என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக காலை மற்றும் மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆனால் ஈரோடு அணைப்பகுதிகளான வரட்டுப்பள்ளம் கொடிவேரி குண்டேரிப்பள்ளம் பவானிசாகர் பகுதிகளில் அவ்வப்போது மிதமான அளவு மழை பெய்து வந்தது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு மிதமான மழை முதல் பலத்த மழை பெய்தது. குறிப்பாக அணைப்பகுதியில் அண்ணா வரட்டுப்பள்ளம் கொடிவேரி குண்டேரிப்பள்ளம் அணை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதில் அதிகபட்சமாக கொடிவேரியில் 44.2 மீட்டர் மழை பதிவாகியது. ஏற்கனவே ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை பெய்ததால் மாவட்டத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் ஏரி குளங்கள் நிரம்பி வருகிறது.
சத்தியமங்கலம், பெருந்துறை, மொடக்குறிச்சி, அம்மாபேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கொடிவேரி அணையில் ஏற்கனவே பவானிசாகர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவு கொடிவேரியில் பலத்த மழை பெய்ததால் அணைக்கு இருந்து நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழையின் அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடிவேரி - 44.2
குண்டேரிபள்ளம் - 26. 2
வரட்டு பள்ளம் - 20.2
ஈரோடு - 5
கவுந்தப்பாடி - 4.2
பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து மிதமான அளவு நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் நீர்வரத்து குறைந்துள்ளது என்றாலும் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 105 அடியில் உள்ளது. அணைக்கு 3797 கன அடி தண்ணீர் என கணிசமான நிலையில் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு 1600 கனஅடியும் கீழ்பவானி வாய்க்காலுக்கு 2200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் அடுத்த துண்டன் சாலை பகுதியில் குற்றாலத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்குள் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த கால் பவுன் பொட்டு தாலி, மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர்.
இன்று காலை கோவில் பூசாரி பூஜைக்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
கொள்ளை நடந்த கோவில் அருகே வீடு வணிக நிறுவனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சித்தோடு:
பவானி, சித்தோடு, நசியனூர் அருகிலுள்ள சாமிகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் செங்கோடன் மகன் பழனிச்சாமி (வயது 52). நேற்று இரவு பழனிச்சாமி டி.வி.எஸ். எக்ஸ்.எல். மொபெட்டில் வந்து கொண்டு இருந்துள்ளார்.
சேலம் கோவை தேசிய நெடுஞ்சாலை சாமி கவுண்டன் பாளையம் பிரிவு பகுதியில் வந்து கொண்டு இருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு லோடு ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், பலத்த காயம் அடைந்த பழனிச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
மேலும் அவ்வழியாக மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த கணவன் மனைவி இருவர் மீதும் மோதியது.
இதில் கணவன்-மனைவி இருவரும் காயம் அடைந்தனர். சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு இன்ஸ்பெக்டர் கதிர்வேல் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.
ஈரோடு:
காசிபாளையம் 110-22 கி.வோ துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் 22 கி.வோ சென்னிமலை ரோடு மின் பாதையில் புதிததாக மின் கம்பங்கள் பொருத்தும் பணி நடக்கிறது.
இதையொட்டி நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
சென்னிமலை ரோடு, கல்யாண சுந்தரம் வீதி, தொழிற்பேட்டை, பெரிய தோட்டம், விவேகானந்தர் நகர், ஆவன் கால்நடை தீவனக் கிடங்கு, எச்டி. எஸ்.சி.-1, பழைய ரெயில் நிலையம் ரோடு, கள்ளுக்கடை மேடு, ஜீவானந்தம் ரோடு, நேதாஜி ரோடு, மரப்பாலம் ரோடு, விவிசிஆர் நகர் அக்ரகாரம் வீதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
இந்த தகவலை ஈரோடு நகரியம் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.
பவானி அருகே உள்ள கல்பாவி தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அஜித் குமார் (வயது 21).
இவர் பவானி மேட்டூர் ரோட்டில் இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போதுபவானி சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே சென்று கொண்டிருந்த போது அவருக்கு முன்னால் ஒரு சுற்றுலா பஸ் சென்றது.
முன்னாள் சென்ற அந்த பஸ்சின் பின் பகுதியில் அஜித்குமார் சென்ற இரு சக்கர வாகனம் எதிர் பாராதவிதமாக மோதியது. இதில் நிலை தடுமாறி விழுந்த அவர் பஸ்சின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அஜித்குமார் உடலை மீட்டு பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்கு பின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இது குறித்து பவானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு சூரம்பட்டி குமரன் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். சலவைத் தொழிலாளி முழுதும் மனைவி பிரியா (வயது 21). இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளான். பிரியா வீட்டு வேலை செய்து வந்தார். பிரியாவின் தாய் வீடு அவர் குடியிருக்கும் வீடு அருகே உள்ளது.
