என் மலர்
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 211 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு தினமும் சுமார் ரூ.5 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் மது விற்பனை அதிகமாக காணப்படும்.
இந்த நிலையில் நேற்று முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இதன்காரணமாக நேற்று முன்தினமே டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்கள் குவிய தொடங்கினார்கள். இதனால் மது விற்பனையும் மும்முரமாக நடந்தது.
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் ரூ.9 கோடியே 96 லட்சத்து 96 ஆயிரத்து 980-க்கு மது விற்பனையானது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட் களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்தது. 5 மணி வரை இடியுடன் கனமழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் வடவள்ளி, பண்ணாரி, சிக்கரசம் பாளையம், ஓட்டகுட்டை, புளியங்கோம்பை, ராஜன் நகர், திம்பம் மலைப்பகுதி, அரியப்பம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வனப் பகுதிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கிழ்ச்சி அடைந்தனர். மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-தாளவாடி- 3.2, சத்தியமங்கலம்-7, கொடிவேரி-5, குண்டேரிபள்ளம்-4.2.
ஈரோடு:
கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரிகள், அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசிகள் போட்டு வருகிறார்கள்.
அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரியில் கட்டணம் வசூலிக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டம் முழுவதும் தினமும் 4,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதற்கு ஏற்ப தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முதலில் ஒரு வாரத்திற்கு 4000 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
தற்போது நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 4000 பேருக்கு வரை தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் வரை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் 1 லட்சத்து 17ஆயிரத்து 953 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. இதேபோல் இரண்டாவது தவணை தடுப்பூசியும் பொதுமக்கள் ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஒருவர் முதல் தடவை கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அடுத்த இருபத்தி எட்டாவது நாளில் இரண்டாவது அதே கோவேக்சின் தடுப்பு ஊசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
ஈரோடு:
ஈரோட்டில் கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர்,மாநகராட்சி ஆகியோர் ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதன்படி மாவட்டம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் ஆஸ்பத்திரிகளில் தினமும் 2 ஆயிரம் கொரோனா பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது.
இதனால் நோய் பாதித்தவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களுக்கு நோய்களின் தன்மைக்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எவ்வித அறிகுறியும் இன்றி நோய்த் தொற்றால் பாதித்தவர்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஏராளமானவர்கள் நோய் தொற்றிலிருந்து குணம் அடைந்தனர்.
இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைய தொடங்கியுள்ளது. தொடர்ந்து தினமும் 1000 முதல் 1200 வரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
இதனால் அனைத்து மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்திலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது மீண்டும் கொரோனா தினசரி பரிசோதனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது மீண்டும் தினமும் 3000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுவரை ஈரோடு மாவட்டம் முழுவதும் 4லட்சத்து 90 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் நேற்று ஒரு நாள் மட்டும் மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் வேகமெடுத்து உள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் குழந்தைகள், முதியவர்கள் தேவை இல்லாமல் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் வெளியே வரும் போது மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் என்றும், சமூக இடைவெளி பின் பற்ற வேண்டும் எனவும் சுகாதார துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டன.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களுக்கு பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள் ஆகிய இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளில்உள்ள தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கொரோனா தொற்றுக்கு புதிதாக பாதிக்கப்படுபவர்கள் கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு நோயின் தன்மை கண்டறியப்பட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நோயின் தாக்கம் குறைவாக இருந்தால், தற்காலிக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரிகளில் போதுமான அளவு ஆக்சிஜன் சிலிண்டர்களை இருப்பு வைத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.தற்காலிக சிகிச்சை மையங்களில் ஆக்சிஜன் வசதி இல்லாமல் இருந்தது. இதனால் ஆக்சிஜன் வசதி தேவைப்படும் நோயாளிகளை ஆம்புலன்ஸ் மூலமாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தநிலையில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து தற்காலிக சிகிச்சை மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தயார் நிலையத்தில் வைத்திருக்க வேண்டும் என்று சுகாதாரத்துறைக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து 11 பயிற்சி தற்காலிக மையங்களிலும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு வைக்கப்பட்டன. இதேபோல் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் ஆக்சிஜன் சிலிண்டர் இருப்பு வைக்கப்பட்டு, தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஈரோடு:
தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இயல்பு நிலை திரும்பியதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஊரடங்கு திரும்ப பெறப்பட்டது.
இந்நிலையில் இந்த வருடம் கடந்த மார்ச் மாதம் கடைசி வாரத்தில் இருந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகம் எடுக்கத் தொடங்கியது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது.
தினமும் தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. தினசரி பாதிப்பு 14 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மே மாதம் 2-வது வாரம் வரை கொரோனா தாக்கம் உச்சத்தில் இருக்கும் என கூறப்படுகிறது.
இதையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கையும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கையும் பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு இன்று அமலுக்கு வந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஈரோடு பஸ் நிலையம் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. ஈரோடு மாநகரில் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, காளைமாடு சிலை, கருங்கல் பாளையம், ஸ்வஸ்திக் கார்னர், மேட்டூர் ரோடு, கே.வி.என்.ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி போன்ற அனைத்து பகுதிகளும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. ஜவுளி நிறுவனங்கள் வணிக வளாகங்கள், ஈரோடு வ.உ.சி.பூங்கா பகுதியில் செயல்பட்டு வந்த நேதாஜி பெரிய மார்க்கெட், உழவர் சந்தை, இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், ஆகியவை அடைக்கப்பட்டிருந்தன.
