என் மலர்tooltip icon

    ஈரோடு

    கோபியில் மனைவியை தரக்குறைவாக பேசியதால் தொழிலாளியை விறகு கட்டையால் அடித்து கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    புதுச்சேரி பிள்ளையார் குப்பம் மணப்பேட் ரோட்டை சேர்ந்தவர் குமார் (வயது 55). இவர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே தண்ணீர் பந்தல் புதூரில் உள்ள ஒரு தனியார் பேப்பர் மில்லில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு சம்பளப் பணத்தை வாங்கிக்கொண்டு வெளியே சென்றவர் பின்னர் மீண்டும் தான் தங்கியிருந்த அறையில் வந்து தூங்கினார். அந்த மில்லில் பணிபுரியும் இரவு நேர காவலர்கள் குமார் தங்கியிருந்த அறை வழியாகச் சென்றபோது குமார் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் ஊழியர்கள் வந்து குமாரை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. குமார் உடலில் சிறு சிறு காயங்கள் இருந்தது தெரிய வந்தது.

    இது குறித்து மில் மேலாளர் கோபி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரது உடலை மீட்டு கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட திடுக்கிடும் தாவல் தெரிய வந்தது. குமாருக்கும் அதை மில்லில் வேலை பார்க்கும் சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்த நிலையில் குமார் உடல் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    குமார் அறையில் தங்கி இருந்தவர்களிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டனர். இதில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது தெரிய வந்தது.

    குமாருடன் தங்கி இருந்த புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிசி சேர்ந்த பெலிக்ஸ்ஸ் பிரவின் மனைவி பற்றி குமார் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பெலிக்ஸ் பிரபு மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த ஹரிநாத் இருவரும் விறகு கட்டையால் குமாரை தாக்கினர்.

    இதில் பலத்த அடிபட்டு குமார் இறந்தது தெரிய வந்தது. இதையடுத்து கோபி போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நடுப்பாளையம் பகுதியில் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    ஈரோடு:

    ஈரோடு தெற்கு கோட்டத்துக்குட்பட்ட நடுப்பாளையம் 110-22-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி வரும் 26-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    நடுப்பாளையம், தாமரைப் பாளையம், மலையம் பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், ஈஞ்சம்பள்ளி, கொளாநல்லி, கருமாண்டாம்பாளையம், பி.கே.பாளையம், சோளங்காபாளையம், ஆராம்பாளையம், பாசூர், எம்.கே.புதூர், ஆர்.என்.பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம் பாளையம், குட்டப்பாளையம்.

    இந்த தகவலை ஈரோடு தெற்கு கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் முத்து வேல் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு அருகே பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அட்டவணை அனுமன்பள்ளி ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் முருகன்(47). விவசாய கூலி தொழிலாளி.

    சம்பவத்தன்று அரச்சலூர் சின்னக் கிணத்துப்பாளையத்தில் ஈஸ்வரன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் வேலைக்கு சென்றார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, முருகனை பாம்பு கடித்து விட்டது.

    இதைத்தொடர்ந்து முருகனை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து அரச்சலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோட்டில் கல்லூரி மாணவி திடீரென மரணம் அடைந்தார். என் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் ராமாபுரம் புதூர் அன்பு நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சாதனா (வயது 20). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். இதற்காக அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மாணவிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் இது குறித்து காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அந்த மாணவி சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    பின்னர் மாணவியின் தந்தை சத்தியமூர்த்தி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தனது மகளுக்கு இதுவரை வலிப்பு வந்ததில்லை என்றும் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இறந்த மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருவதால் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே நீடிக்கிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு வாரத்துக்குப் பிறகு தற்போது தொடர்ந்து பெய்து வருகிறது.

    நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது. இதில் குண்டேரிபள்ளம், வரட்டுப்பள்ளம் மற்றும் கொடிவேரி அணை பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்த நிலையில் நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    ஈரோட்டில் நேற்று மாலை 4 மணியளவில் சுமார் 20 நிமிடம் மழை பெய்தது. புறநகர் பகுதியிலும் இந்த மழை கொட்டியது. இதேபோல் கோபி, சென்னிமலை, மொடக்குறிச்சி, பெருந்துறை, கவுந்தப்பாடி, பவானி உள்பட அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையால் ரோட்டின் இருபுறமும் தண்ணீர் ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.

    மேலும் இன்று காலையும் ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. இன்று காலை கோபி, சத்தி உள்பட பல இடங்களில் பனிமூட்டம் காணப்பட்டது.

    இதேபோல் பவானிசாகர் அணை தனது முழு கொள்ளளவான 105 அடியிலேயே அணையின் நீர்மட்டம் நீடிக்கிறது. மேலும் அணைக்கு கணிசமான அளவிலும் தண்ணீர் வரத்து உள்ளது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 3687 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு வினாடிக்கு 1600 கனஅடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2100 கனஅடியும் என உபரிநீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோட்டில் இலங்கை அகதி தீக்குளித்து பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    கன்னியாகுமரி மாவட்டம் விலவன்கோடு இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருபவர் லோகநீதி (வயது 33). இவரது மனைவி செல்வி(28). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். லோகநீதி பெயிண்டிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில் லோக நீதிக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் லோகநீதி கடந்த 2 மாதத்திற்கு முன்பு கோபித்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் ஈஞ்சம் பள்ளி இலங்கை அகதிகள் முகாமில் இருக்கும் தனது தாயாருடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று லோகநீதி வாழ்க்கையில் விரத்தியடைந்து தற்கொலை செய்ய முடிவெடுத்து வீட்டின் கழிவறைக்கு சென்று திடீரென மண்ணெண்ணையை தனக்குத்தானே உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லோகநீதி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மலையம் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளோட்டில் வாய்க்காலில் துணி துவைத்தவர் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள வெள்ளோட்டை அடுத்த கவுண்டச்சிபாளையம் காவேரி நகரை சேர்ந்தவர் கலைவாணன் (வயது 43).

    கலைவாணன் அந்த பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் துணிகளை துவைத்து கொண்டிருந்தார். அப்போது வலிப்பு ஏற்பட்டு தண்ணீரில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து விட்டார்.

    இது பற்றி கிடைத்த தகவலின் பேரில் வெள்ளோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று நீரில் மூழ்கி பலியான கலைவாணன் உடலை மீட்டனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சத்தியமங்கலம் அருகே மீண்டும் ஊருக்குள் சிறுத்தை புகுந்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள புது குய்யனூர் கிராமம் வனப்பகுதியையொட்டி உள்ளது. இந்த ஊருக்குள் கடந்த 2 வாரத்துக்கு முன் ஒரு சிறுத்தை புகுந்தது.

    வீட்டு தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளை அடுத்தடுத்து தின்று வேட்டையாடியது.

    தொடர்ந்து 2 நாட்களாக வந்து ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கிராம மக்களின் வேண்டுகோளை ஏற்று வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்தனர். எதிர் பார்த்தப் படி சிறுத்தை கூண்டுக்குள் சிக்கியது.

    பிடிப்பட்ட சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியான தெங்குமரகடா செல்லும் வழியில் மங்கலப்பட்டி என்ற காட்டில் விட்டனர்.

    அதன் பிறகு சிறுத்தையின் பீதியில் இருந்து புது குய்யனூர் கிராம மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

    இந்த நிலையில் இப்போது அந்த கிராம மக்களை இன்னொரு சிறுத்தை பீதியில் உள்ளாக்கி உள்ளது.

