என் மலர்tooltip icon

    ஈரோடு

    பெருந்துறையை அடுத்துள்ள கிரேநகர் அருகே பஞ்சு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெருந்துறை:

    தெலுங்கானா, ஐதராபாத் பகுதியில் இருந்து பஞ்சு லோடு ஏற்றிய லாரி ஒன்று கோவையை நோக்கிசென்று கொண்டிருந்தது. இந்த லாரியை திருச்சி மாவட்டம் முசிறி, மங்கலம் பகுதியை சேர்ந்த செல்லமுத்து என்பவரது மகன் கஸ்தூரி ராஜன்(45) என்ற டிரைவர் ஒட்டி வந்தார்.

    அவர் பெருந்துறையில் இருந்து கிரேநகர் வழியாக சென்று கொண்டிருந்தார். நேற்று நள்ளிரவு ஒருமணியளவில் லாரியின் பின்பகுதியில் இருந்து புகையுடன் பற்றி எரிவதை கண்ணாடி வழியாக பார்த்த டிரைவர் கீழே இறங்கி பார்த்த போது லாரியில் இருந்த பஞ்சுலோடு கொழுந்து விட்டு எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து பெருந்துறை தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர்.

    ஆனால் லாரியின் இருந்து பஞ்சு லோடு முற்றிலும் எரிந்து போனது. லாரியில் ஏற்பட்ட மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என தெரிகிறது.

    கடந்த ஆண்டில் 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று தொடர்ந்து விதிமுறைகள் மீறி செயல்படும் ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, சித்தோடு, பவானி உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஒரு சில ஆலைகளில் இருந்து கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படுவதால் காவிரி பவானி உள்ளிட்ட ஆறுகள் மாசடைந்து வருகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.

    விதிமுறை மீறி கழிவு நீரை வெளியேற்றும் ஆலைகள் மீது மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். முதல்கட்டமாக ஆலைகளுக்கு செல்லும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் ஈரோட்டில் சுமார் 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது இதுதவிர வருவாய்த்துறை மூலம் சுமார் ரூ. 20 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    ஈரோடு , பவானி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. இவற்றுள் சில ஆலைகள் இரவு நேரங்களில் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆறுகளிலும், நீர் நிலைகளிலும் கலந்து விடுகின்றனர்.

    இதனால் மாசு ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் அவ்வப்போது ஆய்வு செய்து வந்து விதிமுறைகளை மீறும் ஆலைகளுக்கு அபராதம் மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டில் மட்டும் இதுவரை 60 சாயப்பட்டறைகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதைப் போன்று தொடர்ந்து விதிமுறைகள் மீறி செயல்படும் ஆலைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆண்டு நோய் தாக்குதல் எதுவும் இல்லாமல் நெல் மணிகள் இயற்கையாக விளைந்துள்ளது. நெல் அறுவடைக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் மீண்டும் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஈடுபடுவார்கள்.
    சூரம்பட்டி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பரவலாக மழை பெய்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளதால் பவானிசாகர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை அடைந்துள்ளது.

    மேலும் மாவட்டத்திலுள்ள வரட்டுப்பள்ளம் அணை குண்டேரிப்பள்ளம் அணை ஏரி குளங்கள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் போதிய அளவில் இருப்பு உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து விவசாயிகள் தங்களது நிலங்களில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டு வருகிறார்கள். ஈரோடு காலிங்கராயன் வாய்க்காலில் இந்த ஆண்டு 3,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிடப்பட்டுள்ளனர்.

    இந்த நெல் பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் காட்சியளிக்கின்றன காலிங்கராயன் பாளையம், பெரிய அக்ரகாரம், வைராபாளையம், பெரிய செட்டிபாளையம், சாவடிபாளையம் போன்ற பகுதிகளில் பயிரிடப்பட்டு உள்ள நெல் பெயர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.

