என் மலர்tooltip icon

    ஈரோடு

    • வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
    • நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை ஆண்டுதோறும் பருவமழை காலங்களில் நிரம்பி வழியும். கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையின் போது வரட்டுப்பள்ளம் அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.

    இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் அந்தியூர் பகுதியில் பெய்த கனத்த மழை காரணமாக மீண்டும் வரட்டுப்பள்ளம் அணை நிரம்பி உபரி நீர் வெளியேறிக் கொண்டி–ருக்கிறது.அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரால் சுமார் 3 ஆயிரம் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

    விவசாயிகளின் கோரி–க்கையை ஏற்று தமிழ்நாடு அரசு, அணை–யில் இருந்து ஆண்டு தோறும் புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளில் தண்ணீர் திறந்து விடுகிறது.

    இதில் வாய்க்கால் பாசன த்திற்காக வரட்டுப்பள்ளம் அணையில் இருந்து 3 வாய்க்கால்களில் தண்ணீர் திறந்து விடப்படுகின்றன. இதன்மூலம் விவசாயிகள் பயன் பெற்ற வருகின்றனர். வாய்க்கால் பாசனப் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்கள், நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

    வாய்க்காலின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் அப்பகுதியில் உள்ளோர், விவசாய விளை பொருட்களை சாகுபடி செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    இது சம்பந்தமாக கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், வரட்டுப்ப–ள்ளம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறும் வாய்க்கால்கள் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை அளவீடு செய்து எல்லைக்கல் நட்டனர்.

    எச்சரிக்கை

    மேலும் அப்பகுதியில் ஆக்கிரமிப்பு செய்தவர்க–ளுக்கு, சாகுபடி செய்யக்கூ–டாது என எச்சரிக்கையும் விடப்பட்டது. ஏற்கனவே சாகுபடி செய்திருந்தவர்கள் அறுவடை செய்த பின்பு, மீண்டும் சாகுபடி செய்யக்கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டிப்புடன் எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆனால், வரட்டுப்பள்ளம் அணையிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்படும் வட்டக்காடு பகுதியில் உள்ள முதல் வாய்க்கால் பகுதியில் உள்ள புறம்போக்கு இடங்களில் தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த நபர்கள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    பொதுப்பணித்துறை அதிகாரிகளின் எச்சரி–க்கையும் மீறி அப்பகுதியில் உள்ள நபர்கள் அப்பகுதியை ஆக்கிரமித்து சாகுபடி செய்து வருகின்றனர்.

    வட்டக்காடு பகுதியில் உள்ள வாய்க்கால்களின் இரண்டு புறங்களிலும் ஆக்கிரமிப்பாளர்கள், தொடர்ந்து பொதுப்ப ணித்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையை பொருட்ப–டுத்தாமல் வாழை, சோளம் உள்ளிட்ட விளை பொருட்கள் சாகுபடி செய்துள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது,

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களில் எல்லைக்கல் நட்டதற்குப் பிறகும் அப்பகுதியை சேர்ந்த சிலர் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகளில் சாகுபடி செய்து வருகின்றனர்.

    நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு நிலங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் ஆக்கிரமி ப்பாளர்களிடமிருந்து மீட்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இல்லையேல், வாய்க்கால் புறம்போக்கு பகுதியை பயன்படுத்தி வந்த நபர்களிடமிருந்து, எத்தனை ஆண்டுகள் பயன்படுத்தினார்களோ அத்தனை ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தமாக வாடகை வசூல் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அம்மாபேட்டை:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள ஒலகடம் பேரூராட்சி குட்டைமேடு பகுதியில் சுமார் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் தினந்தோறும் காலை 6 மணிக்கு குடிநீர் வினி யோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்த பகுதிக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. கூடுதல் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று ஏற்கனவே ஒலகடம் பேரூராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் அந்த பகுதி மக்களுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக குட்டைமேடு பகுதிக்கு போதுமான ஆற்று குடிநீர் வரவில்லை என பவானி -வெள்ளித்திருப்பூர் மெயின் ரோட்டில் ஒலகடம் அருகே குட்டை மேடு பகுதியில் 30-க்கும் மேற்பட்ட பெண்கள் திடீெரன இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் பவானி துணை தாசில்தார் சரவணன் மற்றும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

    இதையடுத்து பொது மக்கள் சாலை மறியலை கைவிட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    • கோழிப்பண்ணை தொழிலாளி கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
    • இதுகுறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறை அடுத்த விஜயமங்கலம், கினிபாளையம் அரிஜன காலனியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 53). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோழி பண்ணையில் கோழி முட்டை ஏற்றும் லோடுமேனாக வேலை செய்து வந்தார்.

