என் மலர்tooltip icon

    காஞ்சிபுரம்

    பெருங்களத்தூர் அருகே குடியிருப்புக்குள் சுற்றிய 5 அடிநீள முதலையை இளைஞர்கள் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்

    தாம்பரம்:

    பெருங்களத்தூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குட்டையில் இருந்து சுமார் ஐந்து அடி நீளமுள்ள முதலை ஒன்று சாலையை கடந்து செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர்.

    இதனால் பொதுமக்கள் அச்சத்தில் இருந்தனர். முதலையை உடனடியாக பிடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்று நள்ளிரவு மீண்டும் அதே பகுதியில் முதலை ஒன்று சாலையை கடந்து குடியிருப்பு பகுதிகளை நோக்கி சென்றது. இதனை கண்ட அப்பகுதி வாலிபர்கள் போலீசுக்கும், வனத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    ஆனால் அவர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து வாலிபர்களே ஒன்று சேர்ந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி முதலையை பிடித்தனர். பின்னர் கயிற்றால் முதலையின் வாய் மற்றும் கால் பகுதியிகளை கட்டி வைத்தனர். பிடிபட்ட முதலை சுமார் 5 அடி நீளம் இருந்தது.

    இதுபற்றி அறிந்ததும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முதலை பிடிபட்டது பற்றி வன விலங்குகள் மீட்பு குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்களும், வனத்துறையினரும் விரைந்து வந்து முதலையை மீட்டு எடுத்து சென்றனர்.

    வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறிய குட்டிகளாக இருக்கும் முதலைகளை பறவைகள் உணவுக்காக அங்கிருந்து தூக்கி வந்து விடுகின்றன. அப்படி வரும் முதலைகள் தவறி நீர்நிலைகளில் விழுந்து அங்கேயே வளர்ந்து விடுகிறது.

    ஆண்டுதோறும் வெயில் காலங்களில் ஏரி, குளங்களில் நீர் வற்றுவதால் முதலைகள் அங்கிருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது.

    இப்போது வெயிலின் தாக்கத்தால் குட்டையில் உள்ள நீர் வற்றி வருவதால் முதலைகள் ஊருக்குள் வர ஆரம்பித்துள்ளது. இதே போல் பல முதலைகள் குட்டைகளில் உள்ளன. அவற்றை வனதுறையினர் உடனடியாக பிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    காஞ்சிபுரத்தில் சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையாக கொட்டி தீர்த்தது. கோடை வெப்பத்தில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. காஞ்சிபுரத்தில் வழக்கத்தினை விட அதிக வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக சூறைக்காற்றுடன் ஆலங்கட்டி மழையாக கொட்டி தீர்த்தது.

    நகரின் சில பகுதிகளில் சூறைக்காற்றின் காரணமாக மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் பொது மக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

    சாலைகளில் சில இடங்களில் மரங்கள் விழுந்ததால் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் துறையினர், நகராட்சி ஊழியர்கள் மழையினை பொருட்படுத்தாமல் சாலையின் குறுக்கே விழுந்த மரங்களை அகற்றி போக்கு வரத்தை சீர் செய்தனர். மின் தடையும் ஏற்பட்டது. கோடை வெப்பத்தில் பெய்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சூறைகாற்று காரணமாக காஞ்சிபுரம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்தன.

    ஊத்துக்கோட்டையில் நேற்று மதியம் 12 மணிக்கு தொடங்கிய சூறாவளி காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை ஒரு மணி வரை நீடித்தது.

    இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது.

    ஊத்துக்கோட்டை, சென்னேரி, கரடிபுத்தூர், சீதஞ்சேரி, அம்மம்பாக்கம், நசராரெட்டி கண்டிகை, புது குப்பம், ஆம்பாக்கம், பேரடம், சிறுவனம்புதூர், மதனம்பேடு, நெல்லிமித்திகண்டிகை, காரணி ஆகிய பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் மாமரங்களை பயிரிட்டு உள்ளனர்.

    தற்போது மாங்காய் அறுவடை நேரம். இந்த நிலையில் சூறாவளி காற்று வீசியதால் டன் கணக்கில் மாங்காய்கள் கீழே விழுந்து

    போரூர் அருகே என்ஜினீயர் வீட்டில் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    எம்.ஜி.ஆர். நகரை அடுத்த ஜாபர்கான்பேட்டையை சேர்ந்தவர் பாபுசங்கர். சாப்ட்வேர் என்ஜினீயர். இவர் கடந்த 16-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு ஓட்டு போடுவதற்காக குடும்பத்துடன் திருவண்ணாமலை சென்றார்.