    அறுவடை தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது:

    இந்த மாதம் முதல் வாரத்தில் இந்த பகுதிகளில் அறுவடை தொடங்கி விடும். இந்த ஆண்டு நோய் தாக்குதல் எதுவும் இல்லாமல் நெல் மணிகள் இயற்கையாக விளைந்துள்ளது. இந்த ஆண்டு மழை, வெயில், பனி போன்ற தட்ப வெப்பநிலை விவசாயத்திற்கு இதுவரை சாதகமாகவே அமைந்துள்ளது.

    இதனால் இந்த ஆண்டு பயிர் சாகுபடி அமோகமாக இருக்கும் நெல் அறுவடைக்கு பிறகும் இதே நிலை நீடித்தால் மீண்டும் விவசாயிகள் நெல் பயிர் சாகுபடியில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமையை கண்டித்து இந்தியா முழுவதும் ஸ்கூட்டரில் தனியாக பயணம் செய்யும் பெண் டாக்டர் நாளை தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
    ஈரோடு:

    ராஜஸ்தான் மாநிலம் பச்பத்ரா பகுதியை சேர்ந்தவர் டங்கர் சந்த்சோப்ரா. இவரது மகள் நித்து சோப்ரா (வயது 29) டாக்டர்.

    ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இதில் கைது செய்யப்பட்ட 4 குற்றவாளிகளும் போலீசாரால் என்கவுணடரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் இளம்பெண் நித்து சோப்ரா பெண்கள் இது போன்ற பாலியல் சம்பவத்தில் சிக்கி கொள்ளாமல் விழிப்புணர்வுடனும் வலிமையுடனும் இருக்க வலியுறுத்தி இந்தியா முழுவதும் தன்னந்தனியாக ஸ்கூட்டரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    காஷ்மீரில் இருந்து ஸ்கூட்டரில் பயணத்தை தொடங்கிய நித்து சோப்ரா நேற்று ஈரோடு வந்தார். தன்னந்தனியாக பெண்களுக்காக விழிப்புணர்வு ஸ்கூட்டர் பயணம் மேற்கொண்ட நித்து சோப்ராவுக்கு ஈரோடு இந்திரா நகரில் வரவேற்பு கொடுத்து வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.

    அப்போது நித்து சோப்ரா நிருபர்களிடம் கூறியதாவது:-

    நான் டாக்டருக்கு (எம்.பி.பி.எஸ்) படித்து முடித்துள்ளேன். சமூக சேவையே எனது லட்சியம். ஐதராபாத்தில் பெண் டாக்டர் கற்பழித்து கொல்லப்பட்ட சம்பவம் என்னை மட்டுமல்ல மொத்த பெண்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. பெண்கள் என்றாலே பயந்த சுபாவம் உள்ளவர்கள் என நினைக்கின்றனர். இதை பெண்கள் மாற்ற வேண்டும். ஒவ்வொருவருக்கும் துணிச்சல் வேண்டும். பெண்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற நிலை வர வேண்டும் என வலியுறுத்தி எனது பயணத்தை நடத்தி வருகிறேன்.

    என்னிடம் ஒரு கத்தி உள்ளது. இந்த கத்தியை பயன்படுத்தி ஒருவரை குத்தினால் ½ மணி நேரம் அவர் சுய நினைவு இல்லாமல் இருப்பார். எனவே பெண்கள் பயத்தை போக்கி வலிமையுடன் மன உறுதியுடன் செயல்பட வேண்டும். வீட்டுக்குள் பெண்கள் முடங்கி கிடக்காமல் வெளியே வந்து சாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தினமும் ஸ்கூட்டரில் 350 கிலோமீட்டர் பயணம் செல்லும் நித்து சோப்ரா கன்னியாகுமரியில் நாளை தனது பயணத்தை நிறைவு செய்கிறார்.
    பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    மேட்டூர் அணைக்கு அடுத்த படியாக பெரிய அணையாக உள்ள பவானிசாகர் அணை 2019-ம் ஆண்ட தென் மேற்கு பருவ மழையால் 3 தடவை தனது முழு கொள்ளளவான 105 அடியை எட்டியது.

