என் மலர்tooltip icon

    ஈரோடு

    கொடுமுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 12.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிகபட்சமாக 110 டிகிரிக்கு மேல் வெயில் வெளுத்து வாங்கியது. வெயிலின் தாக்கம் காரணமாக பொதுமக்கள் நடமாட்டமின்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஈரோடு மாவட்டத்தில் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் மழை பெய்து வந்தது. வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு தண்ணீர் அதிகளவில் வந்து கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று காலை வழக்கம்போல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. மாலையில் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 11 மணிமுதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பலத்த இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ய தொடங்கியது.

    இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இந்த திடீர் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கொடுமுடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரவு 12.30 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டியது. கொடுமுடி பகுதியில் மட்டும் 10 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதேபோல் அந்தியூர் வரட்டுப்பள்ளம் பகுதியிலும் 10 செ.மீ. மழை கொட்டியது.

    இதேபோல் அந்தியூர், பவானி, நம்பியூர், சென்னிமலை, தாளவாடி, பெருந்துறை, அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், பவானிசாகர், சத்தியமங்கலம் உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.

    ஈரோடு மாநகர் பகுதியில்இரவு 11 மணிக்கு மேல் லேசாக மழை பெய்ய தொடங்கியது. பின்னர் 12 மணி முதல் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையாக பெய்ய தொடங்கியது. அதிகாலை 4 மணி வரை மழை வெளுத்து வாங்கியது. இரவு பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வரட்டுப்பள்ளம் - 104.6

    கொடுமுடி - 100.6

    ஈரோடு - 70

    கவுந்தப்பாடி- 52.2

    எலந்தகுட்டைமேடு - 29.4

    பவானிசாகர்- 28.2

    கொடிவேரி - 12.2

    ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 924 மில்லி மீட்டர் மழை பெய்தது.
    ஈரோட்டில் பிளஸ்-1 மாணவியை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் முகமது சபிக். இவருடைய மகன் இப்ராகிம் (வயது 24). கார் டிரைவர். இவர் ஈரோட்டை சேர்ந்த ஒருவரது வீட்டில் டிரைவராக வேலை பார்த்தார். அப்போது, கார் உரிமையாளரின் மகளான 17 வயதுடைய சிறுமியிடம் அவர் பழகி உள்ளார். அந்த சிறுமி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இப்ராகிம் அந்த மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்பேரில் கடத்தப்பட்ட சிறுமியையும், கடத்தி சென்ற இப்ராகிமையும் போலீசார் தேடி வந்தார்கள்.

    இந்நிலையில் இப்ராகிம் ஈரோடு டவுன் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, இப்ராகிமை கைது செய்தார்கள். மேலும், அவருடன் இருந்த மாணவியையும் போலீசார் மீட்டார்கள்.

    கைதான இப்ராகிம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து இப்ராகிமை போலீசார் ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 117 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் புதிதாக நோய் தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று புதிதாக 117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்து 49 ஆக உயர்ந்தது.

    இதில் 15 ஆயிரத்து 292 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 19 பேர் குணமடைந்தார்கள். தற்போது 607 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 300-க்கும் குறைவாக இருந்து வந்தது. ஆனால் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 600-ஐ கடந்து விட்டது.

    கொரோனா பாதிக்கப்பட்ட இடங்களில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருங்கல்பாளையம் சேக்கிழார் வீதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, வீதிகளில் பிளிச்சிங் பவுடர் தூவப்பட்டது.

    இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறுகையில், “ஈரோடு மாநகராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். ஒரே தெருவில் 3-க்கும் மேற்பட்ட வீடுகளில் தொற்று ஏற்பட்டு இருந்தால் அந்த பகுதியை தனிமைப்படுத்தி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படும். கருங்கல்பாளையம் சேக்கிழார் தெருவில் 3 குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்”, என்றார்.
    சத்தியமங்கலம் அருகே ஓரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கோணமூலை அண்ணா நகரைச் சேர்ந்த ஒருவர், சேலத்தில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதற்காக அவர் சேலத்திலேயே தங்கியுள்ளார்.