ஈரோடு சம்பத்நகர், பெரியார் நகர், குமலன் குட்டை மற்றும் பெருந்துறை, கோபி, சத்தியமங்கலம் போன்ற பகுதியில் செயல்படும் உழவர் சந்தை இன்று மூடப்பட்டிருந்தன.
இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 214 டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் அதே நேரத்தில் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பால் கடைகள், மருந்து கடைகள், மருத்துவமனைகள், பெட்ரோல் பங்க்குகள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன.
முழு ஊரடங்கு காரணமாக கோபி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. கோபி, மொடச்சூர் ரோடு, சிறுவலூர், திங்களூர், வரப்பாளையம், நம்பியூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
கோபி பகுதியில் டி.எஸ்.பி. தங்கவேல் தலைமையில் 6 இன்ஸ்பெக் டர்கள் மேற்பார்வையில் 240 போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சத்தியமங்கலம், பவானிசாகர், பண்ணாரி உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. தினசரி மார்க்கெட், பூ மார்க்கெட், வாரசந்தை, கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தது. சத்தியமங்கலம், பவானி சாகர், புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையங்கள் வெறிச்சோடியது.
அந்தியூர் பஸ் நிலையம், தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது. இதேபோல் டி.என்.பாளையம். அம்மாபேட்டை, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டது.
பெருந்துறை பகுதிகளில் முழு ஊரடங்கு காரணமாக வாரசந்தை, தினசரி மார்க்கெட் மற்றும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு உள்ளது. பஸ், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடாததால் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடியது. இதேபோல் பவானி, சித்தோடு, கவுந்தப்பாடி, சென்னிமலை, மொடக் குறிச்சி, சிவகிரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.
கொடுமுடி மற்றும் அருகில் உள்ள சாலைப் புதூர், தாமரைப்பாளையம், க.ஒத்தக்கடை, ஊஞ்சலூர், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண் டாம்பாளையம், சோளங்கா பாளையம், பாசூர், ஆகிய முக்கியமான இடங்களில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள், டீ கடைகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன.
அனைத்துப் பகுதிகளிலும் நெடுஞ்சாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் காலையில் 6 மணி முதல் 7.30 மணி வரை பால் கூட்டுறவு சங்கங்கள் மட்டும் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்தனர்.
மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கில் வாகனங்களில் சுற்றிய பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தவர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக கட்டிட வேலை, சாய, தோல் தொழிற்சாலை, சிப்காட் பகுதியில் செயல்படும் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், பனியன் கம்பெனிகள், மில்கள், பானிபூரி வியாபாரம், டீக்கடை என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.
ஈரோடு மாநகர் பகுதி, சென்னிமலை ,பெருந்துறை போன்ற இடங்களில் அதிக அளவு வடமாநிலத்தவர்கள் குடும்பத்துடன் தங்கியிருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக ஏராளமான வடமாநில தொழிலார்கள் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் சென்றனர். பின்னர் மீண்டும் ஈரோடுக்கு வந்து வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் வேகமெடுத்து உள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இதையொட்டி கடந்த சில நாட்களாக ஈரோட்டில் தங்கி வேலை பார்க்கும் வடமாநில தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சொந்த மாநிலத்துக்கு திரும்பி செல்ல தொடங்கியுள்ளனர்.இதனால் கடந்த சில நாட்களாக ஈரோடு ரெயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இன்று சிறப்பு ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் ஈரோடு ரெயில் நிலையத்திற்கு நேற்று இரவு முதலே வந்து குவிய தொடங்கினர். இன்று காலையும் சிலர் கால்நடையாக ரெயில் நிலையத்திற்கு வந்தனர். இரவு வந்த வட மாநிலத்தவர்கள் ரெயில் நிலைய வளாகத்திலேயே தங்கினர்.
அதைத் தொடர்ந்து இன்று காலை இயக்கப்பட்ட சிறப்பு ரெயில்களில் சொந்த ஊருக்கு கிளம்பி சென்றனர்.
இன்று காலையும் ரெயில் நிலையம் பகுதியில் ஏராளமான வடமாநிலத்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் ரெயிலுக்காக காத்திருந்தனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்ல தயக்கம் காட்டி வந்தனர்.
இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. ஈரோட்டில் நேற்று பலத்த இடி மின்னல் இருந்தது. மேகம் கறுத்து காணப்பட்டது. ஆனால் சிறிய தூரல் மட்டுமே பெய்தது.
சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. சத்தி அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. தொடர்ந்து இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கடம்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழைகள் பயிரிட்டுள்ளனர். மேலும் மஞ்சள், மரவள்ளி உள்பட பல்வேறு பயிரிட்டு வருகிறார்கள்.
