என் மலர்
ஈரோடு
ஈரோடு கஸ்பாபேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 34). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாதவர். ராஜ்குமாருக்கு கடந்த மாதம் ஒட்டுகுடல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜ்குமாருக்கு வயிற்று வலி அதிகமாக இருந்தது. இதனால் மனம் உடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ராஜ்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அந்தியூர்:
சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் வாக்காளர்களுக்கு, பணம், பரிசு பொருட்கள் விநியோகம் செய்வது குறித்த தகவலின் பேரிலும் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசனின் உறவினர் வீட்டில் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் எதும் கைப்பற்றப்படவில்லை.
இந்நிலையில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள தோப்பூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியை அ.தி..மு..க. வைச் சேர்ந்த 13 பேர் நிர்வகித்து வருகிறார்கள். அமைச்சர் செங்கோட்டையன் இந்த பள்ளிக்கு கடந்த 2 நாட்களாக தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த வந்து சென்றார். இந்தநிலையில் இந்த பள்ளியில் பணம் பட்டுவாடா செய்வதாக கிடைத்த தகவலின் பெயரில் வருமான வரித்துறையினர் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
ஈரோடு கதிரம்பட்டி வாய்க்கால்மேடு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனில் சோதனை நடத்தியபோது ரூ.1 கோடியே 70 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து வேனில் இருந்தவர்களிடம் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இந்த பணம் ஈரோட்டில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து கொண்டு செல்லப்படுவதாக தெரிவித்தனர். மேலும் வங்கியில் இருந்து ரூ.2 கோடியே 80 லட்சம் பணம் கொண்டு வந்ததாகவும், வங்கி கிளைகளுக்கு கொடுத்தது போக மற்ற கிளைகளுக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையே வேனில் கொண்டு வந்த ரூ.1 கோடியே 70 லட்சத்துக்கு ஆவணம் இல்லாததாலும், மேலும் பணம் கொண்டு செல்ல ஒரு வழியில் அனுமதி பெற்று மாற்று வழியில் கொண்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரூ.1 கோடியே 70 லட்சத்தை பறிமுதல் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் பறக்கும் படையினர் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 24 மணி நேரமும் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
முக்கிய சோதனை சாவடிகளில் துணை ராணுவத்தினர் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி டானா புதூர் சோதனை சாவடியில் இன்று அதிகாலை 2.40 மணயளவில் பவானிசாகர் தொகுதி பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து தலைமையிலான குழுவினர் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
அப்போது கேரளாவில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது காரில் ரூ. 2 லட்சம் ரொக்கப்பணம் இருந்தது. காரில் வந்தவர்களிடம் கேட்ட போது தாங்கள் மாடு வியாபாரிகள் என்றும் மாடு வாங்க அந்தியூர் சென்றதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்கள் தரவில்லை. இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.
இதே போல் அந்தியூர் அடுத்த வரட்டுப்பள்ளம் சோதனை சாவடியில் பர்கூர் மலை பகுதிக்கு செல்லும் வாகனங்களையும், பர்கூரில் இருந்து அந்தியூர் வந்த வாகனங்களையும் நிறுத்தி விடிய,விடிய சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் மற்றும் பரிசு பொருட்கள்கொண்டு செல்ல வாய்ப்பு இருக்கும் என்ற தகவலால் இந்த சோதனை நடந்தது.
சட்டமன்ற தேர்தலையொட்டி தொகுதி வாரியாக அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள், போலீசார் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டு ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள்.
