என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டவர் ஜே.கே.என்கிற ஜெயக்குமார். இவர் தேர்தலையொட்டி 15 நாட்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று முன்தினம் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார். உடனே அவர், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார்.
அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதைத்தொடர்ந்து, ஜெயக்குமார், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
புஞ்சைபுளியம்பட்டி மாதம்பாளையம் ரோட்டில் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த வங்கி மூடப்பட்டது.
ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு சனி, ஞாயிற்று கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்களில் உள்ளுர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அருவியில் குளித்து மகிழ்வார்கள்.
மேலும் அங்கு சுடச்சுட விற்பனை செய்யப்படும் மீன்களையும் வாங்கி சாப்பிட்டு செல்வார்கள். அதுவும் கோடை காலம் தொடங்கி விட்டால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கொடிவேரி அணையில் குவிய தொடங்குவார்கள்.
இந்த நிலையில் பராமரிப்பு பணிக்காக கடந்த 12 நாட்களாக கொடிவேரி அணை பூட்டப்பட்டு சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் சவாரி செய்யும் தடை விதிக்கப்பட்டது.
இதற்கிடையே கொடிவேரி அணை இன்று காலை மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. 12 நாட்களாக பூட்டப்பட்டு இருந்த கொடிவேரி இன்று காலை திறக்கப்பட்ட தகவல் தெரிந்ததும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வரத்தொடங்கினர். தற்போது நிலவி வரும் அனல் காற்றில் இருந்து தப்பிக்க அவர்கள் கொடிவேரி அணையில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் மீன் வியாபாரம் களைகட்டியது.
ஈரோடு பெரியசேமூர் மல்லி நகரை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 65). இவரது மனைவி வெள்ளம்மா (50). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ராமதாஸ் கூலி வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 2 வாரமாக வெள்ளம்மா உடல்நலம் சரியில்லாமல் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். பின்னர் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகள் முடிக்கப்பட்டு வெள்ளம்மா உடல் நேற்று காலை 11.30 மணி அளவில் ராமதாசிடம் ஒப்படைக்கப்பட்டது.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த ராமதாஸ் 12.30 மணி அளவில் கருங்கல்பாளையத்தில் உள்ள ஆத்மாவில் மனைவியின் ஈமச் சடங்குகளை முடித்து கொண்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு அடுத்த நிமிடமே ஈரோடு சி.என்.சி. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து வரிசையில் நின்று ஓட்டு போட்டு தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
இது குறித்து ராமதாஸ் கூறும்போது:-
என் மனைவி இறந்தது எனக்கு பெரிய துக்கம் என்றாலும், வாக்களிப்பது எனது ஜனநாயக கடமை. அது யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.
ஈரோட்டில் 72.82 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தல் ஆணைய செயலியில் உள்ள தகவலின் அடிப்படையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தொகுதிகள் வாரியாக பதிவான வாக்குகள் விவரம்:-
அந்தியூர் - 79.74%
பவானி - 83.70%
பவானிசாகர் - 77.27%
ஈரோடு (கிழக்கு) - 66.23%
ஈரோடு (மேற்கு) - 69.35%
கோபிசெட்டிபாளையம் - 82.51%
மொடக்குறிச்சி - 75.26%
பெருந்துறை - 82.50%
பெருந்துறை:
பெருந்துறை தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதையடுத்து அந்த தொகுதியில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பெருந்துறை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் தோப்பு வெங்கடாச்சலம் பொன்முடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்துக்கு வந்தார்.
அப்போது தனது பெயர் சின்னம் 2-வது மின்னணு எந்திரத்தில் இருப்பதாக தேர்தல் ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது 2-வது எந்திரத்தை முதலாவதாக வைத்து விட்டனர் என்று கூறி வாக்குச்சாவடி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
இது பற்றி தெரிய வந்ததும் பெருந்துறை டி.எஸ்.பி., சிவக்குமார், இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அழைத்து சென்றனர்.
சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலம் போராட்டம் நடத்தியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இன்று காலை 6 மணி முதலே வாக்களிக்க பொதுமக்கள் திரண்டனர். இந்நிலையில் சரியாக 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்க வேண்டிய நேரத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து தேர்தல் அதிகாரிகள் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் கோபி அருகே உள்ள ஓலப்பாளையம் துணைமின் நிலையத்தில் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு அணில் டிரான்ஸ்பார்மரில் சிக்கியதால் மின்தடை ஏற்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு அந்த அணிலை அப்புறப்படுத்தி மீண்டும் மின்இணைப்பை கொடுத்தனர்.
இதனால் கோபி டவுன் பகுதியில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் 7.05 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மின்தடை காரணமாக 5 நிமிடம் தாமதமாக கோபி டவுன் பகுதியில் ஓட்டுப்பதிவு தொடங்கியது குறிப்பிடத் தக்கது.
