என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு ரெயில் நிலையத்துககு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஈரோடு ரெயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளதாக கூறி தொலைபேசி இணைப்பைத் துண்டித்தார்.

    இதைத் தொடர்ந்து அங்குள்ள போலீசார் உடனடியாக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு இது குறித்து தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஈரோடு ரெயில்வே போலீஸாரும் ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பொன் கார்த்திக் குமார் மற்றும் போலீசார் ஈரோடு ரெயில் நிலையத்துக்கு விரைந்தனர்.

    ரெயில் நிலையம் முழுவதும் போலீஸார் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. ரெயில் நிலையத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் நுழைவு வாயில் பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலமாக பயணிகளின் உடமைகளை சோதனையிட்டனர்.

    மேலும் வெடிகுண்டு சோதனை நிபுணர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர் மேலும் ஈரோடு மோப்பநாய் கயல் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு வந்து பொருட்களை மோப்பம் பிடித்தது.

    ஈரோட்டில் உள்ள 4 பிளாட் பாரங்களில் போலீஸார் அங்குலம் அங்குலமாக சோதனை மேற் கொண்டனர். போலீசார் சோதனையில் மர்ம பொருள் எதுவும் சிக்கவில்லை .

    இந்நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெடி குண்டு மிரட்டல் விடுத்து பேசிய செல்போன் அழைப்பு ஈரோட்டில் இருந்து வந்தது தெரியவந்தது.

    போனில் பேசிய மர்ம ஆசாமி ஜியோ நெட்வொர்க் மொபைல் போனில் பேசியது தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மொபைல் எண்ணை ஆதாரமாகக் கொண்டு ஈரோடு போலீசார் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது இதையடுத்து சிம் கார்டு வாங்க ஏற்கனவே கொடுத்திருந்த தொடர்பு எண்ணை கண்டுபிடித்து போலீசார் விசாரணை மேற் கொண்டனர்.

    இதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த ஒருவருடைய எண் தான் அது போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் தனது செல்போன் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மாயமானதாக தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் மேலும் விசாரணை தீவிரப்படுத்தி செல்போன் பேசிய சிக்னலை வைத்து மேட்டுப்பாளைம் சிறுமுகை பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விசாரணை ரகசியமாக நடந்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஈரோடு சூரம்பட்டியில் குளியலறையில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி காமராஜர் முதல் வீதியை சேர்ந்தவர் சுரேஷ் (47). தொழிலாளி. இவர் வீட்டிற்கு வெளியே உள்ள பாத்ரூமிற்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சுரேஷ் வெளியே வராததால், அவரது மனைவி சுமதி(45) அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

    அப்போது, சுரேஷ் வழுக்கி விழுந்து, தலையில் அடிபட்டு மயங்கி சுயநினைவின்றி கிடந்தார். இதையடுத்து சுரேஷை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, சுரேஷ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் அரசு மாணவர்கள் விடுதிக்குள் புகுந்து தகராறில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகில் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி உள்ளது. இந்த விடுதியின் காப்பாளராக வெங்கடாச்சலம்(வயது40) உள்ளார்.

    இந்நிலையில், சம்பவத்தன்று இரவு மாணவர்கள் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அண்ணாநகரை சேர்ந்த முகமது தவுபிக்(24), அசோகபுரி ஓடைபள்ளம் பெரியார்நகரை சேர்ந்த வசந்தகுமார்(21) ஆகிய 2பேர் விடுதிக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்து, மாணவர்களின் சாப்பாட்டினை பிடிங்கி தகராறு செய்தனர்.

    இதைப்பார்த்த வெங்கடாச்சலம் அந்த வாலிபர்களை தட்டிகேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த முகமது தவுபிக், வசந்தகுமார் இருவரும் காப்பாளரை தகாத வார்த்தையால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசில் வெங்கடாச்சலம் அளித்த புகாரின் பேரில், முகமது தவுபிக், வசந்தகுமார் ஆகிய இருவரையும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது விசாரித்து வருகின்றனர்.

