என் மலர்tooltip icon

    ஈரோடு

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.
    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-

    கொளுத்துகிற வெயிலையும் பொருட்படுத்தாமல் இவ்வளவு அன்போடு எழுச்சியுடன் இவ்வளவு பேர் காத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் அத்தனை பேரும் ஏற்கனவே முடிவு செய்து விட்டீர்கள் சரியா? காங்கயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சாமிநாதனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரம்தான் உள்ளது. நான் இன்றைக்கு வந்து உங்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு அடுத்த தொகுதிக்கு சென்று விடுவேன். அடுத்த 7 நாட்கள் நீங்கள் தான் இங்கு ஒவ்வொருவரும் இதே உணர்வோடு இதே எழுச்சியோடு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஒவ்வொரு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு வாக்கு கேட்க வேண்டும்.

    நான் நேற்று எடப்பாடிக்கு சென்று நமது வேட்பாளர் சம்பத்துக்கு பிரசாரத்துக்கு சென்று விட்டு வந்தேன். எடப்பாடி தொகுதியிலே தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தோற்கப்போவது உறுதி. தோற்கப்போவது மட்டுமல்ல தோற்று உள்ளே போவதும் உறுதி. தலைவர் முடிவு செய்வார். பாளையங்கோட்டையா, புழலா என்று முடிவு செய்வார்.

    நீங்கள் பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றி கொடுத்தீர்கள் ஞாபகம் இருக்கிறதா. அதைவிட மிகப்பெரிய வெற்றியை இந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கொடுக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி வெற்றி பெற்றார். இந்தியாவில் மோடி அலை வீசியது. ஆனால் தமிழ்நாட்டில் என்ன ஜெயித்தார்கள் முட்டை. இப்போது அதே முட்டையை நாமத்தை திருப்பி மோடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் நீங்கள் போட வேண்டும். செய்வீர்களா?

    எடப்பாடி பழனிசாமி

    தமிழ்நாட்டின் எல்லா உரிமைகளையும் மோடியிடமும் டெல்லியிடமும் எடப்பாடி பழனிசாமி அடகு வைத்து விட்டார். கொஞ்சம் விட்டால் தமிழ்நாட்டை மோடியிடம் விற்று விடுவார். 5 நாட்களுக்கு முன்பு ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலில் கருத்து கணிப்பு போட்டார்கள். அதில் தி.மு.க. குறைந்தது 180 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகும் என்று சொன்னார்கள். 180 போதுமா? 180 எல்லாம் பத்தாது குறைந்தது 200 தொகுதியில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமியையும் அந்த கொள்ளைக்கார கும்பலையும் அடிமைக் கூட்டத்தையும் ஓட ஒட அடித்து விரட்ட வேண்டும். செய்வீர்களா? நிச்சயமாக செய்வீர்களா? மோடி 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வேலை பார்த்தார். அதை நீங்கள் எல்லாம் மறந்து இருக்க மாட்டீர்கள்.

    நவம்பர் மாதம் நள்ளிரவில் 11 மணிக்கு எழுந்து 500 ரூபாய் நோட்டும், 1000 ரூபாய் நோட்டும் செல்லாது என்று சொன்னார் ஞாபகம் இருக்கிறதா? லட்சக்கணக்கான மக்கள் ஏ.டி.எம் வாசலில் நின்று இறந்தே விட்டார்கள்.

    மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தூக்கி கொண்டு வந்து விட்டேன். கடந்த 5 நாட்களாக தேடிக்கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் பிரசாரம் முடிந்ததும் அதை திருப்பி கொண்டு கொடுத்து விடுகிறேன்.

