search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்
    X
    கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள்

    மேலும் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது- ஈரோடு மாவட்ட நிர்வாகம் தகவல்

    மேலும் 5 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாக ஈரோடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ஈரோடு:

    கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 2 வகையான தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. இதில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களின் விருப்பத்துக்கு ஏற்ப போடப்படுகிறது. முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டன. அதன்பிறகு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரிகளில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்ய வேண்டும். அதில் அறிவிக்கப்படும் தேதியின்படி பொதுமக்கள் ஆஸ்பத்திரிக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    தொழில் நிறுவனங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, பணியாளர்களுக்கு மொத்தமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசு அலுவலர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு ஊழியர்கள் பலர் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள்.

    இதுகுறித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியதாவது:-

    கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந் தேதி நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு, கோபிசெட்டிபாளையம், பவானி ஆகிய அரசு ஆஸ்பத்திரிகள், பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி, சிறுவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய 5 இடங்களில் கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதல்கட்டமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி போடப்பட்டது. 2-வது கட்டமாக அரசின் பிற துறைகளில் பணியாற்றும் முன்கள பணியாளர்களுக்கும், 3-வது கட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு தடுப்பூசி மையத்திலும் காத்திருப்போர் அறை, தடுப்பூசி வழங்கும் அறை, கண்காணிப்பு அறை என 3 பிரிவுகள் செயல்படுகின்றன. அதற்கு போதுமான காற்றோட்ட வசதி, இணைய இணைப்பு போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தடுப்பூசி மையங்களில் பாதுகாவலர், பயனாளிகளை சரிபார்ப்பவர், தடுப்பூசி வழங்குபவர், கண்காணிப்பாளர்கள் என 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பூசி பதிவு செய்தவர்களுக்கு தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்துக்கு தற்போது மேலும் 5 ஆயிரம் தடுப்பூசிகள் வரப்பெற்று உள்ளது. எனவே தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
    Next Story
    ×