என் மலர்
காஞ்சிபுரம்
காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே நேற்று மதியம் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்ய அ.தி. மு.க.வினர் அனுமதி பெற்று இருந்தனர்.
இதேபோல காஞ்சீபுரம் காந்திரோடு தேரடி ஆஞ்சநேயர் கோவில் அருகே நடிகர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்ய தி.மு.க.வினர் அனுமதி வாங்கி இருந்தனர்.
இந்த நிலையில் பிரச்சாரத்திற்காக காஞ்சீபுரம் வந்த ஓ.பன்னீர்செல்வம் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தி.மு.க.வினரிடம் உதயநிதி இன்னும் பிரசாரத்துக்கு வரவில்லை. அதனால் துணை முதலமைச்சர் கோவிலுக்கு வந்து செல்லும் வரை சிறிது நேரம் பிரசாரத்தினை நிறுத்தி வையுங்கள்’ என்று கூறினர்.
இதனை ஏற்க மறுத்த தி.மு.க.வினர் போலீசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் மறியல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மற்றும் சின்ன காஞ்சீபுரம் இன்ஸ்பெக்டர் சுரேஷ் சண்முகம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
அவர்களிடமும் எழிலரசன் எம்.எல்.ஏ. கடும் வாக்குவாதம் செய்தார். பின்னர் போலீசாரின் பேச்சுவார்த்தையை ஏற்று தி.மு.க.வினர் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் போலீசாருடன் மோதலில் ஈடுபட்ட எழிலரசன் எம்.எல்.ஏ. மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் பேசுதல், கூட்டாக சேர்ந்து மிரட்டுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மறியலில் ஈடுபட்ட 50 தி.மு.க.வினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #DMK
ஆலந்தூர்:
திரிசூலத்தை சேர்ந்தவர் கவுரி (வயது 40). இவர் சென்னை விமான நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் டோக்கன் வழங்கும் வேலை பார்த்து வந்தார்.
இன்று காலை அவர் வழக்கம் போல் வாகன ஒட்டிகளுக்கு டோக்கன் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி சுருண்டு விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்தவர்கள் கவுரியை மீட்டு சர்வதேச விமான நிலையத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பரிசோதித்த டாக்டர்கள் கவுரி ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர் சட்ட மன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம். திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேலக்கோட்டையூர், புதுப்பாக்கம், சிறுசேரி, தாழம்பூர், பல கிராமங்களில் பாராளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் சட்ட மன்றத்திற்கு போட்டியிடும் தனக்கும் இரட்டை இலை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது பேசிய வேட்பாளர் கிராமப்புற மக்கள் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்.தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார். இன்று காலை வெங்கம்பாக்கம், சட்ராஸ் மீனவகுப்பம், கல்பாக்கம், விட்டிலாபுரம், உள்ளிட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மரகதம் குமர வேல், எஸ்.ஆறுமுகம் ஆகியோர் வீதி வீதியாக சென்று இரட்டைஇலைக்கு வாக்கு சேகரித்தனர். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என திரண்டுவந்து வரவேற்பு அளித்தனர்.
தாம்பரம்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை ஆதரித்து ஆலந்தூர் தொகுதிக்கு உட்பட்ட நங்கநல்லூர் பகுதியில் அதிமுக காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் வீதிவீதியாக வாக்கு சேகரித்தார்.
பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அவர் பொதுமக்களிடம் பேசும்போது, நமது வேட்பாளர் வைத்திலிங்கம் நன்கு படித்தவர். பண்பாளர் டாக்டரான அவரால் உயிர்கள் காப்பாற்றப்படுகிறது. பொதுமக்கள் இதை சிந்தித்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டு மாம்பழ சின்னத்திற்கு வாக்களித்து வேட்பாளர் மருத்துவர் வைத்தியலிங்கத்தை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அவருடன் ஆலந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.என்.பி. வெங்கட்ராமன் அம்மன் வைரமுத்து சிவராஜ் எம்.எம்.பக்கிம் வானவம் எஸ். வரதராஜன், தனசேகர், ஆஷா பாஸ்கர் உட்பட கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக சென்று மாம்பழத்திற்கு வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
திருப்போரூர்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்குமரவேல் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்திரமேரூர். வாலாஜாபாத், காஞ்சிபுரம் பகுதிகளில் கொளுத்தும் வெயிலில் இரட்டைஇலைக்கு வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன். மத்திய மாநில அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்க பாடுபடுவேன் என கூறி வாக்கு சேகரித்தார். முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், மேற்குமாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், மைதிலிதிருநாவுக்கரசு, அ.தி.மு.க. நிர்வாகிகள், பா.ம.க. தே.மு.தி.க., பா.ஜ.க, த.மா.கா. புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019
போரூர்:
கோவையை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 25) டிரைவர். இவர் பழனியில் இருந்து மதுரவாயலுக்கு பதப்படுத்தப்பட்ட கோழி இறைச்சியை ஏற்றிக் கொண்டு லோடு வேனில் வந்து கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் மதுரவாயல் பைபாஸில் வந்தபோது கட்டுபாட்டை இழந்த லோடு வேன் திடீரென முன்னால் சென்ற டேங்கர் லாரியின் பின்பக்கத்தில் வேகமாக மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி டிரைவர் கோபிநாத் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் மினி லாரியில் இருந்த கிளீனர் மூர்த்தி அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
இதுகுறித்து கோயம்பேடு போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் லோடு வேனை ஓட்டிய போது டிரைவர் தூங்கியதால் விபத்து நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
சென்னை ஷெனாய் நகரை சேர்ந்தவர் கண்ணியப்பன் (வயது 60). இவர் மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணிபுரிந்து 2 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றவர்.
நேற்று மாலை தன் நண்பர் ஒருவருடன் காரில் ஊத்துக்கோட்டையில் உள்ள உறவினர்களை சந்திக்க வந்தார். பின்னர் அவர்கள் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றார்.
ஊத்துக்கோட்டை அருகே உள்ள எல்லம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது, எதிரே பெரியபாளையத்தில் இருந்து ஊத்துக்கோட்டை நோக்கி புளி மூட்டைகளுடன் வந்த லாரி திடீரென மோதியது.
இதில் கண்ணியப்பன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து நடந்ததும் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
கண்ணியப்பனுடன் வந்த அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அவருக்கு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த விபத்து காரணமாக பெரியபாளையம் - ஊத்துக்கோட்டை சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது நெரிசலில் சிக்கி நின்று கொண்டிருந்த அரசு பஸ் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் தாராட்சியை சேர்ந்த நவீன், பிரவீன், வைதேகி ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திய லிங்கம் ஒரத்தூர் ஊராட்சியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம் செய்தார்.
அவருடன் கே.பழனி எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் என்.டி.சுந்தர், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம்சுந்தர், மாவட்ட பாசறை தலைவர் என்.டி.எஸ்.சுபாஷ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர். முன்னதாக வேட்பாளருக்கு ஒரத்தூர் என்.டி.சுந்தர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். #LoksabhaElections2019
திருப்போரூர்:
காஞ்சிபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்ட மன்ற வேட்பாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் திருப்போரூர் ஒன்றியத்திற்குட்பட்ட நாவலூர், முட்டுக்காடு, படூர், கேளம்பாக்கம், தையூர் உள்ளிட்ட பல கிராமங்களில் வாக்குகள் சேகரித்தனர்.
ஒவ்வொரு கிராமத்திலும் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் திரண்டு வந்து மேள தாளத்துடன் ஆளுயுர மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர். பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.