    நேற்று மோடி தாராபுரத்தில் என்னை பற்றி பேசி உள்ளார். உதயநிதி குறுக்கு வழியில் வருகிறார் என்று. நானா குறுக்கு வழியில் வந்தேன். மோடி அவர்களே உங்களைப் பார்த்து பயப்படுவதற்கு உங்களைப் பார்த்து கூளைக்கும்பிடு போடுவதற்கு நான் எடப்பாடி பழனிசாமி கிடையாது. நான் உதயநிதி ஸ்டாலின். கலைஞரின் பேரன். உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன். 10 நாட்களாக எய்ம்ஸ் மருத்துவமனை காணவில்லை என்று சொல்லி வருகிறேன். அதற்கு பதில் சொல்ல திராணியில்லை. நீங்கள் யார் யாரையெல்லாம் முந்திக் கொண்டு வந்தீர்கள் என்று சொல்லவா. இரட்டை இலைக்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் மோடிக்கு விழும் ஓட்டு. 234 தொகுதியிலும் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் வேட்பாளர். அந்த உணர்வோடு பிரசாரம் செய்ய வேண்டும். அ.தி.மு.க.வினர் வந்து ஓட்டு கேட்டால் உங்கள் அம்மா எப்படி இறந்தார் என்று கேளுங்கள். யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவை பார்க்க தீபா, தீபக் சென்றார்கள். யாரையும் உள்ளே விடவில்லை. ஒவ்வொரு அமைச்சர்களும் வெளியே வந்து பேட்டி கொடுத்தார்கள். அம்மா இன்றைக்கு இட்லி சாப்பிட்டார், சட்னி சாப்பிட்டார், உப்மா சாப்பிட்டார். அப்பல்லோவில் இதற்கு ரூ.100 கோடி பில் போட்டார்கள். கடைசியில் ஒரு அமைச்சர் அம்மா இறந்து விட்டார் என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல் சீனிவாசன் என்று ஒரு அமைச்சர் உள்ளார். தேங்காய் சீனிவாசன் காமெடி நடிகர். திண்டுக்கல் சீனிவாசன் காமெடி அமைச்சர். இப்போது பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்கிறார். 80 நாளும் அம்மாவை பார்க்கவே இல்லை என்று மன்னிப்பு கேட்கிறார். மன்னித்து விடுவீர்களா? மன்னிக்க மாட்டோம். ஆட்சிக்கு வந்ததும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று தலைவர் கூறி உள்ளார். அனைத்திலும் ஊழல். எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அமைச்சர்களும் கம்பி எண்ணப்போவது உறுதி. அதற்கு நீங்கள் அனைவரும் 6-ந்தேதி உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே தீர்த்த குடம் எடுத்து சென்ற பக்தர்கள் கூட்டத்தில் கார் புகுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அவல்பூந்துறை அடுத்த கொளாங்காட்டுவலசு பகுதியில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று இரவு 11.30 மணி அளவில் நடந்தது.

    இதில் இந்த பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஈரோடு-பழனி மெயின் ரோட்டில் தீர்த்தக்குடம் எடுத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது ஈரோட்டில் இருந்து அரச்சலூர் நோக்கி வேகமாக ஒரு கார் அந்த வழியாக வந்து கொண்டிருந்தது.

    அந்த காரை அவல் பூந்துறை, காளிபாளையம் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். காரில் அவரது மனைவி சமீம் பாத்திமா (26), அவரது மகன்கள் ஆஜித் (8), சுஜித் (1) ஆகியோர் இருந்தனர்.

    திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தீர்த்தக் குடம் எடுத்து வந்த பக்தர்கள் கூட்டத்திற்குள் புகுந்து தறிகெட்டு ஓட தொடங்கியது.

    கார் கூட்டத்தில் புகுந்ததால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் நாலாபுறமும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். தறிகெட்டு ஓடிய கார் பக்தர்கள் மீது மோதியது. பின்னர் அந்த பகுதியில் இருந்த 2 மோட்டார் சைக்கிள்களை இடித்து சேதப்படுத்தி அருகில் இருந்த புளிய மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் வடக்கு வெள்ளியம்பாளையம், அரிஜன காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் (40), அதே பகுதியைச் சேர்ந்த கண்ணம்மாள் (45) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும் அதே பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி (42), கணபதி, அம்மணி, மகேஸ்வரி, ரஞ்சித், பொன்னுசாமி, விஸ்வநாதன், ராமசாமி, சேகர், முருகன், கார்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். கார் புளிய மரத்தில் மோதியதில் காரின் முன்பகுதி சேதம் அடைந்தது. காருக்குள் இருந்த யுவராஜ், அவரது மனைவி, 2 மகன்கள் ஆகியோருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. கண்ணிமைக்கும் நேரத்தில் இந்த விபத்து நடந்ததால் அப்பகுதி முழுவதும் காயமடைந்தவர்கள் மரண ஓலம் எழுப்பியபடி இருந்தனர்.