    புது குய்யனூரை சேர்ந்தவர் முத்துசாமி விவசாயி. இவரது வீட்டையொட்டி தோட்டம் உள்ளது. தோட்டத்தில் செண்டு மல்லி பயிரிட்டுள்ளார். நேற்று இரவு அவரது தோட்டத்துக்குள் புகுந்த ஒரு சிறுத்தை அங்கு கட்டப்பட்டிருந்த 2 ஆடுகளில் ஒரு ஆட்டை கயிற்றை அறுத்து கயிற்றுடன் தூக்கி சென்று விட்டது.

    இன்று காலை தோட்டத்துக்கு வந்த பார்த்த விவசாயி முத்துசாமி ஆடு ஒன்று இல்லாததை கண்ட திடுக்கிட்டார். மேலும் அருகே சிறுத்தையின் கால் தடம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஊர் மக்கள் அங்கு திரண்டனர். சிறுத்தை தூக்கி சென்ற ஆட்டை காட்டுக்குள் சிறிது தூரம் சென்று பார்த்தனர். ஆனால் ஆட்டின் உடலை காணவில்லை.

    சம்பவ இடத்துக்கு வனத் துறையினரும் விரைந்து வந்து பார்வையிட்டனர். ஏற்கனவே இதே ஊருக்குள் புகுந்த சிறுத்தையை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்தது போல் இந்த சிறுத்தையையும் கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

    பவானி ஆற்று பாலத்தின் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் நஞ்சை புளியம்பட்டி பவானி ஆற்று பாலத்தின் அருகே தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சாவை மர்மநபர் ஒருவர் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து பங்களாபுதூர் போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நஞ்சை புளியம்பட்டி அரிசன காலனியை சேர்ந்த சிவா என்ற மூர்த்தி (40) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 150கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு கல்லூரி மாணவி திடீரென மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஈரோடு:

    நாமக்கல் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சாதனா (வயது 19) ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு பயோ மெடிக்கல் படித்து வந்தார். இதற்காக அந்த கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மாணவிக்கு திடீரென வலிப்பு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விடுதியில் தங்கி இருந்த மற்ற மாணவிகள் இது குறித்து காப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர்.

    பின்னர் அந்த மாணவி சிகிச்சைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அந்த மாணவி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து டவுன் பிஎஸ்பி ராஜு தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே ஆற்றில் குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானி ஆற்று பாலத்தில் நடந்து சென்ற வாலிபர் திடீரென பாலத்தில் இருந்து பவானி ஆற்றில் குதித்தார்.

    ஆற்றில் தண்ணீர் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் அவர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு மூழ்கி பலியானார்.

    அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து கொடுத்த தகவலின் பேரில் சத்தியமங்கலம் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர். ஆற்றில் குதித்த வாலிபரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

    பல மணி நேர தேடுதலுக்குப்பிறகு ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பிறகு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்த வாலிபர் யார்? என கண்டு பிடித்தனர்.

    தற்கொலை செய்து கொண்டவர் சத்தியமங்கலம் அடுத்த கோட்டுவீராம் பாளையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் யசோதரன் (31) என தெரிய வந்தது. இவர் எம்.டெக் படித்த பட்டதாரி ஆவார். திருமணம் ஆகவில்லை.

    வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக பவானி ஆற்றில் யசோதரன் குதித்து தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பவானி அருகே போலீஸ் என்று போலி ஐடி கார்டை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
    பவானி:

    பவானி அடுத்து மூன்று ரோடு பகுதியில் ஒருவர் தான் போலீஸ் என்று போலி ஐடி கார்டை வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பணம் வசூல் செய்யும் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.

    சந்தேகமடைந்த பொதுமக்கள் அவரை பிடித்து பவானி போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின்படி பவானி சப்-இன்ஸ்பெக்டர் வடிவேல் குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பொன் நகர் ரோடு பகுதியைச் சேர்ந்த கோபால் என்பவரது மகன் கருணாநிதி 40 என தெரியவந்தது.

    மேலும் இவர் சேலத்தில் ஓம் கார்டாக வேலை செய்து வந்துள்ளார்.

    ×