என் மலர்
ஈரோடு
பவானிசாகர் | இந்திய கம்யூனிஸ்ட் |
கோபிச்செட்டிப்பாளையம் | அதிமுக |
அந்தியூர் | கடும் போட்டி |
பவானி | அதிமுக |
பெருந்துறை | கடும் போட்டி |
மொடக்குறிச்சி | திமுக |
ஈரோடு மேற்கு | திமுக |
ஈரோடு கிழக்கு | காங்கிரஸ் |
ஈரோடு:
கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (வயது 44). பெயிண்டர். கடந்த சில தினங்களுக்கு முன்பு வீரகேரளம் டாஸ்மாக் கடை அருகே ரத்த காயங்களுடன் தர்மலிங்கம் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் முதலில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் 5 பேர் கொண்ட கும்பல் தாங்கள் வைத்திருந்த 3 கிராம் நகை மற்றும் பணத்தை தர்மலிங்கம் திருடி சென்று விட்டதாக நினைத்து அவரை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து போலீசார் கொலை வழக்காக மாற்றி கொலையாளிகளை வலைவீசி தேடி வந்தனர். 2 நாட்களுக்கு முன்பு தர்ம லிங்கத்தை கொலை செய்ததாக பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார், வடவள்ளி பகுதியை சேர்ந்த பிரபு ஆகிய 2 பேரை வடவள்ளி போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தர்மலிங்கத்தை கொலை செய்த வழக்கில் தலைமறைவான கோவை கே.சி.தோட்டம், 3-வது செட்டி வீதியை சேர்ந்த காளிதாஸ் (39), செல்வபுரம் ஆர்.பி.பாரதி வீதியை சேர்ந்த தனஞ்செயன் (34) ஆகிய 2 பேரும் நேற்று ஈரோடு ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நீதிபதி வடிவேல் முன் சரணடைந்தனர்.
இதனையடுத்து நீதிபதி அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர்கள் இருவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது தொற்று வேகமாக பரவி வருவதால் பரிசோதனையை எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு தற்போது தினமும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல் படி மேலும் 457 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்து 253 ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பை போல குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது சற்று நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரே நாளில் 297 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 17,295 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 72 வயது முதியவர், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 80 வயது மூதாட்டி என இருவர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது மாவட்டம் முழுவதும் 2,799 பேர் கொரோனாவுக்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொடுமுடி வடக்கு வீதியை சேர்ந்த மூன்று ஆண்கள், ஒரு பெண் உள்பட 4 பேருக்கும், பாசூரை சேர்ந்த 65 வயது மூதாட்டி ஒருவர், 51வயது ஆண் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். கொடுமுடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அந்த பகுதி முழுவதும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னிமலை சுற்று வட்டாரத்தில் கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னிமலை பகுதியான மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதி, உப்பிலிபாளையம், கிழக்கு புது வீதி, திருஞானசம்பந்தர் தெரு, பிடாரியூர், மணிமலை உள்ளிட்ட பகுதிகளில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னிமலை வட்டார மருத்துவ அதிகாரி சதீஷ் குமார் தலைமையில் சென்னிமலை டவுன் பகுதி, காசிபாளையம், வெள்ளோடு ஆகிய பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள டாக்டர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் மக்கள் வசிக்கும் பகுதியில் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
பெருந்துறை குன்னத்தூர் ரோடு முதலியார் வீதி பகுதியில் ஒரே வீட்டில் சேர்ந்த 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் கண்காணிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த பணியை பெருந்துறை பேரூராட்சி செயல் அலுவலர் ரவிக்குமார் பார்வையிட்டார். இதையடுத்து அந்த பகுதியில் உள்ள 5 கடைகளை அடைக்க உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோல் ஈரோடு மாநகராட்சி பகுதியிலும் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை மீட்க ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் தலைமையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஈரோடு மாநகராட்சியை பொறுத்தவரை தினசரி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் தொடர்பில் இருந்தவர்கள் என்ற அடிப்படையில் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதுபற்றி ஈரோடு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையில் 40 சதவீதம் அளவுக்கு ஈரோடு மாநகராட்சியை சேர்ந்தவர்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பொதுவாக பணியின் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வருபவர்கள் மூலம் ஈரோட்டில் 2-வது அலை கொரோனா பரவல் அதிகமாகி இருக்கிறது. இதுபோல் ஈரோட்டில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வெளியூர்களில் இருந்து வந்து செல்பவர்களால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் எம்.இளங்கோவன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் தினசரி 1,100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. கடந்த 4 நாட்களாக இதுபோன்று தினசரி 1,100 பேருக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இவ்வாறு மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் முரளி கூறினார். நேற்று அன்னை சத்யா நகர் பகுதியிலும் மாநகராட்சி மருத்துவக்குழுவினர் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர்.
கொரோனா வைரஸ் நோய் பரவுவதை தடுப்பது குறித்து அரசு அதிகாரிகள், தனியார் ஆஸ்பத்திரிகள்-தனியார் தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கு நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் 550 படுக்கைகளும், ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் 208 படுக்கைகளும், கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் 20 படுக்கைகளும், பவானி அரசு ஆஸ்பத்திரியில் 18 படுக்கைகளும், சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள 20 படுக்கைகளும், அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளும், பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் 8 படுக்கைகளும் என 834 படுக்கைகள் உள்ளன. இதில் கொரோனா நோயாளிகள் 375 பேரும், மற்ற நோயாளிகள் 122 பேரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 337 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
தனியார் கல்லூரிகள், பள்ளிக்கூடங்களில் அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களில் 2 ஆயிரத்து 700 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை 1,367 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேலும், தனியார் ஆஸ்பத்திரிகளில் 814 படுக்கைகளும் உள்ளன.
மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 90 ஆயிரத்து 862 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 1 லட்சத்து 18 ஆயிரத்து 282 பேர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளார்கள்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.தங்கதுரை, மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், ஈரோடு ஆர்.டி.ஓ. சைபுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டி தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கடந்த வாரம் முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டு மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட்டு வருகிறது.
மேலும் முழு ஊரடங்கு காரணமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டாஸ்மாக் கடையோடு செயல்படும் பார்களை மூடவும் தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வந்த 128 டாஸ்மாக் பார்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
ஈரோடு ரெயில் நிலையம் பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மணிமொழி நேற்று ஆய்வு செய்தார். அப்போது சமூக இடைவெளியை கடைபிடித்து கடைக்கு வருபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று அவர் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
டாஸ்மாக் கடைகளில் மது நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், கூட்டம் அதிகமாக காணப்பட்டால் டோக்கன் முறையில் மது விற்பனை செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், போலீசார் உள்ளிட்ட முன்கள பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் போலீசார் பலர் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தார்கள். தற்போது போலீசார் 6 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு மொத்தம் 165 போலீசார் பாதிக்கப்பட்டனா். அதில் 158 பேர் குணமடைந்து உள்ளனர். புதிதாக தொற்று பாதிக்கப்பட்ட ஈரோடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர், கொடுமுடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஆயுதப்படை போலீசார் என 6 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் 5 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர்.
கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக்கு டவுன் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பலியானார். போலீசார் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 1,987 போலீசார்களில் 1,850 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே உள்ள புலிப்பாரை சேர்ந்தவர் மயில்சாமி (வயது 46). இவர் புலிப்பார் ஊராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். அவருடைய மனைவி ஜோதிமணி (33). இவர் அவினாசியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் கண்ணன் குமார் (46). இவர் ஜோதிமணி வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இதனால் கண்ணன் குமாருக்கும், ஜோதிமணிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை அறிந்த மயில்சாமி தனது மனைவியிடம், கண்ணன் குமாருடனான கள்ளத்தொடர்பை துண்டிக்குமாறு கூறினார். இதனால் அவருக்கும், ஜோதிமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் கண்ணன் குமாரும், ஜோதிமணியும் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர்.
பின்னர் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள மீனம்பாளையத்துக்கு சென்று ஒன்றாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கண்ணன் குமாரை தேடி மயில்சாமி தனது உறவினர்கள் கருப்புசாமி (32), கோவிந்தராஜ் (28), மற்றும் ராசம்மாள் ஆகியோருடன் ஒரு வேனில் நேற்று முன்தினம் புஞ்சைபுளியம்பட்டி வந்து இறங்கினார்.
அப்போது பவானிசாகர் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு நின்றிருந்த கண்ணன் குமாரை வேனில் கடத்தி சென்று அடித்து உதைத்துள்ளனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
பின்னர் அங்கிருந்து அவரை நேற்று காலை வேமாண்டம்பாளையத்துக்கு அழைத்து சென்று அரசு பஸ்சில் ஏற்றி விட்டு மயில்சாமி உள்ளிட்டோர் வேனில் தப்பி சென்றனர். புஞ்சைபுளியம்பட்டியில் இறங்கிய கண்ணன்குமார் அங்கிருந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மயில்சாமி மற்றும் உறவினர்களை தேடி வந்தனர்.
இந்த நிலையில் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள டானாபுதூர் போலீஸ் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் வேனில் இருந்த 3 பேரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மயில்சாமி, கருப்புசாமி, கோவிந்தராஜ் ஆகியோர் என்பதும், 3 பேரும் கண்ணன் குமாரை தாக்கியதையும் ஒப்புக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வந்த வேனை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ராசம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம், அந்தியூரில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் நடைபெறும் வாரச்சந்தை புகழ்பெற்றது. இங்கு அனைத்து வகை அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும்.
இதன் காரணமாக பவானி, அந்தியூர் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து சில்லறையாகவும், மொத்தமாகவும் பொருள்களை வங்கிச் செல்வர்.
தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருவதால் வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்கள், கடைகள் வைப்போருக்கு அந்தியூர் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
65 வயதுக்கு மேற்பட்டோர், 12 வயதுக்கு குறைவானவர்கள் வரக்கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாரச் சந்தைக்குள் சென்று வரும் 3 வழித்தடங்களிலும், பொதுமக்கள், கிருமிநாசினி தெளித்துக் கொண்ட பின்னரே செல்ல வேண்டும், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும், கூட்டம் கூடாமல் சமூக இடைவெளியைப் பின்பற்றி பொருள்கள் வாங்கிச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாரச்சந்தை நடைபெறுவதை முன்னிட்டு அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஹரி ராமமூர்த்தி தலைமையில், துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் துப்புறவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் தூய்மைப் பணியாளர்கள் சந்தை வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். சந்தை வளாகத்தில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் வட்டார மருத்துவ அலுவலர் மோகனவள்ளி தலைமையில் மருத்துவர் சக்தி கிருஷ்ணன், வட்டார சுகாதர மேற்பார்வையாளர் பிரகாசன் மற்றும் மருத்துவ குழுவினர் சந்தை வளாகத்தில் முகாமிட்டு காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள். இந்த சோதனைக்கு பின்னரே பொதுமக்களை சந்தைக்குள் அனுமதிக்கின்றனர்.