    இந்த விபத்து குறித்து அரச்சலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதே போன்று 108 ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பழனிச்சாமி என்பவர் உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

    மேலும் காரை ஓட்டி வந்த யுவராஜ், அவரது மனைவி 2 மகன்களுக்கும் காயம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்து ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த விபத்து குறித்து அரச்சலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில்பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவிலில் எளிமையான முறையில் நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டு்ம் தீ மிதித்தனர்.
    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

    பண்ணாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இத்திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் விவசாயிகள் தங்கள் வளர்ப்பு மாடுகளை குண்டம் இறங்க வைத்து அம்மனை வழிபடுவார்கள். இதுதவிர விவசாய நிலங்களில் விளையும் பயிர்களையும் குண்டத்தில் இட்டு வழிபடுவார்கள். இதனால் விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.

    குண்டம் திருவிழா பூச்சாட்டுதல் தொடங்கியதும் மழை பெய்யும். அதே போல் இந்த ஆண்டு திருவிழாவுக்காக பூச்சாட்டப்பட்டதும் பண்ணாரியில் மழை கொட்டியது.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டு குண்டம் திருவிழா ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு குண்டம் திருவிழா கட்டுப்பாடுகளுடன் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதன்படி கடந்த 15-ந் தேதி எளிமையான முறையில் கோவிலில் பூச்சாட்டுதல் நிகழ்வுடன் திருவிழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெறும் அம்மன் திருவீதி உலாவும் இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

    இதையடுத்து நேற்று அதிகாலை முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 3.30 மணி அளவில் கோவிலில் இருந்து தாரை தப்பட்டை மற்றும் பீனாச்சி வாத்தியம் முழங்க பூசாரிகள் ஊர்வலமாக தெப்பக்குளத்துக்கு சென்று பூஜை செய்தனர். பின்னர் அங்கிருந்து படைக்கலத்துடன் மீண்டும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தடைந்தனர்.

    அதன் பின்னர் கோவில் முன்பு ஏற்கனவே தயார் செய்யப்பட்ட குண்டத்துக்கு தலைமை பூசாரி ராஜேந்திரன் தலைமையில் பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து குண்டத்தை சுற்றிலும் கற்பூரம் பற்ற வைக்கப்பட்டு தலைமை பூசாரி ராஜேந்திரன் பூ தூவி வணங்கி பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கினார். தொடர்ந்து கோவில் பூசாரிகள் ஆறுமுகம், செந்தில்குமார் மற்றும் படைக்கல பூசாரிகள் என மொத்தம் 11 பேர் மட்டுமே குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பக்தர்கள் யாரும் குண்டம் இறங்க அனுமதிக்கப்படவில்லை.

    வழக்கமாக அதிகாலை 4 மணி அளவில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்வு தொடங்கி மாலை 4 மணி வரை 12 மணி நேரம் நடைபெறும். இதில் சுமார் 1½ லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். ஆனால் இந்த ஆண்டு 11 பூசாரிகள் மட்டும் தீ மிதித்ததால் 5 நிமிடத்தில் குண்டம் இறங்கும் நிகழ்வு நிறைவு பெற்றது.