    டி.என்.பாளையம் அருகே பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர் பகுதியில் பேரூராட்சி குப்பைகள் அதிகளவு கொட்டப்பட்டு வருவதாக அந்த பகுதி மக்கள் கூறினர். இதை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அருகே உள்ள வாணிப்புத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பள்ளத்தூர்- கள்ளியங்காடு பகுதியில் பேரூராட்சி குப்பைகளை கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சுகாதாரச்சீர் கேடு ஏற்படுகிறது. இதனால் கொசு உற்பத்தி பெருகி நோய் பரவும் அபாயம் உள்ளதாக கூறி அந்த பகுதியை 40-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வணிப்புத்தூர் பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அவர்கள் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை ஏற்று கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க சென்ற மூதாட்டி கார் மோதி பலியான சம்பவம் தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    பெருந்துறை:

    பெருந்துறை, குன்னத்தூர்ரோடு, பகுதியை சேர்ந்த வெங்கட்டராமன் என்பவரது மனைவி பத்மாவதி(63). தினமும் பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள தினசரி மார்க்கெட்டில் காய்கறி வாங்க செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்றும் காலை வழக்கம் போல் மார்க்கெட்டிற்கு சென்ற இவர் அங்கு ரோட்டை கடந்த போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட பத்மாவதி தலையில் பலத்த அடிபட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்து போனார். இது தொடர்பாக பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் மோதிச்சென்ற காரினை அடையாளம் கண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    கோபி அருகே உள்ள கூகலூர் பகுதியில் பெண்கள் தார் சாலை போட வலியுறுத்தி சேறும் சகதியுமான உள்ள பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    கோபி:

    கோபி அருகே உள்ள கூகலூர் அடுத்துள்ள பூலமேடு. இப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    இந்த ஊரில் உள்ள ரோடு மண் பாதையாக பல ஆண்டாக உள்ளது. இதில் தார் சாலை போட வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

    பொதுப்பணி துறைக்கு சொந்தமான அந்த இடத்தில் ரோடு போட பொதுப்பணி துறை அதிகாரிகளிடமும் பொதுமக்கள் மனுக்கள் கொடுத்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.

    தற்போது கோபி மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.

    இந்த மழையால் பூலமேடு மண்பாதை ரோடு நடந்து கூட போக முடியாத அளவு சேறும் - சகதியுமாக உள்ளது.

    இந்த நிலையில் அப்பகுதி பெண்கள் தார் சாலை போட வலியுறுத்தி அந்த இடத்தில் சேறும் சகதியுமான உள்ள பாதையில் நாற்று நட்டு நூதன போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

    பெண்களின் இந்த நூதன போராட்டத்தை அந்த வழியாக சென்றவர்கள் வேடிக்கையுடன் பார்த்து சென்றனர்.
    மூடப்படாத ஆழ்துளை கிணற்றை பொதுமக்கள் அருகில் இருந்த பெரிய கல்லை தூக்கி வைத்து மூடி விட்டனர்.

    அந்தியூர்:

    திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து பலியானான்.

    தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய இந்த சம்பவத்துக்குப்பிறகு பாதுகாப்பற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

    அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பாதுகாப்பு இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறிந்தால் தகவல் தெரிவிக்கும்படி பொதுமக்களை கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பருவாச்சி ஊரில் இருந்து அம்மன்பாளையம் செல்லும் ரோட்டில் ஆட்டுக்காரன்புதூர் என்ற ஊரில் ரோட்டோரமாக பயன்பாடு இல்லாமல் ஒரு ஆழ்துளை கிணறு இருந்தது.

    இப்படி ரோட்டோரம் பயன்பாடு இல்லாமல் இருந்த அந்த ஆழ்துளை கிணறு அதிகாரிகள் யார் கண்ணிலும் படவில்லை.

    இதற்கிடையே அந்த வழியாக சென்ற பொது மக்கள் இதை கண்டு திடுக்கிட்டனர்.

    சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்ததை கண்டு வேதனையில் இருந்த அந்த வழியாக சென்ற மக்கள் அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை தூக்கி திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றின் மீது வைத்து மூடி விட்டனர்.

    இதனால் அப்பகுதியில் இருந்த அச்சம் நீங்கி உள்ளது.

