படுக்க வைத்துள்ள படியும், வார்டில் போடப்பட்டிருக்கும் படுக்கைகள் படு மோசமான நிலையில் இருப்பதையும் பார்க்க முடிந்தது.

    இதற்கு, கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இதுகுறித்து கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வர் பவானி விளக்கம் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " சம்பந்தப்பட்ட 2 பெண்கள், அவசர சிகிச்சை பிரிவு அருகே கூடுதலாக வைக்கப்பட்டிருந்த மெத்தைகளை பயன்படுத்தி உள்ளனர்.

    சம்பவ இடத்தில் ஆய்வு செய்து, சேதமடைந்த மெத்தையை அப்புறப்படுத்தப்படுத்தி உள்ளோம். தற்போது நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் இருப்பு உள்ளன" என்றார்.

    • அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.
    • கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம்-திருவண்ணாமலை சாலையில் கடுவனூர் கிராமம் உள்ளது.

    இக்கிராமத்தில் வசித்து வருபவர் கேசரி வர்மன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது 2-வது மகளுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது.

    இதற்காக கேசரி வர்மன் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். அவர் தனது மகள் மஞ்சள் நீராட்டு விழாவிற்காக வங்கி லாக்கரில் வைத்திருந்த சுமார் 200 பவுன் நகைகளை எடுத்து பீரோவில் வைத்திருந்தார்.

    தனது மகள் மஞ்சள் நீராட்டு விழா பத்திரிகை வைப்பதற்காக கேசரி வர்மன் தனது மனைவியுடன் சென்னை சென்றார். வீட்டில் கேசரி வர்மன் வயதான தந்தை முனியன், தாய் பொன்னம்மாள் மற்றும் உறவினர்கள் இருந்தனர்.

    நேற்று நள்ளிரவு அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் முனியன், பொன்னம்மாள் மற்றும் கேசரி வர்மன் உறவினர்களை ஒரு அறையில் கட்டிப் போட்டனர்.

    பின்னர் அங்குள்ள அறையில் இருந்த பீரோ மற்றும் பெட்டியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 200 பவுன் நகைகைளை கொள்ளையடித்து சென்றனர்.

    வீட்டில் கட்டி போடப்பட்டு இருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இன்று காலை மீட்டனர். இந்த கொள்ளை குறித்து சங்கராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

    அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து கொள்ளையர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 200 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பாஜகவுடன் கூட்டணி என்பதை முதல்வருக்கு பொறுக்க முடியவில்லை.
    • 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சியமைக்கும்.

    கள்ளக்குறிச்சி உளுந்தூர்பேட்டையில் 126 அடி உயர கம்பத்தில் அதிமுக கொடியை அதிமுகு பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

    பின்னர், அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    இந்த கூட்டத்தை பார்த்தால் இது பொதுக்கூட்டம் அல்ல. அதிமுகவின் மாநாடு போல் உள்ளது. அதிமுக தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.

    அதிமுக இதோடு முடிந்து விட்டது என கூறி பகல் கனவு காண்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2026 தேர்தலில் அதிமுக அதிக இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைக்கும்.

    பாஜகவுடன் கூட்டணி என்பதை பொறுக்க முடியவில்லை முதல்வர் ஸ்டாலினுக்கு. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் உங்களுக்கு என்ன கவலை.

    ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது. வாக்குகள் சிதறாமல் இருக்க, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே கூட்டணி வைத்துள்ளோம். எந்த கொம்பனாலும் அதிமுகவை கபளீகரம் செய்ய முடியாது.

    கல்விக்கடன் ரத்து, முதியோர் உதவித்தொகை, சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது?.

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்கட்டணம், குடிநீர் வரி, அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி என அனைத்தும் உயர்ந்துவிட்டது.

    இளைஞர்கள் அதிமுகவிற்கு வலுசேர்க்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

    சங்கராபுரம்:

    வாணாபுரம் வட்டம் அரியலூர் துணைமின் நிலையத்தில் உள்ள அனைத்து மின்பாதைகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சங்கராபுரம் மற்றும் வாணாபுரம் வட்டத்திலுள்ள அரியலுார், அத்தியூர், மையனூர், சீர்பனந்தல், எடுத்தனூர், இளையனார் குப்பம்,

    ஜம்படை, ஓடியந்தல், வாணாபுரம், பகண்டை கூட்ரோடு, ரெட்டியார்பாளையம், கரையாம்பாளையம், எகால் ஏந்தல் "பொற்பலாம் பட்டு, பெரியபகண்டை, மணியந்தல், நாகல்குடி, மரூர், கடம்பூர், கடுவனூர், சின்னக் கொள்ளியூர், பெரியக்கொள்ளியூர், பாக்கம், ராவுத்தநல்லூர், காணாங்காடு, தொழுவந்தாங்கல், புஸ்பகிரி, சௌரியார்பாளையம், வடமாமந்தூர், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கு மின்சாரம் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது என மின் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
    • சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை.

    கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி, கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 13-7-20222-ந்தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதையடுத்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு, ஜூலை 17-ம் தேதி மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இதனிடையே, மாணவி மர்மம் தொடர்பான வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை என மாணவியின் தாய் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இம்மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    விசாரணை சட்டப்படி நடைபெற்றது. சிசிடிவி ஆதாரங்களில் சந்தேகத்திற்கிடமாக எதுவும் இல்லை. விசாரணையில் தவறு காணப்படவில்லை என கூறிய நீதிபதி, தற்கொலை செய்து கொண்டதற்கான முகாந்திரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் ஏற்கனவே கூறியிருப்பதால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்.

