search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    அந்தியூரில் வீட்டில் கள்ள நோட்டு அச்சடித்த 2 பேர் கைது

    அந்தியூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக 500, 200, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் அதிகளவில் புழக்கத்தில் இருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவிட்டார்.

    இதையடுத்து அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கள்ளநோட்டு புழக்கத்தில் விடும் கும்பல் குறித்து ரகசிய விசாரணை நடத்தினர்.

    அப்போது பவானி பழனி யாண்டவர் கோவில் வீதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. ஏற்கனவே இவர் கடந்த 2019-ம் ஆண்டு கள்ளநோட்டு அச்சடித்த வழக்கில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது. போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து வந்தனர்.

    அப்போது அந்தியூர் அருகே உள்ள காட்டுப்பாளையம் என்ற பகுதியில் செல்வம் (54) என்பவரது வீட்டில் கோவிந்தராஜ் கள்ள நோட்டுகள் அச்சடிப்பது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் இன்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டு அதிரடியாக உள்ளே நுழைந்தனர்.

    அப்போது அவர்கள் ஒரு எந்திரத்தில் கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடித்து கொண்டிருந்தனர். போலீசாரை பார்த்ததும் கோவிந்தராஜ், செல்வம் ஆகியோர் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை பிடித்து கொண்டனர்.

    பின்னர் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 28, 200 ரூபாய் கள்ளநோட்டுகள் 23, 100 ரூபாய் கள்ளநோட்டுகள் 12 மற்றும் ஒரு பக்கம் மட்டும் பிரிண்ட் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 52 ஆயிரத்து 800 ஆகியவற்றையும், கள்ளநோட்டு அச்சடித்த எந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து கோவிந்தராஜ், செல்வம் ஆகியோரை கைது செய்து அந்தியூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் இதுவரை எவ்வளவு கள்ளநோட்டுகள் அச்சடிக்கப்பட்டது? எந்தெந்த பகுதிகளில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் ஒருவரை இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தேடி வருகிறார்கள். இதுகுறித்து போலீசார் கூறும்போது, கள்ளநோட்டு அச்சடித்தது தொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகிறோம். இதுபற்றிய முழு விபரம் இன்று மாலை தெரிவிப்போம் என்றனர்.

    அந்தியூரில் கள்ளநோட்டு அச்சடித்து புழக்கத்தில் விட்ட 2 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி தெரிய வந்ததும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×