என் மலர்
ஈரோடு
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள பாசூர் பச்சாபாளையத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (32). கூலி தொழிலாளி. இவர் நாமக்கல் மாவட்டம் மோளகவுண்டன் பாளையத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை திருமணம் செய்து 2 மாதமாக குடும்பம் நடத்தி வருவதாக ஈரோடு சைல்டு லைன் அமைப்புக்கு புகார் வந்தது.
இது குறித்து ஈரோடு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பிரியாதேவி சிறுமியிடம் விசாரணை நடத்தி மலையம்பாளையம் போலீசில் லட்சுமணன் மீது புகார் செய்தார்.
புகாரை தொடர்ந்து லட்சுமணன் மீது மலையம் பாளையம் போலீசார் போக்சோ மற்றும் குழந்தைகள் திருமண தடை சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி கோபி சப்-ஜெயிலில் லட்சுமணனை அடைத்தனர். பின்னர் போலீசார் மாணவியை அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் அரசு அலுவலர் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு அரசு ஊழியர்களுக்கு துறை ரீதியான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார், வருவாய்த்துறை, கல்வித்துறை உள்பட அனைத்து துறையினருக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இங்கு குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற நேரடி டி.எஸ்.பிக்கள் 26 பேர் 45 நாட்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இந்த பயிற்சியில் பங்கேற்ற சில டி.எஸ்.பி.க்களுக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கபட்டது. தொடர்ந்து காய்ச்சல், சளி இருந்தது.
இதையடுத்து பயிற்சி டி.எஸ்.பிக்கள் 26 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பயிற்சி டி.எஸ்.பிக்கள் சுரேஷ்பாண்டியன், வசுந்தராஜ், சஞ்சிவ்குமார், ராஜலட்சுமி, ஹரிசங்கரி ஆகிய 5 டி.எஸ்.பி.க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் 5 பேரும் ஆம்புலன்சு மூலம் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற பயிற்சி டி.எஸ்.பி.க்கள் மற்றும் ஊழியர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார், அசோகபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பபட்டு வருகின்றது.
இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 15 நாட்களாக வெளி மாநிலங்களுக்கு அனுப்ப முடியாமல் ரூ.100 கோடி மதிப்பிலான துணிகள் தேக்கமடைந்துள்ளன. மேலும் ஒரு மீட்டருக்கு ரூ.2 விலையும் குறைந்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நேற்று இரவு முதல் இந்த ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் தினமும் 2 ஷிப்டுகள் அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு ஷிப்டும், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை ஒரு ஷிப்டு என்ற அடிப்படையில் விசைத்தறிகள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இரவு நேர ஊரடங்கு பிறப்பித்துள்ள காரணத்தால் ஈரோடு மாவட்டத்தில் விசைத்தறி உற்பத்தியை 50 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு முதல் காலை நேர ஷிப்டு மட்டுமே விசைத்தறிகள் இயக்கப்பட்டன. இரவு நேர ஷிப்டு இயக்கப்படவில்லை.
இதனால் நாளொன்றுக்கு 24 லட்சம் மீட்டர் துணிகள் உற்பத்தியாகும் இடத்தில் இனி 12 லட்சம் மீட்டர் துணிகள் மட்டுமே உற்பத்தி ஆகும். இதவு நேர ஊரடங்கு காரணமாக சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்தனர்.
தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர முழு ஊரடங்கு தொடங்கியது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. மேலும் கடைகள், வணிக வளாகங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்திலும் நேற்று இரவு 9 மணி அளவில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. வெளியூர்களுக்கு மாலை 5 மணியுடன் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கடைசியாக சென்ற பஸ்களில் கூட்டம் அலைமோதியது.
இதேபோல் ஈரோட்டில் இருந்து மாவட்டத்தின் மற்ற பகுதிகளான கொடுமுடி, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், தாளவாடி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இரவு 10 மணிக்குள் பஸ்களை இயக்கினர்.
ஈரோடு நகரில் உள்ள துணிக்கடைகள், நகைக்கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
பெரும்பாலான நிறுவனங்கள் இரவு 9 மணிக்கு மேல்தான் பூட்டப்படும். இதனால் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்லும் கடைசி பஸ்சை பிடிக்க அலறியடித்து ஓடி வந்தனர்.