வேட்பாளர்கள் பொதுமக்களிடம் இரட்டை இலைக்கு வாக்களித்து நாங்கள் வெற்றிபெற்றால் இப்பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், மற்றும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் கிராமப்புற மக்களையும் சென்றடைய பாடுபடுவோம் மேலும் தங்கள் பகுதி குறைகளை நேரிடையாக சந்தித்து தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
தையூரில் ஜேபி எந்திரம் மூலம் மலர்தூவி வேட்பாளர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். முன்னாள் எம்.பி காஞ்சி பன்னீர்செல்வம், பா.ம.க. ஏகாம்பரம், வாசு, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் அனகை முருகேசன், மாவட்ட துணைசெயலாளர் எஷ்வந்த்ராவ், மாவட்ட அம்மாபேரவை ஆனூர் பக்தவச்சலம், மாவட்ட வர்த்தக பிரிவு ராகவன், திருப்போரூர் ஒன்றியசெயலாளர் தையூர் குமரவேல், நாவலூர் ரகு, முட்டுக்காடு பாஸ்கரன், கேளம்பாக்கம் வினோத்கண்ணன், தையூர் ராஜா, த.மா.கா கோவிந்தராஜ், பிஜேபி கோதண்டன், புரட்சி பாரதம் சிவலிங்கம்;, தே.மு.தி.க. ஒன்றியசெயலாளர் கோபிநாத், உள்ளிட்ட கூட்டணி கட்சிநிர்வாகிகள், தொண்டர்கள் வேட்பாளருடன் சென்று வாக்குகள் சேகரித்தனர். #LoksabhaElections2019
தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். முன்னதாக அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் உள்ள எல்லா தொகுதிகளுக்கும் சென்று உள்ளேன். பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பு உள்ளது. 40 தொகுதிகளையும் வென்று எடுப்போம். கடைசியாக வடசென்னையில் பிரசாரத்தை முடிப்போம்.
கருத்து கணிப்பு என்பது கருத்து திணிப்பு. உறுதியாக 40 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். வருமான வரி சோதனை உள்பட பல இடங்களில் பல சம்பவங்கள் நடக்கின்றன. இதில் சட்டம் தனது கடமையை செய்யும். எதிர்க்கட்சிகள் என்பதால் சோதனைகள் மூலம் யாரையும் பழிவாங்கவில்லை. சட்டம் தன் கடமையை செய்கிறது.

கடந்த காலத்தில் நடந்த பிரசாரங்களும் இதுபோல்தான் இருந்தன. எனக்கு என்று ஒரு பாணி உள்ளது. விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்துக்கு வருவார். இன்னும் 2 நாளில் அதற்கான அறிவிப்பு வரும்.
இவ்வாறு அவர் கூறினார். #Premalatha #Vijayakanth
இலங்கையில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு ஒரு விமானம் வந்தது.
இதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களை தனியாக அழைத்துச் சென்று சோதனை செய்த போது ரப்பர் ஸ்பாஞ்சில் தங்கத்தை மறைத்து உடலில் கட்டி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 1.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.39 லட்சத்து 15 ஆயிரம்.
தங்கத்தை கடத்தி வந்தவர்கள் சென்னை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்தவர்கள். பெயர் விவரம் உடனே வெளியிடப்படவில்லை.
இவர்கள் யார்? தங்கம் கடத்தும் கும்பலுக்கும் இந்த 4 பேருக்கும் தொடர்பு உண்டா? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்போரூர்:
திருப்போரூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அனைத்து வார்டுகளிலும் வீதி வீதியாக சென்று இப்பகுதி மக்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறி பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.
முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து, டி.டி.மோகன், பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா. புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வேட்பாளருடன் சென்று வாக்கு சேகரித்தனர். #LokSabhaElections2019 #ADMK
மதுராந்தகம் அருகே உள்ள குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குசேலன். இவரது மகன் சூர்யா (வயது 19).
மதுராந்தகத்தில் உள்ள பந்தல் அமைப்பாளரிடம் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் மதுராந்தகத்தில் நேற்று இரவு அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.
இதற்காக சாலையின் இரு பக்கமும் கட்சியின் கொடிக்கம்பங்கள் நடப்பட்டு இருந்தன. கூட்டம் முடிந்த பின்னர் கொடிக்கம்பங்களை அகற்றும் பணியில் சூர்யா உள்பட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது கொடிக் கம்பத்தில் இருந்த மின் விளக்கில் கசிந்த மின்சாரம் சூர்யாவை தாக்கியது. இதில் அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே சூர்யா பலியானார்.
இதேப்போல் மற்றொரு தொழிலாளியும் மின்சாரம் தாக்கி காயம் அடைந்ததாக தெரிகிறது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