    3 ஆண்டுகளாக மனு மீது விசாரணை நடைபெற்ற நிலையில் வழக்கை தள்ளுபடி செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • பஸ் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கேரளாவில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக் கொண்டு கேரளாஅரசு சொகுசு பஸ் வடலூர், நெய்வேலி வழியாக புதுச்சேரி சென்றது. இந்த சொகுசு பஸ் கள்ளக்குறிச்சி மாவட்டம் வி. கூட்ரோடு பகுதியை கடக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு பஸ் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரமாக உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

    இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் காயம் அடைந்த பயணிகளை சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சின்னசேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.
    • சம்பவம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தி இந்த வழக்கை மீண்டும் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் மாணவி ஸ்ரீமதி பள்ளியில் மர்மமான முறையில் இறந்தார். இதனையடுத்து சாவில் மர்மம் இருப்பதாக கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினர்.

    அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது அவர்கள் போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசினர். இந்த கல் வீச்சில் போலீசார் பலர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவியின் உறவினர்கள் பள்ளிக்குள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினர். மேலும் பள்ளியின் நாற்காலிகள், பள்ளி பஸ்கள், போலீஸ் வாகனம், தடுப்புகளுக்கு தீ வைத்து எரித்து கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

    இந்நிலையில் இந்த கலவர சம்பவம் குறித்த வழக்கு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் 615 பேர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்திரவிடப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்திற்கு 430 பேர் வருகை தந்தனர். இதில் 20 பேராக நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இச்சம்பவம் குறித்து நீதிபதி விசாரணை நடத்தி இந்த வழக்கை மீண்டும் ஜூலை 19-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்ற வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • விபத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.
    • மதுரை ஆதீனத்தின் கார் டிரைவரான செல்வக்குமார் மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    உளுந்தூர்பேட்டை:

    மதுரை ஆதீனத்தின் 293-வது மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கடந்த 2-ந்தேதி மதுரையில் இருந்து கார் மூலம் சென்னைக்கு புறப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அஜிஸ் நகர் ரவுண்டானா பகுதியில் வந்து கொண்டிருந்தபோது அவருடைய காரும், கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த அப்துல் காதர் என்பவரின் காரும் மோதி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் தன்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்டதாக மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார்.

    இந்த விபத்து மதுரை ஆதீனம் கார் டிரைவரின் கவனக்குறைவால் ஏற்பட்ட விபத்து எனவும், இதில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் நடக்கவில்லை எனவும் மறுப்பு தெரிவித்த கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார், விபத்து தொடர்பாக வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தனர்.

    இதற்கிடையே இந்த விபத்து தொடர்பாக கள்ளக்குறிச்சி கார் டிரைவரின் சகோதரர் முபாரக் அலி கொடுத்த புகாரின்பேரில் மதுரை ஆதீனத்தின் கார் டிரைவரான மதுரையை சேர்ந்த பாண்டி மகன் செல்வக்குமார் (வயது 30) மீது உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் தனிப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமையிலான போலீசார், நேற்று மதுரை ஆதீனத்தின் கார் டிரைவர் செல்வக்குமாரை மதுரைக்கு சென்று உளுந்தூர்பேட்டைக்கு அழைத்து வந்தனர். அங்கு விபத்து குறித்து வீடியோ பதிவு மூலம் வாக்குமூலம் பெறப்பட்டது. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக இந்த விசாரணை நடைபெற்றது.

    • மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    • விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில், இது திட்டமிட்ட சதி, தன்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி இருந்தார்.

    இதையடுத்து, இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இதனிடையே, மதுரை ஆதீனத்தின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுந்சாலையில், மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்துள்ளது.

    இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் வந்த காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    • விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.
    • அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் விஷ்ணு (15). அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த விஷ்ணு கடந்த 15-ந்தேதி அரசு பொதுத்தேர்வு எழுதி முடித்து விட்டு பள்ளியில் இருந்து சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வாணாபுரம் புத்துமாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர் திசையில் 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் விஷ்ணுவின் சைக்கிள் மீது மோதியது. இதில் விஷ்ணுவின் தலையில் பலத்த காயமடைந்தது.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மாணவனை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன் மற்றும் அவரது தந்தை ஆகிய 2 பேர் மீதும் பகண்டை கூட்டுச்சாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
    • தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே குரால் மற்றும் பாக்கம்பாடி இந்த பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் நேற்று இரவு வேல்முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கால சமுத்திரம் பகுதியில் இருந்து பாகம்பாடி செல்லும் சாலையில் சந்தேகம் படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் கள்ளத் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. உடனே, அவர்களை மடக்கி பிடித்தபோது வேல்முருகனின் காலில் கள்ள துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் இருவரை பிடித்து உளுந்தூர்பேட்டை வனத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், அந்த 2 பேரின் பெயர் செல்லக்கண்ணு, சரவணன் எனவும், இவர்கள் எதற்காக கள்ளத் துப்பாக்கியுடன் வனப்பகுதியில் சுற்றி திரிந்தார்கள் என்பது போன்ற விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பிச் சென்ற ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வனத்துறை அதிகாரி மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் சின்னசேலம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    ×