என் மலர்
காஞ்சிபுரம்
- விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது.
- பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தமிழக சுற்றுலாத் துறை சார்பில் காஞ்சிபுரம் அடுத்த தேவரியம்பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதனை பார்க்க கனடா, ஜெர்மனி நாட்டை சேர்ந்த வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் தேவரியம்பாக்கம் கிராமத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு பாரம்பரிய முறைப்படி மலர்மாலை அணிவித்து, நெற்றியில் திலகமிட்டு, மேளதாளம் முழங்க, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு கிராம தேவதையான அம்மனுக்கு பொங்கல் வைக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள கோவில் வளாகத்தில் பொங்கல் விழா விளையட்டு போட்டிகள் விமரிசையாக நடந்தது. நிகழ்ச்சிக்கு தேவரியம் பாக்கம் ஊராட்சித் தலைவர் அஜய்குமார் தலைமை தாங்கினார். மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் எஸ்.சக்திவேல் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மண்பானை செய்தல், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், சாக்குப்பை ஓட்டப்பந்தயம், இசை நாற்காலி கோலப் போட்டி (வீதி முழுதும்), ஜோசியம் மற்றும் கிராமியக் கலை நிகழ்ச்சிகளான பரதநாட்டியம், சிலம் பாட்டம், வில்லுப்பாட்டு பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெற்றன.
கிராம மக்களுடன் இணைந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் உறி அடித்தல், மண்பானை செய்தல் உள்ளிட்ட போட்டிகளில் உற்சாகமாக கலந்து கொண்ட னர். வெளி நாட்டினர் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று கிராமத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர். பொங்கல் விளையாட்டு விழாவில் கிராமத்தை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.
- மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரமேரூர்:
காஞ்சிபுரம் அடுத்த உத்திரமேரூர் அருகே உள்ள பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பரத்(வயது 17), சத்ரியன்(17), விஷ்வா(17). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவர்.
இவர்களில் பரத், ஒரகடத்தில் உள்ள ஐ.டி.ஐ.யிலும், சத்ரியன் வாலாஜா பாத்தில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பும் படித்து வந்தனர். விஷ்வா பிளஸ்-2 முடித்து உள்ளார். கடந்த 12-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற பரத் உள்பட 3 பேரும் பின்னர் வீடுதிரும்பவில்லை. அவர்களை குடும்பத்தினர் தேடி வந்தனர்.
மேலும் இது தொடர்பாக சாலவாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த நிலையில் உத்திரமேரூர் அடுத்த காட்டாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட விழுத வாடி கிராமத்தில் உள்ள ஏரியில் பரத், சத்ரியன், விஷ்வா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.
தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி. சங்கர் கணேஷ், இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் மாரி செல்வம் விசாரணை நடத்தினர். மாணவர்கள் 3 பேரும் எப்படி இறந்தனர் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது.
அவர்களின் முகம் தீவைத்து எரிக்கப்பட்டு கருகி இருந்தது. மேலும் மாணவர்களின் முழங்கால், காலின் கீழ் பகுதியில் அரிவாளால் வெட்டப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. மேலும் இறந்து போன மாணவர்கள் அனைவரும் அவர்கள் அணிந்து இருந்த ஆடையுடன் இருந்தனர்.
அவர்கள் ஏரியில் குளிக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. எனவே மர்ம நபர்கள் மாணவர்கள் 3 பேரையும் கடத்தி எரித்து கொலை செய்து விட்டு உடல்களை ஏரியில் வீசி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. உடல்கள் உப்பிய நிலையில் காணப்படுவதால் அவர்கள் மாயமான 12-ந்தேதியே கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதேபோல் திருட்டு குற்ற வழக்கில் தொடர்புடைய சிறுமையிலூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கும் மர்மமாக இறந்து போன பரத் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகராறில் கொலை நடந்து உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். மோதலில் ஈடுபட்ட அந்த வாலிபர் மாயமாகி இருப்பதால் சந்தேகம் வலுத்து உள்ளது.