    நேற்று அதிகாலை திரும்பி வந்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 5 சவரன் நகை மற்றும் வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர் அருகே பள்ளி வேன் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுகோட்டையில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் 15 பேர் மற்றும் ஊழியர்களை ஏற்றிக் கொண்டு வேன் சென்றது. தண்டலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வேன் மீது அரசு பஸ் பின்னால் மோதியது.

    இதில் வேனில் இருந்த மாணவர் தர்‌ஷன் (10) படுகாயம் அடைந்தான். ஊழியர்கள் விவேக், ராமு, மணிகண்டன், அமல்ராஜ், லலிதா என்ற பஸ் பயணியும் காயம் அடைந்தனர்.

    விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காஞ்சீபுரம் அருகே நள்ளிரவில் ரவுடியை அரிவாளால் வெட்டிய 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மடம் தெருவைச் சேர்ந்தவர் தேவா (25).

    காஞ்சீபுரம் பகுதிகளில் தேவா அடிக்கடி தகராறுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் வழக்குகள் உள்ளது.

    நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள இந்திரா பெட்ரோல் பின்புறம் இவரை மர்மநபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டி தப்பி சென்று விட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீசார் ரவுடி தேவாவை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    சம்பவம் குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு அவருடைய நண்பர்கள் சதீஷ், துரைபாபு, பாரதி காரணமாக இருக்கலாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மாமல்லபுரம் அருகே மாயமான பெண் எச்சூர்காட்டு பகுதியில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தாள். அவர் எப்படி இறந்தார். என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் பிரசாத கடை நடத்தி வந்தவர் சுனிதா (வயது32). கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து சுனிதா கணவரின் சகோதரியுடன் சேர்ந்து கடையை நடத்தி வந்தார்.

    கடந்த 7-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற சுனிதா திரும்பி வரவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மாமல்லபுரம் அடுத்த எச்சூர்காட்டு பகுதியில் அழுகிய நிலையில் சுனிதா பிணமாக கிடந்தாள்.

    மாமல்லபுரம் போலீசார் உடலை மீட்டு சுனிதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கொலை செய்து உடலை காட்டுக்குள் வீசி சென்றனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அரும்பாக்கத்தில் தண்ணீர் தொட்டி விற்பனை கடையில் ரூ. 18½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போரூர்:

    அரும்பாக்கம், வள்ளுவர் சாலையைச் சேர்ந்தவர் விஜயன். அரும்பாக்கம் ,பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.

    காலையில் அவர் கடை திறக்க வந்த போது ‌ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சிறிய லாக்கர் உடைக்கப்பட்டு ரூ. 18 லட்சத்து 55 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விஜயன் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பல்லாவரத்தில் குடிபோதையில் தகராறில் வியாபாரி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாம்பரம்:

    பல்லாவரத்தை அடுத்த நாகல்கேணி ஆதாம் நகரைச்சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நாகல்கேனி- திருநீர்மலை சாலையில் பன்றி இறைச்சி விற்பனை கடை நடத்தி வருகிறார்.

    நேற்றிரவு சீனிவாசன் மது போதையில் இரும்பு கம்பியால் சாலையில் சென்றவர்களை விரட்டியடித்தபடி தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த விஜய், அவரது நண்பர் பார்த்திபன் ஆகியோரை சீனிவாசன் கம்பியால் தாக்கினார்.

    இதனால் அவரிடம் இருவரும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது விஜய், பார்த்திபன் தங்களது நண்பர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    அங்கு 6 பேர் கொண்ட கும்பல் வந்தது. அவர்கள் சீனிவாசனை கையில் வைத்து இருந்த இரும்பு கம்பியை பிடுங்கி சரமாரியாக தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் சீனிவாசன் சம்பவ இடத் திலேயே இறந்தார். இதை கண்ட அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.

    இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மற்றும் பார்த்திபன் உட்பட 7 பேரை கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்

    டாஸ்மாக் கடைகள் விடுமுறை எதிரொலியாக மதுபாட்டில்கள் பதுக்கிய 40 பேரை போலீசார் கைது செய்தனர்.
    காஞ்சீபுரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் ஹதிமானிக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

    இதையொட்டி அவர் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு, திருட்டுத்தனமாக மது விற்பனை செய்பவர்களை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    இதையொட்டி காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே அதிக விலைக்கு விற்பனைக்கு வைத்திருந்த 1,700 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 40 பேரை கைது செய்தனர்.
    தேர்தல் நடத்தை விதி மீறல் தொடர்பாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பொன்னையா கூறினார். #LokSabhaElections2019
    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் மாதம் 10-ம் தேதி முதல் அமலில் உள்ளது.

    சில நாட்களாக கட்சி தலைவர்களின் கூட்டங்கள், 2-ம் கட்ட தலைவர்களின் பிரசாரங்களில் 2-ம் கட்ட தலைவர்களின் சர்ச்சை பேச்சுக்களால் தேர்தல் விதிமீறல் நடந்துள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் 28 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் 4122 வாக்குசாவடிகள் உள்ளன. அவற்றில் 236 பதற்றமான வாக்குசாவடிகள். 1357 வாக்குசாவடிகள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

    வாக்குசாவடிகளில் நடைபெறும் வாக்குபதிவு தொடர்பான நிகழ்வுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கட்டுப்பாட்டு அறையில் பதிவு செய்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் பாராளுமன்ற தேர்தலில் 20,500 வாக்குசாவடி அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். 4122 வாக்குசாவடிகளுக்கும் தலா 4 பேர் வீதம் பணிபுரிவர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருப்போரூரில் மட்டும் கூடுதலாக 6 பேர் பணியில் இருப்பர்.

    அனைத்து தொகுதிகளிலும் உள்ள வாக்குசாவடிகளில் மொத்தம் 17,102 வாக்குசாவடி அலுவலர்கள் தேர்தல் நாளன்று பணிபுரிய உள்ளனர். 3298 வாக்குசாவடி அலுவலர்கள் மாற்றாக வைக்கப்படுவர்.

    வாக்குப்பதிவு நடைபெறும் நேரத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று வாக்குப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளுக்கு மண்டல அலுவலர்கள் 578 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

    வெளி மாவட்ட கட்சியினர் அவரவர் ஊர்களுக்கு வெளியேற உத்திரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு செல்லாதவர்கள் மீது தேர்தல் சட்டத்தின் 133 வது பிரிவின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருமண மண்டபம், தங்கும்விடுதிகளில் வெளியூர் ஆட்கள் அதிக அளவில் தங்கி கட்சிப்பணியில் ஈடுபட்டாலோ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சாரம் செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    சென்னை, ஆண்டார் குப்பம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 49). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் இரவு பணிக்கு செல்லும் போது கம்பெனியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம்.

    நேற்று இரவு விஜய் வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்களுடன் அங்குள்ள அறையில் தூங்கினார்.

    அதிகாலையில் தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது விஜய் மாயமாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கம்பெனி அருகில் உள்ள குப்பை மேட்டில் விஜய் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விஜய் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து உடலை எரித்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

    இதேபோல் விஜய்யுடன் கடைசியாக இருந்தவர்கள் யார்-யார்? யாருடனும் மோதல் உள்ளதா? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

    சென்னை தொழிலாளி குப்பைமேட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருச்சியில் இருந்து வந்த சென்னை விமானத்தில் ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
    ஆலந்தூர்:

    திருச்சியில் இருந்து சென்னை வரும் விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக தேர்தல் ஆணையம் மூலம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து நேற்று மாலை திருச்சியில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த 2 வாலிபர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசினர். சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவர்களின் பையை திறந்து பார்த்தனர். அதில் 1 கிலோ 170 கிராம் தங்ககட்டிகளும், தங்க நகைகளும் இருந்தன.

    இதற்கான ஆவணம் அவர்களிடம் இல்லை. இதைத்தொடர்ந்து தங்க கட்டி, நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.38 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து தங்கம் கடத்தி வந்த 2 பேரிடம் விசாரித்த போது சிங்கப்பூரில் இருந்து தங்கத்தை கொண்டு வந்ததாக தெரிவித்தனர். அதிகாரிகளிடம் சிக்காமல் இருக்க விமானத்தில் திருச்சி சென்றுவிட்டு அங்கிருந்து சென்னைக்கு வந்ததாக கூறினர். #ChennaiAirport
    ×