    இதையடுத்து பண்ணாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன், வீணை அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன்பின்னர் பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
    ஈரோடு அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    ஈரோடு அருகே உள்ள மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்துக்கும், வீரபாண்டி ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் விசாரணையில், மூதாட்டி தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தமிழகத்தில் அ.தி.மு.க. பெயரில் பா.ஜ.க.தான் போட்டியிடுகிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.
    சத்தியமங்கலம்:

    பவானிசாகர் தொகுதியில் இந்திய கம்பயூனிஸ்டு கட்சி சார்பில் பி.எல்.சுந்தரம் போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு சத்தியமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் பிரசாரம் செய்தார். முன்னதாக அவர் கட்சி அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. மத்திய அரசுக்கு இணக்கமாக இருக்க வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்க வேண்டாம் என்றுதான் கூறுகிறோம். மாநில உரிமைகளை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்ட ரீதியாக பெற வேண்டிய நிதியை குறிப்பாக புயல் மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு நிவாரண நிதியை கூட பெற முடியவில்லை. நமது முதல்-அமைச்சர் இப்போது பா.ஜ.க. உடன் சேர்ந்து சாமியார் ஆகிவிட்டார். ஸ்டாலின் முதலமைச்சராக முடியாது என சாபம் விடுகிறார்.

    தமிழ்நாட்டில் நேரடியாகவும், மறைமுகமாகவும் அ.தி.மு.க. என்ற பெயரில் பா.ஜ.க.தான் போட்டியிடுகிறது. எடப்பாடி எப்படி முதல்-அமைச்சர் ஆனார் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. முதல்-அமைச்சர் பதவியை ஏலம் எடுத்தவர் அவர். வருமானவரித்துறையினர் சமீபகாலமாக சங்பரிவார் அமைப்பாக மாறி விட்டது. தி.மு.க. கூட்டணியின் வெற்றியை தடுப்பதற்காக குறுக்கு வழியில் பா.ஜ.க. முயற்சிக்கிறது.

    எதிரிகளை பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு வருமான வரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா காலத்தில் மக்களைப் பற்றி கவலைப்படாத இவர்கள்...ஆட்சிக்கு மீண்டும் வந்தால் கவலைப்படவார்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் பெரிய பள்ளிவாசல் அருகே தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது. இதில் அவர் கலந்துகொண்டு பேசினார்.
    நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
    மொடக்குறிச்சி:

    மொடக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனை ஆதரித்து மொடக்குறிச்சியில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் 39 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது.

    தற்போது நடக்கும் சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் தி.மு.க. 180 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று கூறுகிறார்கள்.

    அது பத்தாது நாடாளுமன்ற தேர்தலில் எப்படி எழுச்சியோடு வெற்றி பெற வைத்தீர்களோ அதே எழுச்சியோடு இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியை 200 தொகுதிகளில் வெற்றி பெற செய்ய வேண்டும். நம்மை எதிர்த்து நிற்கும் கட்சிகளை டெபாசிட் இழக்க வைக்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சியினர் பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
    பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் உட்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தாராபுரத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக முகிலன் அறிவித்திருந்தார்.
    சென்னிமலை:

    சுற்றுசூழல் ஆர்வலரும், சமூக செயல்பாட்டாளருமான முகிலன், தனது குடும்பத்தினருடன் ஈரோடு மாவட்டம் சென்னிமலை டவுன் கிழக்கு புது வீதி பகுதியில் வசித்து வருகிறார். தனது உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களாக முகிலன் ஓய்வில் இருந்தார்.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் எல்.முருகன் உட்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட தாராபுரத்துக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காட்டுவதாக முகிலன் அறிவித்திருந்தார்.

    இதற்காக இன்று காலை 7.30 மணி அளவில் தனது சென்னிமலை வீட்டில் இருந்து கருப்பு சட்டை அணிந்து, கருப்பு கொடியுடன் முகிலன் புறப்பட்டார். இது பற்றி தகவல் தெரியவந்ததும் சென்னிமலை இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து சென்று முகிலனை கைது செய்தனர்.

    பின்னர் அவரை சென்னிமலை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.





    ஈரோடு:

    கிறிஸ்தவர்களின் முக்கிய திருநாளாக புனித வெள்ளி உள்ளது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை நினைவுகூறும் வகையில் தொன்று தொட்டே புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலத்தை கடைபிடித்து வருகிறார்கள். அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 17-ந் தேதி சாம்பல் புதன் தினத்தில் இருந்து தவக்காலம் தொடங்கியது.

