என் மலர்
நீங்கள் தேடியது "mukilan"
திண்டுக்கல்:
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி வேட்பாளராக நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் ஆட்சிமாற்றம் வேண்டும் என்பதே நாடு முழுவதும் எதிரொலிக்கும் குரலாக உள்ளது. இதனால் மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளுக்கும் தோல்வியே கிடைக்கும். தற்போது மத்திய அரசை குறைகூறும் காங்கிரஸ் அரசும் ஆள்வதற்கு தகுதியற்ற அரசுதான்.
தமிழகத்தில் சீமான் தலைமையிலான எங்களது அணிக்கு இளைஞர்களின் ஆதரவு பெருகி வருகிறது. மாற்றத்தை எங்களிடம் இருந்து கொண்டு வர முயற்சி எடுத்து வருகிறோம். கார்ப்பரேட் நிறுவனங்களை தமிழகத்தில் காலூன்ற வைத்து நீராதாரத்தை மத்திய- மாநில அரசுகள் அழித்துவிட்டன. இதனால் விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அவர்கள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலை உள்பட தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சினைகளுக்காக போராடி வந்தவர் முகிலன். தற்போது அவரை காணவில்லை. உயிரோடு உள்ளாரா? என்று கூட தெரியவில்லை. தொழில் நுட்பவசதி பெருகி உள்ள இந்த காலகட்டத்தில் மாயமான ஒருவரை கண்டுபிடிப்பது எளிதான காரியம்தான்.

ஆனால் போலீசார் அக்கறை காட்டாமல் உள்ளனர். அவரை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தினர் கடத்தி கொலை செய்து இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. அவரது உயிருக்கு ஏதாவது நேர்ந்தால் ஸ்டெர்லைட் நிர்வாகம்தான் பொறுப்பு. எனவே போலீசார் இந்த பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #mansooralikhan #mukilan #sterliteplant
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்தவர் முகிலன் (வயது 52). சுற்றுச்சூழல் ஆர்வலர். இவர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். மேலும், தூத்துக்குடி கலவரத்துக்கு போலீசார்தான் காரணம் என்பது குறித்த வீடியோ ஆதாரங்களை கடந்த பிப்ரவரி 15-ந் தேதி முகிலன் சென்னையில் வெளியிட்டார். அதன்பிறகு அன்று இரவு ரெயிலில் மதுரைக்கு புறப்பட்டார். ஆனால் ரெயில் திண்டிவனம் சென்றபோது முகிலனை திடீரென காணவில்லை.