    இந்த செயல்படாத ஆழ்துளை கிணற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

    சத்தியமங்கலம் அருகே கூண்டு வைத்து பிடித்த சிறுத்தை மீண்டும் ஊருக்குள் புகுந்தது தோட்டத்தில் புகுந்தால் ஊர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள குய்யணூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம். இவருக்கு அப்பகுதியில் தோட்டம் உள்ளது.

    கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு இவரது தோட்டத்தில் வனப்பகுதியிலிருந்து புகுந்த ஒரு சிறுத்தை தோட்டத்தில் கட்டப்பட்டு இருந்த இரண்டு ஆடுகளை ஒரு நாள் விட்டு ஒரு நாள் வந்து அடித்து கொன்றது.

    இதனால் அந்த ஊர் மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். “சிறுத்தையால் தங்கள் உயிருக்கு ஆபத்து அதை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும்” என வனத்துறையினரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று வன அதிகாரிகள் அவரது தோட்டத்தில் கூண்டு வைத்தனர் தோட்டத்துக்குள் புகுந்த சிறுத்தை அந்த கூண்டில் சிக்கியது. பிறகு அந்த சிறுத்தைக்கு கால்நடை டாக்டர்கள் மயக்க ஊசி போட்டு கூண்டுடன் வனத்துறை வண்டியில் ஏற்றினர்.

    பின்பு அந்த சிறுத்தை தெங்குமர கடா செல்லும் அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்று படுகையில் திறந்து விடப்பட்டது. கூண்டிலிருந்து வெளியே பாய்ந்து சிறுத்தை காட்டுக்குள் புகுந்து ஓடியது.

    சிறுத்தை பிடிப்பட்ட மகிழ்ச்சியில் இருந்த குய்யனூர் பகுதி மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஆடுகளை அடித்து கொன்று தின்று ருசி கண்ட அதே சிறுத்தை மீண்டும் அதே கிராமமான குய்யனூர் அருணாச்சலம் தோட்டத்திற்குள் இன்று அதிகாலை புகுந்தது. அங்கு கட்டப்பட்டிருந்த 4 ஆடுகளில் ஒரு ஆட்டை அடித்து கொன்றது. அதன் பாதி உடலை தின்று மீதி உடலை போட்டுவிட்டு சென்று விட்டது.

    இன்று காலை மீண்டும் சிறுத்தை தோட்டத்துக்குள் புகுந்து ஆட்டை கொன்றதை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த விவசாயி அருணாச்சலம் நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இந்தச் சம்பவம் அறிந்த அந்த கிராம மக்கள் திரண்டனர் ஏற்கனவே பார்த்த அதே சிறுத்தை தான் மீண்டும் வந்துவிட்டது என்று விவசாயி அருணாசலமும் பொதுமக்களும் கூறினர். இதுகுறித்து வனத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை பிடித்து திரும்பி வரமுடியாத அளவு மலை மேலே உள்ள காட்டில் கொண்டு விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    மேலும் இதனை வலியுறுத்தி கிராம மக்கள் சிறுத்தையால் கொல்லப்பட்ட ஆட்டின் உடலுடன் சத்தியமங்கலம் - மைசூர் ரோட்டில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து பாதிக்கப் பட்டது பரபரப்பு நிலவியது.

    சம்பவ இடத்துக்கு வனத்துறையினரும் போலீசாரும் சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    குழந்தை சுஜித்தை மீட்க எடுக்கப்பட்ட பணி குறித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறை கூறி வருவதாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
    ஈரோடு:

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணி தலைவர் யுவராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் இரண்டு வயது குழந்தை சுர்ஜித் வில்சன் தவறி விழுந்த செய்தி அறிந்ததும் குழந்தையை மீட்பதற்காக தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. ஆனால் அனைத்து நடவடிக்கைகளும் பலனளிக்காமல் போனது துரதிர்‌ஷ்டவசமானது.

    அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் இரவு பகலாக மீட்பு பணிகளை மேற்கொண்டனர். கடினமான பாறைகள் இருந்ததால் மீட்புப் பணிகளில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அவற்றை வல்லுனர் குழு உதவியுடன் சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் சிறுவனை காப்பாற்ற முடியாமல் சடலமாக மீட்கப்பட்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

    தற்போது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்பு பணியை திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் குறை கூறி வருகிறார். இது கண்டனத்துக்கு உரியதாகும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    ஈரோடு:

    தமிழக சுகாதாரத்துறை அனைத்து அரசு மருத்துவர்களுக்கும் காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்க வேண்டும், அரசு சேவை மருத்துவர்களுக்கு முதுநிலை பட்ட மேற்படிப்பில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஈரோடு அரசு ஆஸ்பத்திரி முன்பு அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் நவீன் குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு டாக்டர்கள் அலுவலர் சங்க ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் முன்னிலை வகித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர்.
    ஈரோடு அருகே தோட்டத்தில் உள்ள குட்டையில் விழுந்து 4 வயது சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த திகினாரை கிராமத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவி வினிதா.

    இவர்களுக்கு அர்ஷித் (வயது 24) என்ற மகனும் 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

    விவசாயியான செல்வகுமாரின் தோட்டத்தையொட்டியே வீடும் உள்ளது. வீட்டின் அருகே ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து மின்மோட்டார் வழியாக தண்ணீர் எடுத்து தோட்டத்துக்கு பாய்ச்சி வந்தார்.

    மேலும் வீட்டின் அருகே 2 அடி நீளம் 3 அடி ஆழம் 8 அடி அகலத்தில் ஒரு சிறிய குட்டையும் வெட்டி தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை அந்த குட்டையில் நிரப்பி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் நேற்று மதியம் செல்வகுமாரின் 4 வயது சிறுவன் அர்ஷித் வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்தான். திடீரென அவனை காணவில்லை. வீட்டில் வேலையாக இருந்த குழந்தையின் தான் வினிதா அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் முன்பும் தோட்டத்திலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.

    வீட்டின் அருகே உள்ள சிறிய குட்டையில் எட்டி பார்த்தபோது கடும் அதிர்ச்சி அடைந்தார். குட்டையில் மூழ்கியபடி கிடந்த சிறுவனை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு உடனடியாக ஆம்புலன்சு மூலம் தாளவாடி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    பிறகு கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த பரிதாப சம்பவம் குறித்து தாளவாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மணப்பாறை நடுகாட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த துக்கத்தில் இருந்த திகினாரை கிராம மக்கள் தங்கள் ஊரிலேயே விளையாடி கொண்டிருந்த சிறுவன் குட்டையில் தவறி விழுந்து பலியான சம்பவத்தை அறிந்து கண்ணீர் விட்டு அழுதனர்.
    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டங்களில் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை மூடுங்கள் என்று கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    ஆழ்துளை கிணறு மூடப்படாமல் உள்ள பயனற்ற கிணறுகள் குறித்து கலெக்டர் கதிரவன் பொதுமக்களுக்கு விடுத்த வேணடுகோளில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் தோட்டங்கள் மற்றும் நிலங்கள், அரசுக்குச் சொந்தமான நிலங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான நிலங்களில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள் இருப்பின் பொதுமக்கள் அதனை உடனே சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    தனியார் நிலங்களிலுள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளியிலுள்ள தூர்ந்துபோன கிணறுகளை சம்பந்தப்பட்ட நிலஉரிமையாளர்கள் போர்க்கால அடிப்படையில் மூட வேண்டும். தனியரால் நிறுவப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்படுவதுடன், காவல்துறை மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    அதேபோல் அரசுத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் ஏதேனும் பாதுகாப்பான முறையில் மூடப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கு பொறுப்பான அனைத்து அலுவலர்கள் மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேலும் வருவாய்த்துறை அலுவலர்கள், மாநகராட்சி ஆணையர்- நகராட்சி ஆணையர்கள் பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் வேளாண்மைத்துறைஅலுவலர்கள் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு மூடப்படாமல் இருக்கும் பயனற்ற ஆபத்தான நிலையில் இருக்கும் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி தூர்ந்து போன கிணறுகளை கண்டறிந்து (தனியார் நிலம் உட்பட) அவற்றை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    அவ்வாறு மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ள பயனற்ற கிணறுகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் பொதுமக்கள் 1077 மற்றும் 0424 - 2260211 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட கலெக்டர் கதிரவன் கேட்டுக் கொண்டுள்ளார்.
    ×