ஆனால் பெரும்பாலான பஸ்கள் முன்கூட்டியே இயக்கப்பட்டதால் தொழிலாளர்கள் பலர் பஸ் கிடைக்காமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் பஸ் நிலையத்திலே விடிய விடிய காத்திருந்தனர். பஸ் நிலைய பகுதியை ஒட்டி இருந்த கடைகளில் இரவு உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு பஸ் நிலையத்திலேயே படுத்து தூங்கினர். சிலர் குடும்பத்துடன் வெளியூர் செல்ல வந்திருந்தனர். அவர்களும் பஸ் கிடைக்காததால் பஸ் நிலைய நடைமேடைகளில் தூங்கினர்.
இன்று அதிகாலை 4 மணி முதல் பஸ்கள் இயங்க தொடங்கியதும் பஸ் நிலையத்தில் காத்திருந்த தொழிலாளர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.
இதுகுறித்து பயணிகள் சிலர் கூறும்போது, இரவு வேலை முடிந்து வருவதற்குள் பஸ் சென்று விட்டது. இதனால் வீட்டிற்கு திரும்ப முடியாமல் பஸ் நிலையத்தில் காத்திருந்தோம். மீண்டும் காலை 4 மணி முதல் பஸ் இயக்கப்படுவதால் இப்போது வீட்டிற்கு செல்கிறோம்.
வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு மீண்டும் நாங்கள் ஈரோட்டிற்கு வேலைக்கு வரவேண்டிய சூழல் உள்ளது என்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிராமபுற மக்கள் பஸ்சுக்காக பஸ் நிலையங்களில் காத்திருந்தனர்.
சத்தியமங்கலம்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மகள் கிருத்திகா (19). இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இ.சி.இ 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இவர் கடந்த 15-ந் தேதி செய்முறை பயிற்சி வகுப்பிற்காக கல்லூரிக்கு வந்தார். இவருடன் விடுதி அறையில் தங்கி இருந்த மாணவிகள் ஊருக்கு சென்று விட்டனர். இதனால் மாணவி கிருத்திகா மட்டும் தனியாக விடுதி அறையில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் நேற்று கிருத்திகா தங்கி இருந்த அறையின் கதவு நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. இதனால் அருகே உள்ள அறையில் இருந்த மாணவிகள் சந்தேகமடைந்து கல்லூரி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவி தங்கி இருந்த அறையின் கதவை திறந்து பார்த்தனர். அப்போது மாணவி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி கிருத்திகாவின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு, வீரப்பன் சத்திரம், சித்தோடு, லக்காபுரம், சோலார் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு வருகின்றன.
இவைகளில் ரயான் ரக துணிகள் அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி செய்யப்பட்டு மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், டெல்லி, கொல்கத்தா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாலும், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாலும், வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு பகுதிக்கு ஆர்டர் கிடைப்பது பாதிக்கப்பட்டுள்ளதாக விசைத்தறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு செய்தி தொடர்பாளர் கந்தவேல் கூறியதாவது:-
மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஜவுளி உற்பத்தியாளர்கள் ரயான் துணி வாங்குகின்றனர். வடமாநிலங்களில் இரவு நேரங்களில் கொரோனா ஊரடங்கு விதிக்கப்பட்டதால் ஜவுளி சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக புதிய ஆர்டர்கள் ஈரோட்டிற்கு வருவது குறைந்துவிட்டது. பணம் பெறுவதிலும் சிக்கல் நிலவி வருகின்றது.
மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு மீட்டர் துணி 26 ரூபாய் 75 காசுக்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது விலை குறைந்து ஒரு மீட்டர் துணி ரூ.25-க்கு விற்கப்படுகிறது. எனினும் வியாபாரிகள் துணிகளை வாங்க முன்வரவில்லை. மேலும் கடந்த 15 நாட்களுக்கு மேலாக உற்பத்தி செய்யப்பட்ட துணிகள் அப்படியே தேக்கம் அடைந்துள்ளது.