பறக்கும் படையினர் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் ஏதாவது கொண்டு செல்லப்படுகிறதா? என்று தீவிர வாகன சோதனை நடத்தி கண்காணித்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பறக்கும் படையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றிய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், நம்பியூர் போலீஸ் நிலையத்தில் வேலைப்பார்த்த ஏட்டு தினேஷ் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் 2 பேரும் சரியாக தேர்தல் பணிக்கு வரவில்லை என்று பறக்கும் படை அதிகாரி அன்பழகன் என்பவர் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான கதிரவனுக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து விசாரணை நடத்திய கலெக்டர், தேர்தல் பணிக்கு சரியாக வராத சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேஷ், ஏட்டு தினேஷ்குமார் ஆகிய 2 பேரையும் ஈரோடு ஆயுதபடைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் திருமகன் ஈவெராவுக்கு ஆதரவு தெரிவித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று மரப்பாலம் நால் ரோட்டில் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் ஒரு வாக்குறுதி அளித்துள்ளனர்.விலைவாசியை குறைத்து காட்டுவோம் என்று. அப்போது பெட்ரோல் ரூ.100 விற்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ.70-க்கு விற்றது. சிலிண்டர் ரூ.900-க்கு விற்கிறது. மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் ரூ.442-க்கு விற்றது.
உலக சந்தையில் கச்சா எண்ணெய் 108 டாலராக இருந்த போது நாங்கள் பெட்ரோல் விலை ரூ70- க்கு விற்றோம். ஆனால் தற்போது 54 டாலராக உள்ளது. அப்படி என்றால் அவர்கள் ரூ.35-க்கு பெட்ரோல் விற்க வேண்டும். ஆனால் ரூ.100-க்கு விற்கிறார்கள். அவர்கள் சிலிண்டர் விலையை ரூ.200-க்கு விற்க வேண்டும். ஆனால் 900 ரூபாய்க்கு விற்கிறார்கள். எனவேதான் ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் விலை வாசியைக் குறைப்போம் என்று உறுதி கூறி உள்ளனர்.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதும் மன்மோகன்சிங் பொருளாதாரக் கொள்கையை பின்பற்றி விலைவாசியை குறைப்பார். அதுமட்டுமில்லாது காய்கறி மளிகை துணிமணிகள் விலைவாசி உயர்ந்துள்ளது. இதற்கு 2 முக்கிய காரணம். ஒன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு. இந்த இரண்டையும் மாற்றி அமைப்போம்.
பிரதமர் மோடி தாராபுரம் பொதுக்கூட்டத்தில் பேசும் போது தி.மு.க-காங்கிரஸ் பெண்களை மதிப்பதில்லை நாங்கள் தான் மதிக்கிறோம் என்று பேசினார். மோடி. நான் பல்வேறு தலைவர்கள் பிரதமர் பேச்சை கேட்டு உள்ளேன். நாட்டின் வளர்ச்சி பற்றியும் விவசாயம் பற்றியும் நீர்வளம் பற்றிதான் பேசுவார்கள். ஆனால் உள்ளூர் பிரச்சினை பற்றி பேச மாட்டார்கள். ஆனால் மோடி தான் இப்படி பேசி உள்ளார்.

உலக அளவில் 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் கட்சி உள்ளது. பொதுவுடமைக் கட்சி முதல் கட்சியாக உள்ளது. நாங்கள் 2 முறை பெண்களை தலைவராக்கி அழகு பார்த்தோம். இந்திரா காந்தி, சோனியா காந்தியை தேசிய தலைவராக்கி அழகு பார்த்தோம். நான் மோடியைப் பார்த்து கேட்கிறேன், பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். ஒரு முறையாவது பெண்களை அகில இந்திய தலைவர் ஆகி உள்ளீர்களா? ஓட்டுக்காக தவறான தகவலை சொல்லி வருகிறார்.
இந்த தேர்தலில் நாம் முழுமையாக வெற்றி பெற வேண்டும். 26 லட்சம் பேர் பேசும் சமஸ்க்ருத மொழிக்காக மத்திய அரசு 640 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆனால் 8 கோடி மக்கள் பேசும் தமிழ் மொழிக்காக மத்திய அரசு வெறும் 7 கோடி ரூபாய் தான் ஒதுக்கியுள்ளது.. பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். ஒரு கலாச்சாரப் படையெடுப்பை செய்து வருகிறது. மோடி ஒரே மொழி ஒரே கலாச்சாரம் பண்பாடு என்கிறார். அதை முதல்வர், துணை முதல்வர் கைகட்டி வேடிக்கை பார்க்கின்றனர்.