    அணை முழு கொள்ளளவை எட்டியதால் காளிங்கராயன் வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன் கோட்டை, கீழ்பவானி பிரதான வாய்க்கால்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. விவசாயம் மும்முரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக விரைவில் தண்ணீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே அணைக்கு தொடர்ந்து கணிசமான அளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர் மட்டம் நேற்று மதியம் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருந்தது.

    நேற்று இரவு 9.30 மணி அளவில் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 105 அடியை 4-வது முறையாக எட்டியது. இதை தொடர்ந்து நேற்று இரவு அணைக்கு வந்த உபரி நீர் அப்படியே பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் கோபி அருகே உள்ள கொடிவேரி அணைக்கு வந்து விழுந்து பவானி ஆற்றில் பாய்ந்து ஓடுகிறது.

    பவானி ஆற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் பவானி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் குளிப்பவர்கள், துணி துவைப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணைக்கு இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 1998 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானி ஆற்றுக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே 48 நாட்கள் குழிக்குள் மவுன விரதம் இருந்த காசி விஸ்வநாத நிஜானந்த சுவாமி இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் விரதத்தை கலைத்து கொண்டு லிங்கேஸ்வருக்கு பூஜைகள் செய்து குழிக்குள் இருந்து வெளியே வந்தார்.
    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரை சேர்ந்தவர் விஸ்வநாதன்.

    யோகா மற்றும் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்ட இவர் ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரில் அவரது சொந்த இடத்தில் பத்தடி ஆழம் 10 அடி சுற்றளவு கொண்ட குழியை வெட்டி பாதாள லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அந்த குழிக்குள் தண்ணீர் மற்றும் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி மவுன விரதம் இருந்து வந்தார்.

    48 நாட்களாக பாதாள லிங்கேஸ்வரருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், நவதானியங்கள் மற்றும் மூலிகைகள் கொண்டும் லிங்கத்தை மலர்களால் அலங்கரித்தும் சிறப்பு பூஜைகள் செய்துவந்தார்.

    48 நாட்கள் மேற்கொண்ட மவுன விரதத்தை இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் கலைத்துக்கொண்ட காசி விஸ்வநாத நிஜானந்த சுவாமி, லிங்கேஸ்வருக்கு பூஜைகள் செய்து குழிக்குள் இருந்து வெளியே வந்தார்.

    இந்த நிகழ்வை காண ஈரோடு, அந்தியூர், கோபி, ஆப்பக்கூடல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக வந்திருந்தனர்.

    குழிக்குள் இருந்து வெளியே வந்த சாமியார் அதிகாலை 3 மணியளவில் பவானி கூடுதுறை சென்று நீராடி தீர்த்தம் கொண்டு வந்து ஆப்பக்கூடல் நல்லிகவுண்டன் புதூரில் அமைந்த காசிவிஸ்வநாத லிங்கேஸ்வரருக்கு பூஜைகள் செய்தார்.

    மேலும் கோவில் அமையப்பெற்றுள்ள அவ்விடத்தில் ஆராதனைகள் செய்யப்பட்டு சிறப்பு வேள்வி நடந்தது.

    இந்த பூஜையில் ஆப்பக்கூடல், அந்தியூர், ஈரோடு, கோபி, திருப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
    நகைகளை மீட்க முடியாததால் கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவான குடும்பத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    கோபி:

    ஈரோடு மாவட்டம், கோபி அடுத்த மொடச்சூரை சேர்ந்தவர் யஷ்ணன் (வயது 32). மருந்து பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார்.

    இவரது மனைவி பெயர் ரிஜானா (வயது 26). 7 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    யஷ்ணன் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள நகைகளை அடமானம் வைத்து அதை மீட்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி கணவன்-மனைவி மற்றும் மகன் 3 பேரும் திடீரென மாயமானார்கள்.

    மேலும் அவர்க் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தனர்.

    அந்த கடிதத்தில் “எங்களை யாரும் தேட வேண்டாம். கடன்-நகைகளை மீட்க முடியாததால் நாங்கள் வேறு எங்கேயாவது சென்று பிழைத்துக் கொள்கிறோம்.