    வருகிற ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது. அதை முன்னிட்டு நேற்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்பட்டது. ஏசு கிறிஸ்து தனது சிலுவை மரணத்துக்கு முன்னதாக ஜெருசலேம் நகருக்குள் நுழைந்த நிகழ்வை நினைவுகூறுவது குருத்தோலை ஞாயிறு.

    கோவேறு கழுதையில், ஜெருசலேம் நகர் நோக்கி ஏசு கிறிஸ்து செல்லும் வழி எங்கும் இஸ்ரேல் மக்கள் யூதர்களின் ராஜாவே வருக என்றும் ஓசன்னா பாடல்கள் பாடி, ஒலிவ மரக்கிளைகளை ஒடித்து குருத்து ஓலைகளாக பிடித்தும் உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்வை கிறிஸ்தவர்கள் குருத்தோலைகள் ஏந்தி கொண்டாடுவது குருத்தோலை ஞாயிறு என்று கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி நேற்று ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. பங்குத்தந்தை ஜான் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் குருத்தோலைகள் வழங்கப்பட்டன. வழக்கமாக நடைபெறும் குருத்தோலை பவனி, கொரோனா காரணமாக நடைபெறவில்லை. மாலையில் உதவி பங்குத்தந்தை ஜான்சன் தலைமையில் திருப்பலி நடந்தது.

    நேற்று முதல் துக்க வார நிகழ்வுகள் தொடங்கின. இதை தொடர்ந்து வருகிற 1-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு நற்கருணை நிறுவுதல், நற்கருணை இடமாற்றம் செய்தல் நிகழ்வுகள் நடக்கின்றன. இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரை நற்கருணை ஆராதனை நடக்கிறது.

    2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் நற்கருணை ஆராதனை அமைதியான முறையில் நடக்கிறது. பகல் 11 மணிக்கு ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவுகூறும் சிலுவைப்பாதை வழிபாடு நடக்கிறது. பிற்பகல் 6 மணிக்கு திருச்சிலுவை ஆராதனை வழிபாடு நடக்கிறது.

    3-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 10.30 மணிக்கு பாஸ்கா திருவிழிப்பு வழிபாடு, புது தீர்த்தம் மந்திரித்தல், ஒளி வழிபாடு, இறைவார்த்தை வழிபாடு, திருமுழுக்கு வழிபாடு மற்றும் ஏசு கிறிஸ்து கல்லறையில் இருந்து உயிருடன் எழும்பிய உயிர்ப்பு (ஈஸ்டர்) பெருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

    இந்த நிகழ்வுகளை ஈரோடு மறைவட்ட முதன்மை குருவும், ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர், உதவி பங்குத்தந்தை ஜான்சன் ஆகியோர் நிறைவேற்றுகிறார்கள்.

    இதேபோல் ஈரோடு பிரப் தேவாலயம் உள்பட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று குருத்தோலை பவனி நடைபெற்றது.
    மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிக் கொண்ட விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஈரோடு:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 50). தொழிலாளி. இவர் ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள நரிப்பள்ளம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பன்னீர்செல்வம் சொந்த வேலை காரணமாக ஈரோடு வந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார்சைக்கிளில் சத்தி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக பன்னீர்செல்வம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம் படுகாயம் அடைந்து உயிருக்காக போராடினார். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி பன்னீர்செல்வம் பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
    மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக மாநிலத்துக்கு செல்ல முயன்ற 170 விவசாயிகளை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    ஈரோடு:

    கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    அதுமட்டுமின்றி மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு செல்வது என தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சீர்காழி ஆகிய பகுதியை சேர்ந்த தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தமிழக அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு ஆகியவை அறிவித்திருந்தன.