    இவர் கடந்த 2 மாதமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் இவர் மது குடி குடித்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது குடும்பத்தினர் கண்ணனை ஏன் வேலைக்கு செல்லா மல் குடித்து கொண்டு இருக்கிறீர்கள் என கண்டி த்தனர்.

    இந்த நிலையில் கண்ணன் சம்பவத்தன்று இரவு கினிப்பாளையம் பட்டத்து அரசி அம்மன் கோவிலில் தூங்கிக் கொள்வதாக கூறி விட்டு சென்றார்.

    ஆனால் மறுநாள் காலை வீட்டுக்கு வரவில்லை. அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. அவர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஒருவர் கிணிப்பாளையம் குமரன் நகரில் உள்ள ஒரு பொது கிணற்றில் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிணற்றுக்குள் இருந்த பிணத்தை மீட்டனர்.

    போலீசார் விசாரணையில் அவர் வீட்டை விட்டு வெளியே சென்ற கண்ணன் எறும் கிணற்றின் மீது தூங்கிய போது தவறி விழுந்து இறந்தது தெரிய வந்தது. இது பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • ஈரோடு வீரப்பன்சத்திரம், குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும், போதிய கழிப்பறை வசதி இல்லையென்றும் மாணவிகள், பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம், குட்டைமேடு வீதியில் மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 400-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இந்தப் பள்ளியின் கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுவதாகவும், போதிய கழிப்பறை வசதி இல்லையென்றும் மாணவிகள், பெற்றோர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று விடுமுறை நாளில் பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் சிமெண்ட் சிலாப் இடிந்து விழுந்துள்ளது. நேற்று விடுமுறை நாள் என்பதால் இந்த சம்பவம் யாருக்கும் தெரியவில்லை.

    இன்று வழக்கம் போல் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. மாணவிகள் பள்ளிக்கு வர தொடங்கினர். அப்போது பள்ளி கட்டிடத்தின் ஒரு பகுதியில் உள்ள சிமெண்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    நல்ல வேலையாக மாணவிகள் யாரும் அந்த சமயம் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் இந்த தகவல் குறித்து அறிந்ததும் 15-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் பள்ளி வளாகத்திற்கு வந்தனர். அவர்கள் திடீரென பள்ளி வளாகத்துக்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இங்குள்ள பள்ளி கட்டிடங்கள் பழுதடைந்து காணப்படுகிறது. எப்போது எந்த கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று கூட கட்டிடத்தின் சிமெண்ட் சிலாப் இடிந்து கீழே விழுந்துள்ளது. நல்ல வேளையாக அந்த சமயத்தில் மாணவிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இங்குள்ள மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இதனால் அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    எனவே உடனடியாக பழுதடைந்த கட்டிடத்தை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். மாணவிகளுக்கு போதிய கழிப்பறை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
    • விசைத்தறிகளின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் வீரப்பன்சத்திரம், அசோகபுரம், மாணிக்கம் பாளையம், லக்காபுரம், சித்தோடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.

    இந்த விசைத்தறிகளில் காட்டன் துணி, ரயான் துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் மட்டும் ரயான் துணி உற்பத்தி நடந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு ரூ.6 கோடி மதிப்புள்ள 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி நடந்து வந்தது.

    இந்நிலையில் ரயான் துணிகளின் விலை குறைந்துள்ளதால் மார்க்கெட்டில் ரயான் துணி உற்பத்தி செய்த விலையை விட குறைவாக விற்பனை ஆகிறது. இதனால் ரயான் துணி தயாரித்த விசைத்தறியாளர்கள் நஷ்டம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதால் இதனை சமாளிக்கும் வகையில் நேற்று முதல் ஒரு வாரத்திற்கு ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் 30 ஆயிரம் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. விசைத்தறிகளின் வேலை நிறுத்த போராட்டம் இன்று 2-வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ரூ.12 கோடி மதிப்புள்ள துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்து உள்ளனர்.

    • கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் ஆவணங்களை ஜான் தான் போலியாக தயாரித்து கொடுத்தார். இதன் அடிப்படையில் அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
    • போலி ஆவணம் தயாரிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை யார் கொடுத்தது? மேலும் யாருக்காவது இது போன்று போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளீர்களா? என அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

    ஈரோடு:

    ஈரோட்டில் 16 வயது சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சட்ட விரோதமாக கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தை, பெண் புரோக்கர் மாலதி மற்றும் போலி ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த டிரைவர் ஜான் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கருமுட்டை மூலம் கிடைத்த பணத்தில் புரோக்கர் மாலதி கமிஷனாக 5000 ரூபாய் எடுத்துக் கொண்டு மீதி 20 ஆயிரம் ரூபாயை சிறுமியின் தாய், வளர்ப்பு தந்தையிடம் கொடுத்துள்ளார். இந்த பணம் மூலம் அவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். இவ்வாறு சிறுமியிடம் இருந்து மட்டும் 8 முறைக்கு மேல் கருமுட்டை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, மருத்துவர்கள், ஊழியர்கள், நிர்வாகிகளிடம் போலீசார் மற்றும் உயர் மட்ட மருத்துவ குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி ஈரோடு, சித்தோடு அருகே உள்ள ஆர்.என். புதூரில் உள்ள அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அங்கு தங்கி இருந்த சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு மன உளைச்சல் காரணமாக கழிப்பறையை கழுவும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் சிறுமி டிசார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் அதே காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    சிறுமியின் தாய், பெண் புரோக்கர் மாலதி ஆகியோர் கோவை மத்திய சிறையிலும், சிறுமியின் வளர்ப்பு தந்தை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையிலும், போலி ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஜான் ஈரோடு கிளை சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் தனித்தனியே விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ஈரோடு மகிளா நீதிமன்றத்தில் தமிழக மருத்துவ பணிகள் இயக்குனரக அலுவலர்கள் மனு செய்தனர். இந்த மனு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இன்று ஒரு நாள் 4 பேரிடமும் சிறை விதிகளுக்கு உட்பட்டு விசாரித்துக் கொள்ள அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து டாக்டர் விஸ்வநாதன் தலைமையில் மருத்துவக்குழுவினர் ஈரோட்டுக்கு வந்தனர். இன்று காலை 9 மணி அளவில் மருத்துவ குழுவினர் முதலில் ஈரோடு கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் டிரைவர் ஜானிடம் விசாரணை நடத்துவதற்காக வந்தனர். இரண்டு கார்களில் மருத்துவ குழுவினர் வந்து இறங்கினர்.

    பின்னர் மருத்துவக் குழுவினர் ஜானிடம் விசாரணையை தொடங்கினர். கருமுட்டை எடுக்கப்பட்ட விவகாரத்தில் சிறுமியின் ஆவணங்களை ஜான் தான் போலியாக தயாரித்து கொடுத்தார். இதன் அடிப்படையில் அவரிடம் மருத்துவ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். போலி ஆவணம் தயாரிக்க எவ்வளவு பணம் கொடுத்தார்கள். அந்த பணத்தை யார் கொடுத்தது? மேலும் யாருக்காவது இது போன்று போலியாக ஆவணம் தயாரித்து கொடுத்து உள்ளீர்களா? என அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணையை மேற்கொண்டனர்.

    ஜானிடம் விசாரணை முடித்துக் கொண்ட மருத்துவ குழுவினர் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள மாவட்ட சிறையில் உள்ள சிறுமியின் வளர்ப்பு தந்தையிடம் விசாரணை நடத்த சென்றனர். அவரிடம் விசாரணை முடித்துக் கொண்டு இன்று மாலை கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தாய், புரோக்கர் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணை முடிவில் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

    • பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
    • கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்தை காட்டிலும் தொடர்ந்து அதிக அளவில் பாசனத்திற்காகவும், குடிநீருக்காகவும், நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 82.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3, 519 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 900 கன அடி, கீழ்பவானி வாய்க்காலுக்கு 5 கனஅடி என மொத்தம் பவானிசாகர் அணையில் இருந்து 1005 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    • ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தாகி இருந்தது.
    • இன்று மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதேபோல் மற்ற மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு ஸ்டோனிபாலம் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் உள்ளன.

    இங்கு கடல் மீன்கள் அதிகளவில் விற்கப்ப டுவதால் இங்கு எப்போதும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட மக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

    இந்நிலையில் தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக மீன்கள் வரத்து அதிகமாக வருகிறது. இதன் காரணமாக கடந்த வாரத்தை விட இந்த வாரம் மீண்டும் விலை சற்று குறைந்துள்ளது.

    ஈரோடு ஸ்டோனிபாலம் மீன் மார்க்கெட்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மீன்கள் வரத்தாகி இருந்தது. இன்று 8 டன் மீன்கள் விற்பனைக்கு வந்தது.

    கடந்த வாரம் 900-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வஞ்சரம் மீன் இந்த வாரமும் அதே விலைக்கு விற்பனையானது. இன்று மீன் மார்க்கெட்டில் வஞ்சரம் மீன் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.இதேபோல் மற்ற மீன்களின் விலையும் வெகுவாக குறைந்துள்ளது.