    எங்களை தேட எந்த முயற்சியும் எடுக்க வேண்டாம் அப்படி தேடினால் நாங்கள் வேறு மாதிரி முடிவு எடுப்போம்“ என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கோபி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் குழந்தைகள் ஆபாச படத்தை யாராவது பதிவிறக்கம் செய்து சேமித்து வைப்பது பார்ப்பது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுவர்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.
    சூரம்பட்டி:

    பாலியல் பலாத்காரம் செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த செயல்களில் ஈடுபடுபவர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

    ஆனால் இந்த கொடூர செயல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது இதைத்தடுக்க இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இண்டர்நெட்டிலும் மொபைல் போன்களிலும் குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

    மேலும் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வது சேமித்து வைப்பது மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற சம்பவங்கள் தடை செய்யப்படுள்ளது இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    இருப்பினும் இந்த எச்சரிக்கையை மீறி ஒரு சிலர் குழந்தைகள் ஆபாச படத்தை பதிவிறக்கம் செய்வது பார்ப்பது மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள் அவர்களை போலீசார் கண்காணித்து வருகிறார்கள் .

    இந்த செயல்களில் ஈடுபட்ட 30 பேர் போலீசாரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் யார் எந்த இடத்தில் உள்ளனர் என்றும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    ஈரோடு மாவட்டத்திலும் குழந்தைகள் ஆபாச படத்தை யாராவது பதி விறக்கம் செய்து சேமித்து வைப்பது பார்ப்பது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்களா என்று போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

    இதுபற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது-

    குழந்தைகளின் ஆபாச படம் பார்ப்பது பதிவிறக்கம் செய்வது மற்றும் மற்றவர்களுக்கு அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்ட 2 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ள 30 பேரின் தகவல்களை போலீசார் சேகரித்து உள்ளனர். அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இதுபோல ஈரோடு மாவட்டத்திலும் குழந்தைகளின் ஆபாசப் படங்களை பார்ப்பவர்களின் நடவடிக்கை ரகசியமாக அதே நேரத்தில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களது இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    பவானிசாகர் அணைக்கு கணிசமாக தண்ணீர் வந்துகொண்டு இருப்பதால் முழுகொள்ளளவை 3-வது தடவையாக எட்டும் நிலையில் உள்ளது.
    ஈரோடு:

    தமிழகத்தின் 2-வது பெரிய அணையான பவானிசாகர் அணையின் முழு கொள்ளளவு 105 அடி ஆகும்.

    சமீபத்தில் பெய்த தென்மேற்கு பருவ மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 2 முறை நிரம்பியது. இதனால் உபரி நீர் பவானி ஆற்றுக்கு திறக்கப்பட்டது. மேலும் பாசனத்துக்காக வாய்க்கால்களிலும் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதன் மூலம் மாவட்டம் முழுவதும் நெற்பயிர்கள் வாழை மற்றும் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து மாவட்டம் முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கிறது.

    இந்த நிலையில் பவானிசாகர் அணைக்கு அதிக தண்ணீர் வரத்து இல்லாவிட்டாலும் கணிசமாக தண்ணீர் வந்து கொண்டு தான் இருக்கிறது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 1779 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர் மட்டம் 104.95 அடியாக உள்ளது. இன்று மாலை முழுகொள்ளளவை 3-வது தடவையாக எட்டும் நிலையில் உள்ளது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு மட்டும் வினாடிக்கு 200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    ஈரோடு மாவட்டம் கோபி அருகே மகனுக்கு திருமணம் ஆகாத வருத்தத்தில் முதியவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோபி:

    திருப்பூர் மாவட்டம் பச்சாங்காட்டு பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 64).