மர்மமாக இறந்து போன 3 மாணவர்களுக்கு வேறு யாருடனும் மோதல் உள்ளதா? கடைசியாக செல்போன்களில் யாருடன் பேசினார்கள்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
- குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானம் நிலையம் அமைப்பதற்காக சுமார் 5,100 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கிறது.
இதையடுத்து 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
900 நாட்களை கடந்து நடந்து வரும் போராட்டத்தில் பரந்தூர் கிராமத்துக்குள் அரசியல் கட்சியினர் மற்றும் வெளியாட்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பரந்தூர் போராட்ட குழுவினருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக்கழக மாநாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் வருகிற 19, அல்லது 20-ந் தேதி பரந்தூர் கிராம மக்களை விஜய் நேரில் சந்தித்து பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க கோரி தமிழக டி.ஜி.பி. மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது.
மனுவை பரிசீலித்த போலீசார் கிராம மக்களை சந்திப்பதற்கு விஜய்க்கு இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. பெரும்பாலும் பரந்தூருக்கு விஜய் செல்வதற்கு அனுமதி கொடுக்கப்படாது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் நேற்று போராட்டக் குழுவினரை சந்தித்தனர். குழுவினரிடம் விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் பற்றிய விவரங்களை தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சேகரித்தனர். தகவல்கள் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் நிர்வாகிகள் ஒப்படைக்க இருக்கின்றனர்.
இதைத்தொடர்ந்து விஜயின் அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
- ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
- பக்தர்கள் கோவிந்தா முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். புகழ்பெற்ற கோவில்கள் மட்டுமின்றி, பெரும்பாலான பெருமாள் கோவில்கள் மற்றும் பரமபத வாசல் உள்ள கோவில்களில் எல்லாம் வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்படும் நிகழ்வு நடைபெறும்.
அந்த வகையில், இன்று (ஜனவரி 10) அதிகாலையில் திருச்சி ஸ்ரீ ரங்கம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆகிய கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பல்வேறு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா என்ற முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோவிலிலும் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியின் போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. சொர்க்கவாசல் திறப்பை ஒட்டி திவ்ய பிரபந்தம் பாடுவது தொடர்பாக இருபிரிவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையினர் இருபிரிவினருக்கும் திவ்ய பிரபந்தம் பாடுவதற்கு தலா பத்து நிமிடங்கள் ஒதுக்கீடு செய்தனர்.
- 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
- அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
காஞ்சிபுரம்:
காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதியாக திகழ்ந்த மகாபெரியவா என்று அழைக்கப்படும் ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளின் 31-வது முக்தி தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி ஆராதனை மகோற்சவம் நேற்று தொடங்கி முதல் நாள் நிகழ்ச்சியாக சதுர்வேத பாராயணம் நடைபெற்றது. ரிக் வேதத்தின் முதுநிலைப் பாடத்தைத் தொடர்ந்து 40 நாட்களாக அதிஷ்டானத்தில் பாஸ்கர கன பாடிகள் என்பவரால் பாடப்பட்டு வந்தது.
அதிஷ்டானத்தில் மகா பெரியவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
நாளை ஸ்ரீ ருத்ர பாராயணம், பூஜை, ஹோமங்கள் நடைபெறும். மகா பூரணா ஹுதி தீபாராதனைக்கு பிறகு, மகா பெரியவா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
பின்னர் கணபதி சேது லாரா குழுவினரின் புல்லாங்குழல் இன்னிசை, மாலை மாண்டலின் வித்வான் யு.ராஜேஷ் குழுவினரின் இன்னிசை நடைபெறுகிறது.
- 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் போராட்டம்.
- இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே.
வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி பா.ம.க சார்பில் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு பேசியதாவது:-
அதில், தி.மு.க.வில் மூத்த அமைச்சரான துரைமுருகனுக்கு ஏன் துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
திமுக-வில் எத்தனையோ தியாகங்கள் செய்து கட்சிக்காக சிறை சென்ற துரைமுருகன், இன்று தி.மு.க.விலேயே மூத்த அமைச்சராக இருக்கிறார் என்றும், தி.மு.க.விற்காக எவ்வளவோ உழைத்த துரைமுருகனுக்கு பதவி தராதது ஏன்? என கேள்வி எழுப்பியும், இன்னொரு துணை முதல்வர் பதவி கொடுத்திருக்கலாமே எனவும் வினவியுள்ளார்.
ஆனாலும் துரைமுருகன் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களில் 2, 3 என்று துணை முதல்வர்கள் இருக்கும் நிலையில் இவருக்கு மட்டும் துணை முதல்வர் பதவி வழங்கப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
ஆனால் வேறு வழியில்லாமல் தி.மு.க.வில் துரைமுருகனுக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக முதல்வரை சுற்றி வியாபாரிகள் இருப்பதாகவும் அன்புமணி ராமதாஸ் விமர்சனம் செய்துள்ளார்.
- கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
- 24 மணி நேரத்திற்கு வசூலிக்கும் வாகன நிறுத்தும் கட்டணத்தை 6 மணி நேரத்துக்கு வசூல் செய்கிறார்கள்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய மற்றும் பட்டு சேலை எடுக்க தினம்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கிறார்கள். தற்போது சபரிமலை சீசன் என்பதால் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.
சுற்றுலா வரும் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த ஒலிமுகமது பேட்டை, ஏகாம்பரநாதர் கோவில் அருகே தனியாக இடம் உள்ளது. இது சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
வாகனங்களுக்கு கட்டணமாக 6 மணி நேரத்திற்கு பஸ்சுக்கு ரூ.300, வேனுக்கு ரூ.200, காருக்கு ரூ.150, இருசக்கர வாகனத்துக்கு ரூ.20 என வசூலிக்கப்படுகிறது.
வாகனங்களில் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தாங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டு விட்டு இலை உள்ளிட்ட குப்பைகளை அங்கேயேபோட்டு விடுகின்றனர். இதனால் அப்பகுதி குப்பை மேடாக மாறி வருகிறது. இதனை முறையாக அகற்று வதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்து உள்ளது மேலும் போதுமான கழிவறை வசதியும் இல்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனால் அங்குள்ள காவலாளிகளிடம் பக்தர்கள் அடிக்கடி வாக்குவாதம் செய்து வருகின்றனர். இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது, காஞ்சிபுரத்திற்கு தினமும் 100 க்கும் மேற்பட்ட வாகனங்களில் பக்தர்கள் வருகை தருகிறார்கள். வாகனம் நிறுத்தும் கட்டணத்திற்கு ஏற்ப அங்கு வசதி இல்லை. 2 கழிவறைதான் உள்ளது. அதுபோதுமானதாக இல்லை. கூடுதல் கழிவறை வசதி செய்து தர வேண்டும்.
பக்தர்களுக்கு ஏற்ப மேலும் போதிய வசதிகளை செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.
24 மணி நேரத்திற்கு வசூலிக்கும் வாகன நிறுத்தும் கட்டணத்தை 6 மணி நேரத்துக்கு வசூல் செய்கிறார்கள். கட்டணத்தை மட்டும் வசூல் செய்துவிட்டு சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர் தேங்கியும் குப்பைகள் கொட்டப்பட்டு அசுத்தமான நிலையில் துர்நாற்றம் வீசுகிறது என்றனர்.
- நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
- பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
இதற்கு பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். விமான நிலையம் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று அவர்களது போராட்டம் 880 நாளாக நடைபெற்றது.