கடம்பூர் இருட்டிபாளையம் பகுதியில் கீதா என்ற விவசாயி 1 ஏக்கர் நிலத்தில் செவ்வாழைகள் பயிட்டிருந்தார். அந்த பகுதியில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 700 செவ்வாழைகள் சூறாவளி காற்றின் வேகத்தால் முறிந்து விழுந்தன. ஒரு செவ்வாழை தார் ரூ.300 வரை விற்பனையாகிறது. இதில் 700 வாழைகள் சேதமானது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆகும்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குத்தியாலத்தூர் கிராம நிர்வாக அதிகாரி சீனவாசன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது சேதமான வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க பரிந்துரை செய்யப்படும் என உறுதி கூறினார்.
இதேபோல் பவானி, அந்தியூர், கவுந்தப்பாடி, அம்மாபேட்டை உள்பட சுற்று வட்டார பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பவானி, காளிங்கராயன் பாளையம், சித்தார், அம்மாபேட்டை, சித்தோடு, நசியனூர் உள்பட பல பகுதியில் இரவு 9 மணி அளவில் இடி- மின்னலுடன் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக மழை தூறி கொண்டே இருந்தது. கவுந்தப்பாடி, எலந்தகுட்டை மேடு, சலங்கபாளையம் பகுதிகளிலும் பரவலான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று இரவு 9 மணிக்கு பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. சில இடங்களில் இன்று அதிகாலை வரை விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு அந்தியூர் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்த போது, அந்தியூர் தவிட்டுப்பாளையம் மார்க்கெட் அருகே வெண்ணிலா கட் என்ற இடத்தில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

டிரான்ஸ் பார்மர் வெடித்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அந்த பொதுமக்கள் கூடினர். டிரான்ஸ் பாரத்தில் இருந்து ஆயில் சிதறியது. அந்த ஆயில் அக்கம் பக்கம் உள்ள வீடுகளின் மேற்பகுதியிலும் உள்புறமும் தெறித்தது.
அப்போது சத்தத்தை கேட்டு வெளியே வந்த அப்பகுதியைச் சேர்ந்த பெருமாள் என்பவர், டிரான்ஸ்பார்மரில் இருந்து அவரது வீட்டில் சிதறிய ஆயிலில் கால் வைத்தார். அப்போது அவர் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்தார்.
மேலும், டிரான்ஸ் பார்மர் வெடித்ததால் நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை வரை மின் தடை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி இருளில் மூழ்கியது.
இது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய அதிகாரிகள், மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து டிரான்ஸ்பார்மரை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பவானி- 12 மி.மீ.
கவுந்தப்பாடி- 29.4 மி.மீ.
எலந்தகுட்டை மேடு- 5.4 மி.மீ,
அம்மாபேட்டை 8.4 மி.மீ.
மொத்தம்- 55.2 மி.மீ.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை சுனாமியாக மக்களை தாக்கி வருகிறது. வட மாநிலங்களில் கொரோனாவால் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஊடகங்கள் கூறுகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் சீதாராம் யச்சூரியின் மகன் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளார்.
மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என்று பலரும் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி உள்ளனர். கடந்த ஆண்டு முதல் அலையின் போது தமிழகத்தில் எச்.வசந்தகுமார் எம்.பி, திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பிரபலங்களும் மரணம் அடைந்தனர்.
கொரோனா அரக்கன் பிடியில் இருந்து மீண்டு வருவதாக நம்பிய நிலையில் 2-ம் அலை பெரும் சுனாமியாக உருவெடுத்து இருக்கிறது. இந்த முறை தொடக்கத்தில் இருந்தே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்கள் மரணத்தை தழுவும் சூழலுக்கு சென்று வருகிறார்கள்.
ஈரோட்டில் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. கொரோனா மரணம் என்ற தகவல் அதிகமாக கிடைக்கிறது. நண்பர், தெரிந்தவர்கள் கொரோனா மரணத்துக்கு ஆளாகும்போது அனைவருக்கும் அது அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.
ஈரோடு மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க மாநகராட்சி நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. மக்களும் இதுதொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 152 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பில் சிகிச்சை மற்றும் தனிப்படுத்தப்பட்டோர் பட்டியலில் 624 பேர் இருந்தனர். ஆனால் நேற்று முன்தினம் 1,689 ஆக உயர்ந்து உள்ளது. இந்த 10 நாட்களில் 1,212 பேர் குணம் அடைந்தும் சென்று உள்ளனர். அப்படி என்றால் கொரோனா பரவல் வேகம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் அல்லது சோப்பு போட்டு கைகளை சுத்தம் செய்வதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டக்கூடாது.
போலீசார் அபராதம் விதித்து விடுவார்கள் என்று பயந்து அச்சத்தில் முகக்கவசங்கள் அணியாமல், உண்மையாக நமக்கும், நம்மால் இன்னொருவருக்கும் கொரோனா பரவல் ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்துடன் முகக்கவசம் அணிய வேண்டும்.
இதுபோல் தடுப்பூசி போடுவதில் அரசு அதிக அக்கறை செலுத்தி வருகிறது. அதே நேரம் தடுப்பூசியால் பாதிப்பு ஏற்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன. இதுபற்றிய உண்மை நிலையை அரசும், மருத்துவத்துறையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் பெரும் பங்கு உள்ளது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.






