என் மலர்
ஈரோடு
ஈரோடு:
கடந்த ஆண்டு கொரோனா பரவல் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டு பொது போக்குவரத்து சேவை முழுவதும் ரத்து செய்யப்பட்டது. இதன்படி ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் படிப்படியாக தொற்று குறைய ஆரம்பித்ததால் பல்வேறு கட்ட தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதிலும் முன் பதிவுகளுடன் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் ரெயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
ரெயில் நிலையங்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ரெயில்வே நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் 2-வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளது.எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக இன்று முதல் ரெயில் நிலையங்களில் பயணிகள் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று முதல் ஈரோடு ரெயில் நிலையத்தில் முககவசம் அணியாமல் வந்த பயணிகள், ரெயிலில் பயணம் செய்த பயணிகளுக்கு தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை மட்டும் 10 பயணிகளுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ரெயில் நிலையங்களிலும், ரெயிலில் பயணிக்கும் போதும் பயணிகள் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்த அபராதத்தை ரெயில் நிலைய மேலாளர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தால் அங்கீகாரம் பெற்ற அதிகாரிகள் உள்ளிட்டோர் வசூலிப்பார்கள்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மொடக்குறிச்சி அடுத்த நஞ்சைஊத்துக்குளியில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு வடமாநிலத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த வாரம் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்த சில வடமாநில தொழிலாளர்களுக்கு சளி, காய்ச்சல் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 10 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து ஆர்.டி.ஓ. சைபுதீன், சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் சவுண்டம்மாள் ஆகியோர் தலைமையிலான குழுவினர் அந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் தங்கி உள்ள விடுதி வளாகத்திலேயே முகாம் அமைத்து பரிசோதனை செய்யப்பட்டது.
இதன் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் 69 தொழிலாளர்களுக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நசியனூரில் உள்ள தனியார் மருத்து வமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் ஆர்.டி.ஓ. சைபுதீன், தாசில்தார் சங்கர் கணேஷ், மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் இளங்கோ ஆகியோர் மீண்டும் அந்த நிறுவனத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சுகாதாரத்துறை சார்பில் அந்த நிறுவனம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தப்படுத்தப்பட்டது. இதையடுத்து அந்த நிறுவனம் மூடப்பட்டது. அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த தொழிலாளர்கள் அருகில் இருக்கும் கடைகளுக்கு சென்று வந்ததால் நஞ்சை ஊத்துக்குளி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு நேற்று முதல் கொரோனா பரிசோ தனை தொடங்கியது. கடைக்காரர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்.டி.ஓ. சைபுதீன் கூறியதாவது:-
நஞ்சை ஊத்துக்குளி தனியார் நிறுவனத்தில் 69 பேருக்கு தொற்று இருந்ததை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொழிலாளர்கள் அருகில் உள்ள கடைகளுக்கும் சென்று வந்துள்ளனர். எனவே 4 நாட்களுக்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடைக்காரர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. பரிசோதனை செய்த நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த கடைகள் திறக்கப்படமாட்டாது. தொற்று இல்லை என தெரிந்தால் மட்டுமே அந்த கடைகள் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் நஞ்சை ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வந்த பொதுமக்கள் யாருக்காவது காய்ச்சல், சளி இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் அதிகளவில் தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனங்களிலும் சுகாதாரத்துறையினர் முகாமிட்டு காய்ச்சல் பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப போடப்படுகிறது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதன்பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். அதில் அறிவிக்கப்படும் தேதியின்படி பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தொழில் நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பணியாளர்களுக்கு மொத்தமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் பலர் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. 2-வது கட்டமாக அரசின் பிற துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 3-வது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகள் செயல்படுகின்றன. அதற்கு போதுமான காற்றோட்ட வசதி, இணைய இணைப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தடுப்பூசி மையங்களில் பாதுகாவலர், பயனாளிகளை சரிபார்ப்பவர், தடுப்பூசி வழங்குபவர், கண்காணிப்பாளர்கள் என 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தற்போது மேலும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் வரப்பெற்று உள்ளது. எனவே தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 500, 200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கள்ளநோட்டு புழக்கத்தில் விடும் கும்பல் குறித்து ரகசிய விசாரணை நடத்தினர்.