    இவருடைய மைத்துனர் சத்தியமங்கலம் கோணமூலையை சேர்ந்தவர். அந்த பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் சேலம் சென்று மாமாவை சந்தித்துவிட்டு வந்தார்.

    இந்தநிலையில் போலீஸ் அதிகாரி உடல் பரிசோதனை செய்துகொண்டார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதனால் உரக்கடைக்காரர், அவருடைய மனைவி, மகன், மகள், மாமியார் என அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டனர். அப்போது குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்குமே கொரோனா இருப்பது தெரிந்தது.

    இதில் உரக்கடைகாரரின் மாமியார் மட்டும் பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கோணமூலை ஊராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அண்ணாநகர் செல்லக்கூடிய வழி தகரத்தால் அடைக்கப்பட்டுள்ளது.
    தாளவாடி மலைப்பகுதியில் விலை வீழ்ச்சியால் தக்காளி குப்பையில் கொட்டப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ளது தாளவாடி மலைப்பகுதி. இதன் சுற்றுவட்டார கிராமங்களில் கத்திரி, வெண்டை, தக்காளி, பீட்ரூட், சிவப்பு முள்ளங்கி, முட்டைகோஸ், சின்னவெங்காயம், பீன்ஸ் ஆகிய பயிர்களை பயிரிடுவது வழக்கம்.

    இப்பகுதியில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இது தற்போது நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. ஆனால் இவற்றை வாங்க வரும் வியாபாரிகள் ஒரு கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரைதான் விலை கொடுக்கின்றனர். இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் பலர் தக்காளியை பறித்து குப்பையில் கொட்டியுள்ளார்கள்.

    இதுகுறித்து தாளவாடி விவசாயிகள் கூறியதாவது:-

    தக்காளி 3 மாத பயிராகும். இதில் நாற்று நடுதல், களைஎடுத்தல், உரம் மருந்து என ஏக்கர் ஒன்றுக்கே ரூ.60 ஆயிரம் வரை செலவு ஆகிறது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.15 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஆனால் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.2 முதல் ரூ.3 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. விளைச்சல் அதிகம் என வியாபாரிகள் காரணம் கூறி தக்காளியை குறைவான விலைக்கு கேட்கின்றனர். இதனால் பயிர்களுக்கு செலவு செய்த அசல் தொகை கூட கிடைப்பதில்லை. இதன் காரணமாக பழுத்த தக்காளியை பறித்து குப்பையில் கொட்டி வருகிறோம். சிலர் அப்படியே செடியில் பறிக்காமல் விட்டுவிடுகிறோம். விவசாயத்தையே நம்பி இருப்பதால் கடனாளியாக உள்ளோம்.

    இவ்வாறு விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தார்கள்.
    ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூட ஆசிரியை உள்பட 85 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக 52 வயதுடையவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அந்த ஆசிரியைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இந்தநிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் தற்போது கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஆசிரியை உள்பட ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 831 ஆக உயர்ந்தது.

    அதே நேரத்தில் நேற்று மாவட்டத்தில் மொத்தம் 9 பேர் மட்டுமே குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 236 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர்.

    இதுவரை கொரோனா வைரசுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 445 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
    வரட்டுப்பள்ளம் அணையில் யானைகள் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிக்கின்றன. பின்னர் தண்ணீரை ஒன்றன்மீது ஒன்று துதிக்கையால் உறிஞ்சி பீய்ச்சியடித்து அணையில் குளித்து கும்மாளமிடுகின்றன.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வரட்டுப்பள்ளம் அணை வனப்பகுதியில் ஏராளமான யானை, மான், சிறுத்தை, காட்டெருமை, முள்ளம்பன்றி, செந்நாய் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. யானை மற்றும் மான்கள் காலை, மதியம், மாலை என 3 வேளைகளிலும் கூட்டம் கூட்டமாக வரட்டுப்பள்ளம் அணைக்கு வந்து தண்ணீர் குடித்து செல்கின்றன. இதுபார்ப்பதற்கு கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