ஈரோட்டில் இருந்து வெளிமாநிலங்களுக்கு துணிகள் அனுப்பப்படாததால் ரூ.100 கோடிக்கு மேல் துணிகள் தேக்கம் அடைந்துள்ளது. இதன் காரணமாக ஈரோடு பகுதியில் துணி உற்பத்தியை குறைத்து உள்ளோம். இன்னும் சில மாதங்களுக்கு இதே நிலைமை தான் நீடிக்கும். இந்த தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. எனவே மத்திய மாநில அரசுகள் எங்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் நிறுவனங்கள், ஓட்டல்கள், பேக்கரிகள், பெட்ரோல் பங்க் ஆகியவற்றில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் தினமும் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் கோவை-சேலம் செல்லும் முக்கிய சாலையில் வருவாய்த்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்க்கொண்டனர். அப்போது அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்க் மற்றும் பேக்கரியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் சம்பந்தப்பட்ட பெட்ரோல் பங்க் மற்றும் பேக்கரிக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகராட்சியில் மாரப்பா 2-வது வீதி, பூசாரி சென்னிமலை 5-வது வீதி, பிருந்தாவன் அப்பார்ட்மெண்ட், ரெயில்வே காலனி, பெரியண்ணன் வீதி, சாமியப்பா 3-வது வீதி, முத்து வேலப்ப மெயின் வீதி, மாணிக்கம்பாளையம் வீட்டுவசதி வாரியம், கந்தாம்பாளையம், எஸ்.கே.சி.ரோடு, அருள்வேலவன் நகர் பி.பெ.அக்ரஹாரம், ராஜகோபால் தோட்டம், செங்காடு, கருங்கல்பாளையம், பொன்னுசாமி வீதி, கே.என்.கே.ரோடு, நாராயணவலசு, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம், வீரப்பன்சத்திரம் மற்றும் கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ராமர் எக்ஸ்டன்சன், செங்கோட்டையன் நகர், சென்னிமலையில் ராக் மவுண்ட் சிட்டி பெரியவலசு, வெள்ளிரான்காடு ஈங்கூர்மேற்கு, ஈங்கூர், பெருந்துறை வட்டத்தில் வெட்டையன்கிணறு, கந்தாம்பாளையம், வாய்க்கால்மேடு, பெரியவேட்டுவம்பாளையம், சத்தியமங்கலம் நகராட்சியில் கோணமூலை, மேட்டூர், வரதம்பாளையம், பவானி நகராட்சியில் கவுந்தப்பாடி, சாத்தநாய்க்கனூர், ஒரிச்சேரி, குருப்பநாயக்கன்பாளையம், மாந்தொழிலாளர் முதல் வீதி, பவானி மெயின்ரோடு ஆப்பக்கூடல், டி.என்.பாளையம் நகராட்சியில் ராஜீவ்காலனி அரக்கன்கோட்டை, பட்டத்தரசி அம்மன் கோவில் வீதி வீரச்சின்னனூர், கொடுமுடி வட்டத்தில் சிவகிரி, கணபதிபாளையம், அம்மாபேட்டையில் சின்னகோணமூக்கனூர், குருவரெட்டியூர், மொடக்குறிச்சி வட்டத்தில் நஞ்சை ஊத்துக்குளி, நகராட்சி நகர், கஸ்பாபேட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த 268 பேர் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் 49 கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள 1,234 வீடுகளில் 5 ஆயிரத்து 161 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, சளி, காய்ச்சல் உள்ளிட்ட நோய்க்கான அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டர்களிடம் ஆலோசனைகளை பெற வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் பொன்மனச்செல்வன் (19), பிரதீபன் (16), முகேஷ் (21). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
நேற்று இரவு 11 மணி அளவில் இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பண்ணாரியில் இருந்து பவானிசாகர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது பண்ணாரி சோதனைசாவடி அருகே உள்ள கொக்கரகுண்டி ராஜீவ்நகர் மொக்கை என்ற இடத்தில் வந்தபோதுஅந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர்கள் மீது மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்திலேயே பொன்மனச்செல்வன், பிரதீபன் ஆகியோர் உடல் நசுங்கி பலியானார்கள். முகேஷ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதுபற்றி தெரிய வந்ததும் சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்த முகேஷை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான 2 பேர் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதகுறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள்.