அப்போது பவானி பழனி யாண்டவர் கோவில் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே இவர் கடந்த 2019-ம் ஆண்டு கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.
அப்போது அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் என்ற பகுதியில் செல்வம் (54) என்பவரது வீட்டில் கோவிந்தராஜ் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.
அப்போது அவர்கள் ஒரு எந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கோவிந்தராஜ், செல்வம் ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து கொண்டனர்.
பின்னர் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 28, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 23, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 12 மற்றும் ஒரு பக்கம் மட்டும் பிரிண்ட் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 800 ஆகியவற்றையும், கள்ளநோட்டு அச்சடித்த எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கோவிந்தராஜ், செல்வம் ஆகியோரை கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டது? எந்தெந்த பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஒருவரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கள்ளநோட்டு அச்சடித்தது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இதுபற்றிய முழு விபரம் இன்று மாலை தெரிவிப்போம் என்றனர்.
அந்தியூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு:
கோபிசெட்டிபாளையம் அடுத்த சிங்கிரிபாளையம், வடக்கு வீதியை சேர்ந்த முத்துமாரி (வயது 22) என்ற பெண் இன்று ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பரபரப்பான புகார் மனு ஒன்றை அளித்தார்.
கடந்த 2018-ம் ஆண்டு பேஸ்புக் மூலம் தீனதயாளன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில் அவரிடம் வேலை கேட்டு இருந்தேன். அவர் திருப்பூரில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.இதைத்தொடர்ந்து நான் திருப்பூருக்கு சென்றேன். அவர் என்னை அழைத்துக் கொண்டு பெருமாநல்லூர் பகுதியில் உள்ள ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிட்டார். நான் அந்த கம்பெனியின் மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தேன்.
இந்நிலையில் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உன்னை பார்க்காமல் இருக்க முடியவில்லை வெளியில் வீடு பார்த்து உள்ளதாக கூறினார். இதனால் நான் விடுதியை காலி செய்து அவருடன் ஒரே வீட்டில் தங்கினேன். திருமணம் ஆகாமல் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தோம்.
இந்நிலையில் அவர் என்னை கட்டாயப்படுத்தி ஒன்றாக இருந்தோம். நான் உன்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அதற்கு என் பெற்றோர் சம்மதம் வேண்டும் என்று கூறி 6 மாதம் தட்டிக்கழித்து வந்தார். என் தங்கை வாழாமல் பெற்றோர்களுடன் இருப்பதாகவும் அவர் விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்த பிறகுதான் நாம் திருமணம் செய்து கொள்ளலாம் என எனது பெற்றோர்கள் தெரிவித்து விட்டதாக என்னிடம் கூறினார். நானும் அதற்கு சரி என்று கூறிவிட்டேன்.
பின்னர் அவர் வாரத்துக்கு 2 முறை மட்டுமே வந்து செல்வார். இந்நிலையில் நான் கர்ப்பம் ஆனேன். அவரிடம் இது குறித்து கூறி என்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ள வலியுறுத்தினேன். அவர் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.