    யானைகள் அணையில் இறங்கி துதிக்கையால் தண்ணீரை உறிஞ்சி தாகம் தீர குடிக்கின்றன. பின்னர் தண்ணீரை ஒன்றன்மீது ஒன்று துதிக்கையால் உறிஞ்சி பீய்ச்சியடித்து அணையில் குளித்து கும்மாளமிடுகின்றன. சிறிதுநேரம் ஆனந்தக்குளியல் போடும் யானைகள் அணையில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன.
    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வடவள்ளி வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் திரிந்து கொண்டிருந்ததை வனத்துறையினர் கண்டனர்.

    வனத்துறையினரை கண்டதும், அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபையனூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, நாராயணன் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிச்சாமி என்பதும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குழிவெட்டி அதில் தண்ணீர் ஊற்றி யூரியா உப்பை கரைத்து வைத்ததும், அந்த கரைசலை குடித்த கடமான் இறந்ததும்,’ தெரியவந்தது. மேலும் அவர்கள் இறந்த கடமான் மற்றும் 2 கத்திகளையும் அந்த பகுதியில் உள்ள புதர் மறைவில் மறைத்து வைத்திருந்ததையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். 

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரை கைது செய்ததுடன், இறந்த கடமான் மற்றும் கத்திகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய சதீஷ், மூர்த்தி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    மேலும் அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் இன்று காலை வ.வ.சி பூங்காவில் உள்ள நேதாஜி காய்கறி மார்க்கெட்டில் கொரோனா பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? என்று ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து ஸ்டோனி பிரிட்ஜில் உள்ள மீன் மார்க்கெட், கருங்கல் பாளையம் மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்தார். அப்போது மீன் மார்க்கெட்டில் கடைகளுக்கு இடையே சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென்று அறிவுறுத்தினார்.

    அதைத் தொடர்ந்து மரப்பாலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு ஒரு ஓட்டல் மற்றும் பேக்கரியில் கொரோனா பாதுகாப்பு முறையாக பின்பற்றப்படாததால் அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

    மேலும் அந்த பகுதியில் முககவசம் அணியாமல் வந்த 25-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    அப்போது மரப்பாலம் நால்ரோடு பகுதியில் ஷேர் ஆட்டோ ஒன்று வந்து பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தது.

    அந்த ஆட்டோவில் 19- க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன் அந்த ஷேர் ஆட்டோ டிரைவருக்கு ரூ 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.

    மேலும் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வந்ததால் அந்த ஷேர் ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. டவுன் போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின்போது நகர் நல அலுவலர் முரளி சங்கர், மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு தங்கதுரை உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் 10-க்கும் குறைவானவர்களே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தினந்தோறும் இந்த எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் சிகிச்சைக்காக பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 15 ஆயிரத்து 750 ஆக உயர்ந்தது.

    அதேநேரத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 27 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 15 ஆயிரத்து 227 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரசுக்கு 150 பேர் பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 373 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.
    வடமாநிலங்களில் கொரோனாவுக்கான ஊரடங்கு விதித்து, அங்கு ஜவுளி விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து கடந்த 10 நாட்களாக புதிய ஆர்டர் ஈரோடு உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிக்கு வழங்க வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், சூளை, அக்ரஹாரம், சித்தோடு உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சாதா துணி, ரயான் துணிகள் அதிகமாக உற்பத்தியாகிறது.

    இங்கு மட்டும் தினமும், ரூ.7 கோடி மதிப்பில், 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தியாகிறது. இவற்றை மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு காடா துணியாகவும், மதிப்பு கூட்டப்பட்ட துணியாக மாற்றி பெறவும் அனுப்புவர்.