அப்போது அம்பேத்கார் குறித்து அமித்ஷா கூறிய கருத்தை கண்டித்து கிராம மக்கள் அமித்ஷாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
மேலும் அங்குள்ள அம்பேத்கர்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பரந்தூர் விமான நிலைய போராட்டக்கார குழுவினர் மற்றும் கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். அவர்களது போராட்டம் இன்று 881-வது நாளாக நீடித்து வருகிறது.
- வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
- மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 41 வது வார்டு, ஜெம்நகரில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. குடியிருப்பு பகுதி அருகே செயல்படும் இந்த மதுக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
மதுக்கடையை இடமாற்றம் செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கடந்த 3 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தொடர்ந்து அதே இடத்தில் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.
போதை வாலிபர்கள் அடிக்கடி மதுக்கடை அருகே மோதலில் ஈடுபட்டு வருவதால் அவ்வழியே செல்லவே அப்பகுதி மக்கள், பெண்கள் அச்சம் அடைந்து உள்ளனர். காலி மதுபாட்டில், பிளாஸ்டிக் டம்ளர்களையும் ஆங்காங்கே வீசி சென்று விடுகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுக்கடை முன்பு 10-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் மதுபோதையில் கூச்சலிட்டபடி மோதலில் ஈடுபட்டசம்பவம் அப்பகுதி மக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தியது.
எனவே குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்படும் மதுக்கடையை உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஜெம்நகரில் குடியிருப்புகளுக்கு அருகேயே மதுக்கடை உள்ளது. இதனால் தினந்தோறும் குடிமகன்களின் அட்டகாசத்தால் இப்பகுதி மக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். பாதுகாப்பான சூழல் இல்லாததால் இரவு நேரத்தில் அவ்வழியே செல்ல பெண்கள் அச்சமடைந்து வருகிறார்கள். பாதுகாப்பு கேள்விக்குறி ஆகி உள்ளது. எனவே மதுக்கடையை இடம் மாற்றம் செய்ய வேண்டும் என்றனர்.
- மின் நிலையத்தில் வருகிற (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- செவிலி மேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும்.
காஞ்சிபுரம்:
ஓரிக்கை துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
அந்த நேரத்தில் காஞ்சிபுரம் நகரில் சில பகுதிகளான, வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமி குளம் பகுதிகள், காமராஜர் வீதி, மேட்டுத்தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர் பகுதி, திருக்காலிமேடு, சேக்குப்பேட்டை வடக்கு, தெற்கு மற்றும் நடுத்தெரு, எண்ணைக்கார தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், டோல்கேட், விஷார், மாமல்லன் நகர், காந்திரோடு, ஐயம்பேட்டை, வேளிங்கப்பட்டரை, டி.கே.நம்பி தெரு, டெம்பிள் சிட்டி, வர்தமான் நகர், நாகலுத்து மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விளக்கொளி பெருமாள் தெரு, ஓரிக்கை, ஓரிக்கை தொழிற்பேட்டை, அண்ணா குடியிருப்பு, சதாவரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் சுற்றியுள்ள பகுதிகள், செவிலி மேடு, பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசாபேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் தடை ஏற்படும். இந்த தகவலை காஞ்சிபுரம், வடக்கு கோட்ட செயற்பொ றியாளர் தெரிவித்து உள்ளார்.
- வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் உள்ளது.
- ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிப்காட் ஏரோ ஸ்பேஸ் பூங்காவில் உள்ள ஏரோஹப் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் செயல்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்டுபிடிப்புகளுக்கு ஏரோஹப் திட்டம் உதவும் என்றும் இந்த வளாகத்தில் கிட்டத்தட்ட 28 ஏவியோனிக் நிறுவனங்கள் அமையும்.
வடிவமைப்பு, பொறியியல் மையம், மேம்பட்ட ஏவியோனிக்ஸ் வளாகம், திறன் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வசதிகள் உள்ளது.
ஏரோஹப் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில் பூங்காவின் ஒரு பகுதி என்று அரசு தெரிவித்துள்ளது.