    இதையொட்டி நேற்று முன்தினம் இரவு தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சீர்காழி ஆகிய பகுதியை சேர்ந்த விவசாயிகள் 16 வேன்கள் மற்றும் 4 கார்களில் சத்தியமங்கலம் வந்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்கினர்.

    இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் நேற்று காலை 10 மணி அளவில் தங்களுடைய விவசாய சங்க கொடிகளை கையில் பிடித்தபடி மண்டபத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலத்துக்கு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் புண்ணியகோடி, சத்தியமங்கலம் பவானி நதி நீர் ஆற்று பாசன விவசாயிகள் சங்க பொறுப்பாளர் சுப்பு ரவி, சத்தியமங்கலம் தமிழர் பண்பாட்டுக் கழக நிர்வாகி வி.சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தில் சென்றவர்கள் கர்நாடகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி சென்றனர். மேலும் ஊர்வலத்தில் சென்ற விவசாயிகள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தியபடி சென்றனர்.

    விவசாயிகளின் ஊர்வலம் 4 கிலோ மீட்டரை கடந்து சத்தியமங்கலத்தை அடுத்த கோம்புபள்ளம் அருகே சென்றபோது தமிழக போலீசார் அங்கு சென்று ஊர்வலத்தை தடுத்து நிறுத்தி விவசாயிகளை கைது செய்வதாக கூறினர்.

    இதனால் விவசாயிகள் ரோட்டில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாரிடம் விவசாயிகள் கூறுகையில், ‘தேர்தல் நடத்தும் அதிகாரி எங்களுடைய போராட்டம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். எனவே தேர்தல் நடத்தும் அதிகாரி இங்கு நேரில் வரவேண்டும்,’ என்றனர்.

    இதைத்தொடர்ந்து பவானிசாகர் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரி ரவிசங்கர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விவசாயிகளிடம் அவர், ‘உங்கள் கோரிக்கை குறித்து தேர்தல் ஆணையத்துக்கு அறிக்கையாக அனுப்பி வைக்கப்படும்,’ என்றார். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களுடைய தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதாக 170 விவசாயிகளை போலீசார் கைது செய்து அந்த பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

    இதுகுறித்து அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘தஞ்சாவூர் மற்றும் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 200 பேர் இன்று (அதாவது நேற்று) கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டும் பகுதிக்கு சென்று முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்து சத்தியமங்கலத்துக்கு வந்தோம். இங்கிருந்து ஊர்வலமாக சென்று, பின்னர் ஊர்வலத்தின் முடிவில் வேனில் ஏறி கர்நாடக மாநிலம் செல்ல இருந்தோம். அதற்குள் போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர்’ என்றார்.
    ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 912 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் புதிதாக 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 222 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமாகி நேற்று வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 14 ஆயிரத்து 912 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவால் இதுவரை 150 பேர் இறந்துள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 160 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினார்கள்.
    தாளவாடி:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீரை தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    தாளவாடி அடுத்த ஆனந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மோகன் (வயது 41). இவர் தன்னுடைய தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு யானை மோகனின் தோட்டத்துக்குள் புகுந்து வாழைகளை தின்றும், மிதித்தும் நாசம் செய்தது.

    இதைப்பார்த்த மோகன் உடனே வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் அதிக சத்தம் எழுப்பியும், பட்டாசு வெடித்தும் சுமார் 2 மணி நேரம் போராடி யானையை காட்டுக்குள் விரட்டினார்கள். எனினும் தோட்டத்தில் 1½ ஏக்கர் பரப்பளவில் இருந்த வாழைகளை யானை சேதப்படுத்தி விட்டது.

    இந்தநிலையில் அந்த பகுதி விவசாயிகள் கூறும்போது, யானைகளால் அடிக்கடி பயிர்கள் சேதமடைகின்றன. ஏற்பட்ட நஷ்டத்துக்கு வனத்துறையினர் உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மேலும் யானைகள் காட்டை விட்டு வெளியேறாமல் இருக்க ஆழமாகவும், அகலமாகவும் வனப்பகுதியை சுற்றி அகழி வெட்டவேண்டும் என்றார்கள்.
    ×