    கடந்த 2 மாதமாக வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து, தற்போது, தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றதால், ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே, இரவில் முழு ஊரடங்கும், பகலில் பல்வேறு கட்டுப்பாடும் உள்ளதால், ஜவுளி தொடர்பான பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைக்காமலும், இங்கிருந்து துணிகளை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுபற்றி, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

    ஜவுளி சார்ந்த தொழிலில் வடமாநிலத்தை அதிகமாக நாம் நம்பி உள்ளோம். மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, மேற்குவங்காளம் உட்பட பல மாநிலத்தினர், இங்கிருந்து காடா துணியாக வாங்குவர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினையால், துணிகளில் மதிப்பு கூட்டப்பட்டதாக மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இதனால், வடமாநிலம் அனுப்பி பெறும் நிலை உள்ளது. இதற்காகவும் துணிகளை அனுப்பி வருகிறோம்.

    வடமாநிலங்களில் கொரோனாவுக்கான ஊரடங்கு விதித்து, அங்கு ஜவுளி விற்பனை, மதிப்பு கூட்டப்பட்ட பணிகள் பாதித்துள்ளன. இதனால், அங்கிருந்து கடந்த 10 நாட்களாக புதிய ஆர்டர் ஈரோடு உள்ளிட்ட கொங்குமண்டல பகுதிக்கு வழங்க வில்லை.

    இங்கிருந்து துணியை அனுப்பினால், அதற்கான பணம் பெறுவதிலும், மதிப்பு கூட்டப்பட்ட துணியாக மாற்றி திரும்ப வாங்கும் அளவு அவகாசம் உள்ளதா? என தெரியவில்லை.

    இதனால், துணி அனுப்பும் பணியை கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளோம். ஏற்கனவே நூல் விலை உயர்ந்து, துணி விலை குறைந்துள்ளது. வடமாநில ஆர்டர் இல்லாத நிலையில், துணி விலை மேலும் உயர்கிறது. ஈரோடு பகுதியில் தினமும் 24 லட்சம் மீட்டர் துணி உற்பத்தியாகும் நிலையில், தற்போது உற்பத்தியை குறைத்து 5 லட்சம் மீட்டர் அளவுக்கே உற்பத்தி செய்கிறோம். அரசு அறிவிக்கும் ஊரடங்கு தளர்வுகளுக்கு ஏற்ப, அடுத்த கட்ட உற்பத்தி நிலை இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே கள்ளக்காதல் தகராறில் ஜோதிடர் கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரிபுதூர் மல்லியூர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி மல்லிகா (46). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார்.

    இதேபோல் கவுந்தப்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜோதிடர் பழனிசாமி (57). இவரிடம் மல்லிகா அடிக்கடி ஜாதகம் பார்க்க சென்று உள்ளார். அப்போது இவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து ஜோதிடர் பழனிசாமி அடிக்கடி மல்லியூர் பகுதியில் உள்ள மல்லிகா வீட்டிற்கு வரத்தொடங்கினார். இதை பிடிக்காத மல்லிகாவின் உறவினர்கள் அவர் வீட்டிற்கு வர எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மல்லிகாவையும் கண்டித்தனர். ஆனாலும் அவர்கள் கேட்கவில்லை. அவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு நீடித்தது.

    மல்லிகாவின் உறவினர்கள் ஜோதிடர் பழனிசாமியை நேற்று பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதன்படி அவரும் அங்கு வந்தார். இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் பகுதியில் வைத்து பேச்சுவார்த்தை நடந்தது.

    அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மல்லிகாவின் உறவினர்கள் சென்னாநாயக்கர், கோவிந்தன், சூரிய பிரகாஷ், பிரபு, குமார், சின்னம்மாள் ஆகியோர் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை தாக்கினர். இதையடுத்த அவர் அருகில் கிடந்த கத்தியை எடுத்து அனைவரையும் கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த மல்லிகாவின் உறவினர்கள் 6 பேரும் சேர்ந்து ஜோதிடர் பழனிசாமியை கல்லால் முகத்தில் அடித்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் இதுப்பற்றி தெரியவந்ததும் ஆப்பக்கூடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கத்தி குத்தில் காயம் அடைந்த 6 பேரையும் பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் ஜோதிடர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×