search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடமானை கொன்ற 3 பேரையும், அவர்களை கைது செய்த வனத்துறையினரையும் படத்தில் காணலாம்.
    X
    கடமானை கொன்ற 3 பேரையும், அவர்களை கைது செய்த வனத்துறையினரையும் படத்தில் காணலாம்.

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை கொன்ற 3 பேர் கைது

    சத்தியமங்கலம் வனப்பகுதியில் கடமானை கொன்ற 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்ட வடவள்ளி வனப்பகுதியில் சத்தியமங்கலம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகப்படும் படியாக 5 பேர் திரிந்து கொண்டிருந்ததை வனத்துறையினர் கண்டனர்.

    வனத்துறையினரை கண்டதும், அந்த 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்தனர். இதில் 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், ‘அவர்கள் சத்தியமங்கலம் அருகே உள்ள ராமபையனூர் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, நாராயணன் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த பழனிச்சாமி என்பதும், வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து குழிவெட்டி அதில் தண்ணீர் ஊற்றி யூரியா உப்பை கரைத்து வைத்ததும், அந்த கரைசலை குடித்த கடமான் இறந்ததும்,’ தெரியவந்தது. மேலும் அவர்கள் இறந்த கடமான் மற்றும் 2 கத்திகளையும் அந்த பகுதியில் உள்ள புதர் மறைவில் மறைத்து வைத்திருந்ததையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். 

    இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரை கைது செய்ததுடன், இறந்த கடமான் மற்றும் கத்திகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட 3 பேர் கொடுத்த தகவலின் பேரில் தப்பி ஓடிய சதீஷ், மூர்த்தி ஆகிய 2 பேரையும் வனத்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×