இந்நிலையில் சம்பவத்தன்று தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற பிரியா பின்னர் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாஸ்கரன் சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதில் மாயமான தனது மனைவியை மீட்டு தரவேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பிரியாவை தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கனிராவுத்தர் குளம், வசந்தம் நகரைச் சேர்ந்தவர் பாலமுரளி (வயது53) . ஜவுளி வியாபாரி. இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெங்களூரிலும், இளைய மகன் திண்டலிலும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பாலமுரளி ஜவுளி வியாபாரம் தொடர்பாக கோத்தகிரிக்கு சென்று விட்டார். இதனையடுத்து சாந்தி தனது இரண்டு மகன்களுடன் வீரப்பன் சத்திரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இன்று காலை சாந்தி மீண்டும் மகன்களுடன் தனது வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு சாந்தி அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறிக் கிடந்தன. வீட்டின் அறையில் இருந்த பீரோ கதவு திறக்கப்பட்டு அதில் இருந்த 6 பவுன் நகை, ரூ.75 ஆயிரம் ரொக்கம் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
மேலும் வீட்டின் பூஜை அறையில் இருந்த வெள்ளி குத்து விளக்கு, பூஜை பொருட்கள், வெள்ளிகலசம், வெள்ளித் தட்டு போன்ற பொருட் களையும் மர்ம நபர்கள் அள்ளிச் சென்றனர்.
இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதை பகுதியில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு கள்ளுக்கைடமேடு ஈ.வி.ஆர். விதியை சேர்ந்தவர் சாகர் ரகுநாத் (வயது 27). இவருடைய மனைவி ஷர்தா (23). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் ஷர்தா ஈரோடு ரெயில்வே எலக்ட்ரிக் லோகோ பணிமனையில் பயிற்சி ஊழியராக உள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை ஷர்தா வீட்டில் இருந்த போது காபி போடுவதற்காக மண்ணெண்ணெய் ஸ்டவ்வை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து அவர் மீது தீப்பிடித்தது.
இதில் ஷர்தாவின் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது வேதனையால் அலறினார். அப்போது அவருடைய கணவர் சாகர் ரகுநாத் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஷர்தாவின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தார்.
தீயில் கருகி படுகாயமடைந்த ஷர்தாவை அவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஷர்தாவுக்கு 90 சதவீத தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி ஷர்தா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி வழிந்தன.
குறிப்பாக குண்டேரிப்பள்ளம் அணை நிரம்பி வழிந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்டத்தின் பிரதான அணையான பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 கன அடியை எட்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களா கனமழை அளவு குறைந்து மீண்டும் வெயில் வாட்டி எடுத்தது. இந்நிலையில் நேற்று இரவு ஈரோடு புறநகர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. பவானியில் அதிகபட்சமாக 54 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. குண்டேரிப்பள்ளம் அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலத்தில் இரவு 12 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை தொடர்ந்து மழை பெய்தது. சத்தியமங்கலம், வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ராஜ் நகர், திம்பம் மலைப்பகுதியிலும் பலத்த மழை பெய்தது. இதைப்போல் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மழை பெய்தது.
ஈரோடு மாநகர் பகுதியை பொருத்தவரை நேற்று காலை வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை திடீரென லேசாக மழை பெய்ய தொடங்கியது. சுமார் 40 நிமிடத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது.
கோபி:
கோபி அருகே ல. தொட்டிகபாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது45). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மஞ்சள் வியாபாரம் செய்து வந்தார். தனது பாட்டி நாகம்மாளுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் சீனிவாசனுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அவர் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.
இதனால் மனவேதனையில் இருந்த சீனிவாசன் நேற்று வீட்டில் விஷம் குடித்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சீனிவாசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு தெற்கு கோட்டத்திற்குட்பட்ட கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது:-
கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டு வலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன் பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆணைக்கல்பாளையம், ஈ.பி.நகர், கே.ஏ.எஸ்.நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூர், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம், காகத்தான்வலசு.
இதேபோல் எழுமாத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க இருப்பதையொட்டி கீழ்கண்ட இடங்களில் மின்சாரம் இருக்காது.
எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ள பெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி மற்றும் 24 வேலம்பாளையம்.
இந்த தகவலை ஈரோடு தெற்கு செயற்பொறியாளர் முத்துவேல் தெரிவித்துள்ளார்.
சித்தோடு:
சித்தோடு அருகிலுள்ள நல்லகவுண்டன்பாளையம் பகுதியில் வசிப்பவர் முருகன் என்கிற சவுந்தர் (வயது 31) இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது.
இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி சண்டை மற்றும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, சவுந்தர் மனைவியை அழைத்தும் வராததால் தகராறில் ஈடுபட்டு தனது வீட்டிற்க்கு வந்துள்ளார்.
நேற்று காலை வெகு நேரமாகியும் சவுந்தர் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்க்கையில் வீட்டின் விட்டத்தில் சேலையில் தூக்கிட்டு சவுந்தர் தற்கொலை செய்துகொண்டு இறந்து ள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த சித்தோடு போலீசார் சம்பவ இடம் சென்று பிரேதத்தை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