    இன்று மார்க்கெட்டில் மீன்களின் விலை கிலோவில் வருமாறு:

    கிளி-450, வவ்வால்-450, விளா-450, மஞ்சள் சாரை-500, சீலா-500, அயிலை-250, சங்கரா-350, மத்தி-200, கொடுவா-500, பெரியஇறால்-750, சின்ன இறால்-550, நண்டு-500, உளி-450, பாறை-450,

    இதேப்போல் கருங்கல்பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன்கள் வரத்து இன்று அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே மீன்களை வாங்க மக்கள் ஆர்வத்துடன் மீன் மார்க்கெட்டுக்கு வந்தனர். இதனால் இன்று மீன் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    • பெருந்துறை அருகே கட்டிட நிறுவனத்தில் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்கள்.
    • இது தொடர்பாக பெருந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    பெருந்துறை:

    பெருந்துறையை அடுத்துள்ள திருவேங்கடம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 47). இவர் பெருந்துறை ஆர்.எஸ்.ரோடு பகுதியில் ஒரு கட்டிட நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரது அலுவலகமும், குடோனும் ஒரு இடத்தில் உள்ளது.

    சம்பவத்தன்று இரவு தனது அலுவலகம் மற்றும் குடோனை பூட்டிவிட்டு, காம்பவுண்ட் கேட்டையும் பூட்டிவிட்டு பெரியசாமி வீட்டிற்கு சென்று விட்டார்.

    பின்னர் காலை நிறுவனத்தில் வேலை செய்யும் பூபதி ராஜா என்பவர் அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது முன்புற காம்பவுண்ட் கேட் திறந்த நிலையில் இருந்துள்ளது.

    மேலும் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. பின்னர் உடனடியாக அவர் போன் மூலம் பெரியசாமிக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே பெரியசாமி அங்கு வந்து பார்த்த அவர் டேபிள் டிராயர் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது.

    இதனையடுத்து இது தொடர்பாக அவர் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
    • இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

    ஈரோடு:

    கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.

    தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமான விண்ண ப்பங்களை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வி தகுதிச்சான்றுகளுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    இது சார்பான காலிப்பணியிட விவரங்கள் முதன்மைக்கல்வி, மாவ ட்டக்கல்வி, வட்டாரக்கல்வி அலுவலகங்ககளின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.

    விண்ணப்பங்களை வரும் 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

    குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்படமாட்டாது. தகவல் பலகையில் வெளி யிடப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.

    விண்ணப்பங்கள் ஈரோடு கல்வி மாவட்டம் - deoerode2016@gmail.com, பவானி கல்வி மாவட்டம் - deobhavani6@gmail.com, கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம் - deogobi@gmail.com, பெருந்துறை கல்வி மாவட்டம்-deoperundurai@gmail.com, சத்தியமங்கலம் கல்வி மாவட்டம்-deosathy@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரியில் அனுப்பலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.
    • இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் குமுதா பள்ளி மைதானத்தில் 2 நாள் நடைபெறும் மேற்கு மண்டல அளவிலான கைப்பந்து போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு குமுதா பள்ளியின் தாளாளரும், கமிட்டி சேர்மனுமான கே.ஏ.ஜனகரத்தினம் தலைமை தாங்கினார். குமுதா பள்ளியின் செயலாளர் டாக்டர். அரவிந்தன், துணை செயலாளர் டாக்டர்.மாலினி, இணை தாளாளர் சுகந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மாநில கைப்பந்து கழக பொதுச்செயலாளர் மார்ட்டின் சுதாகர் கலந்து கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழகத்தில் 4 மண்டல ங்களில் நடைபெறும் மண்டல அளவிலான கைப்பந்து போட்டியில் ஒவ்வொரு மண்டலத்திலும் 8 மாவட்ட அணிகள் பங்குகொண்டு லீக் மற்றும் நாக்அவுட் முறையில் விளையாடினர். கைப்பந்து போட்டியில் வெற்றி பெறும் முதல் 4 அணிகளை தேர்வு செய்து அடுத்த மாதம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இப்போட்டிக்காக அரியலூர், நாகர்கோயில், வேலூர், ஈரோடு மண்டல அளவிலான போட்டிகள் நடைபெற்று கொண்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் போட்டியில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, தருமபுரி, சேலம், உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

    இப்போட்டியில் கலந்து கொண்டு மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்று சிறப்பாக விளையாடும் வீரர்கள் தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் குமுதா பள்ளியில் முதல்வர் மஞ்சுளா, தலைமை ஆசிரியை வசந்தி மற்றும் தமிழ்நாடு கைப்பந்து கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து தினசரி பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    குறிப்பாக கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு இரட்டை இலக்க எண்ணில் பதிவாகி வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 876 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 6 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 11 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

    தற்போது மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 26 நாட்களில் மட்டும் மாவட்டத்தில் 206 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மாவட்டத்தில் தற்போது தினசரி பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதையடுத்து சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    ×