இந்தியாவில் ஒரே மொழி என்பது சாத்தியமில்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கு மாநிலம் மொழி கலாச்சாரம் வேறுபடும். ஆர்.எஸ்.எஸ். மாடுகளைத் உண்பவர்களை அடித்துக் கொள்ளுங்கள் என்கிறது. இதுதொடர்பாக உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு கொடுமைகள் நடந்தது. எனவே பாரதீய ஜனதாவை வேரோடு அகற்ற வேண்டும். தமிழக உரிமையை மீட்க வேண்டும்.
பா.ஜனதாவுக்கு அ.தி.மு.க. உண்மையான சிஷியனாக உள்ளது. ஒவ்வொருத்தரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். அவர்கள் முககவசத்தை கழட்டினால் அவர்கள் முகம்தான் தெரியும். ஆனால் முதல்வர், துணை முதல்வர் முககவசத்தை கழட்டினால் மோடி உருவாகும் தான் தெரியும். மோடி முகமாக செயல்பாடாக அ.தி.மு.க. உள்ளது. ஜெயலலிதா இருந்தபோது மாநில உரிமையை விட்டுக் கொடுத்ததில்லை. லேடியா மோடியா என்று பேசியவர். அ.தி.மு.க. ஊழல் கரை படிந்த கட்சியாகும். எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தி.மு.க. சார்பில் மொடக்குறிச்சி தொகுதியில் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் போட்டியிடுகிறார். இதையொட்டி அவர் மொடக்குறிச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இதற்காக அவர் மொடக்குறிச்சி அடுத்த சின்னம்மாபுரம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி தேர்தல் பணிகளைச் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் தங்கியிருந்த உறவினர் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது.
அதன்படி தேர்தல் பறக்கும் படையினர் நள்ளிரவு 12 மணிக்கு அவரது உறவினர் வீட்டுக்கு வந்து திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை 2:30 மணி வரை நடந்தது. ஆனால் இந்த சோதனையில் எந்தவொரு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கிடைக்காததால் பறக்கும் படையினர் திரும்பி சென்றனர்.
பறக்கும் படையினரின் இச்சோதனை பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலின் பேரில் நடை பெற்றதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டினர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் வெள்ளை சிமெண்ட் தயாரிக்கும் ஒரு தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று வேலை முடிந்ததும் ஊழியர்கள் சென்று விட்டனர்.
இன்று அதிகாலை 3 மணியளவில் இந்த நிறுவனத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதைப்பார்த்து அருகில் இருந்தவர்கள் பெருந்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
மாவட்ட தீயணைப்பு அதிகாரி புளுகாண்டி மற்றும் பெருந்துறை நிலைய அதிகாரி ரவிந்திரன் ஆகியோர் தலைமையில் வீரர்கள் 2 வண்டிகளில் விரைந்து வந்தனர்.
அப்போது தனியார் நிறுவனம் முழுவதும் தீ பிடித்து கொளுந்து விட்டு எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் காலை 8 மணி வரை போராடி தீயை அணைத்தனர். முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது.
இந்த தீ விபத்தில் நிறுவனத்தில் இருந்த எந்திரங்கள் மற்றும் பி.வி.சி. பைகள் எரிந்து சேதமானது. சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்தது தெரியவந்தது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் மலைப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்நிலையில் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் குறுகிய வளைவு அருகே ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு தினமும் மதியம் 3 மணி அளவில் குரங்கு ஒன்று மணி அடித்து பூஜை செய்து கொண்டிருந்தது. இதை அவ்வழியாக சென்ற பயணிகள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.
இதேபோல் நேற்றும் குரங்கு மணி அடித்து கொண்டிருந்தது. இதைப்பார்த்த பயணிகள் அங்கு திரண்டு மணி அடிக்கும் காட்சியை தங்களது செல்போனில் படம் எடுத்தனர். ஆஞ்சநேயர் கோவிலில் குரங்கு மணியடித்து பூஜை செய்வது மிகவும் ஆச்சரியமான ஒன்று என்று பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகின்றன.