- பத்மஸ்ரீ. டாக்டர். வி. மோகன் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார்.
- மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தில் 18வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று முன்தினம் காஞ்சிபுரம் ஏனாத்தூரில் உள்ள மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கில் நடைபெற்றது.
இந்த விழாவுக்கு அந்நிறுவனத்தின் வேந்தர் ஜெயந்தி இராதாகிருஷ்ண தலைமை தாங்கினார். இந்த விழாவில் நிறுவனத்தின் கவுரவ வேந்தரும் தலைமை புரவலரும் ஆன கோமதி ராதாகிருஷ்ணன் மற்றும் இணை வேந்தர் ஆகாஷ் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கல்வி நிறுவனத்தின் நிறுவனரானஏ.என் ராதாகிருஷ்ணன் அவர்களை நினைவூட்டும் வகையில் விழாவின் பங்கேற்பாளர்கள் அனைவரும் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். பிறகு, பட்டமளிப்பு விழா தொடங்கியது.
வரவேற்புரை நிகழ்த்திய ஜெயந்தி ராதாகிருஷ்ணன், 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம் (MAHER)க்கான சிறப்பான பயணத்தைப் பற்றியும், தரமான கல்வியை வழங்குவதை பற்றியும் ஆராய்ச்சி மற்றும் சுகாதார மேம்பாட்டில் இந்த கல்வி நிறுவனம் காட்டும் அர்ப்பணிப்பை பற்றியும் எடுத்துரைத்தார்.
டாக்டர். மோகனின் நீரிழிவு நோயிற்கான சிறப்பு மருத்துவ மையம் மற்றும் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஆன பத்மஸ்ரீ. டாக்டர். V. மோகன் இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார்.
சுகாதாரத் துறையில் பத்மஸ்ரீ. டாக்டர். V. மோகன் செய்த அசாதாரண பங்களிப்பை மேலும் ஊக்கப்படுத்தும் படி, மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் சார்பில் மெட்ராஸ் நீரிழிவு நோய் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது.
நுண்ணியல் நரம்பியல் அறுவை சிகிச்சை துறையில் தன்னை அர்ப்பணித்த, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். கே. ஆர். சுரேஷ் பாபுவுக்கு "D.Sc (Honoris Causa)" பட்டம் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் 705 இளங்கலை மாணவர்கள், 103 மேற்படிப்பு மாணவர்கள், மற்றும் 24 முனைவர் பட்ட மாணவர்கள் என மொத்தம் 832 பேர் தங்கள் பட்டங்களைப் பெற்றனர்.

மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், மருத்துவம் சார்ந்த அறிவியல் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளின் மாணவர்கள் 76 பேர் தங்கள் படிப்பில் தனித்துவமான வெற்றியை அடைந்ததற்காக பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர்.
விழாவின் சிறப்பான தருணமாக மருத்துவ (MBBS) பட்டமளிப்பு மாணவி ஹரிதா குமாரி P.L மொத்தம் 11 பதக்கங்களைப் பெற்று, அதிக பதக்கங்களைப் பெற்ற சாதனையாளராக இருந்தது தான்.
இவ்விழாவில், இந்நிறுவனத்தின் எட்டு சிறந்த பழைய மாணவர்களுக்கு கோமதி ராதாகிருஷ்ணன் "மிகச்சிறந்த பழைய மாணவர் விருது 2024" வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.
மற்றொரு பெருமைமிகுந்த தருணமாக, அன்பாக "இட்லி பாட்டி" என அழைக்கப்படும் திருமதி. கமலாத்தாள் அவர்களுக்கு திருமதி. ஜெயந்தி இராதாகிருஷ்ணன் பரிசு (மகத்தான மனிதாபிமான சேவைக்கான விருது 2024 வழங்கப்பட்டது.
அவருடைய மிகச் சிறந்த மனிதாபிமான முயற்சிகளை ஆதரிக்கும் வகையில், மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் 2 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.