இதேபோல் கோபி தொகுதிக்குட்பட்ட நம்பியூர் பேரூராட்சி காந்திபுரம் தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அரைமணி நேரம் தாமதமாக 7.30 மணிக்குத்தான் ஓட்டுப்பதிவு தொடங்கியது.
மலை கிராமங்களுக்கு வாக்குப்பதிவு எந்திரங்களை கழுதை, குதிரைகள் மீது ஏற்றி அதிகாரிகள் பல கி.மீ. தூரம் நடந்து சென்றனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பர்கூர் மலைப்பகுதியில் கத்தரிமலை கிராமத்தில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு்ள்ளது. இங்கு மொத்தம் 133 வாக்காளர்கள் உள்ளனர். கத்தரிமலை கிராமம் அந்தியூரில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சட்டமன்ற தேர்தலையொட்டி இங்குள்ள வாக்குச்சாவடி மையத்துக்கு அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் இருந்து நேற்று வாகனங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஏற்றப்பட்டு பர்கூர் மலை அடிவாரத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தேர்தல் நடத்தும் மண்டல அதிகாரி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உடன் சென்றனர். பர்கூர் மலை அடிவாரத்தில் இருந்து கத்தரி மலை கிராமம் 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.
பர்கூர் மலை அடிவாரத்தில் இருந்து கத்தரிமலை கிராமத்துக்கு செல்ல சாலைகள் கிடையாது. எனவே அதிகாரிகள் தங்கள் வாகனங்களை பர்கூர் மலை அடிவாரத்திலேயே நிறுத்திக்கொண்டனர். அதன்பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்களிக்க தேவையான உபகரணங்கள் ஆகியவற்றை 2 கழுதைகள் மீது ஏற்றினார்கள்.
மேலும் அடர்ந்த வனப்பகுதி என்பதால் செல்லும் வழியில் ஆபத்தான வனவிலங்குகள் அதிகம் நடமாடும். அவை தாக்கினால் உயிரிழப்புகள் ஏற்படலாம். எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகாரிகள் மலைக்கிராம மக்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு் கழுதைகளுடன் செங்குத்தான மலைப்பகுதியில் நடக்க தொடங்கினர்.
மலைக்கிராம மக்கள், எந்த எந்த இடங்களில் புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகமாக நடமாடும் என்பதை அறிந்து அதிகாரிகளை பாதுகாப்பாக வனப்பகுதி வழியாக அழைத்து சென்றனர். தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள், கிராம உதவியாளர்கள் மற்றும் பாதுகாப்புக்காக அந்தியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், துணை ராணுவப்படையினரும் துப்பாக்கி ஏந்தியபடி உடன் சென்றனர்.
இன்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் மீண்டும் அதேபோல் கழுதைகள் மீது வாக்குப்பதிவு எந்திரங்கள், உபகரணங்கள் ஏற்றப்பட்டு கீழே நடந்து வருவார்கள்.
இதேபோல தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர் மலை, ஏரிமலை போன்ற மலை கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு நேற்று கழுதைகள் மீது மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் பாதை வசதி இல்லாத மலைக்கிராமங்களுக்கு குதிரைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. இதனால் வாக்குச்சாவடி அதிகாரிகள் சுமார் 8 கிலோமீட்டர் மலைப்பகுதியில் நடந்து சென்றனர்.
இதேபோல திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் உள்ள மலைக்கிராமங்களுக்கு குதிரைகளில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
கோபிசெட்டிபாளையம்:
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடக்கிறது. இதையொட்டி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மாவட்ட,மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் மற்றும் பதட்டமான இடங்களில் துணை ராணுவத்தினரும் வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் இரவு நேரத்தில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்களா? என்றும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு உட்பட்ட சத்தி-ஈரோடு மெயின் ரோடு கோவை பிரிவு என்ற பகுதியில் நிலை கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை 3 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வந்த ஒரு காரை சோதனை நடத்தினர்.
அப்போது காரில் ரூ. 2 லட்சத்து 27 ஆயிரத்து 500 பணம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்த அடில் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் ஜவுளி வாங்க ஈரோட்டுக்கு வந்ததாக தெரிவித்தார். ஆனால் பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல் சத்தியமங்கலம் தாலுகா செண்பகபுதுர் பகுதியை சேர்ந்த காள நாயக்கர் என்பவர் ஆடு வாங்க கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 200 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 3 லட்சத்து 36 ஆயிரத்து 700 ஐ தேர்தல் அதிகாரியும், கோபி ஆர்.டி.ஓ.வுமான பழனிதேவியிடம் ஒப்படைத்தனர்.