    இவருக்கு கருப்புசாமி (43) என்ற மகன் உள்ளார். இவருக்கு திருமண ஏற்பாடு செய்தும் திருமணம் நடக்காமல் தள்ளிக்கொண்டே போனது. இதனால் மகனுக்கு திருமணம் ஆகாமல் தடைபட்டு செல்கிறதே... என்ற வேதனையில் பெரியசாமி இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் பெரியசாமி ஈரோடு மாவட்டம் கோபிக்கு வந்தார். கோபி அருகே உள்ள கீழ்பவானி வாய்க்கால் கரையோரத்தில் உள்ள மரத்தில் நைலான் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-ம் கட்ட தேர்தல் நடந்ததில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் இன்று 2-ம் கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

    மாவட்டத்தில் இன்று 130 பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் 7 யூனியன்களில் தேர்தல் நடந்தது. இதில் 4 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

    அம்மாபேட்டை ஒன்றியத்தில் உள்ள புதூர், அந்தியூர் யூனியனில் உள்ள பச்சாம்பாளையம், சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள கொடுமணல், பெருந்துறை ஒன்றியத்தில் உள்ள செல்லப்பம்பாளையம் ஆகிய 4 பஞ்சாயத்துகளின் தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த 4 பஞ்சாயத்து தலைவர்கள் நீங்கலாக 126 பஞ்சாயத்து தலைவர்களுக்கும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    பெருந்துறை, சென்னிமலை, பவானி, அந்தியூர் உள்பட ஈரோடு மாவட்டத்தில் 7 ஒன்றியங்களில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் ஓட்டு போட்டனர்.
    ஈரோடு:

    தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 183 வார்டுகள் ,225 கிராம ஊராட்சி தலைவர்கள் ,2097 கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் 19 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் உள்ளன.

    இதில் முதல் கட்டமாக ஈரோடு, கோபி கொடுமுடி, மொடக்குறிச்சி, நம்பியூர் தாளவாடி, டி.என்.பாளையம் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 894 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும், 95 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிகளும் 79 ஊராட்சி ஒன்றியக் குழு வார்டுகளுக்கும், 8 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கும் தேர்தல் நடந்து முடிந்து விட்டது.

    இதையடுத்து 2-ம் கட்டமாக ஈரோடு மாவட்டத்தில் அம்மாபேட்டை, அந்தியூர், பவானி, பவானி சாகர், சென்னி மலை ,பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய ஏழு ஊராட்சிக்கு உட்பட்ட 1203 கிராம ஊராட்சி வார்டுகளுக்கும் 126 கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கும் 104 ஊராட்சி ஒன்றிய குழு வார்டுகளுக்கும், 11 மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்காக மொத்தம் 919 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன .

    அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 85 ஆயிரத்து 377 பேரும் அந்தியூர் ஒன்றியத்தில் 88 ஆயிரத்து 960 பேரும், பவானி ஒன்றியத்தில் 87 ஆயிரத்து 194 பேரும், பவானிசாகர் ஒன்றியத்தில் 63 ஆயிரத்து 895 பேரும் சென்னிமலை ஒன்றியத்தில் 78 ஆயிரத்து 227 பேரும், பெருந்துறை ஒன்றியத்தில் 65 ஆயிரத்து 100 பேரும், சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 74 ஆயிரத்து 146 பேரும் என ஏழு ஒன்றியங்களிலும் சேர்த்து மொத்தம் 5 லட்சத்து 42 ஆயிரத்து 899 பேர் வாக்களித்து வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது கடும் பனிப்பொழிவு பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர் அந்தியூர் பவானி சத்தியமங்கலம் உள்பட ஒன்றியங்களில் ஏராளமான மலைப்பகுதிகளில் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இங்கும் மக்கள் குறிப்பாக பெண்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். வயதான முதியவர்களும் நீண்ட வரிசை நின்றது தனது ஜனநாயக கடமைகளை ஆற்றி வருகின்றனர் இன்று நடைபெறும் இரண்டாம் கட்ட தேர்தலில் மொத்தம் 170 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த வாக்குச்சாவடி மையங்களில் வெப் குழுக்கள் வீடியோ குழுக்கள் நுன்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இன்று இரண்டாம் கட்டமாக மொத்தம் 6750 தேர்தல் அலுவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் பதட்டமான வாக்குச்சாவடிகளில் 61 நுண்பார்வையாளர்கள் 49 வெப்கேமராக்கள் 80 இடங்களில் வீடியோக்கள் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    ×