இந்த நிலையில், முகிலனின் மனைவி பூங்கொடி (42) சென்னிமலையில் நேற்று நிருபருக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“எனக்கும், முகிலனுக்கும் 1996-ம் ஆண்டு திருமணம் நடந்தது. முகிலன் டி.எம்.இ. படித்துள்ளார். எங்கள் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம் ஆகும்.
திருமணத்திற்கு முன்பே எனது கணவர் முகிலன் புரட்சிரக இளைஞர் முன்னணி அமைப்பில் இருந்து கொண்டு பல்வேறு மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டார். என்னை விட அவருக்கு 10 வயது அதிகம். ஆனாலும் அவருடைய சமூக அக்கறை காரணமாக அவர் மீது எனக்கு காதல் ஏற்பட்டது. எங்களுக்கு கார்முகில் (21) என்ற ஒரே மகன் உள்ளார்.
கார்முகில் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகும் உள்ளூரில் நடந்த பல்வேறு போராட்டங்களில் முகிலன் கலந்துகொண்டுள்ளார். நானும் அவரோடு போராட்டத்தில் பங்கேற்று இருக்கிறேன்.
எங்கள் குடும்ப வருமானத்திற்காக மட்டுமின்றி சமூக போராட்டங்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் அச்சடிப்பதற்காக 1998-ம் ஆண்டு அச்சகம் அமைத்து 2 வருடங்கள் அச்சகத்திலேயே முகிலன் இருந்தார். 2010-ம் ஆண்டிற்கு பிறகு முகிலன் தமிழக அளவிலான பல்வேறு போராட்டங்களில் தீவிரமாக கலந்துகொண்டார். அதன்பிறகு வீட்டிற்கு அடிக்கடி வரமாட்டார்.
2013-ம் ஆண்டில் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டு 3 மாதங்கள் சிறை சென்றார். புரட்சிகர இளைஞர் முன்னணி, காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம், கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான கூட்டியக்கம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இயக்கம் என பல்வேறு இயக்கங்களோடு இணைந்து பல போராட்டங்கள் நடத்தியதுடன் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் என்ற அமைப்பையும் தொடங்கி போராட்டங்கள் நடத்தினார்.
அதனால் இவர் மீது 100-க்கும் மேற்பட்ட போராட்ட வழக்குகள் இருந்தது. 2014-ம் ஆண்டில் முகிலனே வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்து திருச்சி சிறையில் 6 மாதம் இருந்தார். பின்னர் நீதிபதியே சொந்த ஜாமீனில் இவரை வெளியே விட்டார்.
கடந்த 2017-ம் ஆண்டில் திருச்சி காவிரி ஆற்று பகுதியில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை எதிர்த்து தீவிர போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் முகிலன் கைது செய்யப்பட்டு 379 நாட்கள் சிறையில் இருந்து 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்தார். அதன்பிறகு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்த போராட்டத்தில் முகிலன் மிக தீவிரமாக கலந்துகொண்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் 13-ந் தேதி சென்னிமலைக்கு வந்த முகிலன் 2 மணி நேரம் மட்டுமே வீட்டில் இருந்தார். அதன்பிறகு தூத்துக்குடி கலவரம் குறித்த போலீசாருக்கு எதிரான சி.டி.யை பிப்ரவரி 15-ந் தேதி சென்னையில் முகிலன் வெளியிட்டார்.
சி.டி. வெளியிட்ட அன்றே ஸ்டெர்லைட் நிறுவனத்தில் உள்ள ஊழியர் ஒருவர் முகிலனிடம், தூத்துக்குடி கலவரம் குறித்த சி.டி. ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் எங்களிடம் கொடுங்கள் என்றும், இதை ஏன் நீதிமன்றத்தில் கொடுத்தீர்கள்? என்றும் கேட்டுள்ளதாக உடன் இருந்தவர்களிடம் முகிலன் தெரிவித்துள்ளார்.
முகிலன் காணாமல் போனதற்கு ஓரிரு நாள் முன்பு காவிரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டார். முகிலன் கலந்துகொண்ட போராட்டத்தில் பெண்களும் கலந்துகொள்வது உண்டு. அதுபோல நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண்ணும் பங்கேற்றுள்ளார்.
என்னுடைய கணவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் சில அரசியல்வாதிகள், உள்ளூர், வெளியூர் மட்டுமின்றி உடன் இருந்தவர்களும் அவர் மீது தவறான தகவலை பரப்பி வருகின்றனர். அதுபோல இவருடன் போராடிய பெண்ணோடு இணைத்து அவதூறு பரப்பி வருகின்றனர்.
கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு எதிராக எனது கணவர் துண்டு பிரசுரங்கள் கொடுத்து பிரசாரம் செய்துள்ளார். அதனால் இனி வருகின்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான அரசியல் கட்சிகளுக்கு எதிராக முகிலன் செயல்படுவார் என நினைத்து ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்களே போலீஸ் துணையுடன் சேர்ந்து என் கணவரை கடத்தி வைத்திருக்கலாம்.
கடந்த 2013-ம் ஆண்டுகூட ஒரு போராட்ட வழக்கில் போலீசார் இவரை யாருக்கும் சொல்லாமல் சில நாட்கள் போலீஸ் காவலில் வைத்திருந்தனர். அதுபோல் இப்போதும் கடத்தி சென்றுள்ளனர்.
இதுவரை பொது வாழ்க்கைக்காகவே தன்னை அர்ப்பணம் செய்த முகிலன் மீது உடன் இருப்பவர்களே பரப்பி வரும் அவதூறுகளை முறியடித்து அவரை மீட்க போராடி வருகிறேன். பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு கடத்தி சென்றவர்களே முகிலனை விட்டுவிடுவார்கள் என நம்புகிறேன்” என்றார். #Mukilan #Sterlite
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தவர் மாயவன்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான இவர் கடந்த 15-ந்தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. போலீஸ் உயர் அதிகாரிகள்தான் வன்முறைக்கு காரணம் என்பதற்கான ஆதாரங்களை பத்திரிகையாளர் முன்னிலையில் வெளியிட்டார்.
இந்த ஆதாரங்களை வெளியிடுவதால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் முகிலன் கூறினார்.

இதுவரை அவரை கண்டு பிடிக்க முடியாததால் எழும்பூர் ரெயில்வே போலீசில் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
முகிலன் கடத்தப்பட்டதாக அச்சப்படுவதாகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அல்லது போலீசார் அவரை ரகசிய இடத்தில் வைத்து துன்புறுத்தலாம் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர்.
எனவே முகிலனை கண்டுபிடிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்தின்போதும் இதுபோல் முகிலன், சதீஷ் ஆகியோர் திடீரென மாயமானார்கள். பின்னர் 3 நாட்கள் கழித்து முகிலனை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினார்கள். #SterlitePlant #Mukilan