இதையடுத்து நான் கோபி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கச் சென்றேன். உடனே தீனதயாளன் அவரது பெற்றோர் என்னை தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வைப்பதாக உறுதி கூறினார்கள். உங்கள் திருமணம் நடைபெற வேண்டுமானால் கர்ப்பத்தை கலைத்து விட்டு வாருங்கள் என்றனர். இதையடுத்து தீனதயாளன் தாய் ஒரு மருத்துவமனைக்கு என்னை அழைத்துச் சென்று கரு கலைக்க வைத்தார். பின்னர் ஓட்டு போடுவதற்காக என்னை எனது ஊருக்கு அனுப்பி வைத்தார். தேர்தல் முடிந்து ஓட்டு போட்ட பிறகு மீண்டும் அவங்க ஊருக்கு சென்றபோது நீ வரக்கூடாது என தீனதயாளன் மற்றும் அவரது பெற்றோர் என்னை மிரட்டினார்கள். என் மகன் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டான் எனவும் கூறிதுரத்தி விட்டனர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளேன். என்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிய தீனதயான் மற்றும் அவர் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. 3-வது நாளாக நேற்று மாலையும் பெருந்துறை, குண்டேரி பள்ளம், மொடக்குறிச்சி ஈரோடு, சென்னிமலை, வரட்டுப்பள்ளம் நம்பியூர் உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
ஈரோடு மாநகராட்சி பகுதியில் நேற்று இரவு 8 மணி முதல் 11 மணி வரை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் மாநகராட்சியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டது.
மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள அசோகபுரி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். பெரும்பள்ளம் ஓடை அருகே இந்த குடியிருப்புகள் உள்ளது.
பலத்த மழை காரணமாக பெரும்பள்ளம் ஓடையில் தண்ணீர் அதிகரித்து சென்றதால் அசோகபுரி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் இருந்த 4 குடிசை வீடுகளும் சேதமடைந்தன.
இதுபற்றி தெரிய வந்ததும் தாசில்தார் பாலசுப்பிரமணியம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு தேவையான உதவிகள் செய்ய நடவடிக்கை எடுத்தார். மழை வெள்ளம் காரணமாக அசோகபுரி பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்டு அருகே உள்ள ஆதிதிராவிடர் அரசினர் மாணவர் தங்கும் விடுதியில் தங்க வைத்தனர். அவர்களுக்கு இன்று காலை உணவு வழங்கப்பட்டது.
தற்போது அந்த பகுதியில் மழை வெள்ளம் வடிந்து வருகிறது. இருப்பினும் சேறும் சகதியும் சூழ்ந்திருப்பதால் மாநகராட்சி பணியாளர்கள் அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் பழைய பூந்துறை ரோடு பகுதியில் 10 -க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பெரும் அவதி அடைந்தனர். அவர்களும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பழைய பூந்துறை ரோடு பகுதியில் வீடுகளில் புகுந்த தண்ணீர் வடிய தொடங்கியது மக்கள் மீண்டும் வீட்டுக்கு செல்ல தொடங்கினர்.
பலத்த மழை காரணமாக மொடக்குறிச்சி பகுதியில் மழை வெள்ளத்தில் மஞ்சள் மூழ்கியது. அதேபோல் சத்தியமங்கலம், கோபி, நம்பியூர் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள வயல்வெளிகளிலும் தண்ணீர் தேங்கி நின்றது.
இந்நிலையில் ஈரோடு உட்பட 8 மாவட்டங்களில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஈரோட்டில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பெருந்துறை-49, குண்டேரிப்பள்ளம்-41, மொடக்குறிச்சி-32, ஈரோடு -30, சென்னிமலை-20, வரட்டுப்பள்ளம்-14, நம்பியூர்-12, கொடிவேரி-7.2, சத்தியமங்கலம்-7, கவுந்தப்பாடி-5.2, கொடுமுடி-4, கோபி-4, பவானிசாகர்-2.8, அம்மா பேட்டை-2.4.
ஈரோடு மாவட்டத்தில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முதல் கட்டமாக கோவேக்சின், கோவிஷில்டு ஆகிய 2 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதலில் தனியார், அரசு ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
பின்னர் போலீசார் பிற துறையில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் என 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 1-ந்தேதி முதல் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் 45 வயது முதல் 59 வயதுக்குட்பட்ட இணை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்டம் முழுவதும் 24 அரசு மையங்களிலும், 42 தனியார் ஆஸ்பத்திரிகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 1-ந்தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் 1,000 முதல் 1,300 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தனியார் ஆஸ்பத்திரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பில் உள்ளதாகவும், ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டால் அடுத்த முறையும் அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர்.






